மயில் - 6

மயில் - 6
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
-முல்லைக்கலி கலித்தொகை.
அழகிய சீரான நடையழகி திரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்த துச்சாதனனின் நெஞ்சைப் பிளப்பேன் என்று பகைவர்களுக்கு இடையே வஞ்சினம் கூறியவன் செயல்போல் அது உள்ளது.
*****************************************************
'என்ன நடந்தது?' என்று யூகிக்க முடியாமல் அங்கு நடந்த களேபரத்திலே குடும்பம் மொத்தம் இருந்தது. ஒரே இடத்தில் நிற்காமல், அடிவயிற்றிலிருந்து கத்திக் கொண்டு கொம்பை வைத்து முட்டுவது போல சீறிக் கொண்டிருந்தான் அழகு.
அழகனின் காலுக்கடியில் ஊசி கிடப்பதைப் பார்த்த மணி, "பெரியப்பா, அழகு காலுக்கு அடியில் ஊசி ஏதோ கெடக்குது பாருங்க..." என்று கையை காட்ட, பின் பக்கமாக சென்று அதை எடுத்து வந்தான் திருமலை...
"அப்பா, ஊசியில மருந்து லோட் ஆயிருக்கு. எவனோ அழகுக்கு ஊசி
போடத்தேன் வந்திருக்கியான்" என்று சந்தேகமாக வீட்டைச் சுற்றிப் பார்த்தான். மயிலினியோ, பயந்து 'அழகு' என்று அருகில் செல்ல அவளைத் தடுத்தார் கார்மேகம் "பக்கத்துல போகாதமா, முட்டிட போகுது... இவனுக்கு என்னாச்சுன்னு வேற தெரியல, ரங்கா, போய் மாட்டு டாக்டர கூட்டியாடா" என்று கார்மேகம் கட்டளையிட, ஓடிச் சென்று செழியனையும் மாதவனையும் அழைத்து வந்தான்.
"என்னங்கயா ஆச்சு...? " என அவர் அருகில் மாதவன் வர, "தம்பி, இந்த ஊசி, அழகு காலுக்கடியில கெடந்துச்சி... இங்க யார் வந்தா? எப்படி இங்கன இது வந்துச்சு தெரியல...? இவனுக்கு என்னாச்சு பாருங்க தம்பி ஒரே இடத்துல நிக்க மாட்டீகிறான், கொஞ்சம் பயமா இருக்கு தம்பி என்னானு பாருங்களேன்..." பதறிப் போய் பேசினார்.
அந்த ஊசியை கையில் வாங்கி பார்த்தவன், செழியனிடம் கொடுத்து விட்டு, மாட்டின் அருகே செல்ல, அவனை குத்த வருவது போல சீறியது, "அழகு..." என்றவள் கத்தி தன் பயத்தைக் காட்டினாள் மயிலினி.
"ஒன்னுமில்ல நான் பார்த்துகிறேன்..." அவளுக்கு நம்பிக்கை அளித்து விட்டு, அழகனின் ஒரு பக்கமாக வந்தவன், "ஒவ்... ஒவ்... ஓவ்..." என்று அதன் மேனியை தடவிக்கொடுத்தான். " ஓவ்... ஒவ்..." என்று மீண்டும் அவ்வாறே செய்ய, கொஞ்சம் அடங்கி நின்றது. மீண்டும் வருட சாந்தமாக நின்றது. பச்சையம்மாளிருந்து ரங்கா வரைக்கும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
'நம்ம அழகனா இது?' என்று அனைவருக்கும் எண்ணம் தோன்ற, கண்களில் நீர் துளி மின்ன, உதட்டில் புன்னகை தவழ பார்த்து இருந்தாள் மயிலினி.
"செழியா, லைட் எடு..." என்றான், அவனும் டார்ச் லைட்டை எடுத்து கொடுத்தான். கழுத்து பகுதியிலுருந்து உடல் முழுவதும்
டார்ச் அடித்து ஊசி குத்தின தடம் இருக்கிறதா என்று பார்த்தான். நல்லவேளை அப்படி எதுவும் இல்லை என்றதும் நிம்மதியடைந்தவன், மீண்டும் மாட்டைத் தடவி விட்டு, "மிஸ்டர் அழகு, உங்களுக்கு ஒன்னுமில்ல, பீ காம்..." என்றான்.
