காதல் நாயகனே - 13

Jul 5, 2025 - 21:14
Jul 6, 2025 - 20:12
 0  36
காதல் நாயகனே - 13

நாயகன் - 12

சமையல் அறையில் கந்தரூபனின் தாய் மஞ்சுளா அடுப்பில் தாளித்த படி இருந்தார். "ம்மா...!" என அழைப்பினூடே  அவர் பக்கவாட்டில் வந்து நின்றான் கந்தரூபன். 

"ம்... சொல்லுடா பசிக்குதா ! இதோ ரெண்டு நிமிஷம்"என்ற படி தாளித்ததை குழம்பில் கொட்டி விட்டு விளக்கப் போட்டார். 

"பசிக்கலாம் இல்லமா ! உன் கிட்ட கொஞ்சம் பேசணும் "என்றவனின் அடாவடி குரல் இறங்கி போயிருந்தது.

 அவனை உற்றுப் பார்த்து விட்டு "ம்ம் பேசு டா "என்று கையோடு சமையல் மேடையை சுத்தம் செய்தவர். பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தார். 

அவரிடம் பாத்திரங்களை வாங்கி சோப்பை தொட்டு பாத்திரங்களை வலிக்காமல் தேய்தப்படி மீண்டும் "ம்மா..."என்றான்.

" ஐய்ய ! இங்க தானே நிக்கிறேன் சொல்லேன் டா "என்றார் தலையில் அடித்துக் கொண்டு. 

"ம்மா... நான் கல்யாணம் பண்ணிக்கலாம் இருக்கேன்"என்றான். 

அவரோ இடையில் கையை ஊன்றிய படி "பாக்குற பொண்ணலாம் நல்லா இல்ல... அது இல்ல... இது இல்ல சரியில்லனு நொட்டிட்டு  இப்போ என்ன டா கல்யாணம் பண்ணலாம்  வந்து நிக்குற?! எத்தன பொண்ணுங்கள உனக்காக அந்த தரகரும், நம்ம மாப்பிள்ளையும்  பார்த்து சொன்னாங்க ஒருத்தியையும் விடாம குறை சொல்லி வேணாம்னு நொட்டின ! இப்போ எங்க இருந்து உனக்கு புத்தி வந்துச்சி?!"

"ம்மா... நிஜமாலே அந்த பொண்ணுங்கள எனக்கு பிடிக்கவே இல்ல மா..."

"அப்ப இனி பாக்குற பொண்ணுங்களாச்சும் பிடிச்சிக்குமா? இல்ல அவளுங்களையும் நொட்டை சொல்லுவீயா?" 

"ம்மா... எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு..."என எச்சிலை உள்ளிழுத்த படி சொன்னான். 

"ஒரு பொண்ணை பிடிச்சிருக்கா? அதிசயமா இருக்கே ! யாரு அந்த பொண்ணு ? நம்மாளுங்களா? பொண்ணு பக்கம் எப்படி? வசதியானவங்களா? " என கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிட

" பொண்ணை பத்தி கொஞ்சம் தெரியும்மா ! நம்மாளுங்க தான். பொண்ணோட அப்பா கொஞ்சம் வசதியானவர் ஒரே பொண்ணு ! ஆனா...?" 

"ஆனா வா ? ஆனா என்ன டா ? பொண்ணுக்கு அம்மா இல்லையா? அப்பா மட்டுமா?"

"அப்பா அம்மா ரெண்டு பேரும் இருக்காங்க "

"அப்புறம் என்ன டா ?" 

"ஆனா அவ தான் அப்பா அம்மாவோட இல்ல..."

"அப்பா அம்மாவோட இல்லைன்னா யாரோட இருக்கா ?!"

"அவ... அவ மாமியார் மாமனாரோட இருக்கா"என்றதும் வேலை செய்துக் கொண்டிருந்தவரின் கைகள் அப்படி நின்றன. திரும்பி அவனை பார்த்த பார்வையிலே உடலிலுள்ள அத்தனை பாகங்களின் இயக்கங்களும் ஸ்தம்பித்து நின்றன.

