நெடுஞ்சாலை கானமே - 4

கானம் - 4
இருள் திரையும் பனித்திரையும் போட்டி போட்டுக் கொண்டு சூழ்ந்திருக்க, அவ்வூரின் அழகை கண்ணாடித் திரை வழியிலே பார்ப்பது போல இருந்தது.
காலையில் நேரமாக விழித்தெழ அலாரம் வைத்து படுத்தவன் தாமதமாக தான் உறங்கினான்.
அலைபேசி, அவன் எழுந்து கொள்ள வேண்டிய நேரத்தை சுட்டிக் காட்டி சிணுங்க, படக்கென எழுந்தவன் அதனை அனைத்து விட்டு விறுவிறுவென காலைக் கடன்களை முடித்து பணிச் சீருடையை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
ஆடிமாதக் காற்று அவனைத் தழுவி கொஞ்சம் சீதளத்தை அவனுள் பரப்பியது.
கண்களை மூடி அதை உணர்ந்தவனது கண்களுக்குள் வந்து நின்றது என்னவோ அவனது தென்றல் தான். தென்றல் காற்று அவனை வருடுவது காதலியின் விரல் தீண்டிப் போகும் நொடியை உணர்த்தியது. அதனூடே அவனது நினைவு எங்கெங்கோ அவனை அழைத்து சென்று மீண்டும் அவனை அவனிடத்திற்கே வந்து விட்டது. அவனது கற்பனை நல்லக்கண்ணுவை விடப் படு வேகத்தில் சென்றது.
தாயின் தூக்கம் கலையாதவாறு தன் வேலைகளை முடித்துக் கொண்டு கதவைச் சாத்தி வைத்து விட்டு தனது வண்டியில் நெடுமாறனின் இல்லம் நோக்கிப் பறந்தான் இசைசேத்தன்.
படிப்பு சரியாக ஏறவில்லை. பி.ஏ தமிழ் தான் அவனது மதிப்பெண்களுக்கு கிடைத்தப் பிரிவு. அதையும் வேண்டா வெறுப்பாக கடனுக்கே முடித்தவனுக்கு வேலைத் தட்டுப் பாடு.
மினிப் பேருந்து ஓட்டுநரான நெடுமாறன் தான் தனது நண்பனுக்கு நல்லக்கண்ணு மினிப் பேருந்தில் நடத்துநர் வேலையை வாங்கித் தந்தான். அவனும் அந்த வேலையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான். அவனுக்குப் பிடித்த வேலையும் தான் அது.
பள்ளிச் செல்லும் காலத்திலும் கல்லூரிச் செல்லும் காலத்திலும் அவன் பயணம் சென்றப் பேருந்தில் தான் இன்று நடந்துநராக இருக்கிறான். அது அவனுக்குள் பெருமிதமாக இருந்தது. மற்றவர்கள் அவனது வேலையைக் குறைவாகச் சொன்னாலும் அவனுக்கு அவனது வேலை என்றும் உசத்தி தான்.
இந்த வேலை மேலும் பிடிக்க இன்னொரு காரணம் அவள் தான். அவள் தான் இளந்தென்றல். அவனது பள்ளிக் காலம் தொட்டத்திலிருந்து இன்று வரை அவனுடன் வாழ்க்கையிலும் பேருந்திலும் பயணம் செய்யும் ஒருத்தி, தாயை கடந்து அவனது நெஞ்சில் நிறைந்த ஒருத்தி அவள் மட்டுமே. அன்றும் இன்றும் என்றும் அவள் ஒருத்தி மட்டுமே என்ற கொள்கையில் வாழ்கிறான்.
பள்ளிப் பருவத்தில் அவளிடம் காதலை மொழிந்தான். படிப்பை காரணம் காட்டி மறுத்தாள். கல்லூரியிலும் தன் காதலை மொழிந்தான். வீட்டு கஷ்டத்தையும் கடனையும் சொல்லி தனது பாரத்தையும் சொல்லி அதை இறக்கி வைத்தப் பின்பு, காதல் இருந்தால் பார்க்கலாம் என்று விளித்திருந்தாள்.
மீண்டும் காதலைச் சொல்லி அவளது மறுப்பு காரணத்தைக் கேட்கப் பிடிக்காமல் காலத்தையும் தாழ்த்தாமல் கல்யாணம் செய்து கொள்ள, அவளைப் பெண் கேட்டு விடலாம் என்று அவனிருக்க, அவனது தாயோ அவனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.
