ஆசான் - 5

ஆசான் - 5
பள்ளியிலிருந்து அர்ஜுனை, நேசன் வந்து அழைத்துக் கொண்டவர், மருத்துவமனைக்கு சென்று அவனுக்கு மருந்திட்டு வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தார். கொஞ்சமாக அவனுக்கு உணவை ஊட்டி விட்டு மாத்திரை கொடுத்து உறங்க வைத்தார்.
அவனும் வலியிலும் மாத்திரை வீரியத்திலும் உறங்கிப் போனான். இங்கு, இந்திராவின் சிந்தனை எல்லாம் மகனை எண்ணியே இருக்க, பலரும் ஆறுதலித்து விட்டாலும் மனம் கேட்பதாக இல்லை. பெர்மிஷன் கேட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.
அவன் உறங்கிக் கொண்டிருக்க, அவனருகே சென்று அவனை அணைத்துக் கொண்டு அழுதார்.
' ஏன்டா என்னை வதைக்கிற? எல்லாரும் சொல்றதும் பேசுறதும் உனக்கு சரினு படும் போது. அம்மா சொல்றதும் மட்டும் ஏன் உனக்கு தப்பா தெரியுது...? உன் நல்லதுக்கு தானே சொல்றேன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்கிறீயே, உன் கூட அன்பா இருக்கணும் சந்தோசமா சிரிச்சு பேசணும், ஒரு தோழன் போல நீ இருக்கணும் கனவு கண்டுட்டு இருக்கேன். ஆனால் நீ என்னை வேண்டாதவளா தான் பார்க்கற, உன்கிட்ட ஸ்ட்ரிக்டா இருந்தும் என்னை ஏமாத்தி இப்படி ஒரு காரியம் பண்ணிருக்க, நான் உங்க அப்பா போல இருந்திருந்தால் சமூகத்துல நான் தலை குனிய வேண்டிய தாயா தான் இருந்திருப்பேன்... கொஞ்சம் நான் சொல்றத செவி கொடுத்து கேளு போதும். இது போல எப்பயும் நடக்காது தம்பி... ஆனா நீ தான் புரிஞ்சுக்க மாட்ற..." என்று புலம்பியவர் தன் மகனின் காயங்களை தடவி, நெற்றியில் இதழொற்றி விட்டு வெளியே வர, ருத்ரனின் சில விசுவாசிகள் அதற்குள் விஷயத்தை சொல்ல, கோபமாக அங்கு வந்தார். விறுவிறுவென்று உள்ளே சென்று அர்ஜுனைப் பார்த்து விட்டு கோபமாக வெளியே வந்தவர்,
" நீ புள்ளைய வளர்க்கிறீயா? இல்ல அடிமாட்டை வளர்க்கிறீயா? மாட்டை அடிக்கிறது போல அடிச்சிருக்கியே அப்படி என்ன டீ என் புள்ள தப்பு பண்ணினான்...?"
"ஏன் உங்க விசுவாசிகள் சொல்லலையா?" திமிராக கேட்க, " ஏய்!!! "என பல்லைக் கடித்தவர், "ஏதோ, ஆசையில பிரண்டஸோட செஞ்சிருக்கான்.
அதுக்கு பொறுமையா எடுத்து சொல்லி புரிய வச்சிருக்கணும். அத விட்டுட்ட, ஏண்டி என் புள்ளைய போட்டு அடிச்ச, அதுவும் எல்லார் முன்னாடியும். அவனுக்கு அவமானமா இருந்திருக்காது ...!"
"ம்ம்ம்... சிகிரெட் பிடிக்கும் போது தெரியாத அவமானம் , மாட்டிக்கிட்டதும் அவமானமா இருக்குமோ, என்ன சொன்னீங்க உட்கார்ந்து சொன்னா புருஞ்சுப்பானா? அந்தக் கட்டத்தை தாண்டிட்டான் உங்க புள்ள, எங்க வீட்ல யாரும் சிகிரெட் பிடிக்கிறதுல ...அவனுக்கு இப்போ இந்த பழக்கம் வரக் காரணமே நீங்க தான் அவன் முன்னாடி சிகிரெட்
பிடிக்கிறது . உங்கள பார்த்து தான் பிடிக்க ஆசை வந்திருக்கு.