"என்னது மாமனார் மாமியாரோட இருக்காளா ?  கல்யாணமான பிள்ளையாவா பிடிச்சிருக்குனு  வந்து சொல்லுற ? எடு செருப்ப நாயே ! உன் புத்தி எங்க டா போகுது ? இந்த கெடு கெட்ட புத்தி எங்க இருந்து வந்துச்சி உனக்கு? அசிங்க பிடிச்ச நினைப்போட வளர்ந்து நிப்பண்டு நான் நினைக்கவே இல்ல ! இந்தக் கொடுமைய நான் கேட்கணும்னு அவர் முன்ன போய் தொலைஞ்சாரா ! ஐயோ !  ஐயோ ! கேவலமான புத்தியோட வளர்ந்து நிப்பான் நினைக்கலையே ! ஐயோ கடவுளே நான் என் பிள்ளையை இப்படி வளர்க்கலையே எத பார்த்து இவன் கெட்டுக் போயிட்டான் தெரியலையே" என அப்படியே 

அமர்ந்து தலையில் அடித்து அழ ஆரம்பித்தார்.

"ம்மா... புருஷனோட இருக்கிறவளையா கல்யாணம் பண்ணி கொடுன்னு கேட்டேன் . புருஷன் இறந்து போயிட்டான் மா  புள்ளையோட இருக்கிறவளை தான் கல்யாணம் பண்ணி கொடு கேக்குறேன். அவளை எனக்கு  பிடிச்சிருக்கு மா"என்றான் 

"எடு தொடப்ப கட்டைய !! புருஷன் இல்லே புள்ளை தான் இருக்காம். ச்சீ... அவளுக்கு புருஷன் இல்லைனு உனக்கு கவலையோ ! நாயே  இன்னொரு வார்த்தை நீ பேசின சோத்துல விஷத்தை வச்சி கொன்னுடுவேன் உன்னை... வாய மூடிட்டு இரு ?"

"ம்ம்... கறி குழம்புக்கு மசாலா அரைக்கும் போது அரளி விதை சேர்த்து அரைச்சி கொன்னுடு ! உனக்கு ஒத்த பொண்ணுனு வாழ்ந்துக்க... எனக்கு கல்யாணம் நடந்துச்சின்னா அது அவளோட இல்லையா ஒண்டிக் கட்டையா கிடக்கிறேன். இல்ல கட்டையோட கட்டையா வேகுறேன்... ஆனா நான் வேற ஒருத்திய கட்டிப்பேன் நினைக்காத" என  சொல்லி விட்டு சென்று விட்டான்.  நெஞ்சு வலி வந்து விடும் போலிருந்தது அவருக்கு. 

வேகமாக அலைபேசியை  எடுத்து மகள் கயலுக்கு அழைத்திருந்தார். அவசரமாக வீட்டுக்கு வர சொல்ல, கயலும் தன் கணவனை அழைத்துக் கொண்டு பதற்றமாக வந்து சேர்ந்தாள். 

தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் தாயின் அருகே அமர்ந்து பிரச்சனை என்ன வென்று கேட்க, அவரும் ஒப்பாரி வைக்காத குறையாக மகன் சொல்லி சென்றதை சொல்ல, வாயில் கை வைத்து  அதிர்ந்து போனாள். 

"அண்ணனா அப்படி சொல்லிச்சி?"

"நான் ஏன் உன் நொண்ணன பத்தி அப்படி சொல்ல போறேன்? அவன் அந்த பொண்ணை தான் கட்டிக்க போறேன் இல்ல சாகுறேன் நிக்கிறான்டி. ஐயோ என் மகன் புத்தி தறிகெட்டு போயிருச்சே ! என்ன செய்ய போறேன் தெரியலே!"என அழுது புலம்பிட, 

"அத்தே அழாதீங்க ! மச்சான் கிட்ட நான் பேசறேன்..."