அவரோ 'இந்த ஊரில் உனக்கு பெண் எடுக்க மாட்டேன்.' என்ற பிடிவாதம் பிடித்து மௌனப் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்.
'ஏன்?' என்ற அவனது கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் அந்த விஷயத்தில் மற்றும் கறாராக இருக்கிறார். காரணங்களை கேட்டால் அவர் மழுப்ப, இவனுக்கு கோபம் பழியாக வந்தது. அவனும் வீம்பு போராட்டத்தில் இறங்கி இருக்கிறான்.
தென்றலைத் தவிர யாரையும் கல்யாணம் செய்துக் கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தில் தான் இருக்கிறான். யார் போராட்டம் வெற்றிப் பெறுமோ?
தந்தையை இழந்த சேத்தனுக்கு தாய் மட்டும் தான் உறவு. துரோகத்தின் விளைவால் சேத்தனின் தந்தை சீனிவாசனின் உயிர் காவு வாங்கப்பட்டது. அதுவும் அவன் காதலி என்று பிதற்றிக் கொண்டிருப்பவளின் குடும்பத்தாலே அவரது உயிர் போயிருந்தது. அந்தக் குடும்பத்திலிருந்து ஒருத்தரது சகவாசம் கூட நமக்கு வேண்டாம் என்று உறுதியில் இருந்தார் சாரதா.
ஆனாலும் விதி வலியது போல அவர்களது வீட்டிற்கு எதிரே அவரது எதிரி குடும்பத்தை தங்க வைத்திருக்கிறது.
சேத்தனின் சிறு வயதில் அவனது தந்தை இறந்து விட்டதால், அவனுக்கு விவரம் சரியாகத் தெரியவில்லை.
அன்றே ஊரை விட்டுப் போவதாக சாரதா முடிவெடுக்க, உடனிருந்த மாமியார், மாமனார் அவளை விடவில்லை. அவரது முடிவுக்குத் தடைப் போட்டனர். வருஷங்கள் செல்ல அடுத்தடுத்து அவர்கள் இருவரும் இறைவனடிச் சேர்ந்ததும் இவர் ஊரை விட்டுப் போக எண்ண, சேத்தனோ பள்ளிப் பருவ காலத்திலே காதலில் விழுந்திருக்க, ஊரை விட்டு வர மறுத்து போராட்டமே செய்திருந்தான். சேத்தனின் தாய் சாரதா நொந்து போனார்.
தினமும் பயத்தில் துடித்துப் போவார். மகன் நெடு நெடுவென வளர்ந்தாலும். 'கணவனின் உயிரை வாங்கியவர்கள் இவனைக் கொல்ல எவ்வளவு நேரமாகும்?' என்ற பயம் அவருக்கு இன்று வரைப் போகாமல் இதயத்தை கெட்டியாகப் பிடித்திருக்கிறது. இதை அறியாத அவனோ சண்டித்தனமாக ஊரை விட்டு நகருவதாக இல்லை என்று ஐயனார் சிலைப் போல பிடிவாதம் பிடித்துக் கொண்டு நிற்கிறான். அவருக்கு தினமும் தீயில் நிற்பது போலவே இருக்கும். மேலும் வினையாக அவர்களது எதிரியின் வீட்டுப் பெண்ணையே காதலிப்பதாக சொன்னால் அவருக்கு கோபமும் பயமும் சமமாக இதயத்தை நிரப்பிக் கனத்து கிடக்கிறது.
அவரால் மகனிடமும் காரணத்தைப் பகிர முடியவில்லை. கோபத்தில் கத்தியை அவன் எடுத்தாலும் பாதிப்பு நமக்கு என்று தெளிவாக இருப்பதால் அவனிடம் காரணத்தைச் சொல்லாமல் மழுப்பலாக ஏதேதோ சொல்லி சமாளித்தாலும் அவனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவர் ஒரு புறம் தவிக்க, அவனும் ஒரு புறம் தவித்துக் கொண்டிருக்கிறான்.
தன் காதலை ஏற்காத காதலி, தாய் என்ற இருவரையும் இரு பக்கமும் வைத்துக் கொண்டு நடுவில் அவனோ தவித்துக் கொண்டிருக்கிறான். இருவரும் அவனது காதலை ஏற்பார்களா? இல்லை மிதிப்பார்களா? என்று பார்ப்போம்.
