ஆசான் - 2

ஆசான் - 2
இந்திரா, நேசன் சுகந்தியின் ஒரே தவப்புதல்வி... தன் மகளின் ஆசை, கனவுக்கிணங்க அவளை தன்னை போலவே ஆசிரியராக்க வேண்டும் என்பதே நேசனின் கனவு. ஆனால் சுகந்தியோ, மகளுக்கு நல்ல வரம் கிடைத்தால் போதும் என்றே இருக்கும் சாதாரண தாய்.
பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்த இந்திரா, மதுரையிலுள்ள புகழ்பெற்ற ஆர்ட்ஸ் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் பாடத்தை எடுத்து படித்தாள். பின் பி.எட் ,அதன் பின் முதுங்கலை படிப்பும் சேர்த்து படித்து முடித்தவள், எம்.பில் படிக்க இருக்கும் போதே சுகந்தி வரம் பார்க்க வேண்டும் என்றும் ஒத்தக் காலில் நின்று பிடிவாதம் பிடிக்க, வேறு வழியின்றி வரன் தேடினார் நேசன்.
இந்திராவை எங்கோ பார்த்து பிடித்து போனது ருத்ரனுக்கு .
அவன், தன் பெற்றோர்களோடு அவளை பொண்ணு கேட்டு வந்தான்.
ருத்ரன், பெரிய இடமாக இருக்க, முதலில் கொடுக்க யோசித்தார் நேசன். ஆனால் சுகந்தி விடப்பிடியாக, ருத்ரனுக்கே கட்டிக்கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட, வேறு வழியின்றி இந்திராவை அவனுக்கே கட்டிக் கொடுக்க வேண்டியதாயிற்று.அவளது கனவுகள் அன்றே புதைக்கப்பட்டன.
ருத்ரன், அவனது ஊரில் பேரு செல்வாக்கு மிக்கவன். அரிசி மண்டி நடத்தி வந்தாலும், கட்ட பஞ்சாயத்து, வட்டிக்கு விடுவது, அடிதடி என அனைத்து தொழிலையும் செய்து வந்தான். இந்திராவிற்கு அதெல்லாம் பிடிக்கவில்லை...
அதே நேரம் வேலையை பற்றி அவனிடம் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லிருக்கிறான். ஆனால் அவளால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. தன் மாமனார் மாமியாரரிடம் முறையிட, அவர்களோ, பிள்ளையை பற்றி கவலைப்படாது பேரக் குழந்தையை கேட்டு நச்சரித்தார்கள்.
அவளும் பல்லைக்கடித்து கொண்டு பொறுமையாக இருந்தாள்.
பின் அவர்கள் ஆசைக்கிணங்க, அவளும் கருவுற்றாள். அவளை தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள்.
அவள் வேண்டுவதற்கு முன்னே அனைத்தும் கிடைத்தது. ஆனால் அதை எல்லாம் அவளால் தான் மனதார எடுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றவர்களின் உழைப்பையும் ரெத்தத்தையும் உறிஞ்சி எடுக்கும் இப்பணத்தால் வந்தவை என்று எண்ணினாள். வேறுவழியின்றி பல்லை கடித்து கொண்டு ஏற்று கொண்டாள்.
முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறக்க, மூவரும் முகம் சுளித்தனர். அவர்கள் ஆண் மகவை எதிர்பார்க்க, கிடைத்ததோ பெண் மகவு. அன்று பார்த்து விட்டு சென்றவர்கள் தான் அடுத்து வந்து அவளை பார்த்ததாக தெரியவில்லை... மூன்று மாதம் கழித்தே இவளாகவே புகந்த வீட்டிற்கு சென்றாள்.
ஆர்த்தி, வீட்டிற்கு வந்த நேரம், கிடைக்கவே கிடைக்காது என்றிருந்த பணம் கிடைக்க, அதிர்ஷ்ட தேவதையாக எண்ணி அவளை ஏற்று கொண்டனர்.
