என்னுயிர் குவியலே

என்னுயிர் குவியலே
"தம்பி ! அப்படி என்ன ராசியோ, உன் கடையில உன் கையால பூ வாங்கிட்டு போனா நல்லதே நடக்குது !" என்று ஒரு பெண்மணி கூறிவிட்டுப் போக அவனும் மலர்ந்த முகமாய் எல்லாம் தன் ' அக்காவின் கைராசி' தான் என எண்ணிக் கொண்டான்.
காலையும் மாலையும் கோவிலுக்கு வரும் மக்கள் ஒரு சிலரைத் தவிர
அனைவரும் இவன் கடையில் வந்து தான் பூ வாங்குவார்கள்.' எப்போ டா அவன் கடையில் பூ தீரும்' என அருகே கடை வைத்திருக்கும் பூக்கடைக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்க, தன் கடையில் பூ தீர்ந்ததும் பக்கத்து கடையில் விலைக் கொடுத்து பூவை வாங்கி தன்னிடம் வைத்து விற்பதனால் அவன் மேல் யாருக்கும் பொறாமை இல்லை. அனைவரும் அவனுடன் அம்மா, அக்கா தங்கை போல தான் போல தான் பழகுவார்கள்.
இவன் தாத்தா காலத்தில் இருந்து பூ விற்கும் தொழில் செய்து வருகின்றனர். மகனின் தலையெழுத்தையாவது மாற்ற வைத்தியநாதன், பூவைநாதனைப் படிக்க வைத்தார். ஏனோ அவனது கவனம் தொழில் மேல் இருக்க, ஒரு டிகிரியோடு முடித்து விட்டு தந்தையோடு தொழிலை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
மகளுக்கு படிப்பு எதற்கு என்று பள்ளிக்கு அனுப்பாமல் தன் தொழிக்கு உதவியாக பூ கட்ட வைத்து கொண்டவரின் மேல் அவனுக்கு கோபம், அவருடன் அவன் பேச மாட்டான்.
இதற்கு இடையில் அவளை விட இருபது வயது மூத்தவரை கல்யாணம் முடித்து வைத்தார்.
வரதட்சணை எதிர்பாராத வரன் என்பதால் கல்யாணம் முடித்து வைத்தார்.
ஆனால் அவரும் நெஞ்சை அடைத்து இரண்டு நாளிலே உயிரை விட்டார் . கன்னியாக அவர்கள் வீட்டுக்குச் சென்றவள் கன்னியாக மீண்டும் வந்தாள்.
ராசியில்லாதவள் என்ற பெயரோடு மூலையில் மூடங்கி விட்டாள். அவளுக்கு செய்த பாவம் தாய் தந்தை இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட, பழி அவள் மேல் விழுந்தது. ஆனால் பூவைநாதனோ அக்காவையும் என்னையும் விட்டது சனி என்று எண்ணினான். சொந்த வீடு, அக்காவின் உதவியோடு வியாபாரத்தையும் பெருக்கியவன் மக்களிடம் நல்ல பெயரையும் மனதையும் சம்பாதித்துவிட்டான்.
அக்காவிற்கு நல்லது செய் வேண்டும் என்பது அவனுக்கு ஒரு லட்சியம் தன் கையால் பூ வாங்கிச் செல்லும் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் முடிந்து விடும், அதே போல தன் ராசியால் அக்காவுக்கும் அப்படி முடிய நினைக்கிறான். ஆனால் பூவிழியோ பூவை கட்டிக் கொடுப்பதோடு சரி அதை சூடும் எண்ணமில்லை.
இவனும் பல முறை சொல்லியும் கெஞ்சியும் பார்த்து விட்டான், அவள் மசியவில்லை. அதனாலே அக்காவுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். அவள் கையால் உண்பது கூட இல்லை. பூவைக் கூட அவளை கட்ட விடுவதில்லை உறங்காமல் கட்டி வியாபாரம் பார்க்கிறான் அவனது இந்த வீம்பு போராட்டம் அவள் மனதை கரைக்கவே செய்தது. அதிலும் தன் கையாலான உணவை உண்ணாமல் பக்கத்துவீட்டுக்கு அஞ்சிகை பாட்டியின் குழம்பை ருசித்து உண்ணும்போது வரும் கோபத்தை மட்டும் அவளால் அடக்க முடியவில்லை.
