கன்னமிரண்டும் முத்தம் கேட்குதே
காதல் சிறு கதை

காலை பரபரப்பில் அந்த வீட்டு மக்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். சமையலறையில் தாளிப்பு சத்தத்துடனும் கலவைக் கருவியின் சத்தத்துடனும் சுழன்று கொண்டிருந்தாள் கவிதா. அவ்வப்போது நேரத்தைப் பார்த்துக் கொள்வதும் அவளது வழக்கம். பள்ளிக்கு செல்ல வேண்டும் அல்லவா? ஆசிரியர் பணி வேறு உண்டு அவளுக்கு.
ஹாலில் தனது மகன்களின் பள்ளிச் சீருடையை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தான் விஷ்ணு. வீட்டில் சமையலைத் தவிர, அனைத்து வேலைகளையும் பார்க்கும் அப்பாவி ஜீவன் அவன்தான். அரசு வழக்கறிஞர் அவன். ஆனால் மனைவின் முன் வாதாட தெரியாத அப்பாவி வழக்கறிஞர். அப்படி சொன்னால் கோபம் கொள்ளும், அவளது அன்பு மனையாள்.
மூத்தவன் அறையில் கிளம்பிக் கொண்டிருக்க, அடுத்தவன் அப்போது தான் குளித்துவிட்டு துண்டுடன் அறைக்குள் வந்தான்.
"விஜய் கேட்போமாடா?" என ரகசியம் போல கேட்டான்.
"அம்மா திட்டுவாங்கடா... ஸ்கூலுக்கு கிளம்பும் போது அம்மா டென்ஷனா இருப்பாங்க, தெரியும்ல? வேண்டாம்டா..." இவன் பதற,
"பச்... வேற எப்போ தான் கேக்குறது?" இவனும் சலித்துக் கொண்டான் இளையவன்.
"இன்னைக்கி ஈவினிங் கேட்கலாமா?" என மூத்தவன் விஜய் தள்ளிப்போட நினைக்க,
இளையவன் அஜயோ, "இப்படி சொல்லி சொல்லி ஒரு வாரம் தள்ளிப் போட வச்சிட்ட. இன்னைக்கே, இப்போவே கண்டிப்பா கேட்டே ஆகணும்." என்று தீர்மானமாக சொல்ல, சமையல் வேலையை முடித்த கவிதா சரியாக அறைக்குள் நுழைய, இருவர் சம்பாசனையையும் அரைகுறையாக கேட்டு விட்டு,
"என்ன அஜய் கேக்கணும் உனக்கு? நைட்டே எதுவா இருந்தாலும் கேளு, காலையில வந்து அவசரப்படுத்தாதனு சொல்லி இருக்கேன்ல உனக்கு?" என்று கிளம்பும் அவசரத்தில் எதையாவது, 'வேண்டும்' என்று கேட்டு விடுவானோ என்ற பதற்றத்தில், அவனைக் கடிந்து கொண்டாள் கவிதா. அவர்கள் இருவரும் பயந்து எச்சிலை விழுங்கினார்கள்.
"சொல்லுடா, என்ன கேட்கணும்? உனக்கு என்ன வேணும்?" எனக் கத்திவிட,
"ம்மா! எதுவும் எங்களுக்கு வேணாம். ஒரு டவுட் மட்டும் இருக்கு, அதுக்கு நீங்க பதில் சொல்லணும்." என்றான்.
அவன் பேசும் நேரம், அடுக்கி வைத்திருந்த சேலைகளில் ஒரு சேலையைத் தேர்வு செய்து அதை உருவியவள், தேவையான இதர ஆடைகளை எடுத்துக் கொண்ட பின்னே மகனின் பேச்சுக்கு பதில் அளித்தாள்.
"என்ன டவுட் அஜய்? டவுட்ட நைட்டே கேட்க மாட்டீயா? சொல்லு, என்ன டவுட்?" என்று கேட்டபடியே அவன் அருகே வர,
"என் டவுட் அப்பா இருக்கும் போது தான் கேட்க முடியும். நீங்க குளிச்சிட்டு ரெடியாகிட்டு வாங்க, கேக்குறேன்." என்றான்.
இவளோ நேரம் விரைகின்ற அவசரத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளே குளிக்கச் சென்றாள்.
