நெடுஞ்சாலை கானமே - 3

Jun 15, 2025 - 04:46
Jun 30, 2025 - 04:29
 0  23
நெடுஞ்சாலை கானமே - 3

கானம் - 3

காதலி வைத்த கருவாட்டு குழம்புடன் கஞ்சியை ருசித்து ருசித்து உறிஞ்சினான் இசைசேத்தன்.

"அப்பத்தா! என்னா கைப்பக்குவம் உன் பேத்திக்கு. பெத்த ஆத்தா சமையலையே மிஞ்சிட்டா போ. ம்ம்... காலம் போன காலத்துல ஒனக்கு ருசியான கஞ்சி. இளந்தாரி எனக்கு உப்பு சப்பான குழம்பு சோறு. நாக்கு செத்து போச்சி அப்பத்தா." என்று அவரிடம் பொய்யாக வருத்தப்பட்டான்.

"பெத்த ஆத்தா சமையலை கசக்குதுனா, பொண்டாட்டி சமையல உம்ம நாக்கு எதிர்பார்க்குதோ ராசா, சீக்கிரமா ஒரு புள்ளைய பிடிச்சி கல்யாணம் கட்டிக்க." என்றார் முத்தமா பதிலுக்கு.

அதற்கு தன் பல் வரிசையை காட்டியவன், "எங்கத்தா இந்த ஜென்மத்துல அதெல்லாம் நடக்கும்னு எனக்கு தோணல. காலம் முழுக்க ஆத்தா கையில தான் சோறுனு என் தலையில எழுதிருக்கு." என கஞ்சியை அளந்தபடி பெருமூச்சை விட்டான்.

அவன் முகத்தை வழித்து தாடையை பிடித்து கொஞ்சியவர், "ஒனக்கு என்ன ராசா? ஈரோ கணக்கா இருக்க. உன் ஆத்தா ஒனக்கு வலை வீசி பொண்ணு தேடிட்டு இருக்கா. அதுல ஒனக்கு ஒன்னு சிக்காத என்ன? உன் ஆத்தா ஒன்ன தனியாலாம் விட்டுட மாட்டா கண்ணு. நல்ல கஞ்சியா ஊத்த உனக்குன்னு ஒருத்தி வருவாய்யா." என்றார்.

"பக்கத்துல வச்சுட்டு வலை வீசி தேடி என்னத்த கொண்டு வந்தாலும் என் மனசு தான் ஏத்துக்கிடுமாத்தா?" என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு புலம்ப, பாவம் காது கேளாத அவருக்கு அவனது புலம்பல் சரியாக விழவில்லை. 

அவன் வாய் மட்டும் அசைவதை வைத்து என்னவென்று அவனை குறுகுறுவென கண்களை சுருக்கி பார்த்தார்.

அதை கண்டவன் சலிப்பாக, "என்னத்தா அப்படி பார்க்கற? என்ன பேசறேன் காதுல விழுகலையா?" எனக் கேட்டான். 

'ஆமாம்' என தலையை அசைத்தார். 

"அட போ கிழவி! ஒனக்கும் ஒம் பேத்திக்கும் நான் பேசறது எப்ப  தான் காதுல விழுந்திருக்கு." என்றான் மீண்டும் சலிப்புடன்.

அவர் பார்வையை மாற்றாமல் என்ன சொல்கிறான் என்று கேட்க இன்னும் நெருங்க, அவனுக்கு அவரையும் தன் நிலமையையும் நினைத்து சிரிப்பு வர அவர் முன் சிரிக்காது, அவரது செவிக்கு அருகே நெருங்கி, "சும்மா புலம்பிட்டு கிடக்கேன் அப்பத்தா. நீ கிளம்பு நான் பாத்துக்கிறேன்." என்று கத்தினான். 

அவரும், "சரி ராசா." என்று தலையை அசைத்து அங்கிருந்து அகன்றார். 

அதே நேரம் லுங்கியை தூக்கி கட்டியபடி பனியன் மேலே துண்டை போட்ட படி அங்கு வந்தான் நெடுமாறன்.

"என்ன சேத்தா! கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் வீட்டு விருந்தா? கவனிப்புலாம் வீடு தேடி வருது?"

"பசிக்குது என்ன இருக்குண்டு கேட்டேன். கஞ்சியும் கருவாட்டு கொழம்பையும் கொடுத்துட்டு போகுது கிழவி." என்றான் கையை தட்டில் கழுவியை படி. 

"ஏன் அத்த சோறாகலியா?" என்று படியில் அமர்ந்தான்.

