காதல் நாயகனே - 11

Jun 30, 2025 - 17:48
Jun 30, 2025 - 17:51
 0  46
காதல் நாயகனே - 11

நாயகன் - 11

வரதராஜர் அழைப்பை ஏற்று  கந்தரூபனின் தாய் மஞ்சுளாவும் திருமணத்திற்கு வந்தவர், சாப்பிட பந்திக்கும் வந்திருந்தார். 

அவருக்கு தான் ஆர்டர் கை மாறிய விஷயம் தெரியாதே  ! தங்களது கேட்டரிங் உணவு தான் என்று எண்ணிக் கொண்டு ஆசையாக சாப்பிட அமர்ந்தார்.அவருடன் தங்கை முறையிலுள்ள பெண்ணுடன் வந்து அமர்ந்தார்.

அவரிடம் பெருமையாக, "எங்க கேட்டரிங் சமையல் தான் சாப்பிட்டு பாரு ! அம்புட்டு ருசியா இருக்கும். முன்னாடி என் புருஷன் தான் பார்த்திட்டு இருந்தார். அவர் போன அப்புறம் என் பிள்ளை தான் பார்க்கிறான்"என்று பெருமையாக சொன்ன படி ஒரு விள்ளல் உணவை வாயில் வைத்தவருக்கு சொன்னது போல ருசியாக தான் இருந்தது உணவு.

"சொன்னேன்ல "என்று ருசித்து சாப்பிட, பக்கத்திலிருந்தவரும் "ஆமா அக்கா ! ரொம்ப நல்லா இருக்கு ! உங்க கேட்டரிங் பெயர் என்ன?" என்று கேட்டார்..

"கந்தன் கேட்டரிங் சர்விஸ்! எங்க மாமனார் பேரு!"என்று பெருமையாக சொன்ன படி மீண்டும் ஒரு விள்ளலை வாயில் வைத்தார். 

பக்கத்தில் அமர்ந்திருந்தவரோ  உணவு பரிமாறுபவரின் டி சர்ட்டை பார்த்தார். அதில் ஜனனி கேட்டரிங் சர்வீஸ் என்று அச்சிட்டிருக்க, ' என்ன இவங்க கந்தன் சொன்னாங்க ! ஜனனினு இருக்கு ' என யோசித்தவர், அதை அவரிடம் கேட்டும் விட்டார்.

"அக்கா !  உங்களோடது கந்தன் கேட்டரிங் தானே சொன்னீங்க ! இவங்க சட்டையில என்ன ஜனனி கேட்டரிங் சர்வீஸ்னு போட்டு இருக்கு "என்று அவர்கள் அணிந்திருந்த டீ ஷர்ட்டின் பின் பகுதியை காட்டிட, எழுத படிக்க தெரிந்த அவரும் ' ஜ... ன... னி... கே... ட்... ட்ரிங் சர்வீஸ்"எழுத்து கூட்டி வாசித்தவர்.

"ஆமா, ஜனனினு தான் இருக்கு ! ஒரு வேலை என் புள்ளை பேர மாத்திட்டானோ !!"என வாயிட்டே சொல்ல, 

பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் சிரித்த படி "போங்க அக்கா ! விளையாடிட்டு இருக்கீங்க ! இது உங்க கேட்டரிங்கா இருக்காது ! உங்க புள்ளை மாத்தி சொல்லி இருப்பார் "என்று மேலும் சிரித்தபடி சாப்பிட்டார்.

மஞ்சுளாவிற்கு ஏதோ போல் இருந்தது. தன் மகனை விழிகளாலே அலசி தேட, அவனோ ஜனனியின் முன்னே பேச நின்றான்.

முகத்தில் படிந்த வேர்வையை ஒற்றி எடுத்த படி நின்றிருந்தவளின் முன் வந்து நின்றான் கந்தரூபன்.

அவனை கண்டதும் கேள்வியாக புருவங்கள் ஏறி இறங்க அதனை பார்த்து முறுவலுடன் " நான் கந்தரூபன் ! கேள்வி பட்டிருப்பீங்களே கந்தன் கேட்டரிங் சர்வீஸ் ! என்னோடு தான்"என்று மரியாதையாக அவளிடம் தன்னை அறிமுகம்  செய்து கொண்டான். அவளும் அடுத்த பேசு என்பது போல் அமைதியாக கைகட்டிக் கொண்டு நின்றாள். 

