காதல் நாயகனே - 12

Jul 2, 2025 - 03:16
Jul 2, 2025 - 03:16
 0  50
காதல் நாயகனே - 12

நாயகன் - 12

அப்பெரிய குளிரூட்ட பட்ட மஹாலில் கேட்டரிங் ஆட்களுக்காக எக்ஸ்போ வைத்திருந்தனர்.

அந்த பரந்து விரிந்திருந்த பெருங்கூடத்தில் சிறு சிறிதாக கடைகளை போல அமைத்து தங்களின் கேட்டரிங் சர்வீஸ் பெயரை பெரிதாக எழுதி வைத்து, உள்ளே சில உணவுகளை தயாரித்து கொடுத்தும் , தேடி வரும் மக்களுக்கு ஒவ்வொரு விஷேதத்திற்கும் ஏற்றார் போல உணவு பட்டியலையும் அதன் விலையை காகிதத்திலும்  அச்சிட்டு அவர்களுக்கு உணவுடன் சேர்ந்து அதை கொடுத்ததோடு இல்லாமல் அவர்களது கேட்டரிங் சர்வீஸை பற்றியும் விரிவாக சொல்லவும் செய்தார்கள். 

இவ்வாறு தங்கள் கேட்டரிங் சர்வீஸ்க்காக நடத்தப் படும் இந்த எக்போவில் பலரும் கலந்து கொண்டனர். மக்களும் கண்காட்சி போல  காண வந்திருந்தனர். 

முகப்புத்தகம் மூலமாக இந்த கண்காட்சி விளம்பரத்தை கண்டவள், பணம் கட்டி அதில் அவளும் ஒரு கடையை பதிவு செய்திருந்தாள். 

கண்காட்சியில் அன்று பதிவு செய்த பகுதியில் அச்சிட்ட நோட்டீஸ் , சில இனிப்பு , கார உணவு வகைகள்  என   மேசையில் அடிக்கி வைத்து உள்ளே அவளும் அவளது மாமனாரும் அமர்ந்து அவர்களை நோக்கி வரும் மக்களிடம் தங்களின் கேட்டரிங் சர்வீஸில் இருக்கும் உணவு வகைகள்  மற்றும் விலைப் பட்டியலை விவரித்த படியும் வந்தவர்கள் ருசிக்க உணவை தந்த படி இருந்தாள். 

அவளுக்கு எதிரே கந்தன் கேட்டரிங் சர்வீஸ் கந்தரூபன் தான் கடையைப் பரப்பி இருந்தான்.  அவன் மட்டும் தனித்திருந்தான். இன்னொரு நாற்காலியில் காலை வைத்து மின் விசிறிக்கு கீழே அமர்ந்திருந்தவன்,  கந்து வட்டி தொழிலை தான் பார்த்துக் கொண்டிருந்தான் .

இங்கு வர அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை. கயலின் கணவர்,  கோபிநாத் தான், இந்தக் கண்காட்சி தகவலை கயலிடமும் மாமியார் மஞ்சுளாவிடமும் சொன்னான். அவர்களும் அவனை போக சொல்லி வற்புறுத்தினர். 

அவனோ "பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?"என சொல்லி பார்த்து விட்டான். ஆனா அவர்கள் கேட்கவில்லை அவனை அனுப்பி வைத்து விட்டனர். அவனுக்கு விருப்பமில்லை, ஏனோ தானோ என்று சமைத்து அவனது தந்தையின்  கேட்டரிங்கை ஓட்டிக் கொண்டிருக்கிறான். தாயின் வார்த்தையை மீற முடியாமல் அதிலிருந்து அவனை விடுவித்து கொள்ள முடியாமல்  தடுமாறிக் கொண்டிருக்கிறான்.

கந்து வட்டியில் அவன் எதிர்பார்ப்பிற்கும் மேலாக பணம் வரவு   இருக்க, கேட்டரிங் தொழில் மேல் அவனுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. தந்தையின் உயிர் , உழைப்பு என்று தாயின் சொல்லிற்காக, அதை விருப்பம் இல்லாமல் கேட்டரிங் ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

வீரமணி இருக்கும் வரை எந்த விசேஷம் என்றாலும் கந்தன் கேட்டரிங் சர்வீஸ் என்ற பலகை தான் இருக்கும். 