தட்டை ஓரம் தள்ளியவன், அவன் பக்கத்தில் வாகாய் அமர்ந்து அவன் புறம் திரும்பி,

"அதெல்லாம் ஆக்காம இருக்குமாக்கும் உன் அத்த? சட்டியில கிடக்கு சோறு. சாப்பிட தான் எனக்கு ஒப்பல." என்றான் எங்கோ வெறித்து.

"சாப்பாட போட்டு வயிற மட்டும் நிறைக்காது மனசையும் நெறைச்சிப்புடும்னு சொல்லுவ, இன்னைக்கி என்ன ஒப்பலங்கற? பெத்த ஆத்தா சமையல சலிச்சு போற அளவுக்கு உமக்கு காதல் முத்தி போச்சா?" எனக் கேட்டதும் அவனை பார்த்தவன், 

"முத்தி போய் கிடக்கற காதலுக்கு ஒரு வழியும் செய்யாம, பெத்த புள்ள மேல கொஞ்சமும் கவலை இல்லாம கிடக்குது உன் அத்த. எப்படி அது போடுற சோத்த திங்கச் சொல்ற?"

"என்னடா பேசற ஒன்ன பத்தி கவலை படற ஒரே ஜீவன் அத்த தான். வேற யாரு ஒன்ன பத்தி கவலை பட்டுடு கிடப்பா இங்க? அதுக்கு கவலை இல்லைனு சொல்லாத. அதெல்லாம் இந்த உலகத்துக்கே அடுக்காது டா சேத்தா." 

"ஆமாம்மா அடுக்கவே அடுக்காது டா. புள்ள சாப்பிடலேனு கொஞ்சமாச்சும் கவலை இருக்கா அதுக்கு? பாரு இழுத்து போத்திட்டு தூங்குது. இது தான் உங்க ஊர்ல அக்கறே போடாங்கு." என அவனை திட்ட வந்த வார்த்தைகளை உள்ளுக்குள் விழுங்கி கொண்டான்.

"ஏன்டா நீ கொழுப்பெடுத்து திங்காம கிடந்துட்டு என் அத்தே மேலே பழி போட்றீயா நீயி. இளந்தாரினு தெனமும் கறியும் சோறுமா உமக்கு ஆக்கி போட்டாலும் நீர் அக்கறே இல்ல சக்கரே இல்ல பேசுவீரு. உன்னை எல்லாம் சோத்துல வெசத்த வச்சு கொல்லணும் டா. நானா இருந்தா அதை தான் பண்ணிருப்பேன்." கடுப்புடன் சொன்னான்.

"அதை வேணா சீக்கிரமா செய்யச் சொல்லு உன் அத்தைய. தெனம் தெனம் சாகறதுக்கு ஓரடியா செத்துட்டா எனக்கும் நல்லது. தெனம் தெனம் சாகடிக்கற அதுக்கும் வேலை மிச்சம்ல... அத மொதல உன் அத்ததைய பண்ண சொல்லு." என்றான் உள்ளே எழுந்த கடுப்புடன்.

"அப்படி என்ன டா என் அத்தை உன்னை பாடு படுத்துது?"

"ஒத்த புள்ளை டா நானும் என் ஆசைய கேட்டு செஞ்சு வைக்குறதுல என்னவாம் அதுக்கு. எனக்கு தென்றலை பிடிச்சிருக்கு பொண்ணு கேட்டு கட்டிவை சொன்னதுல தப்பு என்ன இருக்கு? அந்தப் பிள்ளைக்கு சொந்தம் சொல்லிக்க இருந்தாலும் அதெல்லாம் பேரளவுக்கு தான்  இருக்கு. ஒத்த கிழவி என்ன தடை சொல்ல போகுது? பெத்த புள்ளைக்காக பொண்ணு கேட்டு கட்டி வைக்கிறதுல என்ன மூழ்கிட போகுது உன் அத்தைக்கு?

அதெல்லாம் இந்த ஊர்ல உனக்கு எந்தப் பொண்ணையும் பார்த்து கட்டி வைக்க மாட்டேன் வெளியூர்ல இருந்து தான் பார்ப்பேன் நிக்குது. வெளியூர்ல இருந்து பொண்ணை கூட்டிட்டு வந்தா நான் பல்லை காட்டி ஈஈ இளிச்சிட்டு கல்யாணம் பண்ணிப்பேனா? நான் தென்றலை தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன். அது ஏன்டா அவளுக்கும் புரியல என்னை பெத்தவளுக்கும் புரியல.

