மயில் - 4

Jul 8, 2025 - 06:16
Jul 8, 2025 - 03:07
 0  10
மயில் - 4

மயில் -- 4

துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ

கன்னித் தெய்வம் இருக்கும் நீர்த் துறையையும், சிவன் தவமிருக்கும் ஆல மரத்தையும், திருமாலுக்கு உரிய மரா மரத்தையும் போற்றி வணங்கிய பின்னர் மைந்தர் தொழுவத்துக்குள் புகுந்தனர்

**************************************

சுற்றிப் பரபரப்பாக இருந்த அந்த இடத்தையும்  பைவ் ஸ்டார் ஹோட்டல் மாடியில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பூங்கொத்தை நீட்டி காதலைச் சொல்வது போல எண்ணிக் கொண்டான் மாதவன்.

ஆனால் நிதர்சனம் அவர்களை சுற்றிமாடுகளும் மாட்டுக்காரர்களின் கூச்சல்கள் மட்டுமே நிறைந்திருந்தன...

அவனை மொய்க்கும் அந்தத் துறு துறு விழிகளுக்குள் விழுந்திட ஆசை...  இரு இதழையும் சுருட்டி ஓரமாக வைத்து கொண்டு யோசிக்கும் பாவனையில் தன்னை தொலைத்தவன், அதனை அப்படியே ருசிக்க ஆசையிருந்தும் அடக்கிக் கொண்டு பதில் சொல்லாமலே  நிற்கும் மயிலினியை கண்டு

பெருமூச்சை வெளியே விட்டவன், மேலும் பதில் சொல்லுமாறு விழிகளை உயர்த்தினான்.

"எதுக்கு நான் என் முடிவை மாத்திக்கணும்?  நான் ஏன் உங்க அம்மாக்கு மருமவளாகணும்?"  என்று திமிராக கேட்டவளிடம், " ஏன்னா நான் உங்களை தான் காதலிக்கிறேன், உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்... அதுனால தான் உங்களை எங்க அம்மாக்கு மருமகளாக்க..." அப்டியே சுருதி கொஞ்சமிறங்கியது அவள் பார்த்த பார்வையில்...

"என்னை காதலிக்கிறேன் சொல்றீங்க, எனக்காக காளைய அடக்க மாட்டீங்களா?" என்று கேட்டதும் பதறியவன், பக்கத்தில் இருக்கும் அழகுவை பார்க்க, 

அதென்னவோ, ' சண்டைக்கு வாடா!' என்பது போலவே முறைத்துக் கொண்டிருந்தது.

உமிழ்நீரை உள்ளே இழுத்துக்கொண்டவன்..." எதுக்குங்க மாமானுக்கு மச்சானுக்கும் சண்டை மூட்டி விட்றீங்க, நாளை பின்ன நான் மாப்பிள்ளையா வீட்டுக்கு வந்தா, முகத்தை பார்த்து பேசனுமில்லையா...?" என்று காளையைப் பார்த்து கொஞ்சம் பீதியடைந்தவன் அவ்வாறு சொல்லி மழுப்பினான்.

மயிலினியோ, பொங்கி வந்த சிரிப்பை அடக்கி அவனை நோக்கினாள். இன்னமும் மாட்டை கண்டு பீதியிலே இருக்கும் அவனை பார்க்க பார்க்க மேலும் சுவாரஸ்யம்  கூடியது.

" மாட்டு டாக்டரே! உண்மையிலே நீங்க மாட்டு டாக்டர் தானா?" அமர்த்தலாக கேட்க, "ஏங்க, என்ன பார்த்த மாட்டு டாக்டர் போல தெரியலயா?" என்று தன்னை ஒருமுறை ஆராய்ந்தவாறே கேட்டான்.

