காதல் நாயகனே - 1

Jun 9, 2025 - 18:23
Jun 26, 2025 - 03:26
 1  149
காதல் நாயகனே - 1

நாயகன் - 1

மதுரையில் திருமணத்தை முடித்து விட்டு  மூன்று நாள் அங்கே தங்கி மறுவீடு நிகழ்வையும் முடித்து விட்டு நான்காம் நாள் ஜோவியின்  குடும்பத்துடன் சென்னைக்கு கிளம்பியிருந்தனர் விபு , ஜோவி தம்பதியினர்.

சென்னையில் சின்னதாக கல்யாண வரவேற்பு நிகழ்வை வைக்கச் சொல்லியிருந்தான் விபு! தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்காகவும் அக்கம் பக்கத்தினருக்காகவும் தூரத்து சொந்தத்திற்காகவும் இந்தச் சின்ன வரவேற்பு.

ஒரு சிறிய மேரேஜ் ஹாலில் வரவேற்பை வைத்திருந்தனர். கல்யாண வரவேற்பிற்கு புதிதாக தொடங்கியிருக்கும் ஜனனி கேட்டரிங் சர்வீஸ்லிருந்து தான் வரவேற்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வந்தவர்கள்,  பரிமாறப்பட்ட உணவு வகைகளையும் அதன் ருசியையும் கண்டு பிரமித்து தான் போனார்கள். 

தனது மாமனாரின் உதவியில் அவர் கொடுத்த தைரியத்தில் கேட்டரிங் சர்வீஸை ஆரம்பித்திருத்தாள் ஜனனி.. 

குக்கர் செயலி மூலமாக தொடங்கிய சமையல் பயணம் இன்று கேட்டரிங் சர்வீஸ் வைத்து நடத்தும் அளவிற்கு முன்னேறியிருந்தது. அதற்கு காரணம் ஜனனியின் உழைப்பு மட்டும் அல்ல, அவளுக்கு துணையாக இருக்கும் அவளது மாமனார் மாமியாரும் காரணம் தான். 

சதாசிவம் கெளரியை விட இவர்கள் இருவரும் ஜனனியை மகள் போலவே கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு மருமகளாக இல்லாமல் மகளாக இருக்கிறாள். 

'தங்களது கடைசி காலத்தில் யாருமில்லாமல் அனாதையாக கண்ணீரும் கம்பலையுமாக கழிக்க தான் போகிறோம் ' என்று எண்ணி இருந்தவர்களுக்கு கடைசி கால வசந்தத்தை கொடுத்தனர், ஜனனியும் சச்சினும். 

வள்ளி  நீலகண்டனின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப் போயிருந்த நிலையில்,  இடையில் வந்த மகள் மீண்டும் மன்னிப்பு கோரி அமெரிக்காவிற்கு அழைக்க, அவர்கள் அவளை நாசூக்காக மறுத்து விட்டு கடைசி காலத்தை நிம்மதியும் மகிழ்ச்சியுமாக கழிக்கின்றனர்.

விபு ஜோவியின் கல்யாண வரவேற்பு முடிந்து அனைவரும் கிளம்பிட, ஜோவியின் குடும்பம் மட்டும் மறுநாள் செல்வதாக  விபு வீட்டில் தங்கிக் கொண்டனர். 

வள்ளியையும் நீலகண்டனையும் நேரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தவள், மண்டபத்திலிருந்து தனது கேட்டரிங்கில் வேலை செய்யும் அனைவரையும் சாப்பிட வைத்து , கொண்டு வந்த சமையல் பாத்திரங்களை சரி பார்த்து சுத்தம் செய்து, தனது அலுவலகத்தில் சேர்த்து விட்டு, அவர்களையும் கிளம்ப சொல்லியவள், நேராக சுதா வீட்டிற்கு தான் வந்தாள். சச்சின் அங்கே தான் இருந்தான். அவர்களிடம் பேசி விட்டு சச்சினை அழைத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணத்தில் தான் அங்கே வந்தாள். 

சச்சின், ஜீவிதன், நவநீதன் என மூவரும் சுதாவின் அறையில் படுத்துக் கொள்ள மேகவாணியும் சுதாவும் ஹாலில் படுத்துக் கொள்ள முடிவு செய்திருந்தனர்.