என் கண் பார்வையில பக்கத்துல வச்சிருந்தேன் அவனை. சைக்கிள் வாங்கி கொடுத்து, அவனை தனியாக போக வச்சது நீங்க, அவன் கேட்டதும்
எனக்கு வாங்கி கொடுக்க தெரியாதா?அவனை இந்த சமூதாயம் மதிக்கனும் நான் பாடு பட்டுட்டு இருக்கேன். ஆனால் நீங்க, அதை எல்லாம் கெடுகிறது போல பண்றீங்க... ஒரு தந்தை, தன் மகனுக்கு ஹீரோவா இருப்பாங்க சொல்லுவாங்க, ஆனா நீங்க அவனுக்கு வில்லன், சாத்தான் இங்க இருந்து போங்க..." என்று கத்தினார்.
"இன்னும் கொஞ்ச நாள் தான் டீ. அவன் மேஜர் ஆகட்டும் என் கூடயே கூட்டிட்டு போயிடுறேன்..." என்று சொல்லிவிட்டு செல்ல, வழக்கம் போலயே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.
நேசன் தான் கூட இருந்து ஆறுதலானார். அர்ஜுன் கண்விழிக்க மூவரும் அறையில் இருந்தனர் . யாரிடமும் பேசாமல் ரெஸ்ட் ரூம் சென்று வந்தவன், மீண்டும் யார் முகத்தையும் பார்க்க பிடிக்காமல் தன் முகத்தை மூடி படுத்துக் கொண்டான்.
மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை... காயமார, சைக்கிளில் தான் சென்றான்... மாணவர்கள் அவனிடம் நலம் விசாரிக்க, அருளும் வந்து அவனிடம் விசாரித்து விட்டுச் சென்றாள்.
அவர்கள் சென்ற பின் கூட இருந்த நண்பர்கள் ஒருவன், " அர்ஜுன் இதுக்கெல்லாம் காரணம் இவ தான். அன்னைக்கு நாம தம் அடிக்கிறத இவ நின்னு பார்த்தா, இவ தான் பிரின்சிபால் கிட்ட சொல்லிருக்கணும்... இவ சொல்லாம யாருக்கும் தெரிஞ்சிருக்காது... " என்று ஏத்திவிட, கோபம் அடங்காமல் இன்னும் அவள் மேல் கொழுந்து விட்டு எரிய,
" அவளுக்கு இருக்கு டா ஒரு நாள்..." என்று சொல்லிக் கொண்டான்.
அந்த ஒருநாளை எதிர்ப்பார்த்து காத்திருக்க, அந்த ஒருநாளும் வந்தது, அன்றைய நாளிலிருந்து இந்திராவின் கண் பார்வைக்கு வந்துவிட்டான் அர்ஜுன். தினமும் அவருடன் தான் பள்ளிக்கு வருவதும் போவதுமாக இருந்தான். அன்று ஆர்த்தி பயிலும் கல்லூரியில் பெற்றோர்களை அழைத்திருக்க, பெர்மிஷன் கேட்டு பாதிலே சென்றார்.
அது அவனுக்கு வசதியாக போக, அவளது சைக்கிளிலிருந்து காத்தை பிடிங்கி விட்டான் ... பள்ளியும் முடிய, காத்து இல்லாத சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தாள். எல்லாரும் முன்னே சென்று விட, அவளுடன் வரும் தோழிகூட அன்று வரவில்லை தனியாக, அந்த முள்ளுக் காட்டைத் தாண்ட, அவளை மறித்து நின்றான்.
" ஏன் டீ என்னை பிரின்சிபால் கிட்ட மாட்டி விட்ட?"
"நான் சொல்லல அர்ஜுன். எனக்கு எதுவுமே தெரியாது" என்றாள் பயத்தில்.