அவன் தான்" ம்... சும்மா சொல்ல கூடாது ! சாப்பாட அசத்திட்டீங்க !!! நானும் என்ன பெரிசா செஞ்சிட போறீங்க தான் டேஸ்ட் பார்க்க வந்தேன். மூனு வேள சாப்பாட்டையும் கலக்கிட்டீங்க !!!  ரொம்ப நல்லா இருந்தது. டயட்ல இருக்க நானே கண்ட்ரோல் இல்லாம கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டேன்" என்றான்.

அவளும் "நன்றி "என்று அடக்கத்துடன் சொன்னாள். அவளிடம் எதிர்பார்த்த நக்கல் பார்வை , கேலி பேச்சு எதுவும் இல்லை...' நன்றி 'என்று தன்மையாக சொன்னதை கேட்டு இவனுக்கு தான் ஆச்சரியமாக இருந்தது. இதுவே அவனாக இருந்தால் சொல்லிக் காட்டி காலரை இழுத்து விட்டு பெருமை பேசியிருப்பான்.

அவளது அமைதியும் அடக்கமும் அவனை ஈர்த்தது. மேலும் ஏதோ சொல்ல வர" அடேய் கந்தா ! யாருடா ஜனனி ? எதுக்குடா நம்ம கேட்டரிங்க்கு அவ பெயர வச்சிருக்க!! "என சத்தமாக கேட்டபடி வர, இவனோ தலையில் அடித்துக் கொண்டான். ஜனனியோ இருவரையும் புரியாமல் பார்த்து நின்றாள்.

"எங்க அம்மா தான் ! ஆர்டர் கை மாறினத இவங்கட்ட சொல்லல ! அதான் கேட்டரிங் சர்வீஸ் பெயர மாத்திட்டேனானு கேக்குறாங்க "என்று விளக்கம் கொடுக்க, அவளோ அவனை முறைத்தாள். இளித்து  வைத்தான்.

அருகே வந்த மஞ்சுளாவும்  மகன் தனக்கு தெரியாத ஒரு பெண்ணிடம் பேசுவதை கண்டு, கேட்க வந்ததை மறந்து தான் போனார்.

"யாரு இந்த பொண்ணு கந்தா ?! உனக்கு தெரிஞ்ச பொண்ணா? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாமா?" அவனிடம் ஆரம்பிச்சு ஜனனியிடம் முடித்தார்.

"ம்ம்மா...!"என்று அவரை அடக்க முயல, அதை கவனித்த படி அவரிடம் " நான் ஜனனி ம்மா ! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு "என்றதும் தாய், மகன் இருவரின் பார்வை போனது என்னவோ நெற்றிக்கும் கழுத்துக்கும் தான். அவரது  பார்வையை பொறுத்தவள், கந்தரூபனை மூன்றாம் கண் இல்லாமலே எரித்தாள். உடனே தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

சரியாக ஜனனி அருகே வந்த விபு, "ஜானு!! இங்க என்ன பண்ற நிறைய வேலையை இருக்கு"என்று சலித்த படி வந்தவனையும் விடவில்லை விழிகளால் இருவரும் அலசிட ! ஜனனிக்கு கடுப்பானது .

" இது தான் உன் புருஷனா மா?"என்றார்.

உடனே ஜனனியும்" இல்லமா இது என் ஃப்ரெண்ட்  விபு " என்றாள்.

"உன் புருஷன் என்ன மா பண்றார்?"விடாமல் கேள்விக் கேட்டார். 

அவளும் பொறுமையுடன்" இப்ப உயிரோட இல்லம்மா" என்று முடித்துக் கொள்ள, கந்தரூபனின் விழிகள் அகல விரிந்தன. 

மஞ்சுளாவோ அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார் ' இந்த சின்ன வயசுல போகணும் 'என்று  உள்ளுக்குள் எண்ணிக் கொண்டவர் மகனை சந்தேகமாக பார்த்தார்.