இவர்கள் சம்பாசனையை கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணு, இளைய மகனிடம் பள்ளி சீருடையை நீட்டி விட்டு, "என்ன டவுட் அஜய் உனக்கு?" என அவனும் கேட்க,
"அம்மா வரட்டும்பா, டவுட் என்னன்னு சொல்றேன்." என அவனும் ஆடையை வாங்கிக் கொண்டு கிளம்ப தயாராகச் சென்றான்.
அதற்குள் விஷ்ணு, தனது இரு மகன்கள் மற்றும் மனைவிக்கு சேர்த்து உணவை கொள்கலனில் அதக்கி வைத்து விட்டு, உணவு பையில் வைத்தவன் மூவருக்கும் தோசை சுட ஆரம்பித்தான்.
இரண்டு தோசையை மனைவிக்கு கொள்கலனில் வைத்து சட்னியை ஊற்றி அதையும் சேர்த்து பையில் வைத்தவன், அடுத்ததாக மகன்கள் இருவருக்கும் தோசையை ஊற்றி தட்டில் வைத்தான்.
இருவரும் தயாராகி வந்தவர்கள் நீள்விருக்கையில் அமர்ந்து அதை எடுத்து வந்து சாப்பிட்டனர்.
விஷ்ணுவும் அவர்கள் முன்னே அமர்ந்து ஷூவிற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகே கவிதாவும் அமர்ந்து தனது கைப்பையை சரி செய்தவாறு, "அஜய், ஏதோ கேட்கணும் சொன்னீயே கேளு." என்றாள்.
அஜயோ விஜய்யைப் பார்த்து விட்டு தன் அன்னையிடம், "அம்மா நீங்க அப்பாவுக்கு கிஸ் குடுப்பீங்களாமா?" என்று கேட்டு இருவரையும் அதிர வைத்திருந்தான்.
கவிதா பக்கத்திலிருக்கும் தன் கணவனைப் பார்த்து விட்டு, "இதான் உன் டவுட்டா?" என சந்தேகமாக கேட்டாள்.
"ம்... நீங்க எங்க இரண்டு பேரையும் கிஸ் பண்ணிருக்கீங்க. ஆனா அப்பாவை கிஸ் பண்ணி பார்த்ததே இல்ல. அதான் நீங்க அப்பாவை கிஸ் பண்ணுவீங்களானு எங்களுக்கு சந்தேகம்." என்றான்.
"உனக்குமாடா?" என்று விஜய்யைப் பார்த்து கேட்டவள் தன் கணவனைப் பார்க்க, அவனோ உதடு கடித்து சிரிப்பை அடக்கியபடி தன் வேலையைப் பார்த்தான்.
'கேள்வி என்கிட்டனதும் மனுஷன் சிரிப்ப பாரு...' என உள்ளுக்குள் கடிந்து கொண்டவள்,
"உங்க அப்பாவையும் கிஸ் பண்ணுவேன்டா." என்றாள், அடுத்து அவர்கள் சொல்லப் போவதை அறியாது.
"அப்படியா? அப்ப அப்பா கன்னத்துல கிஸ் பண்ணுங்க." என்றான் பட்டென்று.
ஆனால் கவிதாவோ அவர்களிடம் எதையும் பெரிதாக காட்டிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக, "கிஸ் தானே? பண்ணிட்டா போச்சு..." என்று சட்டென விஷ்ணுவின் கன்னத்தைப் பற்றி முத்தம் வைத்தாள்.
மனைவியிடம் இதை எதிர்பாராதவன், அவளை ஆச்சரியத்தோடு பார்க்க, ‘என்ன?’ என புருவம் உயர்த்திக் கேட்டாள். வெட்கத்தை மறைத்துக் கொண்டவன், சாதாரணமாக மகன்கள் முன் அவர்களது ஷூவை வைத்தான்.
"அம்மா..." என்று அஜய் மீண்டும் அழைக்க,
"இப்போ என்ன, அப்பா கிஸ் பண்ணுவாரானு கேட்க போறியா? நீ சந்தேகம் கேட்டதெல்லாம் போதும், சீக்கிரம் ஷூவை போட்டு வாடா." என்று, அங்கிருந்து அடுத்து என்ன செய்ய சொல்வார்களோ என்ற பீதியில் வேகமாக வாசலுக்கு வந்தவள், தன் வாகனத்தை வெளியே எடுத்து உதைக்க ஆரம்பித்தாள்.