"பொய் சொல்லாத டீ, அன்னைக்கு நாங்க தம் அடிக்கிறத நீ பார்த்த தானே...! எங்கள மாட்டி விட்டதும் நீ தான்... உன்னை சும்மா விட மாட்டேன் டீ" ,என்றுகோபமாக கத்தியவன், சைக்கிளை மிதித்து தூர எறிந்தான்.
" இப்போ எப்படி வீட்டுக்கு போவ
? உன் சைக்கிளை தேடியே சாவு...!" என்று கூறிவிட்டு அவனும் சைக்கிளில் பறந்து விட, சைக்கிளை தேடியவள், மது அருந்திக் கொண்டிபவர்களின் கண்ணில் சிக்க, தப்பித்து ஓட எண்ண, அதற்குள் அவர்கள் கையில் சிக்கி சின்னபின்னமானாள் , குத்துயிர் கொலை உயிருமாக கிழிந்த தாளாக கிடந்தாள். நேரம் செல்ல செல்ல, அருளின் பெற்றோர்களும் பக்கத்தில் இருப்பவர்களும் தேட ஆரம்பித்தனர் .
அங்கே சரியாக ஆர்த்தியை அழைத்துக் கொண்டு கல்லூரியில் இருந்து வந்த இந்திரா முள்ளுக்காட்டை கடக்க, மீண்டும் அவருக்கு அதே அதிர்வு , பயம் தோன்ற வேகமாக செல்ல எச்சரிக்கை செய்தது மூளை , அவரும் அவ்வாறு செய்யும் பொழுது முனங்கல் சத்தம் காதில் விழ தானாக கைகள் பிரேக்கை அழுத்த, வண்டி நின்றது.
" ஏன்மா நிறுத்துனீங்க?"
"பாப்பா ஏதோ சத்தம் கேட்குது...!" என்றார் சந்தேகமாக..." நாயா இருக்கும் நீங்க வண்டிய எடுங்க இந்த இடமே சரியில்ல...!" என்றாள். ஒரு முறை முள்ளுக்காட்டை பார்த்தவர்,
வண்டியது எடுக்க மீண்டும் முனங்கல் சத்தம்" காப்பாத்துங்க... காப்பாத்துங்க..." என்று விழுக, தாயும் மகளும் பார்த்துக் கொண்டனர் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு டார்ச்சடித்து பார்க்க, கால்கள் தெரிய இன்னும் மேல் உயர்த்தி அடிக்க பள்ளி சீருடைக் கிழிந்து, கிடக்க,மேலும் பார்க்க, காயங்களோடு அருள் கிடைப்பத்தை பார்த்து தூக்கி வாரி போட்டது இந்திராவிற்கு.
"அருள்" என்று கத்திக் கொண்டு அவளை நெருங்கி மடியில் வைத்துக் கொண்டு கதறினார். இன்னமும் கொஞ்ச உயிர் இருக்க "பாப்பா ஏதாவது வண்டி வருதா பாரு ...!" என்றதும் அவளும் ஓடி வந்து ரோட்டில் நின்று பார்க்க, சரியாக சேர் ஆட்டோ வர வழி மறித்து விஷயத்தை சொல்ல, அனைவரின் உதவியோடு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பெற்றோர்களுக்கு தகவல் சொல்ல, அடித்து பிடித்து அழுது கொண்டே வந்தனர்... உள்ளே சிகிச்சை அளிக்க இந்திரா, அவர்களுக்கு ஆறுதலானார்.
உள்ளே சிகிச்சை அளிக்க, நேசனை வரச் சொல்லி அவரோடு ஆர்த்தியை அனுப்பி வைத்தார். டாக்டர் வர, அவரை சூழ்ந்தனர்.
" நாலஞ்சு பேர் சேர்ந்து, அந்தச் சின்ன பொண்ண கூட்டு பலாத்காரம் பண்ணிருக்காங்க ..." என்றதும் வெடித்தழுதார் அவளது தாய்.
"நல்ல நேரத்துல கூட்டிட்டு வந்தீங்க.. இல்லேன்னா..." என்று மௌனமாகிட அவர்களுக்கு புரிந்தது.. விஷயத்தை போலீஸிடம் தெரிவிக்க, வந்து பார்த்ததும், கம்பளைண்ட் எடுத்துக் கொண்டு பேசண்ட் கண்விழித்ததும் வருவதாக சொல்லிவிட்டு சென்றனர். இரவு முழுக்க இந்திரா அங்கே இருந்தார்.