"இல்ல இல்ல, மாட்டு டாக்டரா இருந்துட்டு காளைய அடக்க பயந்தா எப்படி? "

"ஏங்க அதுவும் இதுவும் ஒன்னாங்க?மாட்டை பிடிச்சு வைத்தியம் பார்க்கிறதுக்கும் மாட்டைப் பிடிச்சி அடக்கறதுக்கும் வித்தியாசம் இருக்குலங்க ..."

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, காளை அடக்குங்க, உங்க அம்மாக்கு மருமவளா வாறேன்..." என்று அவள் முடிவில் மாற்றமில்லை என்பது போல சொன்னவள், அவனிடம் பதிலை எதிர்பார்க்க அவனோ அமைதியாக இருந்தான்.. அவனது அமைதி, அவளுக்குமே ஏமாற்றத்தை கொடுக்க அவன் முன்னே காட்டிக் கொள்ளாது அழகுவிடம் "லெட்ஸ் கோ அழகு..." மாட்டை இழுத்துக் சென்றாள். அவனோ அப்டியே நின்றான்.

கருப்பனும் மயிலினியும் மாட்டை அழைத்துக் கொண்டு  நடந்தனர்... " யக்கா, அந்த மாமா, எம்முட்டு அழகா, உன் மேல வச்சிருந்த பிரியத்த சொல்லிச்சு, நீயேன்கா இப்படி பேசிட்டு வந்த...?" காளையின் மறுபுறம் நின்றவாறு கேட்டான் கருப்பன்.

"என்னைய என்னடா சொல்லச் சொல்ற? அந்த மகேந்திரன் நாய்க்காகத்தேன், நான் ஜல்லிக்கட்டுல என் அழகன அடக்கறவன தான் கட்டிப்பேன் விறப்பா சொல்லிட்டேன். இப்ப போய் நான் இவர தான் கட்டிப்பேன்னு  நின்னா, என் அத்தகாரி ஊரையே கூட்டுவா... அதுக்கும் அதுவாய்க்கும் பயந்தே சாக வேண்டியதா இருக்கு!..." என்றவளின் விழிகள் சோர்ந்திருக்க, குரல் தோய்ந்து போய் இருந்தது.

அதைக் கண்ட கருப்பன், " யக்கா, உனக்கும் அந்த மாமா மேல ஆசை இருக்கு தானே? அப்றம் ஏன்க்கா மறைக்கற ? ஐயா கிட்ட சொல்லி கண்ணாலத்த பத்தி அவுக வுட்ல பேச சொல்லுக்கா ..."

"இல்ல கருப்பா! நெனச்சுதும் எல்லாம் கையில கெடக்கிற காலத்துக்கு இன்னும் நாங்க வரல டா! ஒன்னு போராடணும் இல்ல அடங்கி போகணும். என் ஆசைய மட்டும் பார்த்தா போதுமா? குடும்ப மானத்தையும் யோசிக்கணும்ல டா, அவுக ஆம்பள சட்டுனு யாரை நெனக்காம மூடிவெடுத்துடுவாக பொட்டச்சி நாங்க, அப்டி முடிவெடுக்க முடியுமா? இதெல்லாம் ஐயா கிட்ட சொல்லிட்டு கெடக்காத... வா"  என்று இருவரும்  நடக்க,

எதிரே  புல்லட்டு வண்டியில்  வந்த மகேந்திரன் அவர்கள் முன் வண்டியை நிறுத்தினான்.. மயிலினி முகத்தில் தெரிந்த சோர்வை கண்டு உள்ளார மகிழ்ந்தவன், மேலும் நக்கல் செய்தான் ..." இன்னா மயிலு, உன் அழகன, ஜல்லிக்கட்டு காளை இல்லனு சொல்லிட்டாகளா? ஏன் முகம் வாடிகெடக்கு?" தவளை தான் வாயில் கெடுவதை போல, மகேந்திரன் தன் வாயாலே மாட்டிக் கொண்டான்.