"பேசுங்க மாப்பிள்ளை ! அவன் மனச மாத்துங்க  ! நம்ம சாதி சனத்துக்கு முன்னாடி மானம் மருவாதையா வாழ்ந்திட்டு இருக்கற குடும்பம்... மொத்தமும் இவனால போயிடும் போல இருக்கு ! அந்த புள்ளை யாரு என்ன விசாரிங்க மாப்பிள்ளை ! அவ வீட்டுக்கு போய் நறுக்கு நாலு வார்த்தை கேட்டு அவ மயித்த அத்துட்டு வரணும்.  இவன விட்டு ஒரேடியா போக சொல்லணும்.  குடிய கெடுக்க என் வீடு தான் கிடைச்சதா அவளுக்கு. மாப்பிள்ளை ! அவன் கிட்ட கேட்டு சொல்லுங்க"என ஆக்ரோசமாக கத்தினார். 

"அத்தை கோபப்படாதீங்க ! முதல்ல மச்சான் கிட்ட பேசி என்ன நிலவரம்? கேக்குறேன்... அதுக்கு அப்புறம் அடுத்தென்ன யோசிப்போம்"என்று அவரை சமாதானம் செய்து விட்டு, 

கந்தரூபனை  அழைத்தான். 

அவனும் உள்ளிருந்து சாவுகாசமாக வெளியே வந்தான் "என்ன மச்சான் அத்தை சொல்றது உண்மையா? நீங்க கல்யாணமான பொண்ணையா விரும்புறீங்க? "

"ஆமா மாமா அந்த பொண்ணை தான் விரும்புறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். எனக்கு அவளை தான் பிடிச்சி இருக்கு"என தீர்மானமாக சொன்னான். 

"உனக்கென்ன பைத்தியமா அண்ணே ! குழந்தை பெத்தவள போய் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற? அறிவிருக்கா இல்லையா  அண்ணே உனக்கு? அம்மாவ பாருண்ணே  எப்படி கதறிட்டு இருக்கு ! நல்ல பொண்ணா பார்த்து உனக்கு பேசி முடிக்கிறோம்ணே ! நீ அந்த பொண்ணு மறந்துடுண்ணே !"என அவளும் கெஞ்ச, 

"முடியாது கயலு எனக்கு அந்தப் பொண்ணோட தான் வாழணும்..."என அதிலே நின்றான். 

"அப்போ எனக்கு கொல்லி வச்சிட்டு அவள கல்யாணம் கட்டச் சொல்லு ! அந்த அசிங்கதை என்னால சகிச்ச முடியாது "என்றார் அவனை போல வீம்பில். அவனோ தாயை முறைத்தான். 

"என்ன டா முறைக்கிற ? அவள கட்டிட்டு வந்தால் தாயில்லாம தான் இந்த வீட்ல வாழுவ !"என தரையில் அடித்து சபதம் போல சொன்னார். 

"அப்போ நானும் அடிச்சி சொல்றேன். இந்த வீட்ல அந்த பிள்ளைய தவிர யாரும் உனக்கு மருமவளா வர மாட்டாளுங்க..." என்றான்

"பாருங்க மாப்பிள்ளை இவன் பேச்சை ! எப்படி எல்லாம் வளர்த்த  இவன? இவனுக்கு என்ன குறைச்சல் மாப்பிள்ளை, அவளுக்கு இரண்டாவது புருஷனா இருக்கணும் நிக்கிறான். அவ தான் வேணும்ங்கற அளவு என் புள்ளைய எப்படி மயக்கி இருக்கா பாருங்க !  அவளை நான் சும்மா விட மாட்டேன் மாப்பிள்ளை "எனக் கொந்தளிக்க,

"அத்தே ! கொஞ்சம் பொறுமையா இருங்க ! விஷயம் என்ன முழுசா தெரிஞ்சுக்காம கோபப்படாதீங்க... மச்சா நீங்க சொல்லுங்க அந்தப் புள்ளை யாரு?! பேரு?ஊரென்ன? என்ன பண்ணுது? எங்க பார்த்தீங்க ? எப்ப பார்த்தீங்க? விவரமா சொல்லுங்க"என கந்தரூபனை கேள்வியால் அவன் துளைக்க,

"அந்த பொண்ணு பேரு ஜனனி மாமா ! கேட்டரிங் சர்வீஸ் வச்சிருக்கா ஏழு வயசுல பையன் இருக்கான்... "என முடிக்கும் முன்னே, "அவளா?" என்றவர்