அடுத்த தெருவில் இருக்கும் நெடுமாறனின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான். இன்னும் அவர்கள் வீட்டில் யாரும் எழுந்து கொள்ளவில்லை என்ற வாசலில் எரிந்துக் கொண்டிருக்கும் விளக்கை வைத்து கணக்கிட்டவன். யாரையும் தொந்தரவு செய்யாமல் அவனை மட்டும் தனியாக அழைக்க, அவனது அலைபேசியை எடுத்தான்.
"பச்" வீடே உச்சுக் கொட்டும் அளவிற்கு நெடுமாறனின் அலைபேசியில் பாடல் ஒலிக்க, அடித்துப் பிடித்து எழுந்து காதில் வைத்து, "என்னடா?" என்றான் சலிப்பாக,
"எரும இன்னமும் தூங்கிட்டு தான் கிடக்கியா? மணி ஆறுடா. இரண்டு சொம்பு தண்ணிய ஊத்திட்டு வெரசா வாடா! பஸ் எடுக்கணும்." என்றான்.
அவனோ கண்ணை கசக்கிக் கொண்டு பார்க்க, மணி ஆறெனக் காட்டியது. தலையில் அடித்துக் கொண்டவன், "அட பரதேசி! மணி ஆறு தான்டா ஆகுது. இன்னைக்கி ஞாயித்துக் கிழமை எவனும் எந்திருச்சிருக்க மாட்டாய்ங்க டா. வெறும் வண்டியில நீயும் நானும் தான் ஊர சுத்திட்டு கிடக்கணும். ஒனக்கு தூக்கம் வரலைண்டு எங்க தூக்கத்தை ஏன் டா கெடுக்கற வெளக்கென்ன போய் படு டா." எனக் கத்தினான்.
இவனோ தலையில் அறைந்து கொண்டு, "டேய் **** மணி ஆறு! ஐசு நொய்சு நேத்து கொஞ்சினீயே அந்தப் புள்ள நேத்து என்ன சொல்லுச்சு? ஆறு மணிக்கு பஸ் ஸ்டான்டுல நிப்பேன் பஸ் எடுத்துட்டு வாண்டு சொல்லுச்சா இல்லையா? மணி ஆறு இப்போ நீ கிளம்பி வரல உனக்கு இன்னைக்கி தகராறு தான் பார்த்துக்க." என்று முடிக்கும் முன்னே தலையை குலுக்கி விழித்துக் கொண்டான்.
"டேய் இருடா ஐஞ்சு நிமிஷத்துல வந்துர்றேன்." என்று அரக்கப் பறக்க எழுந்து குளித்து குளிக்காமல் வேகமாகப் பணிச் சீருடையை அணிந்து விட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே மூச்சு வாங்க வந்தான்.
"ஏன் டா முன்னாடியே வந்திருக்க கூடாதா? அவ கிட்ட கோர்த்து விட்டு திட்டு வாங்கி எங்களுக்குள்ள சண்டை வரணும்-ண்டுடே இப்படி செய்வீயா நீ?" என கேட்டுக் கொண்டே வண்டியில் பின்னால் அமர்ந்தான் நெடுமாறன்.
அவன் அமர்ந்ததும் வண்டியை எடுத்தவன், "வேற என்னடா பண்ண சொல்ற? நான் மட்டும் என் ஆளு கிட்ட கெஞ்சிட்டு கிடக்கணும், நீ மட்டும் ஐசு பேசுனு உன் ஆள கொஞ்சி வழிஞ்சுட்டு இருப்ப. என் வயித்தெரிச்சல் உங்களை சும்மா விட்டுடுமாடா.. உன்னை பாடா படுத்தும் டா." என்றான் கடுப்புடன்.
"உன்னை விட வாடா. சீக்கிரமா போய் தொல! என்னென்ன பேச போறாளோ, என்னென்ன கேட்க போறேனோ." என தலையில் அடித்துக் கொண்டு பயத்துடன் அமர்ந்திருந்தான் நெடுமாறன்.