இவளும் விடாமல்" சாப்பாடு  எப்படி மா இருந்தது? "என்றாள்.

"அட !!! நல்லா இருந்தது கண்ணு!நீ தான் இந்தக் கேட்டரிங்க நடத்திரியா மா?"

"ஆமா ம்மா !  நான் தான் நடத்திறேன் என் மாமனார் மாமியார் உதவியில ! என்னால முடிந்ததை செய்றேன் மா"என்றாள்.

"பரவாயில்ல ! பிள்ளை இல்லைனாலும் மகளாட்டம் உன்னை பாத்துக்கிட்டு உனக்கு உதவி செய்ற அவங்களுக்கு பெரிய மனசு தான். ஒத்த பொம்பளையா இதுல சாதிக்கணும் நினைக்கற உனக்கு இனி எல்லாம் நல்லா தான்மா நடக்கும்"என வாழ்த்தினார்.

அவளும் "நன்றி ம்மா " என்றாள் சின்னப் சிரிப்புடன். தன்னிடம் காட்டாத புன்னகையை தாயிடம் காட்டுவதை பார்த்தபடி நின்றான் கந்தரூபன்.

"ஏம்மா கேக்குறேன் தப்பா நினைக்காத, இவனுக்கு தானே வரத அண்ணே ஆர்டர் குடுத்ததா சொன்னான். உன் கிட்ட எப்படி மா ஆர்டர் கை மாறிச்சி?"என விவரமறிய கேட்டார்.

தன்னை வெறித்து பார்க்கும் கந்தரூபனை கண்டவள், மஞ்சுளாவிடம்" அதை நீங்க உங்க பையன் கிட்ட தான் கேட்கணும் மா?"என்றாள்.

சுப்ரமணி மூலமாக விஷயம் தெரிந்தாலும் அவளுக்கு சொல்ல விருப்பமில்லை.. தாயின் முன் மகனை குறைவாக பேசினால் எந்த தாய் தான் தாங்குவார், அதை எண்ணி தான் அவனாக சொல்லட்டும் என்று விட்டு விட்டாள்.

"கந்தா...! டேய் கந்தா ! "அவனை உலுக்கிட"ம்மா "என பதறி போனவன்.

"என்ன மா சொல்லு "என்று தாயின் மீது கவனத்தை வைத்து கேட்டான்.

"கவனத்தை எங்க வச்சிருக்க ? "

"அது... ஒன்னில்ல என்ன விஷயம் சொல்லு"என சமாளித்தான்.

"ஆர்டர் எப்படி கை மாறிச்சி? எதுக்கு உன் கிட்ட குடுத்த ஆர்டர் அந்த அண்ணே இந்த பொண்ணுக்கு  குடுக்கணும்?"என விவரமாக கேட்க, 

தடுமாறியவன், பக்கத்தில் நின்ற ஜனனியை பார்க்க, அவளோ கைகளை கட்டிக் கொண்டு ' சொல்லு ' என்று ரீதியில் நிற்பது போல நின்றிருந்தாள்.

எச்சிலை கூட்டி விழுங்கியவன்" வரதர் மாமா எனக்கு தான் குடுத்தார். உனக்கு தான் இந்த ஆர்டர் , நீ தான் செய்யனும் என் கைய பிடிச்சி ஒரே கதறல்... சரி மாமா நானே பண்றேன் சொல்லிட்டேன். 

இந்த பொண்ணும் அப்ப தான் மாமா கிட்ட ஆர்டர் கேட்டு வந்துச்சி, மாமா தான் என் கிட்ட ஆர்டர் குடுத்துட்டார்ல !  அப்புறம் என் கிட்ட வந்து ஏதாவது ஆர்டர் வந்தா எனக்கும் சொல்லுங்க சார். புதுசா ஆரம்பிச்சிருக்கேன் கெஞ்ச வேற செஞ்சுச்சி ! நானும் நம்பர வாங்கி அனுப்பிட்டேன். அப்புறம் யோசிச்சேன், நமக்கு ஆர்டர் வந்து நாம மேலும் மேலும் வளரத விட, 

நாம நாலு பேர உயர்த்தி விடறது நமக்கும் நல்லது தானே ம்மா ! அதான் இந்த பொண்ணுக்கே ஆர்டர் குடுக்க சொல்லிட்டேன். பரவாயில்ல குடுத்த வாய்ப்பை இந்த பொண்ணு நல்லா பயன்படுத்தியிருக்கு !