ஆனாலும் இந்திராவிடம் ஆண் பிள்ளை வேண்டும் என்று கேட்டு நச்சரித்தனர். ஐந்து வருடம் கழித்து அர்ஜுன் பிறக்க, வீட்டில் தீபாவளி தான். அவனது பிறப்பைக் கொண்டாடி விட்டனர் அக்குடும்பம். தாயிடமின்றி, மற்ற, மூவரின் கைகளில் தான் வளர்ந்தான். எதைக் கேட்டாலும் வாங்கி குமித்தான் ருத்ரன். மகளை விட மகனே அவனுக்கு பெருசு. மகள் தாயின் கைகளில் வளர, மகன் தான் அவளது கையை மீறி போவது போல உணர்ந்தாள்.
எத்தனை உறவுகள் இருந்தாலும் தாயின் நிழலில் வளரும் குழந்தைகள் தான் நல்ல முறையில் வளரும்... ஆண்பிள்ளை தான் தாயிடம் வளர வேண்டும், ஆனால் இங்கோ அவரை தவிர, மூவரிடம் தான் வளர ஆரம்பித்தான். அவனுக்கு தான் அங்கு ஏக போக உரிமை. ஆண்களே உயர்வானவர்கள் தனக்கு கீழ் தான் பெண்கள் என்ற எண்ணத்தை அவன் மனதில் பதிய ஆரம்பித்திருந்தான் ருத்ரன் இந்திராவை நடத்தும் விதத்தைக் கண்டு.
ஆண்கள் என்றால் ஊர்சுத்துவதும் உழைப்பதும் தான் பெண் என்றால் வீட்டு வேலைகள் செய்வதும், வீட்டு ஆம்பிளைகளுக்கு அடங்கிப் போவதும் தான் என்று மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. அதை அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்கிறார்கள்.
அதன் படி தான் ஆர்த்தியையும் அர்ஜுனையும் வேறுபாடு காட்டி வளர்ந்தனர்... அர்ஜுனும் அடாவடியாக யாரையும் மதிக்காமல் தான் வளர்ந்தான். பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி நாட்டாமையாகவே திரிந்தான். இஞ்சித்தும் யாருக்கும் அவன் மரியாதை கொடுப்பதில்லை. பள்ளியிலும் அவ்வாறே நடந்தான் . இதை எல்லாம் கண்டு இந்திரா அவனை கண்டித்தால் போதும் வீட்டில் ஒரு பிரளயமே வந்திடும், அவனை எதாவது சொன்னால் போதும் புருசன், மாமியார் ,மாமனார் என அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வந்திடுவார்கள்.
அதனாலே அவனை கண்டிக்க முடியாமல் போனது... இதே அலும்பு பள்ளியிலும் தொடர்ந்து... அடிதடி என செய்துவிட்டு வருவான். பள்ளியிலிருந்து பெற்றோர்களை அழைத்தால், ருத்ரன் தான் செல்வான்... அப்பவும் தன் மகனுக்கு தான் அங்கு ஆதரவாக பேசுவான். அதுவே அர்ஜுனுக்கு கர்வமாக இருக்கும்.. பள்ளி ஆசிரியர்கள் அவனை ஏதும் சொல்லவே பயப்படுவார்கள். ஆனால் இந்திராவிற்கு தான் அர்ஜுனை எண்ணி கவலையாக இருந்தது.
மேலும் அவளது கவலையை கூட்டும் விதமாக பள்ளியில் ஒருவனது மண்டையை உடைக்க, பெரிய பிரச்சனை ஆனது .. அடிப்பட்டவனுக்கு மருத்துவ செலவை ருத்ரனே ஏற்றாலும் அர்ஜூனை ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவனை பள்ளியிலிருந்து நீக்கி விட்டார்கள். 'வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் 'என்று ருத்ரனும் வந்து விட, இந்திரா பொறுமை இழந்தாள். அர்ஜுனை அடிவெளுத்து விட்டாள், மூவரும் தடுத்தாலும் அவனுக்கு அடி குறைந்த பாடு இல்லை. அவன் சுருண்டு விழவே விட்டாள் .