**
"உங்கப்பா தான் வர்றேன் சொன்னார்ல.. அந்த மனுசன வர சொல்லிருந்தா இந்நேரம் வீட்டுக்கே போயிருக்கலாம். அத விட்டுடு! மாறன நம்பி பஸ் எடுத்து வர சொல்லி, இவர வர வேணாம் சொல்லிட்ட, பாரு அவனும் இன்னமும் வரல, வர்றவன் போறவன் எல்லாம் ஒரு மாதிரி பார்த்துட்டு போறான். இதுல இந்தக் கொசு கடி வேற, எலி தான் காயுதுனா இந்த எலி புழுக்க என்னையும் சேர்த்து ஏன்டி காய விடற? தூக்கம் வேற கண்ணக் கட்டுது எப்ப தாண்டி வருவான்? போன் பண்ணித் தொலையேன்டி." என்று கண்ணை கசக்கிக் கொண்டு அங்கே அங்கே தேகத்தில் அமர்ந்து கடிக்கும் கொசுவை அடித்தவாறு அனத்திக் கொண்டிருந்தாள் இளந்தென்றல்.
"ச்ச...! செத்த சும்மா இருடி. என்னமோ வர்றவன் போறவன் ஒன்ன மட்டும் பார்த்துட்டு போற கணக்காத்தேன் பேசற, அந்த எழவும் கண்ணும் என்னையும் ஒரு மாதிரி தான் பார்த்துட்டு போச்சி. ஒனக்கு மட்டுந்தேன் கொசு கடிக்குத்தாக்கும் என்னையுந்தேன் கடிக்குது. எலிக்குத் தோழி எலி புழுக்கனா அதுவும் சேர்ந்து காயுறதுல தப்பே இல்ல. ஏன்னா எனிதிங் இஸ் ஃபெர் இன் பிரண்ட்ஷிப்." என்று புது மொழி சொல்ல அவளோ 'ஆங்' என விழித்தாள்.
"இதென்னடி புதுசா இருக்கு? லவ் அண்ட் வார் தான வரும்?" என அந்த நேரத்திலும் சந்தேகத்தை கேட்க, "பிரெண்ட்ஷிப் போட்டுக்கலாம் தப்பில்ல." என்றாள் கடுப்புடன்.
பஸ்ஸு வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது. பஸ் வருவதற்கான முதல் அறிகுறியாக பஸ்ஸின் ஹாரன் சத்தம் கேட்க,
"வந்துட்டான்டி" என்றவள் நிழற்குடையின் உள்ளே பெஞ்சில் அமர்ந்திருந்த தோழியைப் பார்த்து கண்ணடித்து சிரிக்க, அவளோ சலிப்பாக இருபக்கமும் தலையை ஆட்டி விட்டு தனது பையைத் தூக்கினாள். அவளும் தனது பையை தூக்கித் தோளில் போட, சரியாக பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது நல்லக்கண்ணு.
இருவரும் உள்ளே ஏறினார்கள். மைவிழி நெடுமாறனுக்கு எதிரே இருந்த சீட்டில் அமர்ந்துக் கொண்டு பக்கத்தில் பேக்கை பொத்தென போடும் போதே அவளது கோபத்தின் அளவு அவனுக்கு புரிந்துப் போக எச்சில் விழுங்கிக் கொண்டான்.
தென்றலோ வழக்கமாக அமரும் இடமான முன்னிருக்கையில் சேத்தனைப் பார்க்காமல் அமர, அவனைப் பார்க்கச் செய்வதற்காகவே விசிலை அடித்தான்.
விசில் சத்தத்தில் அவளும் சட்டென திரும்பி அவனைப் பார்த்தாள். புன்னகையுடன் கண்களைச் சிமிட்டினான். படக்கென திரும்பிக் கொண்டாள்.
அவனது கண் சிமிட்டலில் உள்ளம் வேகமாகத் துடிக்க, அதை மறைக்க அவள் உள்ளுக்குள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்க, முகத்தை அவனுக்கு காட்டாமல் மறைக்க முயன்றாள்.
அதை அறியாதவனுக்கு அவளது முகத்தை திருப்பியதில் வாடிப் போனது இவனது முகம். அவளுக்கு அருகே இருந்த சீட்டுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தான். வண்டியும் அவனது விசில் சத்தத்தில் புறப்பட்டது.
"மணி என்னடா?" எனக் கோபத்தில் கேட்டாள் மைவிழி. அவனும் இடது கையை திருப்பி பார்த்து விட்டு, "ஆறர டி" என்றான் எதுவுமே நடக்காது போல.
"அடிங்க எனக்கு தெரியாதா? மணி ஆறரைனு... எப்போ உன்னை வர சொன்னேன்? நீ எப்போ வர? அப்ப உனக்கு தூக்கம் தான முக்கியம்." என சண்டைக்கு தயாரானாள்.