மாதவனை நினைத்து வருந்தியவளின் முகம் மாட்டை நினைத்து வருந்திருக்கிறது என்றெண்ணி  முந்திரி கொட்டையாட்டம் முந்திக் கொண்டு கேட்டு மாட்டிக் கொள்ள ' இதெல்லாம் உன் வேலையா?'  என்று மனதில் எண்ணக் கொண்டவள்.

"இல்ல மாமா, நீயும் என்னென்னமோ செஞ்சுதேன் பார்க்கற, ஆனா,  ஒன்னும் கூட நடக்கலே மாமா! இப்ப கூட பாரு, அந்த மாட்டு டாக்டருக்கு, காசு, சாராயம் , பிரியாணி வாங்கி கொடுத்துருப்பேல, ஆனா அவன் சொதப்பிட்டான் மாமா ...பாரு, நான் என் மாட்டுக்கு சான்றிதழ் வாங்கிட்டேன்... என்ன மாமா நீயி? இப்படி தான் சொத்தபயல அனுப்புவியா ? போ மாமா... அப்றம் இம்முட்டு செஞ்சு தான் உன் வீரத்தை காட்றதுக்கு வாடிவாசல் என் அழகன முன்னாடி  வந்து நின்றுருக்கலாம். 

இதெல்லாம் செஞ்சு, என் சேலைய கட்டி பொட்டையாகனு-முண்டு நினைக்கிறீயே நீயி..." என்றவள் அவனை கேலி செய்ய, 'பொட்டை' என்றதும் கோபம் சுர்ரென்று வர, " ஏய்!" என்று வண்டியிலிருந்தவாறே எகிறனான்.

"ஏய் ச்சி அடங்கு... வெக்கமா இல்ல ஒனக்கு. காளை அடக்க துப்பில்ல, வந்துட்டான் பேச, குறுக்கு புத்திய காட்டி ஜெய்கணு-முண்டு நெனைக்காத, அசிங்க பட்டு போவ..." என்று மிரட்டி விட்டு காளையை இழுத்து கொண்டு சென்று விட்டாள்.

தோத்து போனதிலும் வேலைகாரன் முன் அசிங்கபடுத்திச் சென்றதில் மேலும்   வன்மத்தைக் கூட்டினான் அவன். 

இங்கோ சரவணன், ராஜாவை திட்டி ஊருக்கே அனுப்பி வைத்து விட்டான்.

அழகனை பின் பக்க வாசலில் கட்டிவிட்டு உள்ளே நுழைய வீடே கலைக் கட்டிருந்தது.

கஜேந்திரனும் மாலினியும் வந்திருந்தனர். " வாமா மயிலு, போன காரியம் என்னாச்சி?" தன் கொழுந்தியாவிடம் விசாரித்தான்.

"அதுக்கென்ன மாமா நல்ல படியா முடிஞ்சு..." என்று அன்னையிடம் சான்றிதழை கொடுத்து விட்டு, செம்பு நிறைய தண்ணீயை குடித்தாள்.

"ஏத்தா அங்க ஏதோ பிரச்சினை சொல்லிக்கிட்டாய்ங்க?" பச்சையம்மாள் வினவ,

"பிரச்சனதேன் அப்பாத்த, உன் மவ பிள்ள பேரனால.." என்றவள் அலுத்துக்கொள்ள, எல்லாரும் அதிர்ந்து மயிலை பார்த்தனர். 

"என்னத்தா சொல்ற என்ன செஞ்சான் அவன்...?" கஜேந்திரன் கோபமாக வினவ அவள் நடந்ததைக் கூறினாள்.

"அவன் திருந்தறாப்புல தெரியலயே! கூட்டாளிகளோடு சேர்ந்த் புத்தி போகுது பாரு..." எனச் சலித்துக் கொண்டான்.

"அவனா டீ இப்படி பண்றான்? எதுக்கு டீ அழகன வாடிவாசலுக்கு அனுப்ப விடாம பண்றான்? அவனுக்கு என்ன டீ லாபம் இதுனால...?"

