நெடுஞ்சாலை கானமே - 10

Jun 30, 2025 - 03:21
Jun 30, 2025 - 04:25
 0  24
நெடுஞ்சாலை கானமே - 10

கானம் - 10

உடல் களைப்புடன் இல்லம் வந்து சேர்ந்தான் தனிஷ். துடைக்கத் துடைக்க ஊற்றாய் வழிந்த வியர்வைத் துளிகளைப் புதிதாகக் கண்டான்.

பெங்களூரில் ஏசி அறையில் பாடம் எடுத்தவனுக்குக் கடினமாக இருந்தது. இங்கே வெறும் மின் விசிறியும் ஜன்னல் வழி வரும் காற்றில் பாடம் எடுப்பது. வெயிலே அறியாதவன், அதன் சூட்டில் வாடி வதங்கிப் போனான்.

கழுத்துப்பட்டைப் பொத்தானைக் கழற்றி, சட்டையை முட்டி வரை மடக்கி விட்டு, பையை மேலும் தோளோடு போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அவனுக்காகக் காத்திருந்தார் அவளது தாய் வைஷ்ணவி. மகன் வந்த கோலத்தைக் கண்டு பரிதாபம் கொண்டார்.

தன் அலுப்புகளை மறைத்துத் தாயைக் கண்டதும் புன்னகை முகிழ்த்தான் தனிஷ்.

மகனை அமர வைத்து, பருக நீரைக் கொடுக்க, வாங்கிப் பருகியவன், அவர்  மடியில் தலை சாய்த்து விட்டான்.

"என்ன தனு! டீச் பண்றது கஷ்டமா இருக்கா? நாம வேணா இங்க டீச் பண்ண ஆள் போட்டுட்டு பெங்களூருக்கே போயிடலாமா?" எனத் தலை கோதிக்கொண்டே வினவிட,

"என்ன வைஷு பேசற நீ? இது தாத்தாவோட ஆசை! அவர் சாகும்போது அவர் கைப் பிடிச்சி நம்பிக்கை கொடுத்து அனுப்பி வச்சிருக்கேன். அவர் மேல இருந்து பார்க்கும்போது நான் அவர் ஆசைய நிறைவேத்தி வச்சிருக்கணும். இல்லேனா அவர் ஆத்மா அங்கத் துடிச்சிட்டு இருக்கும். அவர் ஆத்மா சாந்தி அடைய வேணாமா?"

"ஆனா நீ கஷ்டப்படுறீயே டா. அம்மாவால பார்க்க முடியல. பாரு எப்படி வேர்த்து இருக்கு. இப்படி நீ டயர்டாகி பார்த்ததே இல்லையேடா" என்று மகனின் முகத்தைத் தன் முந்தானையால் துடைத்து விட்டார்.

மகனோ அவர் கையைப் பற்றி, "நான் வியர்வை சிந்தி உழைக்கிறேன் மா." எனக் குறும்புடன் சொன்னவன், "ஃபர்ஸ்ட் டே அப்படி தான் மா இருக்கும். அப்புறம் போகப் போக ஐ வில் கெட் யூஸ்ட் டூ இட்மா." என்றான்.

"சரி எப்படி இருந்தது உன் ஃபர்ஸ்ட் டே?" எனப் பேச்சுக் கொடுத்தார். இன்னமும் சிறு குழந்தைபோல எண்ணிக் கொண்டு. அவனும் அதே வழக்கத்தில் நடந்த அனைத்தையும் சொன்னான்.

"பஸ்ல போகணும் என்ன அவசியம் தனு. கார்லே போலாமே டா."

"வைஷு அங்க நான் கரஸ்பாண்டரா போகலமா. லீவ் போஸ்ட்ல போயிருக்கேன். கார்ல  போனா நல்லா இருக்குமா? தாத்தா பேருல எத்தனை ஸ்கூல்ஸ்  ஆரம்பிச்சாலும், இந்த ஸ்கூல் தான் ஆணி வேறு, அடித்தளமே இது தான். இவ்வளவு ஸ்கூல் மெயின்டெய்ன்ட்டடா இருந்தாலும், ஆணி வேர் சரியில்லைனா மொத்த மரமும் சாய்ஞ்சுடும் மா. நான் கரஸ்பாண்டரா போனா அங்க நடக்கற தப்பு எனக்குத் தெரியாது. நான் நார்மலா அங்க வேலைப் பார்க்கற டீச்சரா போனா தான் அங்க நடக்கற தப்ப தெரிஞ்சிட்டு சரி செய்ய முடியும். அகென் மதுரையில் ஒன் ஆப் தி பெஸ்ட் ஸ்கூல்ன்ற ஃபேம்ம கொண்டு வர முடியும் வருவேன். ஐ வில் ஃபுல்ஃபில் ஹிஸ் விஷ் மா." என உறுதியுடன் சொன்னான்.