"தூக்கம் தான் முக்கியம் நினைச்சா? நான் உன்னை உன் அப்பன் கூடவே போகச் சொல்லிருப்பேனே! இவன உசிப்பி கிளப்பிக் கொண்டு வர லேட் ஆகிருச்சிடி." என்று அவனை மாட்டி விட, இவளோ மாறனைத் தான் முறைத்தாள்.
"அவனைப் பத்தி எனக்கு தெரியும். அவன் தான் உன்னை எழுப்பி கூட்டிட்டு வந்திருப்பான். எனக்கு நல்லாவே தெரியும். நீ பண்ண தப்ப அவன் மேலே போடாத. உனக்கு தூக்கம் முக்கியமா போச்சுல. மத்த நேரத்துல சரியா நேரத்துக்கு வர பஸ். நான் கூப்பிட்டா மட்டும் லேட்டா வரும். நான் உனக்கு அவ்வளவு அலட்சியமா போயிட்டேன்ல." என்றாள் கண்களில் சிறு நீர் கோர்த்து.
"லூசு மாதிரி பேசாதடி. எல்லாம் நாளும் ஐஞ்சு மணிக்கு எந்திருச்சு குளிச்சி கிளம்பி பஸ் எடுத்துட்டு நேரத்துக்கு வந்திடுறோம். ஞாயித்துக் கிழமையிலும் எங்களுக்கு லீவு இல்லடி. என்ன அன்னைக்கு தான் கொஞ்சம் தாமதமா எழுந்து பஸ் எடுக்கறோம். அன்னைக்கும் எங்களுக்கு வேலை இருக்கத் தான செய்து. ஏதோ பழக்க தோசத்துல கொஞ்ச நேரம் தூங்கிட்டேன். என் தப்பு தான் மன்னிச்சிடுடி." என்க, அவளும் அவனது கஷ்டத்தை புரிந்துக் கொண்டு அமைதியானாள்.
"அப்புறம் மாமனுக்கு என்ன வாங்கிட்டு வந்த?" என பேச்சை மாத்த, அவளும் தனது பையிலிருந்த அல்வாவை எடுத்தவள்.
"இருட்டு கடை அல்வா தான்." என்று அதிலிருந்து கொஞ்சம் எடுத்து, ஓட்டிக் கொண்டிருந்தவனின் வாயில் திணித்தாள். அவனும் அவளை காதலாகப் பார்த்தபடி அல்வாவை ருசித்து விழுங்கினான்.
அவளும் தனது வெட்கத்தை மறைக்க அவனைப் பாராமல் தரையை பார்த்து அமர்ந்தாள்.
அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு தென்றல் மீண்டும் சாளரத்தைப் பார்க்க, இவனோ அவளை பார்த்து, "எனக்கு என்ன வாங்கிட்டு வந்த தென்னு!" என செல்லமாக அழைக்க, அவனைப் பாராமல் அவளது பையிலிருந்த அல்வாவை எடுத்துக் கொடுத்தவள், மேற்கொண்டு மூலிகை வேரு எல்லாம் போட்ட தைலம் இரண்டு பாட்டில் எடுத்து அவனிடம் நீட்டினாள்.
'இது எதுக்கு?' என அவன் புரியாமல் பார்க்க, அவனது கேள்வியை அவனை பாராமல் புரிந்து கொண்டவள், "அதை அத்தைக்காக வாங்கிட்டு வந்தேன்." என்றாள்.
அவனோ விழி விரித்து அவளை பார்த்தான். ஆனால் அவளோ அவனது பார்வையைத் தவிர்த்தாள்.
"உனக்காக நீ என்ன வாங்கின?" எனக் கேட்டான்.
அப்படி அவளிடம் கேட்பவர்கள் இங்கே இருக்கும் மூவரும், அவளது அம்மாச்சி முத்தம்மாவும் தான். அதை கடந்து அவளுக்கென அன்பு, பாசம் வைத்த உறவுகள் எதுவும் இல்லை.
அவளோ, "வளையல் வாங்கினேன்." என்றாள்.
'அந்த முகத்தை திருப்பி என்னை பார்த்து பேசினா தான் என்னவாம்? மேற்கொண்டு அவ முகத்துல பருவு வந்திடுமாக்கும்.' என சலித்துக் கொண்டவனுக்கு தெரியவில்லை அவனால் தான் அவளது முகத்தில் அத்தனை பருக்கள் என்று.