"எனக்கா,நீயி வெரவம் தெரியாம கேக்கற? இதெல்லாம் அக்காளுகாகத்தேன் பண்றான்.  காளை அடக்கனாத்தேன் கல்யாணம் சொல்லிட்டு கெடக்கு. 

நம்ம அழகன எவனாலும் அடக்க முடியல, அதான் அவன் குறுக்கு வழியில போயி காரியம் சாதிக்க  நெனைகிறான்..." என்று புட்டு புட்டு வைத்தாள் மணி.

"ம்ம்ம்..." பெருமூச்சை விட்டவள், "எதுக்கு டீ ஒனக்கு இந்த வீராப்பு, நம்ம அழகன அடக்கறவன் இந்த ஜில்லாவிலே இல்ல, இதுல இந்த லட்சியத்திலே இருந்தா,  கடைசி வரைக்கும் இப்படியே தான் இருக்கனும். பேசாம என்ற மாமன அழகன அடக்க சொல்றேன், நீ எனக்கு சக்காளத்தியா வந்திடுறீ! " என்று கேலி செய்தாலும்,  தன் கணவனின் வீரத்தை அங்கே  கூறி பதிய வைத்தாள், அவனும் ஒரு காலத்தில் மாடு புடிவீரன் தான் .

"ஏய், என்ன பேசுற நீயி?மயிலு , மணி எல்லாம் எனக்கு மக மாதிரி... அதுகல போய்... சும்மாரு  நீயி" என்றவளை அடக்கினான். அவர்களுக்கே அது தெரியும் தானே ..தன் கணவனை எண்ணி பெருமை பட்டுக் கொண்டாள்  மாலினி...

"மயிலு மன்னிச்சுரு டீ, என் அண்ணனால எவ்வளவு பிரச்சினை ஒனக்கு...?"  என்று கண்கள் கலங்கி வாசுகி வருந்த,  " என்ன மதினி நீயி மன்னிப்பெல்லாம் கேக்குற? அந்த விளங்காதவன் பண்ணதுக்கு நீ போய் மன்னிப்பு கேட்டுட்டு இருக்க? போ மதினி..."  என்று செல்லமாக கடிந்துகொண்டாள்.

"கண்ணு நீ ஏன்யா வருத்தபடுற? உன் அண்ணன் சவகாசம் சரியில்ல...  போக போக மாறிடுவான், நீ  வருத்தபடாத கண்ணு..." சேலை தலைப்பால் அவள் கண்ணீர் தடத்தை துடைத்தார் மீனாட்சி..

"அது விடுத்தா... பொங்கல் நெருங்கிட்டு இருக்கு அதுக்கு ஆகவேண்டிய காரியங்கள பாருங்கத்தா, இந்த மலைமேக அண்ணே வேற இப்பவோ, அப்பவோன்னு கெடக்காரு, பொங்கல் முடியிற வரைக்கும் இருப்பாராண்டு தெரியல..."  என்று பச்சையம்மாள் புலம்ப ஆராம்பித்தது.

எல்லாரும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு அவரவர் வேலையில் மூழ்க, மயிலு மட்டும் மாதவனை எண்ணிக் கிடந்தாள்.

மாலை வரை வேலை மாதவனை நிமிர விடாமல் செய்ய, இல்லம் வந்தவன் அப்படியே உறங்கியும் போனான். இரவில் தான் விழித்தான், அதுவும் மயிலினி சத்தத்தை கேட்டு.

மாதவனுக்கும் செழியனுக்கும் இரவு உணவை எடுத்து கொண்டு வந்தாள் மயிலினி தங்கை மணியுடன்.