"அடியே ஒத்த பேரனை இப்படி போட்டு அடிக்கிறீயே, உனக்கு மனசாட்சி இருக்கா? ஐயோ பேரன் உடம்பு முழுக்க தழும்பா இருக்கே ...!" என அழுக,
" உங்களுக்கு தான் மனசாட்சியே இல்ல. பெத்த புள்ளை செய்ற தப்ப கண்டிக்கிறது இல்ல, பேரன் செய்றதையும் கண்டிக்கிறதில்ல. என்னையும் கண்டிக்க விடுறதில்ல... இதோ ஒருத்தன் மண்டைய ஓடச்சிட்டு வந்திருக்கான், அப்பயும் எதுவும் சொல்லல, டி.சி குடுத்துட்டாங்க பிளாக் மார்க்கோட வந்திருக்கான் வெளிய, வேற எந்த ஸ்கூல் சேர்ப்பீங்க இவன? உங்க புள்ளை போல கட்ட பஞ்சாயத்து பண்ணிட்டு திரியணுமா என்புள்ள?" எனக் கூறும் போதே இந்திராவிற்கு அறை கிடைத்தது ..
"என்னடி என் அம்மாவை எதிர்த்து பேசிற? என் புள்ள அப்படித்தான் இருப்பான் . இன்னொரு வாட்டி அவனை தொட்ட, நான் மனுசனாவே இருக்க மாட்டேன்..." என்று மிரட்ட, " இப்ப மட்டும் நீங்க எப்படி இருக்கீங்க? உங்கள போலவே என் புள்ளைய நான் வளர விட மாட்டேன்... நானே அவனை கண்டிக்கலைன்னா , போறவன் வர்றவன் தான் கண்டிக்க வேண்டியதா இருக்கும். இனி என் புள்ளையும் சரி நானும் இங்க இருக்க மாட்டோம்" என்று தன் இரு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நேசன் வீட்டிற்கு வந்து விட்டாள்.
இரு குடும்பமும் பஞ்சாயத்து பண்ணி ஓய்ந்திட, கடைசி முடிவாக ருத்ரனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று முடிவுக்கு வந்து விட்டாள் இந்திரா. கோர்ட்டில் டைவோர்ஸ் அப்லை செய்ய, ருத்ரனோ, இரு குழந்தைகளில் மகனை மட்டும் கேட்டான். நடந்த சம்பவங்களை கூறி இருபிள்ளைகளையும் தன்னோடு வைத்துக் கொண்டாள் இந்திரா. மாதம் இருமுறை மட்டும் பார்த்து விட்டு செல்லும் படி கோர்ட் உத்ரவிட்டது.
இந்திரா, மனப்பாரம் குறைந்தது போல எண்ணிருந்தாள். ஆனால் இனி தான் பிரச்சனை இருக்கிறதென்று
அறியாமல்.
தனியார் பள்ளியில் வேலைக்கு சென்றாள் இந்திரா, அங்கே தன் இரு பிள்ளைகளையும் சேர்ந்தாள். இப்போதெல்லாம் அர்ஜுன் எதுவும் தவறு செய்தால் உடனுக்கு உடனே அடிகள் கிடைக்கும். வேண்டுயதை தவிர வேற எதையும் வாங்கி கொடுப்பதில்லை... அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினாலும், இரண்டு நாள் ருத்ரனை சந்திந்த பின் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும் , அவனை இறக்க, கண்டிப்புகள் அதிகமாகும்.
வேலை செய்து கொண்டே, அரசு தேர்வுக்கும் விட்ட படிப்பையும் தொடர்ந்து படித்தாள்.. அவர் பட்ட கஷ்டத்துக்கு விடிவு காலமாய் அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. இதற்கு இடையில் ஆர்த்தி பூப்பெய்தியது, சுகந்தியின் இறப்பு என இயற்கையான விதிகளும் நடந்தேறியது..