"ஐ க்னோ டா கண்ணா. அப்படியே இந்த அம்மாவோட ஆசையைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணா நல்லா இருக்கும்." என இழுக்க, அதைப் புரிந்து கொண்டவன், குறுநகை புரிய,

"என்ன டா ஒரே புள்ள நீ, உனக்குக் கல்யாணம் பண்ணி  பார்க்கணும்ன்ற ஆசை பெத்தவளுக்கு இருக்கக் கூடாதா என்ன? அதான் கேட்டேன்." என்றார். 

வேகமாக அவன் மடியை விட்டு எழுந்தவன், "வைஷு செல்லம்! முதல்ல தாத்தாவோட விஷ்! ம்ம்... நெக்ஸ்ட் வேண்ணா உங்க விஷ் கன்சிடர் பண்றேன்." என்று பூந்துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைய, 

"கன்சிடர் பண்றது இருக்கட்டும் எப்படிப் பட்ட பொண்ணு வேணும் சொல்லு. இப்போ இருந்தே தேடுறேன்." என்று வெளியே இருந்தவாறே கத்த, 

"நோ ஐடியா வைஷு!" உள்ளிருந்து குரல் கொடுத்தவனின் மனக்கண்ணில் அவசியம் இல்லாமல் வந்து போனாள் தென்றல். அவளது நினைப்பு எதற்கு வந்ததென்று யோசித்தவன், பிடரியைத் தட்டி விட்டு வந்த வேலையைச் செய்தான்.

தனிஷ், வைஷ்ணவி பிரபாகரனின் ஒரே செல்வ புதல்வன். தியாகராஜரின் ஒரே வாரிசு. தியாகராஜர் என முதல் முதலாக மதுரையில் அவரது பெயரிலே தொடங்கியப் பள்ளி, இன்று சென்னை, பெங்களூர் கிளைகளாக விரிந்தன. 

அனைவரும் சென்னையில் வசித்தனர். சென்னைக் கிளையைப் பிரபாகரன் பார்த்துக் கொள்ளப் பெங்களூர் பள்ளியை மகன் தனிஷ் பார்த்துக் கொள்ள, மதுரையில் இருக்கும் அவர்களது முதன்மையான பள்ளியை ஆள் வைத்துப் பார்த்துக் கொண்டனர். 

சில வருடங்களாகப் பள்ளியின்  பெருமையும் பேரும் குறைந்து கொண்டே வர, மதுரைக்கு வந்து விட்டார் தியாகராஜர்.

ஆனாலும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடலும் ஒத்துழைக்க வில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் பழைய பெயரை மீட்க முடியவில்லை. அவர் படுக்கையில் விழ, அவரைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல நினைத்தனர் அவரது மகனும் மருமகளும்.

ஆனால், 'அவரோ தன் மனைவி வாழ்ந்து இறந்த வீட்டில் இறக்க வேண்டும்'. என்று முடிவாகச் சொல்லிவிட்டார். வைஷ்ணவி மட்டும் உடனிருந்து அவரைப் பார்த்துக் கொண்டார்.

பேரனை அழைத்துத் தனது இறுதி ஆசையான, 'பழைய பெருமையோடு அந்தப் பள்ளியை கொண்டு வர வேண்டும். அங்கு நடக்கும் தவறுகளைக் கண்டு பிடித்து சரி செய்ய வேண்டும். நீ இங்கிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்." என்று தனது பேரனிடம் வாக்கு வாங்கியதால், இங்கே  அன்னையிடம் வந்து தங்கிக் கொண்டே அந்தப் பள்ளியைப் பார்த்துக் கொள்ள முடிவெடுத்தான்.

பெங்களூரில் சில பல வேலைகள் இருந்ததால் மதுரையிலிருந்து அங்கே சென்று விட, தியாகராஜர் இறந்த செய்தி அவனுக்கு வந்தது. அவன் வந்த வேலை இன்னும் முடியாத பட்சத்தில் அவன் அங்கு மாட்டிக் கொள்ள, பள்ளிக்கு அன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப் பட்டு ஆசிரியர்கள் அனைவரும் அவரை பார்த்து மாலைகள் போட்டு விட்டுச் சென்ற பின்பு தான் அவன் வந்து சேர்ந்தான் யாருக்கும் அவன் தியாகராஜரின் பேரன் என்று தெரியவில்லை. 