அவளுக்கு என்னை கண்டா எப்படி இருக்குமோ தெரியல, எரிச்சி தள்ளுற அளவுக்கு சூடா முறைக்கறாடா. கிட்ட போனாலே அனல் அடிக்குது. இதுல எங்குட்டு என் காதல அவகிட்ட சொல்லறது. என் வாழ்க்கையில எதுவுமே சரியில்ல. எதுக்கு வாழ்ந்துட்டு கிடக்கேன் எனக்கே தெரியல டா." என்று நண்பனிடம் புலம்பி தள்ளினான் இசைசேத்தன்.

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிட்டு தான்டா எல்லாரும் எல்லா விஷயத்த பண்ணுவானுங்க. அத்தை கூட மனசுல எதையாவது வச்சிட்டு தான் தென்றலை வேணாம் சொல்லிருக்கும் இல்லைனா தென்றலை வேணாம் சொல்ல அதுக்கு என்ன கிறுக்கா? மொதல்ல அது என்ன காரணம் கேட்டு அத தெளியவை. தென்றலுக்கு உன் மேலே என்ன கோபம் நீ தான்டா கண்டு பிடிக்கணும். அதுகிட்ட என்னத்த வம்பு பண்ணி தொலஞ்ச நீ? அதை தெரிஞ்சுட்டு மன்னிப்பு கேட்டு பிரச்சனை தீர்த்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வை. இவுக ரெண்டு பேரும் உன்னை கயிறு இழுக்கற மாறி இழுப்பாக, நீ தான் ரெண்டு பேரையும் பேலன்ஸ் பண்ணி ஸ்டெடியா நிக்கணும் சேத்தா. ஒரு பக்கம் அந்தாலும் இரண்டுல ஒன்னு உனக்கு இல்ல பார்த்துக்க." என்றான். அவன் சொல்லுவது சரி என்பது போல அவனது அலைபேசி அடித்தது.

லுங்கியில் சொருகி இருந்தத அலைபேசியை வெளியே எடுத்துப் பார்த்தான். அவனது 'மை விழி' தான்.

"இவ வேற நேரங்கெட்ட நேரத்துல, இந்நேரம் தூங்குவான்  அவனை தொந்தரவு செய்யக் கூடாதுனு இவளுக்கு தெரியாதா? இவ டூருக்கு போயிருக்காண்டு நான் முழிச்சுட்டு கெடக்கணுமா? எங்க போனாலும் இம்சை டா இவ." என நண்பனிடம் புலம்பியவன், அதை எடுத்து காதில் வைத்து அப்படியே பேச்சை மாற்றினான்.

"சொல்லுடி ஐசு செல்லம் என்னடி பண்ற? இந்நேரம் நீ தூங்கிருப்ப, தூங்கலையா நீ? தூங்கிருப்பேன் நினைச்சேன். ஏன் செல்லம் தூங்கல. மாமாவ நினைச்சு தூங்காம இருக்கீயா? இங்க நானும் உன்னை நினைச்சு தான் தூங்காம இருக்கேன். எப்ப செல்லம் வருவ? உனக்காக காத்திட்டு இருக்கேன்." என்று கொஞ்சி வழிந்தான்.

பக்கத்திலிருந்த சேத்தனோ, 'அடப்பாவி' என வாயில் கையை வைத்தான். 

அந்தப்பக்கம் அவளோ, "நீ இப்படி கொஞ்சி வழியிறேன்னா போன்ன எடுக்கறது முன்னாடி என்னை வறுத்து எடுத்திருக்கற போல." என அவனை சரியாக கணித்து கேட்க, அருகே இருந்த சேத்தனின் சிரிப்பு சத்தத்தில் உறுதியென ஆனது.

'அடேய் கொஞ்சம் சும்மா இருடா.' என  சத்தமில்லாமல் சொன்னவன் இவளிடம், "ஐயோ! அப்படி எல்லாம் உன்னை நினைப்பேனாடி? நீ என் விழி, என் ஒளி, என் உழி ஒன்ன போய் அப்படி  வறுத்து எடுப்பேன்னா? சும்மா சும்மா மாமாவ சந்தேகப்படாதடி. சரிடி என் கண்ணே எப்ப வருவ? மாமாக்கு உன்னை பார்க்கனும் போலையே இருக்கு." என ஒரு டன் ஐசை வைத்தான்.

"ஏற்கெனவே ஐசு! ஐசு! கூப்பிடற! இதுல ஒரு டன் ஐச என் தலையில வைக்கிற எனக்கு ஜன்னி வந்திட போகுது மாமோய்?!" என்று சிலுப்பிக் கொண்டாள்.