அவசரமாக வெளியே செல்லும் மனைவியின் எண்ணவோட்டத்தை அறிந்து இவன் வாய் விட்டே சிரித்தான்.
மூத்தவன் சைக்கிளில் சென்று விட, இளையவனை மட்டும் கவிதா அழைத்துச் செல்வாள். மகன் கொண்டு வந்த பையை முன்னே வைத்தவள் அவனை பின்னே அமர சொன்னாள்.
விஷ்ணு வாசலில் நின்றவாறே செடிகளுக்கு நீர் பாய்ச்சியபடி இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அஜய் பின்னே அமராமல் கவிதாவிடம் நின்றபடி, "அம்மா, ஆக்சுவலா எங்க டவுட் என்னன்னா, நீங்க அப்பாவ லிப்ஸ்ல கிஸ் பண்ணுவீங்களான்னு தான். அப்புறம்தான் வேணாம்னு கன்னத்துல மாத்திக்கிட்டோம்." என்று அவன் விளக்கம் கொடுக்க,
'எது லிபிஸ்லயா?' என அதிர்ந்தவள், "வெசம்... வெசம்... பயபுள்ள..." என்று மண்டையில் பட்டும் படாமல் கொட்டிவிட்டு கணவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ வழக்கம் போல உதடு கடித்து சிரிப்பை அடக்க முயன்றான். அவனை முறைத்து விட்டுச் சென்றாள்.
மகனின் கேள்வி மிக எளிமையானது தான். ஆனால் அவர்களுக்குள் பட்டும் படாமல் மறைத்து வைத்திருந்த காதலை அது வெளிக் கொண்டு வந்து விட்டது.
இரு மகன்களைப் பெற்ற பின்னும் மெத்தையில் அவர்களுக்கான நெருக்கத்தில், இடைவெளி சிறிது சிறிதாய் உட்புகுந்து இன்று மகன்களின் வயதைக் காரணம் காட்டி பெரிதான இடைவெளியைக் கடைபிடிக்கின்றனர். உடலளவு மட்டுமே, மனதளவில் இல்லை.
நெஞ்சம் முழுக்க காதல் இருப்பினும் அதை அவர்களுக்காக பார்த்து பார்த்து செய்வதில் காட்டிக் கொள்வார்களேத் தவிர, தொட்டு பேசி, கட்டிக் கொண்டு, முத்தமிட்டு பகிர்ந்து கொள்வதில்லை. இதுதான் அவர்களின் வாழ்க்கைமுறை என மாறி விட்டது.
மகனது இன்றைய கேள்வியால் அவர்களுக்குள் பதுங்கி இருந்த காதல் பூதம் இன்று விழித்துக் கொண்டதைப் போல, அதன் காதல் பசிக்கு தனது தீனியாக பழைய காதல் நாட்களை அசைப்போட ஆரம்பித்தது.
பள்ளியில் தனது வேலையில் கவனம் இருந்தாலும், மகனின் கேள்வியும் கணவனின் முகமும் வந்து போகாமல் இல்லை.
இங்கே விஷ்ணுவிற்கு அத்திபூத்தாற் போல எப்போவாவது, கவிதாவிடம் இதுபோல எதிர்பாராத முத்தம் கிடைப்பது உண்டு. ஆனால் கொஞ்ச நாட்களாக அதுவும் கிட்டவில்லை.
உள்ளுக்குள் மனைவியின் அருகாமையையும் அணைப்பையும் முத்தத்தையும் எதிர்பார்த்து ஏங்கி போயிருக்கிறான். அதை தனக்குள் மறைத்து வைத்துக் கொண்டான். ஆனாலும் சில நேரங்களில் எதார்த்தமாக வெளிப்படும் ஏக்கத்தை அவளிடம் காட்ட நினைத்தாலும், குழந்தைகளை காரணம் காட்டிவிட்டு ஒதுங்கி விடுவாள். சில நேரங்களில் மனைவியின் நிலையைக் கண்டு தானாக ஒதுங்கி கொள்வதும் உண்டு. இப்படியே தான் அவர்கள் நாட்களும் சென்று விட்டன.
