நெடுஞ்சாலை கானமே - 14

Jul 4, 2025 - 10:01
Jul 4, 2025 - 10:02
 0  15
நெடுஞ்சாலை கானமே - 14

கானம் - 14

"அம்மா கோவில் போகணும் சொன்னீங்க, இன்னும் ரெடியாகாம என்ன பண்றீங்க?" கூடத்தில் நின்று கத்திக் கொண்டிருந்தான் தனிஷ்.

"நான் எங்க டா கோவிலுக்கு போகனும் சொன்னேன். நீ தான இன்னைக்கி உங்களை கோவிலுக்கு கூட்டிட்டு போறேன் வந்து சொன்ன." என்றவர் தயாராகி  அறையிலிருந்து வெளியே வந்தார்.

"ஆமா நான் தான் சொன்னேன். நீங்களும் ஓகே சொன்னீங்க தான. அப்போ நேரத்துக்கு கிளம்பணும் இல்லையா? லேட் பண்ண என்ன அர்த்தம்?" என்றான் பொய்யான கோபத்துடன்.

"இப்போ எதுக்கு டா உனக்கு அவசரம்? நாம எந்த நேரத்துல போனா என்ன? சாமி அங்க தான இருக்க போறார். அவரென்ன வேலை இருக்குனு சொல்லி ஒடியா போகப் போறார்." என்றவர் சலித்துக் கொள்ள, 'அவர் எங்க போகப் போறார். அவ போயிடுவாளே.' என எண்ணிக் கொண்டவன் அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

காரைத் தவிர்த்து விட்டு இருவரும் ஆட்டோவில் சென்றனர். மகனின் செயலில் வித்யாசத்தை உணர்ந்தவர், 'என்ன தான் செய்ய போகிறான்?' என்று ஆர்வத்துடன் அவனோடு பயணித்தார்.

வரும் வழியில் அவளுடன் பேருந்தில் உரையாடிய நிமிடங்களை எண்ணிப் பார்த்தான் தனிஷ்.

"அப்புறம் நாளைக்கு சன்டே என்ன பிளான்?" என்றான். அவன் அவ்வாறு கேட்டதும் அவனை வித்தியாசமாகப் பார்த்தாள்.

"என்னாச்சி எதுவும் தப்பா கேட்டுடேனா?" என அவன் விழிக்க,

"இல்ல இல்ல இந்த கேள்வி எனக்கு புதுசு அதான் அப்படி பார்த்தேன். எங்களுக்கு எல்லாம் பிளான்லாம் கிடையாது. துவைக்கணும், சமைக்கணும் வீட்ட சுத்தம் செய்யணும். லெசன் பிளான் எழுதணும் அவ்வளவு தான் என் சன்டே. வெளியே இதுவரைக்கும் போனது இல்ல. வீடு தான்  வீட்டை விட்டா ஸ்கூல் தான்.

வேற எங்கும் போறதில்ல, அப்படியே போனாலும் சனிக்கிழமை மட்டும் பக்கத்துல இருக்க நரசிங்கப் பெருமாள் கோவிலுக்கு போவேன். இன்னைக்கி சனிக்கிழமை வேற வீட்டுக்கு போனதும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து, கோவிலுக்கு கிளம்பி போவேன் அவ்வளவு தான்" என்றாள் தோளைக் குலுக்கிவிட்டு,

"அவ்வளவு தானா? வெளியே எங்கேயும் போறதில்லயா?"ஆச்சர்யத்துடன் கேட்கவும் அவளும் தலையை இடது வலது பக்கமாக ஆட்டினாள்.

"உங்க பேரன்ட்ஸ் ஸ்ரிக்ட்டா?" என்றான்.

அவளது முகம் வலியில் சுருங்கியது.

"எனக்கு பேரன்ட்ஸ் இல்ல அம்மாச்சி மட்டும் தான்." என்றவள் அவனிடம் தனது கதையைச் சுருங்க சொல்ல, இவனுக்குள்ளே அவள் மீது அனுதாபம் தோன்றியது. 

ஆனால் அதை அவளிடம் காட்டிக்  கொள்ளவில்லை. இருவரும் அமைதியாகி விட, அவன் தான் பேச்சை மாற்றும் பொழுது, அவளிடம் கோவிலைப் பற்றி கேட்க, அவளும் கோவிலின் சிறப்பு அம்சங்களை விரிவாகச் சொன்னாள். அவனது நிறுத்தம் வரும் வரைக்கும் கேட்டுக் கொண்டே வந்தான்.