இந்த பொண்ணு நல்லா வரும் மா !" என கதையைப் அடித்து விட்டவன், பெருமையாக காலரை தாயின் முன் தூக்கி விட்டுக் கொண்டான். 

மகன் சொன்னதை நம்பி  அவனை பெருமையாக பார்த்தார். அதற்கு மாறாக, விபுவும் ஜனனியும் அவனை அற்பமாக பார்த்தனர். 

அவன் சொன்ன கதையை கேட்டு கொதித்து போன விபு பேச வாயை திறக்க, அவனது கையை பிடித்து தடுத்தவள் ' வேண்டாம்' என்று தலையை அசைத்தாள்.  தனது கோபத்தை கட்டுப்படுத்தி நின்றான்.

"அதானே ! என் புள்ள மனசு"என்று. முகத்தை வழித்து நெற்றியில் வைத்து நெறிக்கும் வேளையில் ஜனனியிடம் கண்களை சுருக்கி மன்னிப்பு யாசித்தான். 

கண்களை மூடித் திறந்து தன்னை சமன் செய்தாள். 

"அப்படியே இவன் அவங்க அப்பாவை போல சமையல் பக்குவத்திலும் சரி  உதவி செய்றதிலும் அவர மாதிரி தான். எங்க கேட்டரிங் சாப்பாட்ட சாப்பிட்டு இருக்கியா நீ?" என ஜனனியிடம் கேட்க,

"இப்போ சாப்பிட்டது இல்லம்மா ! ஆனா இவங்க அப்பா இருந்தப்போ சாப்பிட்டு இருக்கேன். என் கல்யாணத்துக்கு கந்தன் கேட்டரிங் சர்வீஸ தான் என் அப்பா புக் பண்ணிருந்தார்"என்று ஜனனி சொல்ல, 

விபு "கல்யாணத்துல நடந்த ஒரே நல்ல விஷயம் அது மட்டும் தான்" என்றான் சலிப்பாக, "ப்ச்"என அவனை இடித்து அமைதியாக இருக்கும் படி சொன்னவள், 

"எனக்கு வீரமணி சார் சமையல் பிடிக்கும் மா ! நிறைய விசேஷ வீட்டுல அவரை பார்த்து வியந்திருக்கேன்.. அவரை போல கேட்டரிங் வைக்கணும் நெடு நாள் ஆசை எனக்கு இருந்தது. அது இன்னைக்கி தான் நிறைவேறி இருக்கு. அதுக்கு காரணம்..."என்று முடிக்கும் முன்பே 

இடைப்புகுந்த ரூபானோ "அதுக்கு காரணம் நான் தான் சொல்லவறீங்க ! ப்ளீஸ் என்னை புகழாதீங்க எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. செஞ்ச உதவிய பத்தி பேசவும் பிடிக்காது , மத்தவங்க பேசறதும் பிடிக்காது ! இனி நீங்க கந்தன் கேட்டரிங் போல பெரிய அளவுக்கு இல்லைனாலும் ஓரளவு  வளர்வீங்க ! அப்போ நீங்க என்னை இல்லை என் அப்பாவை நினைச்சாலே போதும்  "என்று தன்னடக்கத்துடன் பேச, இவர்கள் இருவருக்கும் காதில் புகை வராத குறை தான். 

"அம்மாடி என்ன இந்தப் புழுகு புழுகுறான். அண்டப் புழுகனா இருப்பான் போல"

"ம்... அந்த அப்பாவி அம்மாவை எப்படி ஏமாத்துறான் பாரு ! பாவமா இருக்கு அவங்களை பார்க்க..." என்றாள் அவனுக்கு மட்டும் கேட்டபடி. 