மகள் பற்றி இந்திராவிற்கு பெரிதும் கவலை இல்லை... அவள் அம்மாவை போல தான் பொறுப்பாக இருப்பாள். ஆனால், அர்ஜுனை மாற்றுவது தான் சிரமாக இருந்தது. இன்னும் அந்தக் தாக்கமிருக்க அவன் மனம் மாறவில்லை.
போதாத நேரம், ருத்ரனும் தாத்தா பாட்டியும் அவனை ஏத்தி விட, அவனை மாற்ற பெரும் சிரத்தை எடுத்து கொண்டிருக்கிறாள் இந்திரா.
அன்று திங்கள் கிழமை, சிடு சிடுவென இருந்தான் அர்ஜுன்... ருத்ரன் வீட்டிற்கு சென்று வந்த ஒருவாரம் இப்படி தான் இருப்பான்... வார்த்தைகள் எல்லாம் ஈட்டியாக இருக்கும். அதை எல்லாம் கேட்டு உள்ளம் வலித்தாலும் பொறுமையாகவே இருப்பார் இந்திரா. ருத்ரன் அவனிடம், "மெட்ரிக் ஸ்கூல்ல சேர்க்காம, ஏன் அரசு பள்ளியில் சேர்ந்தாள் உன் அம்மா? நல்லா தானே சம்பாதிக்கிறா அப்றம் என்ன வந்தது உன் அம்மாக்கு? நீ மட்டும் ஏன் கூட இருந்திருந்தா, அப்பா உன்னை பெரிய ஸ்கூல் சேர்த்து விட்டுருப்பேன்..." என்று இந்திராவின் மேல் மேலும் வெறுப்பு வருவது போல பேசினான்.
"என் பேரன் ராஜா கணக்காக ஸ்கூலுக்கு போவான் பார்த்தால், ஈத்த பையை, ஈத்த செருப்பு போட்டுட்டு போயிட்டு இருக்கான்... ஏன் ஒரு பைய கூட ஒழுங்கா வாங்கி கொடுக்க முடியலயாக்கும் உன் அம்மாக்கு...? காசை உனக்கு செலவழிக்கிறாளா? இல்ல அவளுக்கு வாங்கி போட்டுமினிக்கிட்டு இருக்காளா?" பழனியம்மாளும் அவர் பங்கு கேட்டு ஏத்திவிட, அர்ஜுனின் முகம் கூம்பி போனது.
அவர்கள் கேட்க கேள்வியை பிசுறு மாறாமல் கேட்டு வைத்தான், இந்திராவிடம் மறுநாள் காலையில் பள்ளி கிளம்பும் போது.
" நான் எயித் வரைக்கும் மெட்ரிக்ல தானே படிச்சேன்... என்னை ஏன் அங்க படிக்க வைக்காம இப்படி இத்து போன கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க வைக்கிற? இதுவே எங்க அப்பா கூட இருந்தால் இந்நேரம் பெரிய பெரிய ஸ்கூல் என்னை சேர்த்திருப்பார்... அப்படி என்ன இருக்கு நீ அந்த ஸ்கூல் என்னை சேர்த்து விட்ட, அங்க படிக்கிறவங்களும் நானும் ஒன்னா? நீ நினைச்சா என்னை மெட்ரிக் ல படிக்க வைக்கலாம். ஆனா பாரு, நான் மட்டும் உனக்கு எப்படி தெரியிறேனோ? உனக்கு, உன் பொண்ண தானே பிடிக்கும், என்னை தான் உனக்கு பிடிக்காதுல அதான் என்ன இவ்வளவு கஷ்ட படுத்துற..."பள்ளிக்கு கிளம்பியவாறே உள்ளறையிலிருந்து கத்தினான்.
ஆனால் இந்திராவோ வாய்க்கு பசை போட்டது போல இறுக்கமாக மூடிக் கொண்டு தன் வேலையை மட்டும் பார்த்தார்.