"இப்போ உனக்கு என்ன டா நான் பூவச்சிக்கணுமா? வச்சிக்கிறேன். பொட்டு வச்சிக்கணுமா? வச்சிக்கிறேன். நல்ல சேலை உடுத்தணுமா, உடுத்திக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கணுமா பண்ணிக்கிறேன் "என்றதும், அவள் அவனையே பார்த்தான்.
"எனக்கு இருக்க ஒரே சொந்தம் நீ, நீயும் பேசாம இருந்தால் நான் என்னடா பண்ணுவேன்? அதுவும் அந்த கிழவியோட குழம்புல உப்பு இருக்காது ஓரப்பு இருக்காது அதை போய் ரசிச்சு ரசிச்சு ருசிச்சு சாப்பிடுற நீ, அதை தான்டா தாங்க முடியல" என அவள் சொல்லும் போதே சிரித்து விட்டான் அவன்.
"ப்ளீஸ் டா தம்பி அக்கா கிட்ட பேசுடா. நீ சொன்னது போல கல்யாணம் வரை எல்லாத்தையும் பண்றேன். பேசுடா ! " என கண்ணீர் வடிக்க, அவளை அணைத்து கொண்டான்.
" ஸாரிக்கா எனக்கு உன்னோட பேசாம இருக்க கஷ்டமா தான் இருத்துச்சி. ஆனா உன் வாழ்க்கைய சரி பண்ண எனக்கு இந்த வழி தான் கிடைச்சது. அதுவும் அந்த கிழவியோட குழம்பு சாப்பிட வச்சிட்டயே என்ன?" என கண்ணீரை துடைத்து போல சைகை செய்ய , சிரித்து விட்டாள்.
அவளது சிரிப்பை பார்த்த படி, " அக்கா, அன்பு அத்தான கட்டிக்கிறீயா?" என்றதும்" அவள் சிரிப்பு உரைய நின்றாள். உள்ளுக்குள் உணர்ச்சி குவியலில் தத்தலித்தாள்.
அன்பு, அவர்கள் வீட்டு எதிர் வீட்டில் தான் குடி இருக்கிறான். அந்த ஊரில் இருக்கும் பிரைமரி ஹேல்த் சென்டரில் டாக்டராகவும் வீட்டிலும் மருத்துவமும் பார்த்து வருகிறான். அவ்வூர் மக்களுக்கு நிறைய பொது சேவையும் செய்து வருகிறான்.
ஒருநாள் அவனுக்கு ஒரு கொரியர் வரவே . அவன் இல்லாததால், அந்த கொரியரைப் பூவை நாதனிடம் தெரிந்தவன் என்பதால் கொடுத்து விட்டு சென்றார். அவனும் வாங்கி வீட்டில் வைத்தான். அவரோ அலைபேசியில் அன்புவிடம் எதிர் வீட்டில் கொடுத்திருப்பதாகச் சொல்லி வைத்து விட, வீட்டுக்கு வந்தவன், எதிர் வீட்டில் பார்சலை வாங்கி விட்டு செல்லலாம் என்று 'பூ ' என்று அழைக்க,
"யாரு?" என பூவிழி உள்ளிருந்து கால் பிடித்து கொண்டதால் எழ முடியாமல் அமர்ந்தவாக்கிலே கேட்டாள். உள்ளிருந்து பெண் குரல் கேட்க பயந்து போனான். "யார் வேணும்?" என அவள் கத்த, "பூவை நாதன் இல்லையா? என்னோட பார்சல் ஒன்னு அவர் வாங்கி வச்சிருக்கறதா பார்சல் கொடுத்த கொரியர் அண்ணா சொன்னார் அதை கேட்டு வாங்க தான் வந்தேன்" என்றான் வெளியே நின்றவாறு.
"நீங்க ???"
"நான் எதிர் வீட்ல இருக்க அன்பு" என்றதும். அவளால் சட்டென எழுந்துக் கொள்ளவும் முடியவில்லை 'அப்றம் வாங்க ' என்று சொல்லலாம் என்று வாயெடுக்கும் முன் "ரொம்ப முக்கியமான பார்சல் இப்போவே வேணும்ங்க" என்றிட, "மன்னிச்சிங்க இப்போ என்னால எழுந்துக்க முடியல கால் பிடிச்சிகிச்சு..."என்றதும் மருத்துவன் என்பதால் பயந்து கொண்டு அவன் உள்ள வர, பூவிழியோ வண்ண வண்ண பூக்குவியல் மத்தியில் ஓர் பூவாய் அமர்ந்திருந்தவளை கண்டு ஒரு நொடி உறைந்து போனான்.