அதைக் கேட்டு அனைவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்,
" ஐயா, யாரோ அழகுக்கு ஊசி போடத் தான் வந்திருக்காங்க. அதுல பயந்து நம்ம அழகு கொஞ்சம் மிரண்டு போயிட்டான் மத்தப்படி அழகுக்கு ஒன்னும் இல்ல..."என்றுகூறி, அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தான்.
"ரொம்ப நன்றி தம்பி, ஊசிய பார்த்ததும் உசுரே போச்சு தம்பி, இவனுக்கு எதுவும் ஆகிடுமோ பயந்துபுட்டோம்... நல்ல வேள தம்பி நீங்க பக்கத்தில இருந்தீக... இல்ல இந்நேரம் எங்கன என்னானும் இவனுக்கு வைத்தியம் பார்க்க....? " என்று கருப்பையா பெருமூச்சை விட, அவரை கண்டு,
"புரியுதுங்கயா, ஊரருக்கும் நல்லது நெனக்கிற உங்களுக்கு, நல்லது தான்யா நடக்கும்... பயப்பட வேண்டாம், இந்த ஊசிய எடுத்துட்டு போறேன், என்ன ஊசி? எதுக்குனு லேப்ல கொடுத்தா தெரிஞ்சிடும். நாளைக்கே நான் அந்த வேலய பார்க்கிறேன்... நீங்க கொஞ்சம் அழகுவ ஜாக்கிரதை பார்த்துக்கோங்க, முடிஞ்சா இங்க ஒரு கேமிரா வாங்கி மாட்டுங்க. காவலுக்கு ஆள் போடுங்க..." என்று அறிவுறுத்தினான்.
"சொந்த ஊருலே காவல் போடுற நிலமைக்கு வந்துட்டோம் பாத்தீங்களா தம்பி? யாருக்கும் எந்த தீங்கும் செய்யாம பொழப்ப ஒட்டிட்டு இருக்கோம்.. எங்களை ஏதாவது பண்ண நினைச்சா கூட பரவாயில்ல, ஆனா இந்த வாயில்லா ஜீவன் என்ன பண்ணுச்சு தம்பி... ?அவன போய் கொல்ல துடிக்கிறாங்களே! அதையும் நாங்க எங்க புள்ளயாதேன் பார்க்கிறோம்... அதுக்கு ஒன்னுன்னா மனசு கெடந்து அடிச்சிக்கதேன் செய்யுது... என்னவோ தம்பி ரொம்ப நன்றி... " வணங்கியவர், திருமலையிடமும் கருப்பையாவிடமும் சொல்லிக் கொண்டே முன்னே செல்ல, மற்றவர்களும் பின்னே சென்றனர்.
மயிலினி மட்டும் செல்லாமல், அழகுவின் அருகில் சென்று, தடவிக்கொடுத்தவள்... " கொஞ்சம் நேரத்துல பயந்துட்டோம் அழகு... இது எங்களுக்கு எச்சரிக்கதேன்... உன்னை இனி பத்திரமா பார்த்துகிறோம்..." என்று முத்தம் வைத்தாள்.
"மக்கும்... முத்தம் மச்சானுக்கு மட்டும் தானா? இந்த மாமானுக்கு இல்லயா? "கிறங்கலாக கேட்க, சற்றென்று செழியனோ பின் பக்க வாயிலை பார்த்து விட்டு, ' ஐயோ லவ் பண்ற நேரமாடா இது?' உள்ளுக்குள் பயந்தான்.
அவளோ கண்ணை துடைத்து கொண்டவள், முத்தம் என்றதும் வெட்கம் வர, தாவணியை கையில் சுருட்டிக்கொண்டு " முத்தம் மச்சானுக்கு மட்டும் தான் மாமானுக்கு எல்லாம் கண்ணாலத்துக்கு அப்பறந்தேன்..." என்றவளை பார்த்து உதட்டை பிதுக்கியவன், இன்னும் கொஞ்சம் நெருங்க,
" டேய், எங்க வந்து என்ன பண்ற...? வந்து தொலை டா... யாராவது வந்திட போறாங்க..." அவன் பதற,
"பச் மச்சி, பொறுடா லவ்ஸ் பண்ணிட்டு இருக்கேன்ல..." அவனிடம் கூறி விட்டு இன்னும் கொஞ்சம் நெருங்க, அழகுவோ, அவனை உரசி நாவால் நக்கியது இருவருக்கும் அது ஆனந்த களிப்பு தான்.