"அர்ஜுன், அம்மாவை அப்படி சொல்லாத, நம்ம ரெண்டு பேருமே அம்மாக்கு ஸ்பெஷல் தான். நான் மெட்ரீக் ல படிக்கும் போது நீயும் தானே மெட்ரீக்ல படிச்ச, இப்போ நான் காலேஜ் போயிட்டேன். அம்மாக்கு கவர்மெண்ட் ஸ்கூல் வேலை கிடைச்சதுனால உன்னை அங்க சேர்த்து இருக்காங்க... இது ல என்ன தப்பு இருக்கு? நான் உன் இடத்துல இருந்தாலும் அம்மா சேர்த்து விட்ட ஸ்கூலுக்கு ஹாப்பியா போயிருப்பேன். அம்மா எது பண்ணாலும் அது நம்ம நல்லத்துக்கு தான்..." பதிலுக்கு ஆர்த்தி பேச,
"போ டீ ஜின் ஜக்..." என்றான்.
"படிக்கிற புள்ள எந்த ஸ்கூல் இருந்தாலும் படிக்கும் தம்பி.. கவர்மெண்ட் ஸ்கூல்லா இருந்தால் என்ன? மெட்ரீக் இருந்தால் என்ன? படிப்பு எல்லாம் ஒன்னு தான்... " என்றார் நேசன்.
"சரி, இருக்கட்டும். அதுக்காக, எனக்கு பேக் கூட ஒழுங்கா வாங்கி கொடுக்க கூடாதா? கவர்மெண்ட் ல கொடுக்கிறத யூஸ் பண்ண சொல்றாங்க... நானும் அவனுங்களும் ஒன்னா?" எனக் கேட்க,
"ஸ்கூலுக்கு போகும் போது மட்டும் தானே கவர்மெண்ட் பேக், மத்தபடி உனக்கு அம்மா, எல்லாம் பிராண்டடா தானே வாங்கி குடுத்தாங்க..."
"ஏய் நீ பேசாத டீ, எப்ப பாரு அவங்களுக்கு ஜின்ஜக் அடிக்கிறதே வேலையா வச்சிருக்க? " கத்தியவாறே அவிழ்க மேசையில் அமர்ந்தான்.
ஆர்த்தியும் வந்து அமர்ந்தாள். உணவை எடுத்து வைத்த இந்திரா, " உனக்கு பதில் தானே வேணும், ஸ்கூலுக்கு வா
சொல்றேன்..." என்றவர் இருவருக்கும்
உணவை பரிமாறினார்.
கடுகடுப்போடு உணவை விழுங்கினான்... ஆர்த்தி கல்லூரிக்கு செல்ல, அர்ஜுனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றார்.
காலை பிராத்தனை போது மாணவர்கள் ஒன்று கூடி இருக்க, தமிழ்த்தாய் வாழ்த்தோடு ஆரம்பித்தது அன்றைய நாள். மாணவர்கள் தினமும் ஒரு குறளும் ஆசிரியர்கள் கருத்தும் சொல்லுவது வழக்கம் . அதன் படியே, அர்ஜுன் இன்று ஒரு திருக்குறள் சொல்ல, இந்திரா கருத்து சொல்ல ஆரம்பித்தார்.
அர்ஜுன் மாணவர்களை பாரத்து தான் நின்றிருந்தான். அவனை ஒருதரம் பார்த்தவர், " அனைவரும் சமம் " என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார்.
"பள்ளியில் நமக்கும் சீருடை மட்டுமல்லாது இலவசம் புத்தகம், நோட், புத்தகப் பை , செருப்பு எல்லாம் கொடுக்க இரண்டே காரணம் தான். ஒன்னும் மாணவர்கள் அரசு பள்ளில படிக்கணும், இன்னொன்னு அனைவரும் சமம் என்று தான்..
பள்ளிக்கூடத்தில் காலடி எடுத்து வைத்து விட்டாலே, மாணவர்கள் அனைவரும் சமம் தான். இன்னார் பிள்ளை என்று ஆசிரியர்கள் யாரும் வேறுபாடு பார்க்க மாட்டாங்க, பார்க்கவும் கூடாது .சீருடை அணிந்த அனைத்து மாணவர்களும் ஒன்னு தான் எங்களுக்கு. பள்ளியில பார்க்க வேண்டிய இரண்டே வித்தியாசம் , ஒன்னும் ஆண் பெண் பாலினம்.இன்னொன்று வயது. இதில் மட்டுமே வேறுபடும் இருக்கனும்.