வாணியையும் அறைக்குள் படுக்க சொல்லித் தான் சுதா கேட்டார்   அவரோ மறுத்து விட்டு சுதாவுடன் ஹாலிலே படுத்துக் கொள்வதாக முடிவாகச் சொல்லி விட்டார்.

எல்லா வேலையும் முடித்து விட்டு பத்து மணியளவில் வந்த ஜனனியை போக விடாமல் பிடித்து கொண்டனர் சுதாவும் மேகவாணியும்.

"இந்த நேரத்துல தனியா உன் வீட்டுக்கு போகணுமா? வேணாம் நல்லா தூங்கி  எழுந்து, காலையில எங்களை வழி அனுப்பி வச்சிட்டு நீ உன் வீட்டுக்கு போ "என்று அன்பு கட்டளை போட்டார்  மேகவாணி.

அவளும்  மறுக்க முடியாமல் வள்ளியிடம்  சொல்லி விட்டு இருந்து கொண்டாள். மூவரும் உறங்காமல்  கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

"சாப்பாட்டு ரொம்ப அருமையா இருந்தது ஜனனி மா ! வந்தவங்க எல்லாம் முதல்ல பாராட்டினது உன் சாப்பாட்டை தான். எனக்கு மனசு நிறைஞ்சு போச்சிடி !"என்று சுதா சிலாகித்து கூற, அவளோ சிரிப்புடன் ஏற்றுக் கொண்டாள்.

"ஆமா ஜானு மா ! ரொம்ப நல்லா இருந்தது. உன் அப்பா வெளியே கல்யாணத்துல அளவா தான் சாப்பிடுவார், ஆனா இன்னைக்கி கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டார். 

அதுவும் கடைசி வரை  எல்லாருக்கும் எல்லா இருந்தது தான் ஆச்சர்யம், சில நேரம் வெறும் இட்லி , சம்பார் தோசை மத்தது தீந்து போய் இது மூனு தான் இருக்கும். ஆனா இன்னைக்கி கடைசியா சாப்பிட்ட எங்களுக்கு எல்லாமே இருந்தது. வயிறும் மனசும் நிறைஞ்சு போச்சி ! இன்னும் சாப்பிடணும் ஆசை ஆனா உடம்பு தாங்கலையே !!! ஆனா எனக்கும் உன் அப்பாக்கும் சின்ன குறை..."என்றதும் பதறிய ஜனனி

"என்ன குறைம்மா ! நீங்க எதிர்பார்த்தது எதுவும் சமையல் இல்லையா? சாப்பாட்டுல எதுவும் குறையா? "  கேட்டாள்

"இப்போ தானே சொன்னேன், வயிறும் மனசும் நிறைஞ்சதுனு, இப்போ குறையா கேக்குற? நான் குறை சொன்னது கல்யாணத்துக்கும் உன் சமையலே புக் பண்ணி இருந்திருக்கலாம் தோணுது !!  சாப்பாடு நல்லா இருந்தது. இன்னைக்கி கிடைச்ச திருப்தி அன்னைக்கு இல்லைனு தோணுது. ஜோவி அப்பா வீட்டுல அதை தான் சொன்னாங்க, இந்த கேட்டரிங் ஏன் புக் பண்ணலன்னு அந்தக் குறை தான்... "என்று அவர் சொல்ல , குறை என்றதும் பயந்தவள் அவரது பதிலை கேட்டதும் தான் ஆசுவாசம் கொண்டாள்.

"ஓ இது தான் காரணமா! நான் வேற ஏதோ இருக்குமோ பயந்துட்டேன். விடுங்கம்மா ஜோவி வளைகாப்புல பொண்ணு வீட்டு சைட்ல இருந்து நாம வகைவகையான விதவிதமான சாதத்தை இறக்கிடுவோம். "என்றாள். மேகவாணியும் சுதாவும் சிரித்துக் கொண்டனர். 

"அதெல்லாம் இருக்கட்டும்... அடுத்து என்ன பண்ணலாம் இருக்க?"

"அடுத்தா? அடுத்து என்னம்மா இருக்கு? கேட்டரிங் சர்வீஸ் ஒழுங்கா கொண்டு போகணும் ஓரளவு பேரை சம்பாதிக்கணும், ஜன்னி கேட்டரிங் சர்வீஸ் சொன்னாலே நல்ல விதமா நாலு பேர் சொல்லணும் அவளோ தான் வேற எதுவும் இல்ல மா !"என்றாள்.