சிலர் வீட்டு பிளாஸ்டிக் டப்பாக்களில் கூட கந்தன் கேட்டரிங் சர்வீஸ் பெயர் போட்டிருக்கும் அந்த அளவிற்கு ஓஹோவென ஓடியது. 

கேட்டரிங் சர்வீஸ் தேதி கிடைத்த பின் கல்யாணத்திற்கு தேதி குறித்ததும் உண்டு. பேரும்  புகழோடும் ஓடிக் கொண்டிருந்த கேட்டரிங் வீழ்ச்சியை பார்க்க  ஆசைப்பட்ட கூட்டங்களும் இருக்கின்றன .

அதையும் மீறி உழைப்பும் , நேர்மையம் சுத்தமும் கொண்ட கந்தன்  கேட்டரிங் சர்வீஸ் அன்றைய நாளில் அடிச்சிக்க ஆளே இல்லை... ஆனால் இன்று அவனது கேட்டரிங் சர்வீஸை  சீண்டிப் பார்க்க நாதியில்லை. 

வீரமணி எப்போது இறந்தாரோ பொறுப்புகள் எப்போது கைக்கு மாறியதோ அப்போதே அதன் வீழ்ச்சி சந்திக்க ஆரம்பித்து விட்டது. ஆளுமை நிறைந்த  கட்சித் தலைவர் இறந்த பின் அந்த கட்சியை சரியாக வழி நடந்த ஆளில்லாம் , சிதறி போய் தடம் தெரியாமலே போவது போல தான் கந்தன் கேட்டரிங் சர்வீஸ் அதன் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது.

வீரமணி போல கந்தரூபன் இல்லை, கந்து வட்டிக்காரனிடம் பணம் புழக்கம் அதிகம் இருந்தாலும்  சம்பளத்தை அவன் கிள்ளி கொடுக்க , அதிக வருஷம் வேலை பார்த்தவர்கள் எல்லாம் விட்டு போகும் நிலை. அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பவர்களை வைத்து கொண்டு நடத்தினான் பெரிய லாபம் வரவில்லை. 

ஆறுமுகம் , இன்னும் சிலர் எல்லாம் பணத்துக்காக இல்லாமல் விசுவாசத்திற்காகவும் வீரமணியின் நட்பிற்காக இருக்கிறார்கள்.

முதலாளி தொழிலாளி பாரபட்சம் வீரமணியிடம் இருக்காது. அவர்களை சரிக்கு சமமாக அமர வைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டு தான் சமையல் களத்தில் இறங்குவார். ஆனால் இவனோ அவர்களை நிற்கவைத்து நான் தான் முதலாளி நீங்க தொழிலாளி என்ற ரீதியில் நிற்க வைத்து இவன் தான் பேசுவான் அவர்கள் கேட்கும் நிலை. அதுவே கேட்டரிங் சர்வீஸ் வீழ்ச்சிக்கு பெரும் காரணமாக இருந்தது. 

ஆனால் தாய் மஞ்சுளவிடம் ஆஹா ஓஹோவென சொல்லி வைத்திருக்க,  அந்த ஜீவனும் நம்பிக் கொண்டிருக்கிறது. கணவனை போல மகனும் அந்தக் கேட்டரிங்காக மாடாக உழைக்கிறான் என்று. உண்மை தெரிந்தால் அவர் நிலமை என்னவோ.

இப்போது கூட கந்தன் கேட்டரிங் சர்வீஸ் முன்னேற்றத்திற்காக  ஒரு துரும்பை கூட அவன் அசைக்க வில்லை. மர நிழல் கிடைத்தவன், தூக்கத்தை போடுவது போல,  வெளியே சென்று  அலைந்து திரிந்து வேலை இல்லாமல் குளிரூட்டப் பட்ட கூடாரம் இருக்கும் போது வந்த நோக்கம் மறந்து அனுபவித்துக் கொண்டிருந்தான். 

ஒரு குழந்தை ஓடி வந்து அவன் பரப்பி இருக்கும் உணவை வாயில் வைத்து ருசிக்க, அது நன்றாக இல்லை என்றதும் வைத்து விட்டு ஓடிச் செல்வதை கூட கவனிக்காமல் தன் வேலையில் கவனம் வைத்துக் கொண்டிருந்தான். 