இருவரையும் அமர வைத்து பரிமாறினாள்.." அண்ணே! என்ன வேணுமோ கேட்டு சாப்பிடுங்க..." என்று அன்போடு உபசரிக்க, "சரி தங்கச்சி... இப்படி அன்போடு பரிமாற ஆள் இல்லாம  ருசியான சாப்பாடும் பல நாள் ருசி இல்லமா போயிருக்கு  தங்கச்சி ...!"  முகம் கசந்து கூறியவனை பரிதாபமாக பார்த்தவள், "ஏண்ணே ! சோகமாக சொல்ற? வீட்ல பரிமாற ஆள் இல்லையா?" எனக் கேட்கவும் 

" எனக்குன்னு யாருமில்ல தங்கச்சி... ஒருத்தி இருக்கா, ஆனாலும்  அவ கூட இல்ல..." என்று வருந்தினான். அவன் வருந்துவது அவள் மனதை பிசைந்தது...

அதை மாற்றும்பொருட்டு மாதவன் செழியனிடம் திரும்பி, "பீல் பண்ணாத மச்சி, வேணும்னா உன் தங்கச்சி நான் கட்டிக்கிறேன், உன் தங்கச்சிய பார்க்கிற சாக்குல நீயும் வீட்டுக்கு வந்து அவ கையால சாப்பிடு மச்சி..." என்றதும் அவளதிர, செழியனுக்கோ புரையேறியது.

அவனிடம் தண்ணீயை கொடுத்து விட்டு மாதவன் புறம் திரும்பிமுறைத்தாள்.

"ஓ... கதை அப்டி போகுதா...!" என்று மணி  இழுக்க, "ஏய் சும்மா இரு டீ.."  என்று அவளை அடக்கியவள், அவன் புறம் திரும்பி, " இந்த வக்கனை எல்லாம் நல்லாத்தேன் பேசுறீங்க, ஆனா மாட்ட அடக்குங்கனு சொல்லும் போதும் மட்டும் வாய மூடிக்கிறீங்க..." என்று கேட்க, செழியன் சிரித்துவிட்டான். அவனை முறைத்து விட்டு தலை குனிந்துவாறே சாப்பிட்டான். அவன் செயலைக் கண்டுஉதட்டோரம் முகிழ்நகை தோன்றி மறைந்தது மயிலினிக்கு.

அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்க,  பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தாள்... 

அவள் அருகே வந்தவன், " மயிலு..." என்று ஒருமையில் அழைத்தான்.

அவனது ஒருமை அழைப்பு அவளுக்குள் குறுகுறுப்பைக் கொடுத்தது... " என்ன வேணும்?" சன்னமாக நின்று கேட்டாள்.

"கண்டிப்பா மாட்டை அடக்கணுமா? நான் வேணா, எங்க அம்மா அப்பாகிட்ட  சொல்லி பொண்ணு கேட்க சொல்லட்டுமா?" ஆர்வமாக சிறு பிள்ளை போல் கேட்கும் அவனை எண்ணி உள்ளுக்குள் ஏதோ செய்தது.

"மாட்டை அடக்கிட்டா, அடுத்து அந்த படலந்தேன்  மாட்டு டாக்டரே! " என்று மேலும் அவனை கடுப்படித்தாள்.

' அதிலே நிக்கிறாளே! இவ மனசை எப்படி மாத்த...' என்று பெருமூச்சுவிட்டான்,

"மயிலு, நான் பாட்டுக்கு உன்மேல வச்சா காதலால மாட்டை அடக்கப்போய் எனக்கு எதாவது ஆச்சுன்னா, நீ தான் வாழ்க்க முழுக்க குற்றவுணர்வுல வாழணும். என்னை நெனச்சு காதல் உணர்வு தான் உனக்கு வரணும் குற்ற உணர்வு வர கூடாது அதனால..."என்று மேலும் அவள் முகத்தை பார்க்க, அதில் அசட்டுத்தனமே இருந்தது..

"அதனால..."