மறுநாள் அருள் கண்விழித்திட, "என்ன நடந்ததென்று?" இந்திரா கேட்க, திக்கி திக்கி உண்மையை கூறினாள். யாரோ அவளை கெடுத்து இருந்தாலும், அதற்கு முக்கிய காரணம் அர்ஜுன் என்று எண்ணும் போதே, இதயமும் பெத்த வயிரும் ஒரு சேர வலியால் துடித்தன, இவளது நிலைக்கு தன் மகனே காரணம் என்றறியும் போது, அவரால தலை நிமிர்ந்து அருளையோ அவளது பெற்றோரையோ பார்க்க முடியவில்லை...
அருளின் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் கூட, தன் மகன் செய்த பாவம் போகாது. ஊன்னுயிர் எல்லாம் கூசி போய் அவர்கள் முன் நின்றார்.
"உங்க கிட்ட மன்னிப்பு கேட்கக் கூட, எனக்கோ என் மகனுக்கோ அருகதை இல்லமா. என் மகனால, அருள் வாழ்க்கை இப்படியாகும் நான் நினைக்கவே இல்ல. நீங்க என்ன தண்டனை எனக்கும் என் மகனுக்கும் குடுத்தாலும் நாங்க ஏத்துக்கிறோமா"என்று அவரது காலில் விழுக போக, அதனை தடுத்த வள்ளி, "ஒரு ஆசிரியர் நீங்க போய் என் காலுல விழறீங்களே...!!"
"இப்போ நான் ஆசிரியர் இல்லம்மா, ஒரு தாயா, என் புள்ளை செய்த தவறுக்கு தண்டனை கேக்குறேன்..."
"தண்டனை குடுத்தா மட்டும் என் புள்ள பழைய நிலைமைக்கு வந்திடுமா, டீச்சர். என் பொண்ணு டாக்டர் ஆகணும் ஆசுபத்திரி கட்டனும் கனவுலாம் கண்டுச்சு, இப்போ அது போல அதோட கனவும் சிதைஞ்சு போச்சு... !! இனி என் புள்ள வாழ்க்கை கேள்வி குறியா நிக்குமே...! இதெல்லாம் உங்களையும் உங்க புள்ளையும் தண்டிச்சா, இல்ல மன்னிச்சா திரும்ப பழைய நிலைக்கு மாறுமா? " எனக் கேட்டு அழுதார் பெருமாள் அவளது தந்தை.
"மிஸ்... நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்காதீங்க, இதுல உங்க தப்பு எதுவும் இல்லை. அர்ஜுனுக்கு கூட, இப்படி நடக்கும் தெரியுமா, என்மேல் கோபத்துல இப்படி பண்ணிட்டான்... என் விதி, சைக்கிள் வேணாம்னு அங்கிருந்து வீட்டுக்கு போயிருக்கனும், நான் சைக்கிள் தேடுறேன்னு அவங்க கிட்ட மாட்டிக்கிட்டேன் மிஸ்..." என்று அந்நிலையில் கூட, அர்ஜுனை விட்டுக்கு கொடுக்காமல் பேசும் அந்த குழந்தை முகமாற பெண்ணை பார்க்க, வேதனையாக இருந்தது. மேலும் அழுகை, கோபம் வர, அங்கிருந்து விறுவிறுவென வீட்டிற்கு வந்தவர் மகனது கன்னத்தில் அறைந்தார்.