வெகு நேரம் பூக்கட்டிக் கொண்டவளுக்கு திடீர் அவனது அழைப்பில் கால் பிடித்துக் கொள்ள, அவளால் எழ முடியவில்லை அவன் உள்ள வந்ததும் கூட அவளால் எழுந்துக் கொள்ள முடியவில்லை.
"ஸாரிங்க கால் பிடிச்சிருக்கு சொன்னதும் விழுந்துட்டீங்களோ பயந்து உள்ளே வந்துட்டேன்... ஸாரிங்க" என்றதும் அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஒரு வித கூச்சத்தில் இருந்தாள், "நான் என் பார்சலை எடுத்துட்டு போயிடுறேங்க" என்று எடுத்துக் கொண்டு சென்ற பின்னே அவனவளுக்கும் மூச்சே வந்தது. அதுவரை இருவரும் படப்படப்பை சுமந்திருந்தனர்.
'யார் இவள் இதுவரை பார்த்தது இல்லயே வெளியே வந்து கூட இல்லையே இவள் பூவுக்கு யாரா இருக்கும் 'அன்று முழுவதும் விடைக்கிடைக்காமல் யோசித்தவன் காலையில் பூவை பார்த்ததும் பார்சலை வாங்கியது பற்றி பேசியவன் பூவிழியை விசாரிக்க, 'தன் அக்கா' என்றதும் வானுயர பறந்தான்.
"ஏன் அவங்க வெளிய வர மாட்டிக்கிறாங்களா இதுவரைக்கும் நான் வெளியே பார்த்தது இல்லையே?" என்றவனைப் பூவை தவறாக பார்க்கவில்லை.
அவனிடம் உண்மையை சொல்ல, அன்புவின் மனதில் அச்சாரமாக நின்றாள். சட்டென அவனும் பூவையிடம்,
"உன் அக்காவை எனக்கு திருமணம் செய்து கொடுக்கிறீயா?"எனக் கேட்டதும் அவனும் இன்ப அதிர்ச்சி அடைந்தான்.
அன்புவை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும் வயது வித்யாசமின்றி நன்றாக பழகுவார்கள் இருவரும். இப்போது இப்படி கேட்டதும் அவனால் மறுக்கவில்லை ஆனால் அக்கா 'ஒத்துக்கொள்ள மாட்டாளே' என்று அவன் வலியோடு சொல்ல, அவன் தந்த திட்டம் தான் அவனுடன் பேசாது அவள் கையில் உண்ணாது இருந்த உணர்வு போராட்டம்.
இவனும் சும்மா இருப்பதில்லை பூவை இல்லாத நேரம் பக்கத்து வீட்டுக்கு காரன் நச்சரிப்பது போல, எனக்கு பால் வேணும், தயிர் வேணும்... கொஞ்சம் குழம்பு கிடைக்குமா... எதையாவது கேட்டு நின்றவாறே மூணு வேளை அவனை பார்க்க வைத்து விடுவான். திடீரென வண்டியிலிருந்து கீழே விழுந்ததாக கூறி அக்கம்பக்கத்தினர் காலில் கட்டு போட்டு அவனை வந்து விட்டதாக அஞ்சகைப் பாட்டி கூற, அவளுக்கு இதயமே நின்று துடித்தது. அவளால் அவனை போய் பார்க்கவும் முடியவில்லை, பாட்டியிடம் விசாரிக்கவும் முடியவில்லை, பூவை கூட சென்று பார்த்து விட்டு வந்தான், ஆனால் அவன் தான் பேசிக்க மாட்டேனே ! அன்று முழுவதும் தவிக்க, அவளது தவிப்பை தம்பியாய் உணர, சிரித்து கொண்டான்.
மூன்று நாட்கள் கழித்து அவன் வெளியே வந்து பேசும் சத்தம் கேட்டு வேகமாக வெளியே வந்தவள் அவனை தான் பார்த்தாள், நன்றாக தான் இருந்தான், அவளிடம் சொல்ல வேண்டியதை போனில் சொல்லி ஓரவிழியாலே அவளைப் பார்க்க, ஏதோ திருப்தி அடைந்து உள்ளே சென்று விட்டாள். அவள் தன்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்பது உறுதி செய்து கொண்டவன் பூவையிடம் சொல்லித் தன் திட்டத்தை சொன்னான்.