"அழகு, உங்கள நம்ப ஆரம்பிச்சுட்டியான் எங்கள போல உங்களையும் உறவா பார்க்கறான்..." என்றிட, அழகுவின் தலையை வருடியவன்,
"அப்போ, மச்சான வாடிவாசல்ல அடக்கறது ரொம்ப ஈஸியா ஆகிடுமே" என்று குதூகலத்தோடு அவன் சொல்ல,
"ம்கூம் .. மாமன் மச்சான்ற முறை எல்லாம் வெளியதேன்... வாடிவாசல்னு வந்துட்டா, எல்லாரும் எதிரிதேன் என் அழகுக்கு..." என்றவள் பெருமையாக பேச, மீண்டும் உதட்டை பிதுக்கி தோளைக் குலுக்கியவன்,
"அதையும் தான் பார்ப்போம்..." என்று ஒரு கால் அவளை நோக்கி முன் வைக்க, அவனது டீசர்ட்டை பிடித்திழுத்து பின்னுக்கு இழுத்தவன்,
"போதும் கல்யாணத்துக்கு அப்றம் லவ்வ்ஸ் பண்ணு கிஸ் பண்ணு, இப்போ நம்மள கில் பண்றதுகுள்ள இங்க இருந்து போகணும்... வா" என்று இழுந்துக்கொண்டே போனான்.
அதைக் கண்டுச் சிரித்தவள்,மீண்டும் அழகைப் பார்க்க, பின் பக்கமாக திரும்பியவளின் பார்வையில் பட்டது அது. என்னவென்று பார்க்க அருகில் சென்றவள் அதை கையிலெடுக்க, தங்க கையங்கியாக இருந்தது. அதில் மகேந்திரன் என்று ஆங்கிலத்தில் பொறித்திருக்க, ஊசி போட வந்தது மகேந்திரன் தான் என்பதற்கு சாட்சியானது அவனது கையங்கி.
"மாமோய் இது உன் வேலதானே? உன்னைய அசிங்க படுத்தியும் நீ திருந்திறாப்புல இல்ல, இனி ஒனக்கு மாமியார் வீடுதேன் சரி வரும் " என்று உள்ளே வந்தவள்,
இன்னும் அவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்க அவர்கள் அருகில் வந்தவள், "அப்பா, நான் கணிச்சது சரிதேன்... இதெல்லாம் உன் மருமவ புள்ளதேன் பண்ணிருக்கியான்..." என்று அந்தக் கையங்கியை அவர்களிடம் கொடுக்க,
திருமலைக்கு கோபம் தலைக்கேற, "அவனை " வேட்டியை வாரிகட்டிக் கொண்டு அரிவாளை எடுத்தான், "அடேய் திருமலை, அரிவாள கீழ போடு, என்னடா அருவாள தூக்கிற பழக்கம், இதெல்லாம் ரொம்ப தப்பு..." அவனை அடக்கினார்.
"அண்ணே! நாம எதுவும் செய்ய வேணாம்... போலீஸ் கிட்ட புகார் கொடுப்போம். அவிக பாத்துப்பாக அவன, நீ தேவயில்லாம பண்ண போய், எதுலயும் மாட்டிக்காதண்ணே போடு அருவாள..." என்றதும் கீழே போட்டவன் வேட்டியை இறக்கி விட்டான். ஆனால் இன்னும் அவனுக்கு கோபம் அடங்கவில்லை..
"அப்பா, அந்த ஊசில என்ன மருந்து இருந்துச்சுனு தெரியட்டும், அதையும் இதையும் வச்சி அந்த நாய் மேல கம்பளைண்டு கொடுக்கலாம்..." என்றாள் மயிலினி.
அதுவும் சரியென பட, சரியென்றனர். மறுநாள், ஊசியை எடுத்துக்கொண்டு டவுனுக்கு விரைந்தான் செழியன்... திருமலை இரண்டு ஆட்களை விட்டு மகேந்திரனை தேடச் சொல்ல, அவனோ சையது மாட்டிறைச்சி கடையிலே பதுங்கி இருந்தான்.
மறைந்து மறைந்து உணவு பொட்டலத்தை பூட்டிருக்கும் அறைக்குள் பச்சக்கிளி கொண்டு செல்ல, வெளியே ஓரமாக மதுபானப் பாட்டில்கள் கிடக்க, அதை வைத்தே அவன் உள்ளே இருக்கிறான் என்று கணித்து திருமலையிடம் சொன்னார்கள்.