ஆனால் குழந்தை உண்டு முகத்தை சுளித்து விட்டு செல்வது கவனித்து விட்டாள் ஜனனி. ஏதோ வகையில் அவளுக்கு கந்தன் கேட்டரிங்கோடு ஒரு மெல்லிய தொடர்பு உண்டு.

அவளுக்கு மிகவும் பிடித்த கேட்டரிங் சர்வீஸ். வீரமணி அவளுக்கு ஒரு முன்னோடி. அவரது பேட்டிக்களை நிறைய பார்த்தது உண்டு. அவரை போல கேட்டரிங் ஆரம்பித்து மக்கள் ஓஹோவென கொண்டாடி தீர்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டு. அதை அவரிடம் சொல்ல, வாழ்த்துகளோடு சொன்னதும் இல்லாமல் ' நீ எனக்கு போட்டியாக வரவேண்டும் ' என்று சொன்னார். 

இன்று போட்டியாக தான்  எதிரே கடையும் போட்டு இருக்கிறாள். ஆனால் அதை காண தான் அவரில்லை. வருத்தமாக இருந்தது. அதை விட கந்தரூபனின் மேல் கோபமும் வந்தது. வீரமணியின்  உழைப்பை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டு வருகிறான். 

அதைப் பொறுக்க முடியாமல் அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணி, தனது மாமனாரிடம் பத்து நிமிடத்தில் வருவதாக சொல்லி விட்டு வெளியே வந்து அவன் முன்னே போய்  கைக் கட்டி நின்றாள். 

அவனும் தன்  முன் நிழல் ஆடுவதை கண்டு நிமிர்ந்து பார்த்தான். விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவளை அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை. உள்ளே ஓர் இன்ப அதிர்வு தான். 

"அடடே ! ஜனனி மேடம். வாங்க !  வாங்க ! என்ன இந்த பக்கம்... ஓ கந்தன் கேட்டரிங் சர்வீஸ் பத்தி தெரிஞ்சிக்க வந்திருக்கீங்களா?" என நகைப்புடன் கேட்டான். 

"கந்தன் கேட்டரிங் சர்வீஸ் பத்தி தெரிஞ்சதால தான் இங்க வந்தேன்"

"ஓ... என்ன தெரியும்? எதுக்கு வந்தீங்க? " என நக்கல் இழையோட கேட்க, இவளுக்கு கோபம் பழியாக வந்தது..

"உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா மிஸ்டர் கந்தரூபன்? " எனக் கேட்டவளை புருவம் சுருங்க பார்த்தான். 

"உங்க அப்பா உழைப்பையும் அவர் சம்பாரிச்ச பேரையும் அழிச்சிட்டு இருக்கோம்ன்ற வருத்தம் கொஞ்சமும் இல்லையா?

வீரமணி சாரோட உழைப்பை கண் கூடா நானே பார்த்திருக்கேன். அவர் தான் என்னோட இன்ஸ்பிரேஷன். ஆனா இப்போ அவர் கேட்டரிங்கோட தரம் குறைஞ்சி போயிருக்கு. அதை நினைக்கும் போதே வருத்தமா  இருக்கு ! என்ன மனுஷன் நீங்க? அப்பா ஒப்படைச்ச பொறுப்பை பொக்கிஷத்தை போல பாதுகாக்காம  குழியில போட்டு  புதைச்சிட்டு இருக்கீங்க !

மொத்தமா இந்த கேட்டரிங் உயிர்பில்லாம இழுத்து மூட்றதுக்குள்ள, அதுக்கு உயிர் கொடுங்க. 

நீங்களே கொஞ்சம் முயற்சி எடுத்து நல்லா கொண்டு வரலாம். உங்களுக்கு பிடிக்கலைனா, நல்லா சமைக்கிற ஒருத்தருக்கு வாடகை விடுங்க,  அதுவும் முடியாதுன்னா உங்க அம்மா கிட்ட உண்மைய சொல்லி இந்த கேட்டரிங் வித்திடுங்க... கொஞ்சம் கொஞ்சமா அலட்சிய படுத்திக் கொன்னுட்டு இருக்காதீங்க ! என்னாலே பார்க்க முடியால ! உங்களுக்கு இந்தக் கேட்டரிங் மதிப்பு தெரில ! எனக்கு அதோடு மதிப்பு தெரிஞ்சதாலே பேசுறேன்.  புரிஞ்சுக்கோங்க"என்று சொல்ல வந்ததை சொல்லி முடிதாயிற்று இனி அவனிடம் பேச என்ன இருக்கு என்பது போல நகர இருந்தவளை தடுத்தது அவனது குரல். 