ஆனாலும் ஒரு சிலர் தெரிந்து அமைதியாக இருந்தனர் அவனது கட்டளைக்கு இணங்க. பத்தாம் வகுப்பு சென்டம் ரிசல்ட் காட்டிக் கொண்டிருந்த பள்ளி சமீப வருடங்களாக, முழு ரிசல்ட் காட்ட வில்லை. அதைக் கண்டுபிடிக்கத் தான் இவனும் சாவித்ரியின் லீவ் போஸ்ட் பயன்படுத்தி ஆசிரியராக உள்ளே வந்தவன், பள்ளியில் நடக்கும் தவறுகளைக் கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் உள்ளே நுழைந்திருக்கிறான்.

****

"டேய் கை விடுடா படுபாவி. கைய ஒடச்சிடாத." அந்த இளந்தாரியிடமிருந்து தன் கையை உறுவ முயன்று தோற்றுப் போனார் அவனது பாட்டி.

"என்னோட செல்ல டார்லிங் என் கேரள் பிரண்ட், உன் கைய நான் பிடிச்சா, அந்த மீசக்காரருக்கு என்ன வந்துச்சாம்? தடிய வச்சி அடிக்க வர்றாரு. நீ என் டார்லிங் நான் உன் கைய பிடிப்பேன், உன்னைக் கட்டிப் பிடிப்பேன், ஏன் முத்தம் கூடக் கன்னத்துல வைப்பேன் அந்த ஓல்ட் மேன் என்னை எதுவும் கேட்க உரிமை இல்லைனு சொல்லி வை." என அவன் சொன்ன அனைத்தையும் செய்து காட்டியவன் அவனதுப் பாட்டியை வைத்துத் தாத்தாவை வம்பிழுத்து  கொண்டிருந்தான். அவரும் பேரனின் செல்ல இம்சைகளைப் பொறுத்துக் கொண்டார்.

இதனை எதிர் வீட்டு வாசலில் அமர்ந்த வாக்கில் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல். 

அந்த ஊர் தலைவரின் மகள் நந்தனாவிற்கு தினமும் மாலை ஆறு மணியலிருந்து ஒன்பது மணி வரைக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க வருவாள். 

அதில் அவளுக்கு கிடைக்கும் பணத்தை வைத்து தான் வீட்டிற்குத் தேவையானதை வாங்கிப் போடுவாள். 

அவள் வாங்கும் சம்பளம் வட்டிக்கும் பேருந்துக்கும் சரியாகி விட, வீட்டிற்கு சென்று பாடம் சொல்லிக் கொடுப்பதால் கொஞ்சம் பணம் வருகிறது. அதை வைத்து அவர்களது வாழ்நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். 

இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் இந்த வட்டியின் தொல்லையிலிருந்து அவள் விடுதலை வாங்கிடுவாள் தென்றல். அசலும் சேர்ந்து கட்டி வந்ததால், அவளது அன்னைக்காக வாங்கிய கடன் முடியும் தருவாயில் வந்து விட்டது. 

கடன் மட்டும் முடிந்ததும், அந்த வீட்டில் இருக்காமல் நல்ல வீட்டைப் பார்த்து முத்தம்மாவுடன் சென்று விட நினைக்கிறாள். ஆனால்  விதி அவளுக்கு என்ன வைத்திருக்கிறதோ.

"என்னடா என்கிட்ட சொல்லி வைக்கணும் என் பொண்டாட்டி?" என அங்கு வந்தார் பேரனின் தாத்தாவும், பாட்டியின் ஆசைக் கணவரும். 

"என் பாட்டிய, நான் கட்டிப் பிடிப்பேன். முத்தம் வைப்பேன், அதை நீ கேட்க உனக்கு உரிமை இல்லனு சொல்லி வைக்க சொன்னேன். இப்போ என்ன?"

"நீ எப்படி டா என் பொண்டாட்டிய கட்டிப் பிடிக்கலாம், முத்தம் கொடுக்கலாம். அவ எனக்கு மட்டும் தான். நான் போனதுக்கு அப்புறம் உங்க பாசத்தைக் காட்டுங்கடா  நொன்னைகளா. இப்போ என் பொண்டாட்டிய யாரும் தொடக் கூடாது போடா." என்று தடியை வைத்து அவனைத் துரத்தினார்.