"அது மட்டும் போதுமா டி ! அது தான் வாழ்க்கையா? பேரும் புகழும் ஓரளவு வைத்து தான் திருப்தி பட்டுக்க முடியும். அதுவே கொஞ்ச நாள் சலிச்சி போயிடும் உண்மையான சந்தோஷம் எல்லா சுகமும் உறவும் பெற்று வாழ்றது தான். எல்லாரும் உனக்கு இருந்தாலும் வாழ்க்கை துணையும் உனக்கு அவசியம் டி உனக்கு பெருசா வயசும் ஆகிடல இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்ல "என்றார்.

"நல்லா சொல்லுங்க அண்ணி ! இப்படியே இருக்க போறாளா கேளுங்க!!! வள்ளி இதை பத்தி பேச்சை எடுக்கறது இல்ல... கௌரி பொலம்புறா என் பொண்ணு வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கே !! என்ன சொல்லறது சொல்லுங்க? "என்று சுதாவும் ஆரம்பிக்க, 

இவளுக்கு ' ஐயோ ' என்றானது. இருவரிடமிருந்து தப்பிக்க வழியறியாமல் விழிப் பிதுங்கி போனாள். 

"பதில் சொல்லுடி ! ஏன் நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? "

"இரண்டு  கல்யாணம் பண்ணி, கல்யாண வாழ்க்கையில தோத்து போய் நிற்கிறேன். மூனாவதா வேற கல்யாணம் பண்ணுவேன் நெனைக்கிறீங்களா?"

"மூனாதாவா? மாப்பள கூட நடந்தது கல்யாணம் இல்ல விபத்துனு தானே சொன்ன, அதெப்படி இன்னொரு  கல்யாணமாகும்? 

அப்படி பார்த்தா, இப்போ நான் பண்ணிக்க சொல்றது ரெண்டாவது கல்யாணம் தானே !"என அவள் விட்ட வார்த்தைகளை அவளுக்கே திருப்பி விட, பதில் சொல்லாமல் தடுமாறினாள்.

"கணவரை இழந்த பொண்ணு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன தப்பு இருக்கு ? உனக்கு ஒன்னும் பெரிசா வயசாகிடல ! சச்சின் அப்பா இல்லாம வளரனும் நினைக்கிறீயா? கணவன் கூட வாழ்றது தாண்டி நிறைவான வாழ்க்கை. புரிஞ்சுக்க ஜானுமா !! நீ எனக்கு ஜோவி போல தான்... நீயும் கணவன் குழந்தைங்க வாழணும் ஆசைப்படுறோம் ஜானு மா !"என்றார் அக்கறையில்.

"இவ்வளவு நடந்த பிறகு கல்யாணத்தை பத்தின நினைப்பு எனக்கு இல்லை மா !!! அதை பத்தி யோசிக்க நேரமும் இல்லை... இப்படியே கழியட்டுமே என் வாழ்க்கை. இன்னொரு கல்யாணம் நினைச்சாலே உள்ளுக்குள்ள கூனி குறுகிப் போயிடுறேன். வேணாம் மா எனக்கு கல்யாணம் வேணாம்... நான் ,  சச்சின்  ஆதரவா இருக்க என் மாமியார் மாமனார் போதும்... இதை பத்தி பேச வேணாம் மா ! ரொம்ப டயர்டா இருக்கு நான் போய் தூங்குறேன்"என்று அப்பேச்சை கத்தரித்து விட்டு போய் படுத்துக் கொள்ள , சுதாவும் வாணியும் ஒருவரை ஒருவர் இயலாமையுடன் பார்த்து கொண்டனர். 

***

இங்கோ ஜோவியை தான் மேல் போட்டுக் கொண்டு தலையை கோதிய படி படுத்திருந்தான் விபு. 

"விபு!!! இன்னைக்கி விருந்து உண்மையாவே நல்லா இருந்ததுல கல்யாண விருந்தை விட, ரிசப்ஷன் விருந்து சூப்பரா இருந்து. நான் நல்லா சாப்பிட்டேன். ஜானு அக்கா கையில ஏதோ இருக்கு விபு !!! "என சிலாகித்து கூறினாள் ஜோவி. 