மறுநாள் பூவைநாதன் கடைக்கு சென்று விட்டான். "பூ" என உரிமையோடு பூவிழியை அழைக்க அவளும் வேகமாக வெளியே வர பட்டு வேட்டிச் சட்டையுடன் மிடுக்காக நினறான். அவனை ஐந்து நிமிடமாக ரசித்திருப்பாள். " ஆங் பூ இன்னைக்கி நான் பொண்ணு பார்க்க போறேன். ஸோ பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய பூங்கொத்தை பூவை வீட்ல வச்சிருக்கறதா சொன்னான் எடுத்து தரீயா ?" எனக் கேட்டது அவனை கண்டதும் மலர்ந்த முகம் வாட, "நல்ல காரியத்துக்கு போறீங்க நான் பூ எடுத்து கொடுத்தா நல்லா இருக்காது, வேற வாங்கிக்கோளேன்" என்றாள் தலைகுனிந்து. அவனுக்கு கோபம் வர
"இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்டு மூலையில முடங்கிட்டு இருப்ப? வெளிய வந்து பாரு விதவைன்னு எந்தப் பொண்ணு வெள்ளை புடவையும் பொட்டு நகை நட்டுன்னு போடாம இல்ல ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்காமலும் இல்ல, யாரோ சொன்னத கேட்டு உன் மூளையும் மனசையும் பூட்டு வைக்காம திறந்து வச்சி நல்ல யோசி இது நம்ம வாழ்க்கை நம்ம முடிவுகள் தான் இருக்கணும் அடுத்தவன் பேச்சை கேட்டு வாழ்க்கை போச்சி மூலையே கதினு முடக்கி வைக்க கூடாதுன்னு நினை. போ போய் எடுத்துட்டு வா "என்றதும் வேகமாக சென்று எடுத்துட்டு வந்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி பார்த்து கொண்டிருந்தவன், சட்டென முட்டிப் போட்டு அவளிடம் தன் காதலை மொழிய அதிர்ந்து விட்டாள்,
"எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கிறேன். எனக்கு நீ எல்லா உறவா வரனும். என்னையும் நீ உன் உறவா உயிரா ஏத்துக்கனும்" என்று பூங்கொத்தை நீட்ட அதனை வாங்க துடித்த கைகளை வம்பாகப் பிடித்து வைக்க, அவனோ அவள் கையில் திணித்து விட்டுச் சீக்கிரமா பதில் சொல் என்று சென்று விட்டான்.
அதனை நினைத்தவள் தம்பி கேட்டதும் சம்மதம் சொல்ல அடுத்த முகூர்தத்திலே கல்யாணம் முடித்து ஒரே வீட்டிலே குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
மதிய வேளையில் கோவில் மூடும் நேரத்தில் இவனும் கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு கிளம்ப "அக்கா கிட்ட கொடுத்திடு"என்று கடவுள் அலங்கரித்த பூவையும் பிரசாதத்தையும் அவனிடம் கொடுத்தார் பூசாரி, அவனும் வாங்கிக் கொண்டு வர, அவன் முன்னே வந்து நின்றவள், "உங்க கையில் பூ வாங்கனா கல்யாணம் நடக்குமாமே, எனக்கும் பூ கொடுங்க எனக்கும் சீக்கிரமா கல்யாணம் நடக்கணும் "என்றாள் வெட்கத்தோடு அவனும் ஐயர் கொடுத்த பூவை கொடுத்து, "உனக்கும் சீக்கிரமா கல்யாணம் நடக்கும்மா " என்றவன் செல்ல எத்தனிக்க, "அப்போ எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?" அவள் கேட்க, அதிர்ந்தவன் , வெகு நாட்களாக தன்னை தொடரும் அவள் பார்வைக்கு இன்று அர்த்தம் புரிய, ஏனோ அவனும் கொஞ்ச நாளாக அந்தப் பார்வை அவனுக்கு வேணும் என்பது போல மனமும் அடம் பண்ண, இன்று அவள் தன் காதலை மறைமுகமாகச் சொல்ல, அவனும் அதற்கு, "பொண்ணு கேட்டு வரேன் சீக்கிரமா
" என்று உரைத்தவனை காதலோடு பார்த்தாள். அடுத்து என்ன கெட்டி மேளம் தான்.
What's Your Reaction?