மேலும் லேப்பிலிருந்து ரிப்போர்ட் விஷ ஊசியென வர, அதை வைத்தே மகேந்திரனின் மேல் கம்பளைண்ட் கொடுத்து அவனிருக்கும் இடத்தையும் சொல்ல, அங்கே சென்று அடித்து இழுத்து வந்தனர் காவல் அதிகாரிகள்.
அங்கே கோபாலும் அவரது கூட்டாளிகளும் வக்கீலும் காவல் நிலையத்திற்கு வந்தனர்... காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் பேசி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
"நிறுத்துங்கயா, பிரச்சன ரெண்டு குடும்பத்துக்கு நடுவுலதேன் நீங்க ஏன்யா பேசிட்டு இருக்கீக? கொஞ்சம் அமைதியா இருங்கயா, பெரியவிங்க பேசட்டும்..." கூட்டத்தை அமைதி படித்தி விட்டு, "ஐயா!! நீங்க பேசுங்கயா" என்றார் இன்ஸ்பெக்டர்.
" தம்பி, சுவரேறி குதிச்சு வாயில்லா ஜீவனை கொல பண்ண பாத்தது இவந்தேன். இவனுக்கு அதுக்கான தண்டனையை கொடுங்க..." என்று கார்மேகம் மகேந்திரன் காட்டி கூற, "என்ன மச்சான் பேசறீங்க? உங்க மருமவபுள்ள அப்படி செஞ்சிருப்பான் நெனக்கிறீகளா? எதுக்கு ஏன் மவன் மேல பழிய போடுறீக...?"
"மாமா, என் தங்கச்சி காளை அடக்கினாத்தேன் கட்டுவேனு சொன்னதுக்குதேன் உங்க மவன், என் அழகன வாடிவாசல்ல மோத துப்பில்லாம, இந்த மாதிரி ஈன வேலய பார்த்துட்டு திரியிறான், மாட்டு டாக்டருக்கு காசு கொடுத்து அழகன ஜல்லிக்கட்டுக்கு பிட் இல்லனு சொல்லச் சொன்னதும் இவந்தேன்... மாட்டுக்கு வெச ஊசி போட வந்ததும் இவந்தேன்.. ஆதாரம் இல்லாம பேச மாட்டோம் மாமா... என் அழகன நேர்நேருக்கு சந்திக்க தைரியம் இல்லாத ****** பய அழகன கொன்னு போடணும் நெனச்சா நான் சும்மா விடமாட்டேன்..."
அவனை பார்த்து நாக்கை துருத்தினான் திருமலை.
" யவனோ பண்ண காரியத்த, என் மேல சுமத்துறாய்ங்கபா,அவிக பேச்சை நம்பாத, உன் மானத்த சாந்திச் சிரிக்க வைக்கத்தேன் இப்படி பண்றாய்ங்க... நம்பாத பா..." என்று உள்ளிருந்து கத்திக் கொண்டிருந்தவன், ஏட்டையா கம்பியை தட்ட வாயை முடினான்...
"மாமா, அவன் பேச்ச கேட்காத, உன்னைய நான் அப்பா இடத்துல வச்சிருகேன்... ஒனக்கும் எங்களுக்கும் என்ன பகை? நான் ஏன் மாமா,உன் மானத்தை வாங்க நெனைக்கனும்? உன் மானம் போன, அது எனக்கும் போன மாதிரிதேன். அதாரம் இல்லாம உன்னை இந்த இடத்துல நிக்க வச்சிருப்பேனா நானு..." திருமலை பேச, அவர் மனக்குழப்பத்தில் தவித்தார்..
மகனை விட எல்லாத்திலும் சிறந்தவன் தன் மருமகன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். தன் மகளை பார்த்துகொள்ளும் விதத்தில் அவன் மேலும் மரியாதை மதிப்பும் கூடியே இருக்கும்... அந்நிலையில் மருமகன் அடிச்சு பேசுவதை நம்பியவர், தன் மகன் தான் தவறு செய்திருப்பனோ என்று எண்ண ஆரம்பிக்க,
" மாமா, உன் மவனோட ப்ரஸ்ட்லெட் எங்கனு கேளு...?"
அவரும் சந்தேகமாக, அவன் கையைப் பார்க்க அவன் கையில் இல்லை... அவனும் அப்போது தான் கையை பார்த்து தேடினான்.
" மச்சான், அங்க தேட்னா எப்படி இருக்கும்? நீயி ஊசி போட வந்தப்ப விட்டுட்டு போயிட்ட, " என்று அதை எடுத்து மாமன் கையில் கொடுத்தான். அவர் அணிவித்தது தான் அவருக்கே தெரியும்.
" ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? நம்ம வம்சத்தில, இப்படி யாருமில்லயே டா, உசுர வாழ வச்சுத்தேன் டா எங்களுக்கு பழக்கம், உசுர எடுத்து இல்ல. இன்ஸ்பெக்டர் சார், இவன் இங்கனே இருக்கட்டும், அப்பவாது புத்தி வரட்டும்..." அழுது கொண்டே, அவனை சிறையிலே வைக்கச் சொல்ல,
"ஐயா ,கம்பளைண்ட் கொடுத்தா கோர்ட் கேஸ்னு அலையனும்... ரெண்டு குடும்பமும் சொந்தம் பந்தம் வேற வீணா மனக்கசப்பு எதுக்குயா?" என்று ரெண்டு பெரிய மனிதர்களை பார்த்து கேட்க,
" இன்ஸ்பேக்டர் தம்பி, நாங்க உங்க கிட்ட வந்ததே, உங்க முன்னாடி எழுதி வாங்கதேன், அவன எழுதி கொடுக்கச் சொல்லுங்க, இனி என் பொண்ணையும் மாட்டையும் ஒன்னு செய்ய மாட்டேன். என்னால எந்த ஆபத்தும் வாராதுனு எழுதி கொடுக்கச் சொல்லுங்க போதும் தம்பி..."
நன்றியாய் கார்மேகத்தைப் பார்த்தவர் கையெடுத்து கும்பிட, அவரை அணைத்து கொண்டார் கார்மேகம்... அதன் பின் அவனிடன் எழுதி வாங்கிவிட்டு பரஸ்பர பேச்சு வார்த்தை நடந்த பின்னே அங்கிருந்து வந்தனர்...
நாட்கள் ரெக்கை கட்டி பறக்க,பொங்கல் திருநாளும் வந்தது... இன்னும் கொஞ்சம் வேலைகள் இங்கே இருப்பதாகச் சொல்லி செழியனையும் பிடித்து தன்னோடு வைத்து கொண்டான் மாதவன் ...
அவர்கள் இருவரையும் வீட்டிற்கு பொங்கலன்று சாப்பிட அழைத்தனர்...
சிவப்பு நிற கந்தாங்கியில் காந்தையவளின் வெள்ளை அதள் எடுப்பாக காட்ட, அவளை கண்ட மாதவன் அசந்தே போனான். அவளை அள்ளிக் கொள்ள பரபரத்த கைகளை கால்சட்டை பையினுள் திணித்து கொண்டான்...
வாசலில் பெரிய கோலமிட்டு விறகடுப்பில் பானையை வைத்து, அதை சுற்றி மஞ்சளை கட்டு, ராமமிட்டு, அடுப்பை பற்ற வைத்து பாலை ஊற்றினார் மீனாட்சி... பால் கிழக்கு பக்கம் பொங்கவே கொலவை போட்டு இதே போல, எல்லாம் வளமும் பொங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அரிசியை கலைந்து போட்டார்... வெந்த அரிசியில் நுணுக்கிய வெல்லத்தை போட்டு கிண்டி கடைசியில் நெய், முந்திரி , உளர்ந்த திராட்சை இட்டு இறக்கி வாய்த்தார்...
வாசலிலே வைத்து அனைவரும் நின்று சூரியனை வழிபட்டனர்... மயிலினி அருகில் வந்த மாதவனோ, சுற்றி அனைவரையும் பார்த்து விட்டு, அவள் காதில், " அடுத்த வருஷம் நமக்கு தல பொங்கல் தான்..." என்றான்.
அவனருகில் நின்ற செழியனோ, " இந்த வருசமும் அப்டிதானே டா இருக்க நீ..." என்றதும் மயிலினி வாயை மூடிச் சிரித்தாள். "பச்..." அவனை முறைத்தவன், அவள் புறம் திரும்ப, அவளோ ,
" நாளகழிச்சு நம்மூர்ல ஜல்லிக்கட்டு, காளை அடக்குனா , அடுத்த வருசம் நமக்கு தல பொங்கல் தான்" என்றிட, இந்த முறை செழியன் சிரித்துவிட்டான். இருவரையும் கடுப்பில் பார்த்தான்.
செழியனையும் மாதவனையும் சாப்பிட அழைத்தார் கார்மேகம்... ஆண்கள் அமர பெண்கள் பரிமாறினார்கள்.