"ஏன்டா இப்படி இருக்க?உனக்கு என்ன தாண்டா பிரச்சனை? மனுசனாவே நீ நடந்துக்க மாட்டீயா? உன்னால அந்தப் பொண்ணு நாலு வெறி பிடிச்ச நாய்க்கு இறையாகிட்டா, அந்த சின்ன பொண்ணு என்னடா தப்பு பண்ணா? பிரின்சிபால் கிட்ட சொன்னது அவ இல்ல, ஒரு ப்ரைமரி டீச்சர், நீங்க பண்றத பார்த்து அவர்கிட்ட கண்டிக்க சொல்லி சொல்லிருக்காங்க.. உன் கோவம், அவசர புத்தி ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிச்சிருச்சுடா, இதுக்கு நிச்சயம் தண்டனை உனக்கு இருக்கு... நீ ஜெயலுக்கு போய் தான் ஆகணும்... அப்ப தான்
நீ திருந்துவ..." என்றவர், அவனை இழுத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றார், நேசன், ஆர்த்தி தடுக்க தடுக்க, இழுத்து சென்றார்..
ஏற்கெனவே அருளுக்கு இப்படி ஆனது தன்னால் என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டு, பயத்திலும் இருந்தவன், போலீஸ் என்றதும் மேலும் அவரிடம் கெஞ்சினான்..
அருளிடம் போலீஸ் விசாரிக்க, கெடுத்த நால்வரை மட்டும் சொன்னாள். அர்ஜுனை பற்றி மூச்சு விடவில்லை... ஆனால் இந்திராவோ, அர்ஜுனை அருள் முன் நிற்க வைத்தார்.
"பாருடா, இவளை பாரு. இந்த வயசுல அனுபவிக்க வேண்டிய வலியா இது.. பெண் உறுப்பு ஆண் உறுப்பு படிச்சிருப்பா தானே...! அவ பெண் உறுப்ப சிதைச்சு இருக்காங்க, அப்போ எவ்வளவு வலி அவ உணர்ந்து இருப்பா, ஏன்டா இப்படி வஞ்சகம், வக்கிர புத்தியோட பொண்ணுங்கள கொல்லுறீங்க... உங்களுக்கு கீழே தானும், உங்க சுகத்துக்காக படைக்க பட்டோம்னு யாரு சொன்னா? உன்னை போல அவளும் உயிர் தான். உன்னை நான் தான் அடிச்சேன், அதுக்கு நீ எனக்கு தண்டனை குடுத்திருக்கணும், ஆனா நீ எதுவும் அறியாத அவளுக்கு தண்டனை குடுத்தது தப்பு, தப்பு செய்யாம ஏன்டா அவ தண்டனை அனுபவிக்கனும்...? நீ தான் தண்டனை அனுபவிக்கனும்... சார், இவனையும் ஜெயில் போடுங்க, அருளுக்கு இப்படி ஆக காரணம்
இவன் தான்... " நடந்ததை கூறினார்.
"மிஸ், அர்ஜுன் படிக்கற பையன் அவனை ஜெயிலுக்கு அனுப்பாதீங்க மிஸ்..." என்று கெஞ்ச, "பாரு, உனக்காக பேசுற அவளை நீ என்ன பண்ணிருக்க பாரு..." என்று அர்ஜுனிடம் கத்த, அவனோ தலையை நிமிர்த்தவே இல்லை. ஆனால் அவனாக சென்று போலீஸிடம் நின்றான்.
அவனை கைது செய்து அழைத்து சென்ற காவலதிகாரிகள், அருளை கெடுத்தவர்களையும் தேடி கண்டுப்பிடித்தனர். நீதிமன்றத்தில் இருவருக்கும்
தீர்ப்பு வழங்கப்பட்டது
அர்ஜுனின் அருகில் ஒருவர் அமர, அப்போது தான் நினைவிற்கு வந்தான் கண்கள் குளமாக இருந்தன.
"அர்ஜுன் தானே உன் பேரு...!!" என்றதும் பக்கத்தில் அமர்ந்திருந்தவரை பார்த்தான், "என் பேரு சிவா, இங்க டீச்சரா இருக்கேன்... உன்னை பத்தி கேட்டேன், அதான் பேசலாம் வந்தேன்" என்றான். அவன் பதில் பேசவில்லை.