"ம்ம்... எங்க அப்பா கேட்டரிங்க்கு இப்படி ஒரு மதிப்பு இருக்கும் நான் எதிர்பார்க்கல ! ஒத்துக்கிறேன் எனக்கு கேட்டரிங் நடத்த விருப்பம் இல்லை... எங்க அம்மா கிட்ட எவ்வளவு சொல்லியும் கேட்கல, அவங்க இன்னமும் அப்பாவோட ஆன்மா இந்தக் கேட்டரிங்ல வாழ்ந்துட்டு இருக்கிறதா நினைக்கிறாங்க... என்னத்த சொல்ல ! நானும் முயற்சி பண்றேன்"என்றவன் உதடு பிதுக்க, 

"என்னால முடியல ! எங்க அப்பாவோட கேட்டரிங்கோட மதிப்பு தெரிஞ்ச நீங்க ஏன் இந்தக் கேட்டரிங்க வாடகைக்கோ? இல்ல வாங்கிக்கவோ கூடாது? நான் எங்க அம்மாவை சமாளிச்சிக்கிறேன்.

வாங்கிக்கிறீங்களா?" எனக் கேட்டு அவளையே அதிர வைத்தான். 

"என்ன அப்படி பார்க்கிறீங்க ? அங்க இருந்து அட்வைஸ் பண்ண வந்தீங்களே ! அதை நீங்களே பண்ணிட்டா என்ன? புண்ணியமா போகும் இல்லையா உங்களுக்கு... " என அவளை வெறுப்பேற்றினான். 

அவளோ அமைதியாக நின்றாள் "என்ன என்னால வாடகைக்கோ இல்ல முழுசா வாங்கிக்கவோ முடியாது. அட்வைஸ் பண்ண தான் முடியும் சொல்ல போறீங்களா?"

"என்னால முடிஞ்சா கண்டிப்பா கந்தன் கேட்டரிங் சர்வீஸ் உங்க கிட்ட இருந்து காப்பாத்துவேன். ஆனா இப்போ தான் தொழில்ல  கால் வச்சிருக்கேன். என்னால இப்போ முடியாது"என்றாள்.

"ஓகே வாங்க முடியாது. வாடகை கொடுக்க முடியாது. வேணும்ன்னா ஒரு ஆப்ஷன் இருக்கு?" என பீடிகை போட, 

"என்ன ?"என்பது போல புருவம் நெரிய பார்த்தாள்.

"நாம ரெண்டு பேரும் சேர்ந்தால் என்ன?"

"வாட்?" என பதற,

"கந்தன் கேட்டரிங் சர்வீஸ், ஜனனி கேட்டரிங் சர்வீஸ் ஒன்னா சேர்த்து நடத்தினா என்ன?" 

"சாரி!!  எனக்கு உங்க கூட சேர்ந்து வேலை செய்ய இஷ்டமில்லை நான் தனியா இருந்து பார்த்துக்கிறேன்.  நன்றி"என்று அவன் சென்று விட, இவன் தான் அப்படியே விடுவானா என்ன? உதட்டை வளைத்தவன் விஷமமாய்  சிரித்துக் கொண்டான்.

ஒரு வாரம்  சென்றிருக்க, ஜனனியின் வீட்டில் பூ பழ தட்டுடன் நுழைந்தனர் கந்தரூபனின் குடும்பத்தினர். 

ஜனனியின் வீட்டில்  அவர்களின் அதிரடி வருகையை கண்டு அனைவரும் அதிர்ந்து நிற்க, முகம் சிவந்து கண்களில் சீற்றத்துடன் நின்றிருந்தாள் ஜனனி..

கதை பத்தின சிறு வரிகள் அல்லது ஒற்றை வார்த்தையில் கமென்ட்

அப்புறம் இமோஜி தட்டி விடுங்க

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 1