"அதனால ..." எனச் சொல்ல வாயெடுக்க, "இங்க பாருங்க, என் மாடு உங்களை குத்தி வயித்தை கிழிச்சு குடலை வெளியெடுக்கற அளவுக்கு உங்களுக்கு ஏதாவது ஆச்சினாலும் எனக்கு எந்த குற்றவுணர்வும் இருக்காது... எனக்கு நீங்க யாருங்க? நான் ஏன் குற்றவுணர்வோடு வாழணும்... ?" அவன் கேட்டதும் உள்ளுக்குள்ளே பதைபதைத்தாலும் அதை மறைத்துவிட்டு, வெளியே திமிராக கேட்டாள்.

"சர்த்தான் போடி... ரொம்ப தான் பண்ற? உனக்கும் என்னைய பிடிக்கும் பாழா போன கொள்கைய, மாட்டுக்கு மூக்குணாங்கயிறு கட்டிருக்கறது மாதிரி அதை கட்டிட்டு திரியிற,   ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் எனக்காக நீ ஃபீல் பண்ணுவ..." என்றவனின் சிறு பிள்ளை பேச்சு அவளை மேலும் அவன் வசமிழுக்க, வெளிய காட்டாது வீராப்பாக இருந்தாள்...

"அதையும் தான் பார்ப்போம்..." என்று பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். அவள் சென்ற பின்

அமைதியின் வடிவமாய் அமர்ந்துவிட்டான் மாதவன்..."மச்சி, பீல் பண்ணதாடா... "அவன் தோளை அழுத்தினான்.

"ஏன் மச்சி, என்னால் அந்தக் காளைய அடக்க முடியும் நெனக்கற? " என்று கேட்டு  செழியனை விழிப்பிதுங்க வைத்தான் மாதவன்.

"மச்சி, நாம காளைக்கு வைத்தியம் பார்க்க லாயிக்கு, மாட்டை அடக்க லாயிக்கு இல்ல டா, வேணாம் டா இந்த விளையாட்டு, உயிர் முக்கியம் மாதவா...!"

"எங்க அப்பா அடிக்கடி சொல்வார் டா, ஜல்லிக்கட்டுக்கு போய் காளை அடக்குங்கனு. நானும் என் அண்ணனும் கண்டுக்க மாட்டோம்... ஆனா இப்பதான் புரியுது... ரெண்டு மூணு தடவை போயிருந்த, பழக்கம் கிடைச்சிருக்கும்... ஏன்டா மச்சி, எங்கப்பா காளை அடைக்கிருக்கேன் சொல்லிருக்கார், அவர் வீரம் கொஞ்சம் எனக்குள்ளயும் இருக்கும்லடா..?" அவன் பாட்டுக்கு பேச, தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

"யார் பெத்த புள்ளையோ, புலம்பிட்டு கிடக்குதே... காதல் வந்தா லூசாகிடுவாங்க  பெரிய பெரிய மனுசங்க சொன்னங்களே அது உண்மை தான்போல, ஆனா இந்தளவுக்கு நான் புலம்பலயே! ஒரு வேளை லூச காதலிச்சதுனால புலம்பிலையோ!" அவன் ஒரு புறம் பேசிக்கொண்டு இருக்க, 

அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது போல கட்டிலில் விழுந்தவன்,

காளையை, அடக்கி காந்தையின் கரம் பற்றி காதல் கொள்வது போல கனவுலகில் சஞ்சரிக்க விழி மூடினான்...

தனது கூட்டாளிகள் கேலிச்சிரிப்பில், வெறி கொண்டவனாய், அந்தக் காளையை கொல்ல, வழி யோசித்தவன், தானே செய்ய முடிவெடுத்து,  மயிலினியின் வீட்டை நோக்கிச் சென்றான் மகேந்திரன்..

மாதவனோட கனவு பழிக்குமா? இல்ல மகேந்திரன் திட்டம் பழிக்குமா?

Comment 

Like

Share 

Register and login 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0