"ம்.. உண்மை தான் ஜோ ! அவ சமையல்ல ஏதோ மேஜிக் இருக்குனு எனக்கு எப்பவும் தோணிட்டே இருக்கும் அதே நேரம் அவளை இப்படி பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு.

இப்படி அவ சுதந்திரமா இருக்கணும் தான் நினைப்பேன் அடிக்கடி சொல்லுவேன். இப்போ தான் கேட்டு இருக்கா ! எனக்கு கொஞ்சம் அவளை நினைச்சி திருப்தியா இருக்கு..."என்றான். 

"ஆனாலும் அவங்க தனியா நிக்கிறாங்களே விபு !!!  இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லையே ! பிடித்த பிடியிலே நிக்கிறாங்க. நீயும் அவங்க கிட்ட கல்யாண பேச்சை எடுக்க மாட்ற ஏன்?"

"எனக்கு அவ நிம்மதி முக்கியம் ஜோவி !! எல்லாரும் கல்யாணம் பண்ணிக்க சொல்லும் போது அவ மனசு எதிர்பார்க்கிற ஆறுதலை நான் தான் கொடுக்கணும்.

அவ கல்யாணம் பண்ணிக்கிறதும், தனியா வாழ்றதும் அவ விருப்பம்... ஏன் அதை திணிச்சி இன்னொரு தப்ப நாம செய்யணுமா... ? அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் எண்ணம் இருந்தா இருக்கட்டும் நாம ஆதரிப்போம். இல்லையா தனியா இருக்கப் பிடிச்சிருக்குன்னா இருக்கட்டும் அதையும் அக்சபட் பண்ணிப்போம். இது அவ வாழ்க்கை, இனி அவ தான் அவ முடிவுகளை எடுக்கணும்... இனி அவளை டார்ச்சர் பண்ண வேண்டாமே !!!"என்றான். 

ஜோவிக்கும் சரியென பட தலையை அசைத்து அதை ஏற்றுக் கொண்டாள்.

"நாளைக்கு நாம எங்க போறோம் விபு?"ஆர்வமாக கேட்டாள்.

"ம் முக்கியமான இடத்துக்கு போறோம்டி"

"என்ன இடம்?" அவன் நெஞ்சில் நாடியை பதித்து அவன் முகம் பார்த்து ஆர்வத்துடன் கேட்டாள். 

"பி.எட் காலேஜ்க்கு தான்"என சட்டென சொன்னதும், அவளது ஆர்வமெல்லாம் வடிந்தது போனது. 

"பி. எட் காலேஜ்க்கா அங்க எதுக்கு?" என எழுந்து அமர்ந்தாலும் அவனும் அவளை நெருங்கி அமர்ந்து அவள் தோளை  அணைத்தவன் 

"நீ செகண்ட் இயர் கண்டினு பண்ண வேணாமா?"என மூக்கை பிடித்து ஆட்டியபடிச் சொல்ல, அவனது கையை தட்டி விட்டவள் "வேணாம்"என்றாள்.

"என்ன வேணாம்? "

"பி.எட் வேணாம். நான் அத்தை கூட வீட்டிலே இருக்கேன் விபு "என செல்லம் கொஞ்சிய படி அவனது நாடியை பிடிக்க,  கையை தட்டி விட்டு கோபமாக முறைத்தான்.

"அதெல்லாம் முடியாதுடி நீ பி.எட் கண்டிணு பண்ணி தான் ஆகனும். அத்தைக்கு நான் வாக்கு குடுத்திருக்கேன் உன்னை படிக்க வைக்கிறேன். 

உன் பேச்சை கேட்டா, அவங்களுக்கு ஏன் மேலே இருக்க கொஞ்ச நம்பிக்கையும் போயிடும். அதுனால நான் லீவ்ல இருக்கும் போதே உன்னை காலேஜ் சேர்த்திடனும்னு முடிவாக இருக்கேன்"என்று அழுத்தமாக சொன்னான்.

"நான் படிக்கலேனா எங்க அம்மாக்கு உன் மேலே நம்பிக்கை குறைஞ்சிடுமா? அதென்ன கொஞ்சம் நம்பிக்கையும் இல்லாம போயிடும்ங்கற, ஏன் எங்க அம்மா முழுசா உன்னை நம்பலை சொல்றியா?" கோபத்துடன் கேட்டாள். 