கோவில் வந்து விட, இறங்காமல் யோசித்துக் கொண்டிருக்கும் தனிஷ்ஷின் தோளை தட்டி, "தனு! கோவில் வந்துடுச்சி இறங்கு!" என்றதும் தான் நினைவிற்கு வந்தான். பணத்தை கொடுத்து விட்டு அவன் இறங்கவும் தென்றலும் விழியும் உள்ளே செல்லவும் சரியாக இருந்தது,

தனது கணிப்பு சரியானதை எண்ணி தன்னை தானே பாராட்டிக் கொண்டான். 

"தென்றல்" என அவன் அழைக்கவும் அவள் திரும்ப, "ஹாய்" என கையசைத்தான். தாயுடன் நிற்பவனை, ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

"நீங்க இங்க..." என இழுக்க, "நீங்க கோவிலைப் பத்தி சொன்னதும் ஒரு ஆர்வத்தில் நானும் அம்மாவும் கிளம்பி வந்துட்டோம்." என்றவன் தாயிடம் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

"சரி வாங்க உள்ள போலாம்." என்றழைக்க, "கொஞ்சம் இருமா" என்று கடைக்குச் சென்று தாமரை பூவும் மூவருக்கும் மல்லிகை பூவும் வாங்கிக் கொண்டு வந்தவர், அவர்களிடம் பூவை நீட்டினார்.

அவர்களும் நன்றியுடன் மறுக்காமல் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றனர்.

இந்தக் காட்சியை கோவிலுக்கு எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்ற சேத்தனும் ஓட்டுநர் முருகனும் பார்த்தனர். பேருந்து நிறுத்தம் என்பதால் நல்லக்கண்ணுவை நிறுத்தி வைத்திருந்தனர். 

"என்ன சேத்தா போற போக்க பார்த்தா, அவன் உன் ஆள உசார் பண்ணிடுவான் போல.." என நக்கல் செய்ய, 

அவனோ அவனை முறைத்து, "பேசாம வண்டிய எடு மாமா. இல்ல உன்னை அப்பிடியே தூக்கி வெளியே போட்டு, என் அக்காக்கு புது மாப்பிள்ளை பார்த்து கட்டி வைச்சிடுவேன்." என்று மிரட்ட, அவனது வாய் கப்சிப் என்று மூடியது.

கோவிலுக்குள் செல்லும் அவர்களை உள்ளே எழுந்த கொதிப்புடன் பார்த்தவாறு விசிலை ஊத, வண்டி அங்கிருந்து புறப்பட்டது.

நால்வரும் கோவிலினுள்ளே சென்று நரசிங்கப்பெருமாளை தரிசனம் செய்தனர். மலையைக் குடைந்து மூலவர்  கம்பீரமாக அமர்ந்திருக்கும் நரசிங்கப் பெருமாளை காண உடல் சிலிர்த்து அடங்கியது அனைவருக்கும். அவரை தரிசித்து விட்டு வெளியே வந்தனர். 

"இவன் கோவிலுக்கு வர்றதே அதிசயம். இவனா வந்து கோவிலுக்கு போலாம் வாங்க சொன்னதும், எனக்கு அதிர்ச்சினா பார்த்துக்கங்க மா ?என்ன டா? நம்ம பையனா இது?எனக்கே சந்தேகம் வந்திருச்சி"என வைஷ்ணவி அவர்களிடம் இயல்பாக பேசிச் சிரிக்கவும், விழியும் தென்றலும் தனிஷ்ஷைத்  தான் புருவம் சுருங்க கேள்வியாகப் 

பார்த்தனர். 

அவர்களது பார்வையைக் கண்டதும் சிரித்துக் கொண்டே தாயை அடக்கியவன்  அவர்களைச் சமாளிக்கும் பொருட்டு,

"எனக்கு கடவுள் மேலே நம்பிக்கை இல்ல ! ஆனா கடவுளைத் தாண்டி நீங்க கோவிலைப் பத்திச் சொன்னதும் ஒரு கியூரியாசிட்டில அம்மாவ கூட்டிட்டு வந்துட்டேன்... ரியலி இந்த நேசர்,  இன்னர் பீஸ் கொடுக்குது ! கஷ்டம்னு வரவங்களுக்கு அந்தக் கடவுள் உதவி செய்வாரானு தெரியல ! ஆனா இங்க, இந்த  அமைதியான ஒரு சூழல்ல,  நம்ம மனசு  அமைதியாகும், அடுத்து நம்ம ப்ராப்ளம்  என்னனு யோசிச்சா, கண்டிப்பா அதுக்கு ஒரு சொல்யூசன் கிடைக்கும்.. அதுல நான் நம்பிக்கையா இருக்கேன்"என்றான். 

கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு கடவுளையும்,மக்கள்  கடவுள் மீது வைத்த நம்பிக்கையையும் இழிவாகப் பேசுபவர்களைத் தான் இவள் அதிகம் பார்த்திருக்கிறாள். கடவுளையும் அவர் மீதான நம்பிக்கையையும் இழிவாகப் பேசாமல், அவன் பால் கொண்ட கருத்துகளையும், புரிதலையும் கூறுவதைக் கண்டு அவனை வியந்தவள், புன்னகையுடன் அவனது கூற்றையும் ஏற்றுக் கொண்டாள். 

"உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ம்மா "என்று விழி வைஷ்ணவியைப் பார்த்துச் சொல்ல, தனிஷ்ஷும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவரை திருட்டு முழியுடன் பார்த்துக் கொண்டனர். 

"அதுக்கு வாய்ப்பில்ல, அம்மா இப்ப தான் மதுரைக்கே வர்றாங்க ! எங்க ஊரை விட்டு இவங்க வந்ததே இல்லை" என்று மழுப்பினான். 

விழியோ மூளையைக் கசக்க, அவளுக்கு யோசிக்க  இடம் தர்றாமல் நேரம் விரைவதைச் சுற்றிக் காட்டி அவர்களை வெளியே அழைத்து வந்தான்.

இருவரிடமும்  விடைபெற்றுக் கொண்டு பெண்கள் இருவரும் செல்ல, அவர்கள் கண்ணை விட்டு மறையும் வரைப் பார்த்துக்  கொண்டு நின்றிருந்தான் தனிஷ். 

"ரெட் ஆ இல்ல எல்லோவா ?"என்றார். 

"எல்லோவ் "என்று தன்னை அறியாமல்  மஞ்சள் வண்ண சுடிதாரில் வந்த தென்றலின் நியாபகமாகச் சொன்னவன், சட்டென சுதாரித்து கொண்டு "எ... என்ன கேட்டீங்க?"என்றான் எதுவும் தெரியாதது போல,

அவரோ அவனிடம் "நீ பதில் சொல்லிட்டே தனு !"என்றார்.

"ம்மா...  நீங்க என்ன கேள்வி கேட்டீங்க,நான் என்ன பதில் சொன்னேன்?"எனக் கேட்டுக் கொண்டே அவர் பின்னே செல்ல,

"சிவப்பா ? மஞ்சளா? கேட்டேன். நீ மஞ்சள்னு சொல்லிட்ட டா !"என்றார் கேலியாக,

"மா... நீங்க நினைக்கறது போல எதுவும் இல்லமா !"என்றவன் மீண்டும் தானாக வந்து மாட்டிக் கொண்டான். 

"நான் எதுவும் நினைக்கல டா ! சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். நீயா வந்து மாட்டிக்கிறீயே ! என்ன விஷயம் மகனே ?!"என்றார் குறும்பாக,

அதில் வழிந்தவன்"இப்போதைக்கு ஒண்ணுமில்ல ஏதாவது இருந்தால் உங்க கிட்ட தான் முதல்ல சொல்வேன் சரியா !" அவர் வழிக்கே வர ' சரி ' என்றவர் அவனுடன் சென்றார்.

மாலையில் கோவிலில் கண்ட காட்சி சேத்தனின் மொத்த தூக்கத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டது. இருவரும் எதேச்சையாகக் கோவிலுக்கு வந்தது போல அவனுக்குத் தெரியவில்லை.

அவள் சனிக்கிழமை கோவிலுக்குச் செல்வது சிறுவயதிலிருந்தே பழக்கம். அந்த மூன்று நாட்களை தவிர்த்து எல்லா சனிக்கிழமையும் அவள் கோவிலுக்குச் சென்று விடுவாள். அவளைப் பற்றி இல்லை குழப்பம், ஆனால் அவன் அங்கு சரியாக வந்தது தான் மனதைப் போட்டு குடைந்து கொண்டே இருந்தது. 

தென்றல் தன்னைத் தான் காதலிக்கிறாள் என்று  தொண்ணூற்றொன்பது  சதவீதம் அவன் உறுதியாக இருந்தாலும், மீதம் ஒரு சதவீதம் தான் அவனைப் படாய்படுத்தியது. 

தென்றல் மீது அதீத நம்பிக்கை இருந்தாலும் உள்ளே ஒரு நெருடல், இவனால் இருவருக்குள்ளும் பிரச்சனை எதுவும் வந்து விடுமோ என்று தான்.

அவள் அவன் மீது வைத்திருக்கும் காதலைச் சொல்லியிருந்தால் அந்த ஒரு சதவீதம் கூட இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவளோ அன்று நடந்தச் சண்டையில், இவனைச் சீண்டும் விதமாகப் 'படித்தவனை தான் கட்டுவேன்'  என்று அவள் சொன்னது வேறு உள்ளே உறுத்திக் கொண்டிருக்க, பெரும்  குழப்பத்தில் இருந்த சேத்தன்,

வேகமாகத் தனது கைபேசியை எடுத்து மாறனுக்கு அழைக்க, அவனோ தாமதமாகத் தான் எடுத்தான்.

