நெடுஞ்சாலை கானமே - 15

Jul 8, 2025 - 22:32
 0  1
நெடுஞ்சாலை கானமே - 15

கானம் - 15

இரவு முழுக்க இன்றைய நிகழ்வை ஓட்டிக் கொண்டு விடைத்தெரியாமல் சுற்றி வந்தவன்,  தாமதமாக உறங்கிப் போனான். காலையிலும் தாமதமாக  தான் எழுந்தான்.

வேகமாக வெளியே வந்துப் பார்த்தான். முத்தம்மா தான் இன்று கோலத்தைப் போட்டார்.

'என்னாச்சி இவளுக்கு?' என வீட்டிற்குள் பார்க்க முயல,  இருட்டாக இருக்கவும், அவளுக்கு என்னவாயிற்றென, குழம்பிப் போனான்.

தென்றலுக்கு அதிகாலையிலே மாதவிடாய்  வந்திருந்தது. குளியலறைச் சென்று வந்தவள் அடிவயிறு வலித்ததால் எழுந்து கொள்ளாமல் மீண்டும் படுத்து விட்டாள்.

முத்தம்மாவும் அவளை எழுப்பாது சிறு சிறு வேலைச் செய்தவர், இன்று ரேசன் கடைக்குச் செல்ல வேண்டிய நாள் என்பதால் பேத்தியைத் தொந்தரவு செய்யாது கதவைச் சாத்தி வைத்து விட்டு ரேசன் கடைக்குச் சென்றார்.

அங்கே ஒரு பத்து பதினைந்து  பேர் வரிசையில் நின்றிருந்தனர். மாதத்தில்  முதல் வாரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.  அந்தக் கூட்டத்தில்  ஒரு ஆளாகச் சேத்தனும் நின்றிருந்தான்.

என்ன தான் தாயிடம் சண்டைப் போட்டாலும் வீட்டுக்குத் தேவையானதைச் செய்வதில் ஒரு குறையும் வைக்க மாட்டான்.

இன்று அவனுக்கு விடுமுறை நாள் என்பதால்  மாசம் பிறந்ததும் ரேசன் பொருட்கள் வாங்குவது அவனது வேலையிலும் ஒன்று. 

தாய் எதுவும் சொல்லாமலே செய்து விடுவான். சாரதாவும் தன் மகனை உள்ளுக்குள் மெச்சிக் கொள்வார். ஆனாலும் அவருக்கு ஒரு வருத்தம் கல்யாண விஷயத்தில் மட்டும் வீம்பு பிடிப்பது. 

தனக்குப் பிடிக்காத குடும்பத்திலிருக்கும் பெண்ணைக் காதலிப்பதைத் தான் அவரால் ஏற்றுக் முடியவில்லை. இதுவே வேறு பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக, அவர்  அவனது  காதலை ஏற்றுக் கொண்டிருப்பார்.

அவளது தந்தையும் நல்ல சிவமும் சேர்ந்து  தன் கணவனைக் கொன்றதால், அவளது தந்தையின்  புத்தி தான் அவளுக்கும் இருக்கும் என்று எண்ணி அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஆனால் அவள்  அவளது தாயைப் போல என்று புரிந்து கொள்ளும் நாள் தான்  

எப்போதென தெரியவில்லை..

வரிசையில் நிற்பவன் முத்தம்மா மட்டும் தனியாக வருவதைக் கண்டு புருவம் சுருக்கினான்.

வரிசையிலிருந்து வெளியே வந்தவன் அவரது கைப்பிடித்து அழைத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டு கார்டை வாங்கினான்

அவரும் கூட்டத்தை கண்டு மலைப்பாகப் பார்த்தார். எப்பவும் பேத்தி தான் வாங்கிக் கொண்டு வருவாள், இன்று அவளால் முடியாத பட்சத்தில் அவரே வந்து விட்டார்.

"என்ன அப்பத்தா ! நீ தனியா வந்திருக்க, உம் பேத்தி எங்க?"என்றான்.

"எம் பேத்திக்கு முடியல ராசா ! வயித்த வலினு சுருண்டு படுத்து கெடக்கா ! அதான் நானே வந்து வாங்கிட்டுப் போலாம் நினைச்சி வந்தேன். இங்கப் பார்த்தா இம்பூட்டு கூட்டம் இருக்கே ராசா ! வாங்கிடுவேனா தெரியல !"என்றார்.