"இங்க இருக்க பசங்க, சூழ்நிலையினாலும் பசியினாலும் செய்த தவறால வந்தவங்க, ஆனால் நீ அப்படி இல்ல, உனக்கு ஒரு நல்ல லைஃப் கொடுக்க,
உன் அம்மா இருக்காங்க, உன்னை ஆதரிக்க ஒரு குடும்பம் இருக்கு.. இப்போ வெளிய போனாலும் உன்னை தாங்க உன் அம்மா இருக்காங்க... ஆனால் இவங்களுக்கு, அப்படி இல்லை, குடும்பம் இருக்கு, ஆனா ஆதரிக்க யாருமில்ல, சில பேருக்கு குடும்பமே இல்லை..
இருக்கிறவனுக்கு அருமை தெரியாது, இல்லாதவனுக்கு தான் அருமை தெரியும். சாப்பாட்டுல இருந்து போடுற ட்ரெஸ் வரைக்கும் இங்க வந்த பின்னே உனக்கே வித்யாசம் தெரிஞ்சிருக்கும்... இனியாவது உன் அம்மா பேச்சை ஒழுங்கா கேட்டு வாழு. அதுவே உன்னை உயர்த்தும். இங்க இருந்து போறவங்க திருந்திப் போகணும் தான் நாங்க நினைப்போம். நீயும் அப்படியே போனால் சந்தோசப்படுவோம். அப்றம் உன் இஷ்டம்..." என்றான்.
அர்ஜுனின் தண்டனை காலம் முடிய, வெளியே வந்தான். அங்கே இந்திராவும் நேசனும் ஒரு புறமிருக்க, ருத்ரன் ஒரு புறம் நின்று அவனை அழைத்தார்.
"அர்ஜுன், இனி நீ உங்க அம்மா கூட இருக்க வேண்டாம் வா போலாம்... இனி நீ ராஜாவா என்கூட இருக்கலாம் "என்றழைக்க, அமைதியாக அவரை பார்த்து பெருமூச்சு விட்டவன், ஓடிச்சென்று தாயின் பாதங்களில் விழுந்தான்.
"என்னை மன்னிச்சிடுங்க அம்மா, இனி உங்க பேச்சை மட்டும் தான் கேட்பேன்... நான் திருந்திட்டேன் மா, இனி உங்க புள்ளையா நடப்பேன், உங்களை எங்கயும் தலை குனிய வைக்க மாட்டேன்..." என்று கதற, அவனை அணைத்துக் கொண்டு அழுதார்.
"என் புள்ள எனக்கு கிடைச்சுட்டான் அப்பா...!" என்று கண்ணீர் விட்டு தன் மகனை உச்சி நுகர்ந்தார்.அர்ஜுன், ருத்ரனின் புறம் திரும்பி, "அம்மா ரொம்ப நல்லவங்க அப்பா, நாம தான் அவங்கள தப்பா புரிஞ்சுகிட்டோம்... உங்க அம்மாவை மதிக்கிற நீங்க உங்க பொண்டாட்டியை மதிங்க பா, அவங்களும் சக உயிர் தான். நமக்கு அடிமை இல்லை... இதை நான் புருஞ்சுகிட்டேன் நீங்களும் புரிஞ்சுகோங்க பா..." என்றவன் இந்திராவின் கையோடு கைக் கோர்க்க, வெற்றி களிப்பில் மகனோடு சென்றுவிட்டார்.
போகும் வழியில் முள்ளுக்காட்டை பார்க்க, அதுவோ பொட்டல் காடாக இருந்தன. கருவேல மரங்கள் எல்லாம் அகற்றப் பட்டிருந்தன.
மக்கள் செய்த போராட்டத்தில் தான் இது சாத்தியம்.
"அம்மா, அருள் வீட்டுக்குப் போகணுமா? " எனவும் சிரித்து கொண்டே" சரி "என்றார்.
அங்கே அவளோ பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்காக படித்து கொண்டிருந்தாள்.
அவள் வாழ்க்கையே முடிந்து போனது என்று கதறிய பெற்றோர்களிடம், " இன்னும் அவ வாழ்க்கை முடியல, நாய் கடிச்சா ட்ரீட்மெண்ட் கொடுக்கறது இல்லையா? அது போல தான் இதுக்கும்... இந்த ஒரு நிகழ்வை வச்சி அவ வாழ்க்கையில முட்டுக் கட்டை போடாதீங்க... அவளை நீங்க படிக்க அனுப்புங்க... " என்று கெஞ்சவே, ஒத்துக் கொண்டனர்.. அவளும் வழக்கம் போல பள்ளிக்கு படிக்கச்சென்றாள்.