" நாளைக்கும் வந்திடுங்க தம்பி நாளைக்குதேன் நாங்க சிறப்பா கொண்டாடுவோம்... என்ன அழகு இருக்கமாட்டான்... திருமலையும் கருப்பனும் ஜல்லிக்கட்டுக்கு அவன கூட்டிட்டு போயிருவாங்க, நாளைக்கு பாலமேடு, அப்றம் நம்மூர்ல திருவிழா போல இருக்கும் தம்பி.
" ஏன்ய்யா, நீங்க மாட்ட கடவுளா நெனச்சு வழிபடுறீங்க, உங்க ஊர்லே மாட்டிறைச்சி கடையும் இருக்கு அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கயா...?" செழியன் கேட்க
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணம் தம்பி, எங்களுக்கு கடவுளா தெரியிது. அவங்களுக்கு உணவா தெரியுது. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது தம்பி. ஆடு கோழி மீனை திங்கறோம், மாடு மட்டும் கடவுளா? கேக்குறாய்ங்க, என்ன சொல்ல?அவிங்கட்ட,
காடும் காடு சார்ந்த இடத்துல, வாழ்ந்த ஆயர்குலம் மக்கள்வழி வந்தவங்க நாங்க... எங்க குல மக்களுக்கு மாட்டை வச்சி தான், பொழப்பே ஓடுச்சு... அது கொடுக்கற பால்ல இருந்து கோமியம், சாணம் வரைக்கும் எங்க வாழவாதாரத்துக்கு உதவியா இருக்க, அந்த ஜீவனை கடவுளா தானே பார்க்க மனசு வரும். கிருஷ்ணன், வர்ண பகவானை விட்டுட்டு ஏன் கோவர்த்தன மலைக்கு பூஜை பண்ண சொன்னார்?
வர்ண பகவான் கடவுளாவே இருந்தாலும், அங்கிருக்க எல்லா உயிர்களுக்கு உணவு, மருந்தும் அடைக்கலமும் கொடுத்தது அந்த மலை தான்.. கடவுளையும் எதிர்த்து அந்த மலைக்கு பூஜை பண்ண சொன்னார். அதுபோல தான் எல்லாம் கொடுக்கற மாட்டை நாங்க கடவுளா பார்க்கிறோம். உழவனுக்கு உரம் கொடுத்து உழுவ உதவிசெய்றனாலே அதுக்கு நன்றி சொல்ல மாட்டு பொங்கல கொண்டாடுறோம் தம்பி, கடவுள் நம்பிக்கையில நான் சொல்லல, எல்லாம் கொடுக்கற அத நாங்க தெய்வமா பாக்கறோம் தம்பி..." என்று நீண்ட விளக்கத்தை கொடுத்தார்.
இருவரும் சாப்பிட்டு கடைசியாக கைகழுவ வந்தனர். முதலில் செழியனிடம் கழுவ தண்ணீர் ஊற்றியவள், துண்டை நீட்டினாள்
பின் வந்த மாதவனுக்கு தண்ணீர் ஊற்றினாள். செழியன், மாதவனிடம் துண்டை நீட்ட, அதனை மறுத்தவன் மயிலினியின் அருகே சென்று அவள் முந்தானையில் துடைத்தான்.. செழியனும் மயிலினியும் வாயை பிளந்தனர்.
மேலும் அவள் முந்தானையை இழுத்து இடையை வளைத்தான், அவனது அதிரடி செயலில் மேலும் விழிவிரித்தாள் "ஆள இழுக்கற டீ நீ..." என்றவன் இதழை நோக்கி குனிய, அவனை பின்னுக்கு இழுத்தான் செழியன்.
" பச்... நல்ல மூட் ல இருக்கும் போது ஏன்டா ஸ்பாயில் பண்ற?" எரிச்சலோடு கேட்டான்.
"அதே தான் நானும் சொல்றேன், அவிங்க நல்ல மூட்ல இருக்கும் போதே ஓடி போயிடலாம், இதெல்லாம் தெரிஞ்சா வெட்டி புடுவாய்ங்க, கையோடு இழுத்து சென்றான்..
அதன் பின் இருவரும் அவனியாபுரம் சென்று காளைகளை அடக்குவதை பார்த்து விட்டுவந்தனர்.
ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருந்த மலைமேக தாத்தாவின் உடல் உயிரைவிட்டுச் செல்ல, ஊரே அங்கு ஒன்று கூடியது...
Comment
Like
Share
Register
Login
What's Your Reaction?