வடகத்தை கொத்த வந்த காக்கையை விரட்டுவது போல் இருந்தது.

"தாத்தா, உன் பொஞ்சாதியா இருந்தாலும் அவனுக்கு அது பாட்டி தானே. உம்ம பேரன கொஞ்சி தான வளர்த்தீரு. அதே போல அவன் அவன் பாட்டிய கொஞ்சினா,  உமக்கு ஏன் கோபம் வருது?" என இங்கிருந்து அவள் கேட்கவும், பாட்டியோ வெட்கம் கொண்டார். 

"அப்படி கேளுக்கா. என்னமோ நான் அவரு வாழ்க்கையே பறிச்சிட்டது மாதிரி பாட்டிய கொஞ்ச விட மாட்டிகிறாரு. என்னானு கேளு நீ?"

அவளும் சிரித்துக் கொண்டே தாத்தாவைப் பார்க்க, அவரோ தடியைக் காட்டி அவனை அடிக்கப் பாய்ந்ததுப் போல நடித்தவர், தென்றலிடம் திரும்பி, 

"உன் தாத்தா, அதான் நானு, அந்தக் காலத்திலேயே இவள லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். உன் பாட்டினா எனக்கு உசுரு. அப்பவே இவ, இவன் அப்பன கொஞ்சினாலே இங்க ஓரத்தில எனக்கு கொஞ்சம் கோபம் வரும்." என நெஞ்சைத் தொட்டு காமித்தவர்

"என்னை கவனிக்காம மகன பார்த்திட்டா, இவ கிட்ட சண்டைப் போடுவேன். நமக்கு மட்டுமே உரிமையானத மத்தவங்க தொட்டாலே கோபம் வரும். அது சிலருக்கு காதலால கூட இருக்கலாம். அதீத அன்புனால கூட இருக்கலாம். ஆனா இந்த உணர்வு இல்லாத ஆளே கிடையாது.

குழந்தை கிட்ட இருந்து அதோட பொம்மைய கேட்டுப் பாரு உடனே கொடுக்குமாக்கும். தரமாட்டேன் பின்னாடி வச்சிக்கும். அது மாதிரி தான் எனக்கு இவ!" என விளக்கம் கொடுத்து அவளைத் தெளிய வைத்தவர்,

தன் பேரனிடம், "நான் செத்ததுக்கு அப்புறமா இந்த மாதிரி அன்பா பார்த்துக்கங்க டா இவள. இப்போ என் பொண்டாட்டிய நான் தான் பார்த்துப்பேன் போடா இங்க இருந்து." என்று மீண்டும் தடியைத் தூக்க, அவனோ, "போயா" என்று ஓடிப் போய் விட்டான். அவரோ தன் மனைவியை கொஞ்ச ஆரம்பித்து விட்டார். 

அதனை ரசித்தவள் யோசனையில் ஆழ்ந்து விட்டாள். தாத்தாவின் உரிமையும் காதலும் கோபமாக மாறியது போல தான் சேத்தனின் உரிமையும் காதலும் கூட அவளிடம் கோபமாக மாறியது. தன்னை பைத்தியமாகக் காதலிப்பவனின் கோபம் அவளுக்கு நியாயமானது என இப்போது தான் புரிந்தது. 

ஏன் அவளுக்குள்ளே அவன் மேல் உரிமையும் காதலும் அவனை விட கூடுதலாக இருப்பதை அவளால் மறுக்க முடியுமா?

கல்லூரி மாணவி ஒருத்தி சேத்தனை காதலிப்பதை அறிந்து அவளைத் தனியாக அழைத்து, அடிக்காத குறையாகத் திட்டி அந்தப் பேருந்திலே கால் வைக்க விடாமல் செய்ததெல்லாம் மனக் கண்ணில் வந்து போக, தன்னை நினைத்து சிரித்து கொண்டாள். 

அவன் மேல் கோபம் கொண்டதை எண்ணித் தன்னையே கடிந்தவள் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்து கொண்டாள். ஆனால் அது நடக்கப் போவதில்லை என்று பேதை அறியாமல் போனாள்.

மக்களே

தென்றல் சேத்தன் மேலே ஏன் கோபமா இருக்கா தெரிஞ்சுக்க இதோ அடுத்த அத்தியாயம் தொடர்ச்சியாக.. 

அடுத்த பாகம் 

கானம் 11

உங்க கருத்து இரண்டு அத்தியாயங்களுக்கும் வேண்டும் மக்களே.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0