"நான் வாங்கி தர்றேன். நீ இப்படி ஓரமா உட்காரு ! ரேகை வைக்கும் போது உன்னைக் கூப்டுறேன் என்ன !!"என்றதும் அவனைக் கனிவாகப் பார்த்தவர், தாடையைப் பிடித்து வழித்து முத்தம் வைத்து"நன்றி ராசா ! நீ நல்லா இருப்ப!"என்றார் கண்கள் கலங்க,

"எதுக்கு அழற ! போய் உட்கார் நான் கூப்டுறேன்"என்று அமர வைத்து வரிசையில் நின்றான்.

அவன் நெருங்கவும் முத்தம்மாவை வரச் சொன்னான், முதலில் அவரது ரேகையைப் பதிந்ததும் இவனும் கட்ட விரல் வைத்து ரேகை மூலம் பதிவுச் செய்து விட்டு, இருவருக்கும் சேர்த்து ரேசன் கடையில் கொடுத்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு மூட்டைக் கட்டி வைத்தான்.

அவருகோ பயம் 'எப்படி தூக்கி அவ்வளவு தூரம் செல்வது என்று? ' அதற்குள் அவனோ" அப்பத்தா ! நான் உன்னோட சாமான வீட்ல வச்சிட்டு வர்றேன். நீ என்னோடத பார்த்திட்டு இரு ! நான் வச்சிட்டு வந்தது ஒன்ன 

கூட்டிட்டு போறேன்" என்று அவருக்கு கேட்டபடி "சரி "என்று தலை அசைத்து அவனுடைய பொருட்கள் மீது கை வைத்தப்படி அமர்ந்து விட்டார்.

அவனும் வண்டியில் வைத்து கொண்டு முத்தம்மாவின் வீட்டிற்கு வந்தவன் மூட்டையை தூக்கி கதவைத் திறந்து உள்ளே வைத்தான். அவளோ ஓரத்தில் சுருண்டு படுத்திருந்தாள்.

அவளது அருகே செல்ல தயக்கம் அவளைப் ஒரு நிமிடம் முழுதாக பார்த்தவன், அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அவளோ முத்தம்மா தான் வந்து விட்டதாக நினைத்து  கண்களைத் திறவாமலே !" அம்மாச்சி பேட் தீந்து போச்சி வாங்கியாறீயா? "என வலியுடன் சொன்னாள்.

அவனோ அவளிடம் எதுவும் சொல்லாது விரைந்து வெளியே வந்து வண்டியை உயிர்ப்பித்து  புயல் வேகத்தில் சென்று அவள்  உபயோக்கும் விடாய்க்கால அணையாடையை வாங்கிவிட்டு  அதே கடையில் பத்து ரூபாய்க்கு

தேன் மிட்டாய் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்தவன்,

குனிந்து அவளது தலை மாட்டில் வைத்தவன் அவள் முகம் பார்க்க, கண் மூடியிருந்தவளின் முகத்தை மறைந்திருந்த முடிக்கற்றையைக் காதோரம் ஒதுக்கியவன், பிறைநுதலில் இதழ் பதித்து விட்டு வெளியே வந்து விட்டான். 

அவளால் எதுவும் உணரும் நிலையில் இல்லை... இமைகளைப் பிரிக்க முடியாத நிலையில் உறக்கம் அவளது கண்களை  ஆக்கிரமித்திருந்தது. 

மீண்டும் ரேசன் கடைக்குச் வந்தவன், முத்தம்மாவை அழைத்து வந்து வீட்டில் விட்டான். 

"நான் வர்றேன் அப்பத்தா !"என கிளம்ப இருந்தவனை தடுத்த முத்தம்மா "ராசா ! உள்ள வந்தது சாப்ட்டு போ  !"