மஞ்சுளாவுடன் வந்த பெண் அவரை அழைக்க, "சரி டா தங்கம் நான் கிளம்புறேன் நீ நேரமா வீட்டுக்கு வந்து சேரு ! "என்றவர்,  

ஜன்னியிடம் "நான் வர்றேன் கண்ணு" என்க, இவளும் தலை அசைத்து வழியனுப்பி வைத்தாள். 

அங்கிருந்து அவர் நகரும் வரை மூவரும் அவரே பார்த்திருந்தனர். அவரது நிழல் மறைந்ததும் கோபமாக கந்தரூபன் பக்கம் திரும்பிய ஜனனி,

"நீயெல்லாம் மனுஷனா ? பெத்த தாயவே ஏமாத்தற ! அடுத்தவங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறிக்கற இன்னும் என்னென்ன கெடுகேட்ட  பழக்கத்தை வச்சிருக்க ! உங்க அம்மா ஒரு அப்பாவி,  எப்படி அவங்களை ஏமாத்த உனக்கு மனசு வருது?! இங்க பாரு, எப்பவும் நீ நினைச்சதே நடக்காது.

அதுக்கு உதாரணம் இந்த வாய்ப்பு ! என் கிட்ட  இருந்து தட்டிப் பறிக்கணும் நினைச்ச, ஆனா பாரு எனக்கே அந்த ஆர்டர் திரும்ப கிடச்சிடுச்சு ! 

அதே போல உங்க அம்மாவை ஏமாத்திறீயே அதுவும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். அவங்களை ஏமாத்திட்டு உனக்கு கிடைக்கிற எதுவும் நிலைக்காது. அதை உன்னால அனுபவிக்கவும் முடியாது. போய் உண்மைய சொல்லி அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளு நீ சேர்க்கிற பாவம் குறையும்.... ச்ச !" என விபுவை அழைத்துக் கொண்டே செல்ல எத்தணிக்க 

"ஹலோ ஜனனி மேடம் ! என்ன ஓவரா பேசிட்டே போறீங்க ? கொஞ்சம் அக்கம்பக்கம் பார்த்து பேசுங்க ! "என காலரை இழுத்து விட்டவனே, 

"எங்க அம்மாவ தானே ஏமாத்தினே ! உங்கள இல்லயே ! பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் படிச்சதில்ல !  அம்மாவுக்காக அவங்க சந்தோஷத்துக்காக பொய் சொன்னே இதுல என்ன தப்பு இருக்கு?"என்று தான் தவறை உணராது  திமிராக பேசினான்.

"அடங்கொப்புறானே ! எதுக்கு எதைடா எடுத்துகாட்டுற ! டீச்சர் டா நானும் கேட்க முடியல  ! போங்கடா" என விபு நொந்து கொண்டு அங்கிருந்து கிளம்ப, ரூபனோ அசட்டையாக தோளை குலுக்கினான். 

இவளோ "ஊஃப்" என  இதழ் குவித்து ஊதியவள், அவனை மதிக்காது அங்கிருந்து தன் வேலையை பார்க்க சென்று விட்டாள். ஆனால் அவனோ தன் மனதை அவள் பின்னால் அலைபாய விட்டு,  மனமின்றி அங்கிருந்து சென்றான்.

****

"நம்ம ரெண்டு பேரும் ஏன் சேர கூடாது? சேர்ந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்ன சொல்றீங்க? "என கந்தரூபன் காலரை இழுத்து விட்ட படி ஜனனியிடம் கேட்க,  

அவளோ " எனக்கு சேர விருப்பம் இல்ல. அது எப்பவு

மே நடக்காது !" என்று  சொல்லி விட்டு நகர்ந்தாள்.

'சேர வச்சிட்டா ? ' என வில்லனை போல யோசிக்க ஆரம்பித்தான் கந்தரூபன்.

மக்களே

ந்தரூபனோட திட்டம் என்ன வா இருக்கும்? நீங்க நினைக்கிறீங்க கமெண்ட் பண்ணி சொல்லுங்க மக்களே..

ஒரு வார்த்தையிலாவது கமென்ட் பண்ணுங்க மக்களே..

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1