மாலையில் வீட்டிற்கு வந்த கவிதாவிற்கு கணவன் இல்லாத வீடே வரவேற்க, ஏனோ இன்று கணவனின் அருகாமையை தான் அவளும் தேடினாள். மகன்கள் இருப்பதால், அதுவும் தொட்டதிற்கு எல்லாம் கேள்வி கேட்டு வைப்பதால், தனக்குள்ளே ஆவலை ஒளித்துவிட்டு வேலைகளை செய்வதும், உடன் வேலை செய்யும் தோழியிடம் அலைபேசி வழியே அரட்டை அடிப்பதும், இரவு உணவை தயாரிப்பதிலும் நேரத்தைக் கழித்தாள்.
விஷ்ணு தாமதமாக வந்தான். அவன் வந்ததும் அவனுடன் சேர்ந்து அமர்ந்து இரவு உணவை பேசி, சிரித்தபடி சாப்பிட்டனர்.
சாப்பிடும் வேளையிலும் தன் கணவனை, அவன் அறியாது ஓரக் கண்ணால் பார்த்தபடி சாப்பிட்டாள். அவள் அறியாத நேரம் மனைவியை பெருமூச்சுடன் பார்த்து விட்டு, மகன்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தபடி சாப்பிட்டான்.
மெத்தையில் மனைவி நடுவிலும் இருபக்கம் அணையாய் இரு மகன்களும் அவளைக் கட்டி அணைத்து உறங்க, வழக்கமாக அவர்களையும் மனைவியையும் ஏக்கமாக பார்த்துவிட்டு தரையில் படுத்துக் கொண்டான் விஷ்ணு.
நேரம் கடந்திட, இருட்டில் எதுவோ அவனை இடித்தபடி இருக்க திரும்பி பார்த்தான். வேறு யாருமில்லை, அவனது மனைவி தான்.
"ஹேய்... என்ன கவி, இங்க வந்து படுத்திருக்க? மேல இடம் பத்தலையா?" என பதறி கேட்க,
"ம்... ஆமா, இடம் பத்தலை..." என்றாள் முனைப்பாக.
"சரி, நீ இங்க படுத்துக்கோ, நான் ஹால்ல படுத்துக்கிறேன்." என்று வேகமாக எழுந்தவனை முறைத்தவள், "அப்போ என்னோட நீங்க படுக்க மாட்டீங்க? தொந்தரவா இருக்கேன், ஹாலுக்கு போறீங்க... அப்படி தானே?" என முகம் சுருங்க கேட்க,
அடுத்த நொடியே அவளருகே படுத்தவன், "நான் எப்போ உன்னோட படுக்க மாட்டேன்னு சொன்னேன்? மேடம், நீங்கதான் என்னோட தூங்குறது இல்ல. ஏதோ பாவமே கட்டிய கணவனாச்சேனு ரூம்ல, தரையில இடம் கொடுத்திருக்கீங்க. இதுல நான்தான் உங்களை தொந்தரவா நினைக்கிறேன்ல?" எனக் கேட்டதும்,
இவள் சமாளிப்பாக இளித்து வைத்தவள், "என்ன பண்ண... பசங்க வளர்ந்துட்டாங்க, கேள்வியா கேட்கிறானுங்க. என் கூடவே தூங்கணும்னு நினைக்கிறாங்க. என்னை விடுறதே இல்ல. அம்மா வாங்கனு கூப்பிடும் போது என்ன சொல்ல சொல்றீங்க?"
"ம்... பசங்கன்னு வந்திட்டா, புருஷன் நானெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சா தானே? ஆமா, இப்போ மட்டும் என்ன உன் பசங்க வளரல? இப்போ மட்டும் தூங்கும் போது உன்னை தேட மாட்டாங்களா?" என கேட்க,
"ப்ச்! இப்போ என்ன, நான் உங்களுக்கு இங்க வந்தது பிடிக்கலையா? நான் போறேன், என் பசங்ககிட்ட போறேன். உங்க நினைப்பாவே இருக்கேன்னு உன் கூட தூங்கலாம்னு வந்தேன்ல... என்ன சொல்லணும்..." என எழுந்தவளை, வேகமாக இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அவன் நெஞ்சில் சாய்ந்ததும் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. விழிகளை உயர்த்தி அவ்விருட்டிலும் கணவனின் முகம் பார்க்க ஆசைக் கொண்டாள்.
"என்னவாம் இப்போ?" என முனைப்பாக கேட்க,
"என்னடி?"
"கேள்வியா கேட்டீங்க? இப்போ மட்டும் என்னவாம்?" என வாகாய் அவள் நெஞ்சில் முகத்தைப் புதைத்தபடி கேட்டாள்.