சீருடை அணிய காரணம், மாணவர்கள்ல யாரும் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை என்று சொல்லத்தான் ... ஒரே மாதிரி சீருடை அணிந்து சரிசமமா அமர்ந்து பாடம் படிக்கத்தான். ஒரே மாதிரியான புத்தகப்பையும் நோட்டையும் வழங்கவது, அதிலும் வேறு பாடு வரக் கூடாதுனு தான்..
மாணவர்களே உங்க மனசுல நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எண்ணம் இருந்தால், அத பள்ளிக்குள் வரும் போதே தூக்கி போட்டுட்டு வாங்க, பள்ளிக்கு உள்ளே நுழைந்து விட்டால் நீ மாணவன் , நான் ஆசிரியர் இதை தவர்த்து
வேற எந்த எண்ணமும் உனக்கும் எனக்கும் வரக் கூடாது ...
அனைவருமே இங்கு சமம்..." என்று கருத்தை முடித்து விட்டு மகனை பார்க்க, அவனோ தலை குனிந்தான்.
அவனை கண்டு முறுவலித்தார். பின் பிராத்தனை முடிய மாணவர்கள் கலைந்து வகுப்பிறகுச் சென்றனர்.
பத்தாம் வகுப்பிறகு முதல் வகுப்பே கணிதப் பாடமாக இருக்க, இந்திரா தான், அதை எடுக்க வந்தார்.. நாற்பத்தைந்து நிமிடத்தில் முப்பதைந்து நிமிடம் பாடம் எடுத்தவர் பத்து நிமிடம் மாணவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்... " முதல் கேள்வி அர்ஜுனிடம் கேட்டு வைத்தார்...
பதில் தெரிந்தும் தெனாவட்டாக தெரியாது என்பது போல நின்றான்... அவனை பெத்தவரல்லவா, அவனை பற்றி நன்கு அறிந்தவரல்லவா அதே கேள்வியை பக்கத்தில் இருக்கும் அருள் மொழியிடம் கேட்டார்.
" நீ சொல்லு அருள் மொழி... " அர்ஜுனை நக்கலாக பார்த்துவிட்டு சொல்ல , ஏற்கெனவே அர்ஜுனுக்கு அவள் மேல் பொறாமை இருக்க, எங்கே பதில் அவள் சொல்லி விட்டால் நமக்கு அசிங்கமாகிவிடும் என்று எண்ணியவன்" இல்ல எனக்கு பதில் தெரியும், நானே சொல்லுறேன்..."பதிலை சொல்லிவிட்டு அமர்ந்தான் .
' அப்படி வா வழிக்கு ' என்று அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பித்தார். இவ்வாறு பள்ளி நேரமும் முடிந்திட, அவனை அழைத்துக் கொண்டு புறப்பட, வழியில் அவன் வயது மாணவர்கள் சைக்கிளில் செல்வது பார்த்து அவனுக்கு ஆசை வந்தது. அதை இந்திராவிடம் சொல்ல, 'வேண்டாம் 'என்று மறுத்து விட்டார்.
அன்றைய நாள் முழுக்க சண்டை போட்டு உண்ணாமல் போராட்டம் செய்தான்... மறுநாள் சைக்கிள் வாசலில் நிற்க, தன் தந்தையின் மீது பாசமும் இந்திராவின் மீது வெறுப்பும் வந்தன.
அந்தச் சைக்கிளை கண்டதும் அவன் குதிக்க, இந்திராவோ தலையில் கைவைத்தவர் 'இதனால் என்ன விழைவு வர போகிறதோ 'என்று அச்சம் கொண்டார்.அவரது எண்ணம் போல பிரச்சனையும் வந்தது
What's Your Reaction?