"அதெல்லாம் நான் வைக்கிறது ஐசுயில்லடி ஐசு. அது காதல்.. டன்  டன் காதல்ல மட்டும் தாண்டி வைப்பேன் உன் மேலே அது ஒன்ன ஒன்னு செய்யாது...!" என்றான்.

இவளோ உதட்டை கடித்து வெட்கத்தை மறைத்துக் கொண்டாள் இங்கே.

"எப்படி வருவ?" என ஏக்கம் சொட்ட சொட்ட கேட்டான். அதில் நனைந்து உருகிப் போனவளுக்கு இரண்டு நாள் பிரிவு துக்கம் வந்து போனது. அதில் குரல் அடைக்க, சரி செய்து கொண்டு, "நாளைக்கு காலையில நாலு மணிக்கு ஸ்கூலுக்கு வந்திடுவோம்." என்றதும் அதிர்ச்சியில் மாறன், "என்னது டூர் அதுக்குள்ள முடிஞ்சா?" என்றான்.

"ஏன் முடிஞ்சா என்ன? எதுக்கு இவ்வளவு ஷாக்கு ஆகற நீ?" என சந்தேகமாக கேட்டாள்.

"இல்லடி போனதும் வந்தது போல இருக்கே, அதான் அதுக்குள்ளே டூர் முடிஞ்சதான்னு கேட்டேன்." என்று சமாளித்தான்.

"சரி அது இருக்கட்டும். நாளைக்கு ஆறு மணிக்கு ஸ்கூல்ல இருந்து நானும் தென்றலும் கிளம்பிடுவோம். அப்பா வரவான்னு கேட்டார் நான் உன் கூட வரணுன்றனால வேணாம் ரெண்டு பேரும் பஸ்ல வந்திடுவோம் சொல்லிருக்கேன். நாளைக்கு ஆறு மணிக்கு பஸ்ஸ எடுத்து வந்து நில்லு நாங்க வந்திட்றோம்." என்றாள்.

"எதே ஆறு மணிக்கு பஸ் எடுத்துட்டு வரணுமா? நாளைக்கு ஞாயித்துக்கிழமைடி கொஞ்சமாச்சி தூங்க விட்றீயாடி நீயி?"

"உனக்கு தூக்கம் முக்கியமா? நான் முக்கியமா?" என்றாள். அவனும் சட்டென, "தூக்கம்" தான் என்றான்.

"ஓ... தூக்கம் தான் ஒனக்கு முக்கியம்ல, இதே கேள்விய கல்யாணத்துக்கு அப்புறம் நீ கேட்டா அப்ப இதே பதிலை நான் சொல்லல என் பேரு மை விழி இல்லடா." என்று சபதம் போல சொல்ல அதில் பீதியானவன், "ஐயோ என் கண்ணுல, மாமா ஜோக் பண்ணினேன் நம்பிட்டீயா?" என அப்பட்டமாக வழிய, காரித் துப்பினாள்.

"நாளைக்கு நீ வர்றியா? இல்லையா?"

"வர்றேன் டி வர்றேன்." என்றான் சலிப்புடன்.

இவர்கள் பேசிக் கொள்வதை ஆசையாகப் பார்த்துக் கொண்ட சேத்தனுக்கு கொஞ்சம் பொறாமையாகத் தான் இருந்தது.

'இதெல்லாம் எப்ப நமக்கு நடக்கும்? கொஞ்சறதும் மிஞ்சறதும் நம்ம வாழ்க்கையில கிடைக்குமா? எப்போ தான் என் காதல ஏத்துப்பாளோ, எப்போ நானும் கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி விளையாட போறேனோ.' என ஏக்கப் பெரு மூச்சு விட்டவன் தனது செல்லிலுள்ள அவளது முகத்தை பார்க்கலானான்.

காதலியிடம் பேசிக் கொண்டாலும் நண்பனின் ஏக்கமும் துக்கமும் அவனைத் தாக்காமல் இல்லை. எப்படியாவது இருவரையும் சேர்த்து

வைத்து அத்தையின் சம்மதத்தோடு திருமணம் முடித்து வைக்க வேண்டும் சூளுரை எடுத்துக்கொண்டான் நெடுமாறன்.

*சேத்தனோட அம்மா தென்றலை வேணாம் சொல்ல காரணம் என்னவா இருக்கும்??? *

Comment please....

அடுத்த பாகம்

கானம் - 4

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0