"கேள்வி கேட்டாலாவது அதுல இருக்க என்னோட ஆதங்கம் உனக்கு புரியணும்னு தான் கேட்டேன். கடைசியா இப்படி நாம நெருங்கி, இறுக்க அணைச்சி படுத்திருந்தது எப்போனு உனக்கு ஞாபகம் இருக்கா?” என அவன் கேட்க, இவளும் யோசித்தாள். வருஷங்கள் பல கடந்திருந்தன.
சரியான தேதி, நேரம் சொல்ல முடியவில்லை அவளால். "ம்... தெரியலைல? பசங்க குழந்தையா இருந்தப்போ கூட இதுபோல சில திருட்டுத் தனமான காதல் இருந்தது. அவங்க வளர்ந்ததும் அதுவும் இல்லாம போச்சு. சரி, நானா நெருங்கினா கூட மேடம் ஸ்கூல்ல கத்துறது போல என்கிட்டயும் கத்துறது. என்ன பண்ண, இதுல நீயா என் பக்கத்துல வந்து படுக்க மாட்டீயானு தினமும் ஏங்கியே என் இரவு கழிஞ்சி போகுது கவி." என முழுக்க முழுக்க காதலும் தவிப்பும் மோகமுமாக சொல்லி முடிக்க,
இந்த வயதிலும் தன்னை மட்டுமே தேடும் கணவனை நினைக்கையில் உடல் சிலிர்த்தது அவளுக்கு. தினமும் தன்னை எதிர்பார்க்கும் கணவனை முகமெடுத்து அவளால் பார்க்க முடியவில்லை.
ஒவ்வொரு நாளிலும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளையும் பிள்ளைகளின் எதிர்கால கனவுகளையும், அவர்களது எதிர்காலத்தைப் பற்றியும் வரவு செலவு கணக்கும், சமையலும் என பல சிந்தனைகளில், கணவனின் காதல், அன்பு, அரவணைப்பு எல்லாம் சிந்தனைகளுக்கு அப்பால் ஒளிந்து கொள்ள, அதனைப் பற்றிய யோசனை எல்லாம் அறவே இல்லாமல் போனது.
தினமும் உடம்பு கேட்கும் தூக்கத்தைக் கொடுத்தவள், உணர்வுகள் கேட்பதெல்லாம் தூரம் வைத்து விட்டாள்.
கண்களில் முனுக்கென வந்த கண்ணீரை கண் சிமிட்டி துடைத்தவள், கணவனை அணைத்தபடி, "சாரி..." என்று விளிக்க,
"இட்ஸ் ஓகே." என நெற்றியில் முத்தம் பதித்தான்.
"விஷ்ணு! நிஜமாவே என்னை மிஸ் பண்ணிங்களா?" என அவனை வம்பிழுக்க கேட்டாள்.
"எதை செய்தா நம்புவ?"
"நம்புறது போல எதாவது பண்ணுங்க, நம்புறேன்." என்றாள் சிரிப்பை மறைத்து.
அவனோ ஊண் உடைய இறுக்க அணைத்து விடுவித்து, "இப்போ?" என்றான்.
"ம்ம் கொஞ்சம்..." என்றாள் இன்னும் எதிர்பார்த்து.
கன்னமிரண்டிலும் அவனது உதடுகள் புதைய முத்தங்கள் வைத்தான். "இப்போ?"
"ம்ம் கொஞ்சம்..." எனும் போதே அவள் உதட்டை சிறை செய்து மொத்த ஏக்கத்தையும் தீர்த்துக் கொண்டான் அவளுள். வெகு நாட்களுக்கு பின் நிறைவாய் ஒரு கூடல்.
அன்றைய நாளுக்கு பின் மகன்கள் உறங்க அருகில் படுத்துக் கொள்பவள், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றபின் கணவனின் அருகே வந்து படுத்துக் கொள்வாள். அணைப்பு, முத்தம், சிறு சிறு காதல் சீண்டல் என அவர்களது பழைய நாட்களைப் புதுப்பித்துக் கொண்டனர். திருட்டுத் தனமாய் மீண்டும் காதலிக்க ஆரம்பித்தனர்.