அர்ஜுனை கண்டதும் மகிழ்ச்சியோடு அவனை வரவேற்றாள் , அவளது பெற்றோர்களும் தான்... ஆனால் அவனுக்கு தான் குற்றவுணர்வாக இருக்க தலை குனிந்தான்.
"என்னை மன்னிச்சிடு அருள், ஆரம்பித்துல இருந்தே, உன்னை தப்பா நினைச்சு, உன் மேல பொறாமை பட்டு, உனக்கு..."முடிக்க முடியாமல் அழுக, "முடிஞ்சத ஏன்பா பேசுட்டு இருக்க...?" வள்ளி கேட்க,
"இல்லை ஆண்ட்டி, நான் பண்ண தப்புனு அருள பார்த்தும் தோணுச்சு, ஆனா நான் மன்னிப்பு கேட்கவே இல்ல, கேட்டாலும் எனக்கு மன்னப்பே கிடையாது. அவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கேன்.."என்று அழுக, "நீ திருந்தினதே, எங்களுக்கு ரொம்ப சந்தோசம் பா, இனியாவது உங்க அம்மா பேச்சை கேட்டு நடந்துக்கப்பா, என்னைக்கும் அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுவாங்க,மொதல்ல கசப்பா இருக்கும், ஆனால் போக போக வாழ்க்கை இனிக்கும் ... அதுவும் ஆசிரியரா இருக்க உன் அம்மா, மத்த பிள்ளைக்கு நல்லது நினைக்கும் போது உனக்கு நினைக்க மாட்டங்களா? இனி பொறுப்பா இருப்பா...!"என்றார், அவனும் தலையை ஆட்டினான்..
அன்றிலிருந்து அர்ஜுன் திருந்தி புது மனிதனான்... தாயின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். பள்ளியில் கூட, முதலில் தயங்கி தயங்கி வந்தவன், பின் சாதாரணமாக அனைவரிடம் பழக ஆரம்பித்தான். அருளோடு நட்பு கரம் நீட்டினான். படிப்பில் கவனம் செலுத்தி பொது தேர்வை எழுதினான்.
பொது தேர்வை எழுதி, நிறைய மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் அருளும் அர்ஜுனும் தேர்ச்சி பெற, இருவரும் பையோ மேத்ஸ் பாடத்தை எடுத்து பதினொன்றாம் வகுப்பில் தன் கனவை நோக்கி முதல் காலடியை எடுத்து வைத்தனர்.
அந்தச் சம்பவத்திற்கு பின் பள்ளியில் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தனர். பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்... ஆண்களின் கடமை, பெண்களின் சிறப்பு அவர்களின் கடமை என்னென்ன என்று குழந்தைகளை வைத்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு கொடுத்தனர். அது பள்ளியில் மட்டும் இல்லாது சுற்றி இருந்த ஊர்களிலும் கொடுத்தனர். மக்களும் தெரிந்துக் கொள்ளட்டும் என்றே, இதெல்லாம் இந்திரா கொடுத்த திட்டமே... !
கல்வி மட்டுமே வழங்கும் கூடமல்ல பள்ளி, சமூதாயத்தில் சிறந்து ஒருவனை உருவாக்கும் பிரம்மாக்களின் வசிப்பிடம்.
தாயுமொரு ஆசானே!
ஆசானுமொரு தாயே!
அன்னை
உயிரை
கருவறையில்
சுமக்கிறாள்
ஆசிரியாரோ
வகுப்பைறை
யில்
பல உயிர்களை
சுமக்கிறார்கள்
தொப்புள்கொடி
போலவே
கல்விக்கொடியே
அவ்வாசானோடு
இணைக்கிறது
அவ்வுறவை...
அன்னைக்கு
நிகராசானே...!
முற்றும்
What's Your Reaction?