"தென்னு! உனக்கு என் மேலே என்னடி கோபம்? எதுக்கு என்னை எப்பப் பார்த்தாலும் முறைச்சிட்டே இருக்க? உன் கோபத்த சம்பாதிக்கற அளவுக்கு நான் என்ன வேலை பார்த்தேன் சொல்லுடி?" என மென்மையிலும் மென்மையாகக் கேட்டான். அதில் அதிகம் வருத்தமும் கலந்திருந்தது.
அவளோ அவனை திரும்பி முறைத்தாள். தலை குனிந்துபடி, "இப்படி நீ முறைச்சி பார்த்தா கூட தேவலடி. ஆனா முகத்தை திருப்பிட்டு போறது தான் கஷ்டமா இருக்கு தென்னு. நீ சொல்லு, நான் என்ன தப்பு பண்ணினேண்டு. நீ சொன்னா நான் அதை திருத்திக்க முயற்சி பண்ணுவேலடி. உன் மனசுக்கு புடிச்ச மாதிரி உன்னை நோகாம பாரத்துப்பேன்டி. ஆனா நீ என் மேலே கோபமா இருக்க காரணம் தான் எனக்கு புரியலே. நான் பண்ண தப்பு என்னை அறியாமலே செஞ்ச தப்பா இருக்கும். அதை சொன்னா சரி செய்வேன்டி." என்று கெஞ்ச,
அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வர, சட்டென பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான் நெடுமாறன்.
"நீ செஞ்ச தப்பு என்னண்டு உங்கிட்டயே கேட்டு பாரு அது சொல்லும். நான் வர்றேன்." என்று அவள் வேகமாக பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்க, அவனோ நெடுமாறனைத் தான் முறைத்தான்.
இதில் அவனது விழி அவனுக்கு டாட்டா காட்டி முத்தங்கள் பறக்க விட, அதை எக்கிப் பிடித்து நெஞ்சில் புதைத்துக் கொள்வது போல சைகை வேறு செய்து சேத்தனை மேலும் கடுப்பாக்கினான்.
அவள் இறங்கிச் செல்வதை பார்த்து விட்டு இவன் புறம் திரும்ப, அவன் முறைப்பதைக் கண்டு குழம்பினான்.
"என்ன மச்சி தென்றல் கிட்ட பேசுனியா?" என சிரித்து கொண்டே கேட்க, சேத்தனோ அவனை கெட்ட வார்த்தையில் திட்டினான். காதையும் கண்ணையும் மூடிக் கொண்டவன், அவன் திட்டுவதை நிறுத்திய பின் தான் திறந்தான்.
"இவ்வளவு அன்பான வார்த்தைகள் பேச நான் என்ன மச்சி பண்ணினேன்?" என்றான் சாதுவாக,
"உன்னை என்னடா சொன்னேன் மெதுவா வண்டிய ஓட்டு அவகிட்ட நான் பேசணும்ண்டு சொன்னேனா இல்லையா? அவ வாய் திறக்கும் போது சரியா வண்டிய நிறுத்தி, அவ சொல்ல வந்ததையும் சொல்ல விடாம பண்ணிட்டே, என்ன சொல்ல வந்தாளோ? சொல்லாமலே போயிட்டா, நீ நல்லா தான இருக்க, அப்புறம் என் வாழ்க்கையில் மட்டும் வில்லானா வந்து தொலைச்சி இருக்க?" எனக் கத்தினான்.
"அடேய் இதுக்கு மேலே ஸ்லோவா ஓட்டினா வண்டி நின்றும் டா. எட்டு வச்சா வீடு இருக்க ஏரியால எம்முட்டு தான் ஸ்லோவா ஒட்றது? புரிஞ்சுக்க மச்சி ஜாகிங் போறவன் கூட முன்னாடி போயிட்றான். இதுக்கு மேலே உருட்ட முடியாது டா." என்றான். சேத்தனோ அவள் பதில் சொல்லாமல் போனதால் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
*தென்றல் சேத்தனோட காதலை ஏத்துக்காததற்கு காரணம் என்ன? ஒரு வார்த்தை கமெண்ட் பண்ணுங்க....
அடுத்த பாகம்
கானம் - 5
What's Your Reaction?