" நேத்து வச்ச இட்லிய உதுத்து இட்லி உப்புமாவ கிண்டி வச்சிருக்கீயே அதையா வந்து சாப்ட? அத மனுஷன் திம்பானா?  போத்தா ! ஏதோ பொங்கல் ,  பூரி செஞ்சு வச்சுட்டு கூப்டாலும் பரவாயில்ல,  உப்புமாவ  கிண்டி திங்க வர சொல்ற ! எனக்கு அதெல்லாம் வேணாம். இந்த வயசு பையன் திங்கற மாதிரி பார்த்து சமைச்சி வச்சி ஒரு நாள் கூப்பிடு நான் வர்றேன்" என்று காலரை ஏத்தி விட்டவன், "நான் போய் முருகன் கடையில் பொங்கல் வடை சாப்ட போறேன் ஒனக்கு எதுவும் வேணுமா "எனக் கிண்டலாகக் கேட்டான் .

"வேணாம் ராசா ! என்னால முன்ன போல சமைக்க முடியல ! பேத்தி தான் ரெண்டு பேருக்கும்  சமைப்பா ! இன்னைக்கி அதுவும் இல்ல, ஏதோ என்னால முடிஞ்சத காலையில சாப்ட செஞ்சிருக்கேன். மதியம் சோத்த வடிச்சி கஞ்சி குடிக்க வேண்டியது தான். வேற என்ன செய்ய முடியும் என்னால நான்  வர்றேன் ராசா "என அவர் புலம்பி விட்டு உள்ளே செல்ல அவரை யோசனையாகப்  பார்த்து விட்டுச் சென்றான். 

உள்ளே வந்தவர் நீரைப் பருகி விட்டு பேத்தியின் காலடியில் அமர்ந்து, "தாயி ! எழுந்து சாப்ட்டு மறுபடியும் தூங்கு, பட்டினியா கெடக்காத தாயி "எனக் கெஞ்ச , மெல்ல எழுந்தாள். 

"அப்பத்தா ! நான் பேட் வாங்கியாற சொன்னேனே ! வாங்கிட்டீயா?" 

"எப்ப சொன்ன தாயி? நான் எதுவும் வாங்கலையே ! " என்று விழித்தார்.

"எப்பச் சொன்னேனா? முன்னாடி நீ வந்தப்ப தான சொன்னேன்"

"முன்னாடியா? நான் இப்போ தானே தாயி வந்தேன்"என்றதும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கதவுத் திறக்கும் சத்தம் கேட்டதை வைத்து வந்தது முத்தம்மா என்று எண்ணித் தான் சொன்னாள். 

'ஆனால் வந்தது யாரென்று தெரியவில்லையே!' என யோசிக்கும் போது பக்கவாட்டில் விடாய்க்கால அணையாடையும் காகிதத்தில் சுருட்டி வைக்கப்பட்ட  தேன்மிட்டாய்  கொஞ்சம் இருந்தது.

"அம்மாச்சி ! "என இரண்டையும் காட்ட, அவரும் அவள் முகத்தை பார்த்து யோசித்தவர்,

"சேத்தா தான் வாங்கி வச்சிருப்பான். அவன் நம்ம ரேசன் கடைச் சாமான வச்சிட்டு வர்றேன்  சொல்லிட்டு வந்தான்"என்று அங்கு நடத்தைச் சொல்ல, தேன்மிட்டாயும் அணையாடையைப் பார்த்ததுமே அவன் தான் என்று உணர்ந்து கொண்டாள். இதழின் ஓரத்தில்  சிறு மூரல் மலர்ந்தது.

தேன்மிட்டாயைக் கண்டதும் அவளுக்குப் பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வொன்று நிழலாடியது.

வகுப்பில் அனைத்து மாணவர்களும் 'கேம்ஸ் பீரியட்' என்பதால் விளையாடச் சென்றிருக்க, இவள் மட்டும் மாதவிடாய் வலியால் போகாமல் படுத்து விட்டாள். மாதவிடாய் இரண்டு நாட்கள் முன்பே வந்தது விட்டது. விடாய்க்கால அணையாடையைக் கொண்டு வர மறந்து விட்டாள். எழுந்து சென்று வாங்கவும் முடியவில்லை... அப்படியே அமர்ந்து விட்டாள்.

தென்றல் விளையாட்டு திடலில் இல்லை என்றதும் அவளைத் தேடி வகுப்பறைக்கு வந்தான் சேத்தன்.

"தென்னு  விளையாட வர்றாம இங்க என்ன பண்ற?"என்று வியர்வை வழிய  மூச்சு வாங்க வந்து கேட்டான்.