"இப்போ தானே எல்லாம் புரியுது ! என்ன டா வரத அண்ணே கொடுத்த ஆர்டர இந்த தாராள பிரபு இன்னொருத்திக்கு தார வார்த்து கொடுத்திருக்கானேனு ஆனா இப்போ தானே தெரியுது அவ உன்னை மயக்கி ஆர்டர் வாங்கி இருக்கா ! அது மட்டுமில்ல சொத்து பத்து இருக்குனு இவன் வேற வெகுளியா இருக்கான் மயக்கி அவ புள்ளைய இந்த வீட்டு வாரிசாக்க முடிவு பண்ணிட்டு, கல்யாணம் பண்ணிக்கலாம் ஆசை வளர்த்து விட்டு இருக்கா! அவளை சும்மா விடக் கூடாது மாப்பிள்ளை. என் புள்ளைக்கு அவ வசியம் வைக்கிறதுக்குள்ள ! அவ திட்டத்த தவுடுபுடி ஆக்கணும் மாப்பிள்ளை வாங்க இப்போவே போலாம்"என்று கூந்தலை அள்ளி முடிக்க, "அத்தே !"என அவரை அடக்குவதற்குள்

"ம்மா ! கொஞ்சம் அமைதியா இருக்கியா? நான் உன் கிட்ட உண்மைய மறைச்சிட்டேன்"

என்றான் குரல் தளர்ந்து.

 அவரோ என்னவென்று திகைப்புடன் பார்க்க, அவனும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல நெஞ்சில் கை வைத்து  அமர்ந்து விட்டார்.

"அந்த புள்ளைக்கு எதுவுமே தெரியாது. உங்க கிட்ட சொன்னதை அந்த புள்ளைக் கிட்ட சொல்லவே இல்ல... எனக்கு கேட்டரிங் சர்வீஸ் நடத்த துளியும் விருப்பம் இல்லை. கந்து வட்டில தான் கவனம் போகுது ! யாருக்காவது விக்கவும் விடமாட்டிக்கிற , வாடகைக்கு கொடுக்கவும் மாட்டிக்கிற ! விருப்பமில்லாம தான் ஓடிட்டு இருக்கேன். அவ நம்ம அப்பா மேலயும் கேட்டரிங் சர்வீஸ் மேலயும் ரொம்ப மரியாதை வச்சிருந்தா! அதனால தான் நான் அப்படி யோசித்தேன். அவளை எனக்கு பிடிக்கும் இன்னொரு காரணம், நம்ம கேட்டரிங் சர்வீஸ் நல்ல பார்த்துப்பா தொழிலுக்கு உதவியா இருப்பா யோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன்... எனக்கு அந்த பிள்ளைய பிடிச்சிருக்கு அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்"என்று உள்ளே சென்று விட அமைதியாக இருந்தார் மஞ்சுளா !

"அத்தே இதை பத்தி இப்பதைக்கு பேச வேணாம் ! ஆற போடுங்க ! நான் அந்த பொண்ணை விசாரிக்கிறேன்... "

"என்ன மாப்பிள்ளை நீங்களும் அவன் சொன்னதை கேட்டு அவளை கட்டி வைக்க போறீங்களா?"

"அத்தே !! அந்த பொண்ண விசாரிக்கிறது காரணம் இரண்டாவது கல்யாணத்துல விருப்பம் இருக்கா? இல்லையா? தெரிஞ்சுக்க தான் . அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லைன்னா நமக்கு சாதகமா தானே விஷயம் முடியும்... "

"விருப்பம் இருக்கு இவனை கட்டிக்கிறேன் சொல்லிட்டா ?"

"உங்க மகன் தலையெழுத்து அது தான்னா என்ன பண்றது அத்தே! ஆனா அப்படி எதுவும் நடக்காது நம்புவோம்..." என்று தைரியம் கொடுத்து சென்று விட்டான். அவரோ மனக்கவலையில் ஆழ்ந்த விட்டார்.

மக்களே

ஜனனியோட பதில் என்னவா இருக்கும்? அவ கந்தரூபனை ஏத்துப்பாளா ? இல்லை மறுப்பாளா ? 

Comment like 

Register and login

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0