"ஜோவி செல்லம்... உண்மை அது தான்டா. நான் இதை கோபத்தோடையோ, இல்லை ஆதங்கதோடையோ சொல்லல, அவங்களை புரிஞ்சி அவங்க இடத்தில இருந்து யோசிச்சு தான் சொல்றேன். நாம இனி வாழ போற வாழ்க்கைய பார்த்து தான் அவங்களுக்கு ஏன் மேலே முழு நம்பிக்கை வரதும் வராததும் இருக்கு.

அது போக அவங்களுக்கு என் மேலே நம்பிக்கை வர வைக்க மட்டும் இதை செய்யல, நாம கணவன் மனைவியா இருந்தாலும் நீ சுதந்திரமா இருக்கணும் நான் நினைக்கிறேன் அதுக்கு இந்த படிப்பு உனக்கு அவசியம்.  

ஒருவருடம் தான் அதுக்கு அப்புறம் நமக்கு இருக்கற நிலமையை பொறுத்து நீ வேலைக்கு போறதும் போகாததும் உன் விருப்பம்..."என்று கன்னத்தில் முத்தம் வைத்து அவளை சமாதானம் செய்ய, அவளோ

"எங்க அம்மாக்கு உங்க மேலே நம்பிக்கை வர நான் ஒரு ஐடியா சொல்லவா?"என்றாள்.

"என்ன?"அவளை இழுத்து அணைத்து ஆர்வமாக கேட்டான்.

"பேசாம அவங்களுக்கு ஒரு பேத்தியோ பேரனையோ பெத்து கொடுத்துட்டா !!! அவங்களுக்கு நம்பிக்கை வந்துடும்ல எப்படி?"என புருவத்தை உயர்த்தி கேட்டிட, 

"ஜய்யோ ! என் ஜோவிக்கு எவ்வளவு அறிவு!! கல்யாணம் பண்ணி பிள்ளைய குடுத்துட்டா உடனே அவன் நல்லவன் நம்பிடுவாங்களா? பிள்ளை குட்டினு இருந்தா எவனும் தப்பு பண்ண மாட்டானாக்கும்? என் அறிவு ஜீவியே!!! படிக்கறதை மட்டும்  யோசி !!! உங்க அம்மாக்கு என் மேலே முழு நம்பிக்கை வர வைக்கிறத பத்தி நான் பாத்துக்கிறேன் என்ன?!"என்றான்.

அவளோ உதட்டை சுளித்து விட்டு, "அப்போ ஒரு வருசம் தள்ளி படுக்க போறீயாக்கும் நீ"என்றாள்.

"யார் சொன்னா? முத்தம் கொடுப்பேன், கட்டிப் பிடிப்பேன், சேட்டையும் செய்வேன், எல்லாம் இருக்கும் நமக்குள்ள, ஆனா அதுல ஒரு எல்லை உண்டு.

 ஒரு வருசம் கழிச்சி தான் நமக்கு குழந்தை. அது வரைக்கும் நாம மேரீட் லவ்வர்ஸ்டி "என்று அவளுக்கு முத்தங்களை வாரியிரைக்க, அவளும் அவனது முதுகை ஆக்டோபஸ் போலே ஆக்கிரமித்து அணைத்துக் கொண்டாள். இருவருக்குள்ளும் கட்டுப்பாடுடன் கூடல் நிலவியது.

*****

இடுப்பை பிடித்த படி பொத்தேன மெத்தையில் விழுந்தானவன். காலையிலிருந்து இரவு வரைக்கும் சமையலறையிலே சமைந்து கிடந்தவன், இப்போது தான் தன் அறைக்கே வருகிறான். வந்ததும் தனது அலைபேசியை உயிர்ப்பித்து புலனத்தை திறந்து பார்த்தான் எதிர்பார்த்தவளிடமிருந்து குறுஞ்செய்தி எதுவும் வந்திருக்கவில்லை.

"அடியே அன்னம்மா !!! ஒரு வாரமா  பதில் போடாம தவிக்க விட்றீயே டி என்னை ! எப்போ தாண்டி பேசுவ என்ட?"என புலனத்தை பார்த்து தன்னந்தனியாக புலம்பிக் கொண்டிருந்தான் இளன். 

அவன் எதிர்பார்க்கும் அவனது அன்னம்மா, அவனுக்கு பதில் தீனி போடுவாளா? இல்லை இன்னும் தவிக்க விடுவாளா

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1