அவளோ தன்  நிலைமையைச் சொல்லி" எந்திருக்க முடியல டா இசை(அவளது பிரத்யேக அழைப்பு) பேட் வேற இல்ல. எழுந்து போய் வாங்க முடியல !"என்று மீண்டும்  படுத்துக் கொள்ள, முதலில் யோசித்தவன்,

"இரு நான் போய் உனக்கு வாங்கிட்டு வர்றேன். நீ தண்ணி குடிச்சிட்டு கொஞ்சம் கொஞ்சமா  எழுந்திரி"என்று கொஞ்சமும் சங்கடமின்றி,' அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.' 

என்பது போல வேகமாகக் கேண்டீனை நோக்கி ஓடியவன், விடாய்க்கால அணையாடையைக் கேட்க, அவரோ அவனைப் பார்த்து விழித்தார்.

"என்ன அண்ணே என்னையே பார்க்கற, நம்ம தென்றல் வலியில் நடக்க முடியாம கிடக்கு, அதுக்கு உதவி செய்றேன்"என நடந்ததைச் சொல்ல, அவர் பின்னே இருந்த மனைவி அவர் முதுகைத் தட்டி "குடுய்யா?"என்றார்.

அவரும் காசை வாங்கிக் கொண்டு காகிதத்தில் மடித்து கொடுத்தவர் மீதம் சில்லறையின்றிப் போக, "மிட்டாய் தரவா ? "எனக் கேட்டார்.

அவனோ தேன்மிட்டாய் காட்டி,"இது கொடுங்க "என்றான். அவரும் காகிதத்தில் மடித்துக் கொடுக்க, வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு விரைந்தான்.

அங்கே அவள்  மெல்ல எழுந்து சுவரில் சாய்ந்து நிற்க, அவள் கையில் இரண்டையும் திணித்தான். தேன்மிட்டாயைக் கண்டதும் விழிகள் விரியப் பார்த்தாள்.

"தேங்க்ஸ் டா இசை !"என்றாள்.

"அதெல்லாம் வேணாம் . நீ என்னனு பாரு, நான் விளையாடப் போறேன்"என்று தேன்மிட்டாய் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ஓடி விட்டான். அவளோ அவனைப் பார்த்திருந்தாள். அவளுள்ளம் மெல்ல அதிர்ந்தது.

அதே போல அணையாடையுடன் தேன் மிட்டாயைப் பார்த்து, அவளது காதல் மனம் மீண்டும் சிலிர்த்தது. உள்ளுக்குள், அவனைப் பார்க்க ,அவன்  மடியில் தலை சாய்க்க என மனமேங்க ! ஒரு பெருமூச்சுடன் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு சாப்பிட அமர்ந்தாள்.

அன்று வேலை எதுவும் செய்ய முடியாமல் படுத்தே கிடந்தாள். விடுமுறை நாளில் மாதவிடாய் வந்ததால் அவளுக்கு ஒரு நிம்மதி.

படுத்திருந்தவள் உறங்கியும் போனாள்.

மதியம் இரண்டு பார்சலுடன் வந்தான் சேத்தன். கதவைத் தட்டினான். முத்தம்மா தான் வெளியே வந்தார்.

"என்ன ராசா ?!"என்க, 

"இந்தா அப்பத்தா ! இதுல பிரியாணி இருக்கு ரெண்டு பேரும் சாப்டுங்க ! "என்று பார்சலை நீட்ட,

"எங்களுக்கு எதுக்கு ராசா இதெல்லாம்?  சோத்தாக்கி வச்சி கஞ்சிய குடிச்சிக்கறோம் இதெல்லாம் வேணாம்யா"என்று மறுக்க, 

அவர் கையில் திணித்து " ஆமா பேத்தியும், அம்மாச்சியுமா இருந்துட்டு என்னத்த ஆக்கி திங்கறீங்கண்டு தெரியல ! அது வயசுப் புள்ள மாதிரியா இருக்கு? வத்தலும் வடகமுமா இருக்கு ! நல்லது பொல்லது திங்கறீங்களா இல்லயாண்டு தெரியல !  ஞாயித்துகிழமை கறியும் சோறுமா திங்காம கஞ்சி குடிப்பீகளாக்கும், இந்தா அப்பாத்த உம்பேரன் தர்றேன் வாங்கிக்கோ !"என்று நீட்ட அவரும் வாங்கிக் கொண்டார்.