"எங்கடா இருக்க?"

"அது மச்சி..."என அவனிழுக்க, "எங்கடா இருக்க?"என மீண்டும் அழுத்திக் கேட்டான்.

"நான் வந்து..."என சொல்லாமல் தயங்க, "சனியனே எங்க இருக்க? சொல்லித் தொலை !"என்றவன் அவனது இழுவையில் சந்தேகம் கொண்டு"டேய் ஒயின் ஷாப்ல எதுவும்  இருக்கியா?" என அதிர்ச்சியாக கேட்டான்.

"ஏய் ச்சீ ! அங்க எல்லாம் ஒன்னை  விட்டு நான் எப்ப போயிருக்கேன்? நான் உன் தங்கச்சி மடியிஇஇஇல இருக்கேன்..."என்று வெட்கத்துடன்  சொன்னான்.

"ஏன் டா ஒரு நாள் முழுக்க அவ கூட சுத்துனது பத்தலையா ஒனக்கு? இன்னும் வேணுமோ ! "

"ஆமா மச்சி ! பத்தலடா ! அவ மடியில படுக்காம,  ஊர் சுத்துனதுல ஒரு குறையா இருந்தது. அதை அவ கிட்ட சொன்னேன் வா டான்னா, அதான் அதையும் ஃபுல்ஃபில் பண்ணிட்டேன் மச்சி !"என இவன் இங்கு வழிய, ஏற்கெனவே குழப்பத்திலும், கோபத்திலும்  இருப்பவனை மேலும் கடுப்பேற்ற, கொதித்துப் போன சேத்தனோ கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அவனை அர்ஜித்தான்.

"ச்சீ கருமம்!! "

' என்ன இப்படி திட்றான்' செல் போனை காத தூரம் வைத்துக் கொண்டு காதில்' இரத்தம் வந்து விட்டதா? 'என்று பார்த்தான்.

"என்னடா?!"என இவள் சைகையில் கேட்க

"உன் அண்ணன் ரொம்ப திட்றான்டி"என்று அவளுக்கு கேட்க  முணுமுணுத்து விட்டு காதைக் குடைந்தவன்" இப்போ ஒனக்கு என்ன தான்டா பிரச்சனை ?"

" எனக்கு தென்றல் கெடப்பாளா? இல்லையா? தெரியாம நான் இங்க மண்டைய பிச்சுக்கிட்டு கெடந்தா, நீ உன் ஆளு மடியில கெடக்கென்  சவுடால சொல்வீயா ! நாயே இந்தக் கன்னிப் பையன் என்ன சொன்னாலும் பலிக்கும் என் சாபம் ஒன்ன சும்மா விடாது டா !"என்றதும் இவன் படக்கென்று அவள் மடியை விட்டு எழுந்தவன்

"ஆத்தி என்ன டா சாபம்  விடப் போறீயா? ஐ ஆம் யூர் பெஸ்ட் ஃப்ரண்ட்டுடா ! மச்சி நான் வேணாம் அங்க வந்துர்றேன் டா ! சாபம் அது இது மட்டும் பேசாத பயந்து வருது !"என்று பயத்துடன் சொல்ல,

"அதெல்லாம் வர வேணாம், நெறைய நேரம் கொஞ்சிட்டு இருக்காம சீக்கிரமா வீடு போய் சேரு ! இல்ல காலையில கைலியும் ஜட்டியுமா, மாட்டி அசிங்கப் பட்டு நிப்ப"என்று எச்சரித்து விட்டுப் போனை வைத்தான்.

நாளை விடுமுறை என்பதால், அனைவரும் உறங்கியதும் அவனை வரச் சொன்ன மைவிழி. இருவரும்  வீட்டின் பின் கட்டில் அமர்ந்து காதல் மொழி பேசினார்கள்.

' ஒ மடியில படுக்காம இந்தா நாளே நிறைவாகல ஐசு' என்று அவன் குறைபட்டுக் கொள்ள, அவளோ அவனது குரலில் தெரிந்தத் தவிப்பை உணர்ந்து  அவனை வரச் சொல்லி அதனை நிறைவு செய்தாள்.

கதை எப்படி இருக்குனு ஒரு வார்த்தை... சொல்லிட்டு போங்க 

கதை நல்லா இருந்தா ⭐⭐⭐⭐⭐⭐  கொடுத்துட்டு போங்க மறக்காம

..

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0