"அம்மா! நைட்டு எங்களோட தான் தூங்குறீங்க, ஆனால் இடையில உங்களை தேடினா காணாம போயிடுறீங்க. எங்கமா போவீங்க?" எனக் கேட்க, அவனது கேள்வியில் அவள் தடுமாறிட, விஷ்ணுவோ மனைவின் தடுமாற்றத்தைக் கண்டு உதடு கடித்து சிரித்தபடி இருந்தான்.
அவனை முறைத்து விட்டு மகனிடம் ஏதேதோ சொல்லி சமாளித்தாள். இவ்வாறே மகன்களை சமாளிப்பதும் கணவனோடு இரவைக் கழிப்பதுமாக மீண்டும் அழகான நாட்களானது.
***
"ஹாப்பி அன்னிவர்சரிமா! உங்களுக்கு இந்த சேரி சூப்பரா இருக்கு." என மகன்கள் இருவரும் வாழ்த்து சொல்லி, கட்டியணைத்து முத்தம் வைத்தனர். அவளும் ஆசையாக ஏற்றுக் கொண்டாள்.
ஒவ்வொரு கல்யாண நாளையும் மறக்காமல் மனைவிக்கு புடவை எடுத்துக் கொடுப்பது விஷ்ணுவின் வழக்கம்.
இந்த முறையும் கல்யாண நாளுக்காக மனைவிக்கு அழகான விலையுயர்ந்த புடவை எடுத்துக் கொடுக்க, வாங்கி கொண்டு அதற்கு ஜாக்கெட்டும் தைத்து வைத்துக் கொண்டவள், கல்யாண நாளன்று கட்டியும் விட்டாள்.
மகன்கள் இருவரும் வாழ்த்து சொல்லி விட்டு பள்ளிக்கு செல்ல தயாராகி வெளியே சென்று நின்று கொள்ள, இவள் கைப்பையையும் உணவு பையையும் எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் வேளையில், அவளை மறைத்து நின்றவன், “ஹாப்பி அன்னிவர்சரி கவிமா!" என்றிட,
அவளோ, "சேம் டூ யூ!" என முறைத்து விட்டு சென்றாள்
இவனுக்கோ அவளது கோபத்திற்கான காரணம் தெரியவில்லை. அவனும் அலைபேசி வழியே கெஞ்சி கூத்தாடி காரணத்தைக் கேட்க,
அவளோ, "கல்யாண நாள் தெரியுதுல, உங்களால எனக்கு பூ கூட வாங்கி கொடுக்க முடியலைல?" என சிலுப்பிக் கொள்ள, இவனுக்கு தான் ஆயாசமாக இருந்தது.
புடவை வாங்கி கொடுத்ததை விட அவள் எதிர்பார்ப்பு பூ வாங்கி கொடுப்பதில் இருக்க, மனைவியின் சிறுபிள்ளை தனத்தை எண்ணி நகைத்தவன், இரவில் மறைத்து வைத்திருந்த ஒரு முழம் பூவை மனைவியின் கையில் வைத்தான்.
அதைக் கண்டதும் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. கொஞ்சமாக வெட்டி தலையில் வைத்துக் கொண்டவள் கணவனின் அருகே வந்து அமர்ந்தாள், மகன்கள் இருவரும் தூங்கும் தைரியத்தில்.
"காஸ்ட்லியான புடவைய விட, நான் பூ வாங்கி கொடுக்கிறது தான் உனக்கு பிடிக்கும்னா, உனக்கு பூவே வாங்கி கொடுத்து பணத்தை மிச்சமாக்கிருப்பேன்." என்று விளையாட்டாக சொல்லி தோளை குலுக்கிட,
முதுகில் போட்டவள், "கொன்னுடுவேன்! புடவை, பூ வாங்கி தர்றது உங்க கடமை. அதுல மிச்சம் பார்க்கணும்னு நினைப்பு வந்தது, பிச்சிடுவேன்." என்று மிரட்ட,
"சரி தாயே, மன்னிச்சிக்க! அடுத்த முறை இந்த தப்ப திருத்திக்கிறேன்." என்று சமாதானம் செய்ய, அவளோ பொய்யாய் முறுக்கிக் கொள்ள, அவள் எதிர்பார்க்கும் சமாதான முத்தத்தை முகமேந்தி அவளது இரு பஞ்சு கன்னத்தில் உதடுகள் புதைய வாரி இறைத்தான் விஷ்ணு.
***
What's Your Reaction?