"நன்றி ராசா !"என்றார்.

"பசின்னு கேட்டதும் சோறு போட்டேல ! இப்போ நான்  செய்றேன். அம்புட்டு தான். அப்புறம் உன் பேத்திய பார்த்துக்கற கடமை எனக்கு இருக்கு அப்பத்தா !"என்று ரெடியாக சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லி விட்டுச் சென்றவனை வெறித்து பார்த்தவருக்கு,  அவன் மறைமுகமாகச் சொல்லிச் சென்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருக்குமா என்ன? சிரிப்புடன் உள்ளே  வந்தார்.

அவளை எழுப்பிச் சாப்பிட, அழைக்க, வாசனை வேறு அவள் மூக்கைத் துளைத்தது.

"என்ன அம்மாச்சி சமைக்க முடியலன்னு வெளிய வாங்கிட்டு வந்திட்டீயா?"என்று கேட்டுக் கொண்டு வாகாக எழுந்து அமர்ந்தாள்.

"நான் வாங்கியாறச் சொல்லல , சேத்தா தான் வாக்கியாந்து கொடுத்துச்சி"அவன் பேசியதைச் சொல்ல, இவளோ ஒன்றும் பேசவில்லை.

"தோழிக்கே இம்பூட்டு செய்றான்னா! வீட்டுக்காரிய  எம்பூட்டு தாங்குவான்?! யாருக்கு வாய்க்குதோ , குடுத்து வச்ச மகராசி அவ !"என்று சொல்லித் தட்டில்  பிரியாணியைப் போட்டுக் கொடுக்க,  அவரைப் பாராமல் வாங்கிக் கொண்டவளுக்கு அப்படி ஒரு வெட்கம், நாணிச் சிவந்த முகத்தை அவருக்குக் காட்டாமல் மறைத்தாள். 

கழுகுப் பார்வைக் கொண்ட முத்தம்மாவிற்கு அவளது சிவந்த 

வதனம், தெரியாமல் போகுமா ?  இருவருக்கும் நடுவில் இருக்கும் காதலைக் கண்டுபிடித்து விட்டார். பேத்தியை நல்லவன் கையில் ஒப்படைத்து விட்டு 

தான் சாகனும் என்று தன் உயிரைப் பிடித்து வைத்து கொண்டு நடமாடுகிறவருக்கு மனதில் ஓர் நிம்மதி,  

சேத்தன் அவர் பார்த்து வளர்ந்தவன் தான்.  வாய் துடுக்கு இருக்குமே தவிர ஊருக்கென்றாலே கேட்காமல் வந்து உதவிச் செய்வான். அப்படியே அவன் தந்தையைப் போல. பேத்திக்குப் பொருத்தமானவன் அவன் தான் என்று மனக்கண்ணில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்துப் பார்த்தார். 

'சேத்தனின் கையில் பேத்தியைக் கொடுத்து, அவள் வாழ்வதைக் கண்குளிரப் பார்த்து விட்டு உயிரை விட வேண்டும் 'என்று எண்ணிக் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

அன்றைய பொழுது கடந்தது, மறுநாள் வயிற்று வலி கொஞ்சம் குறைந்திருக்க, மெல்ல எழுந்து தனது வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். முதல் வேலையாகக் கோலம் போட வெளியே வந்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இரண்டு வாசலிலும் நீர் தெளிச்சி கோலம் போட்டிருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தாள் முத்தம்மா உறங்கிக்  கொண்டிருந்தார்.  யாரென யோசித்தவள் எதிர் வீட்டைப் பார்த்தாள், அங்கேயும் கோலம் போட்டிருக்க, யாரென தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, காக்கி உடையில் வீட்டைப் பூட்டி விட்டு வந்தவனைக் கண்களில் அதிர்ச்சியை நிரப்பிக் கொண்டு பார்த்தாள்.

இந்த அத்தியாயத்தை பத்தின உங்க கருத்து கொஞ்சம் சிரமம் பார்க்காமல் scroll பண்ணினா leave comment இருக்கும் அதில் உங்க கருத்தை பகிருங்க

Comment 

Like 

Register 

Login 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0