நெடுஞ்சாலை கானமே - 12

கானம் - 12
பேருந்தில் அமர்ந்திருந்த தனிஷ், வெளியே வேடிக்கைப் பார்த்தப்படி உள்ளே ஒலிக்கும் பாடலைக் கேட்டுக் கொண்டே வந்தான்.
அவனது மனமோ, துள்ளிக் குதிக்கும் குழந்தையின் புத்துணர்ச்சியை கொண்டிருந்தது. அவனுக்கு அது வித்தியாசமாகவும் இருந்தது.
சாளரம் வழியே வரும் காட்சிகளை காண அழகாகவும் புதிதாகப் பார்ப்பது போலவும் இருந்தது. அவன் கேசத்தை களைத்து விளையாடும் வளியையும் கூட நாசி வழியே உள்ள வாங்கி அதன் சுகந்தத்தை உணர்ந்தான்.
அலைபேசியில் பேசிய வண்ணமாகக் கருப்பு திரையிட்டு குளிரூட்டப்பட்ட மகிழுந்து பயணத்தில் அவன் இழந்தவைகள் ஏராளம். அவைகளை எல்லாம் மீட்டுத் தந்தது என்னவோ இந்தப் பேருந்து பயணம் தான். சாலையில் நடக்கும் சிறு சிறு விஷயங்களைக் கூட விட்டு வைக்காது ரசித்தப்படி வந்தான்.
மாறனும் சேத்தனும் அதிகாலையிலே எழுந்து கிளம்பி, மூர்த்தியிடம் சென்று வேண்டா வெறுப்பாகச் சாவியை வாங்கிக் கொண்டு, அவர்களது பேருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலிருந்து பேருந்தை ஓட்டி வந்தனர்.
வரும் வழியே பேருந்து நிறுத்தத்தில் தனிஷ்ஷும் அவனோடு இன்னும் சிலரும் நின்றிருந்தனர்.
அவனைக் கண்டதும் மாறன் திரும்பிச் சேத்தனைப் பார்க்க, அவனோ 'வேண்டாம்' என்று மறுத்தான்.
அவனுடன் சில மக்கள் நிற்பதால் வேறு வழியில்லாமல் வண்டியை அந்த நிறுத்ததில் நிறுத்தினான் மாறன். சேத்தன் அவனை முறைக்க, அவனோ கண்களால் கெஞ்சி விட்டு திரும்பிக் கொண்டான்.
மக்கள் அனைவரும் ஏறியதும், அவன் ஏறும் முன்னே விசிலடிக்க நினைத்தான். ஆனாலும் மனசாட்சி இடிக்க, கஷ்டப்பட்டு ஏற முயற்சி செய்தவனைக் கைக் கொடுத்து ஏற உதவிச் செய்தான் சேத்தன்.
"தேங்கி யூ ப்ரோ!" என்று அவனுக்கு புன்னகையையும் சேர்த்து பரிசாக்கி விட்டு உள்ளே சென்று காலியான இருக்கையில் அமர்ந்து கொண்டான். சேத்தன் விசிலை ஊதவும் வண்டி புறப்பட்டது.
அடுத்த இரண்டு நிறுத்தத்தை கடந்து தென்றலும் விழியும் ஏறினார்கள் வழக்கம் போல அவர்கள் அமர, இடமில்லை, நடுவிலிருக்கும் கம்பியைக் கூட பிடிக்க முடியாதளவு கூட்டத்தினுள் இருவரும் நின்றிருந்தனர்.
தென்றல் விழியிடம் பணத்தைக் கொடுத்து பயணச்சீட்டை வாங்கச் சொன்னாள். அவளும் சேத்தனிடம் பணத்தை நீட்ட, தென்றலை முறைத்துக் கொண்டு சீட்டைக் கிழித்து கையில் கொடுத்தான்.
"என்ன தான் டா உங்களுக்குள்ள பிரச்சனை?" அவனுக்கு மட்டும் கேட்டும் படி சிறுத்த குரலில் கேட்டாள்.
"மம்.. உன் டோலி கிட்டயே கேளு." என்று தென்றலைக் கடந்து சென்றான். அவளும் அவனைப் பாராது எங்கோ வெறித்து பார்த்திருந்தாள்.
"நேத்து தான் காதல் படம் ஓட்டினீங்க. இன்னைக்கி என்ன சண்டப் படம் ஓட்றீங்க? அதுக்குள்ள எனக்கு தெரியாம என்ன நடந்தது?" என அவள் காதுக்குள் வந்து கேட்டவளை முறைத்து விட்டு, "அப்புறமா பேசலாம்." என்று திரும்பிக் கொண்டாள்.
தன்னை ஒரு தடவையாவது பார்ப்பாளா? என அவளை பார்த்தபடி முன்னே அமர்ந்திருந்த தனிஷ்ஷிற்கு அவள் பாராது நிற்பது ஏமாற்றமாக இருந்தது.
அவளருகே கூன் விழுந்த பாட்டி நிற்பதைக் கண்டு அவருக்கு இருக்கையை கொடுத்து விட்டு அவள் அருகே வந்து நின்றான். அப்போதும் அவள் அவனை கவனிக்கவில்லை.
"அப்படி என்ன யோசனை தென்றல் மேடம்? பக்கத்துல் ஆள் வந்தது கூட தெரியாம நிக்கறீங்க?" எனக் கேட்டு, நேற்றைய நிகழ்வில் சிக்கி இருந்தவளை மீட்டு வந்தான். அவன் குரல் கேட்டதும் திரும்பிப் பக்கவாட்டில் நின்றிருந்த அந்த ஜீவனைக் கண்டாள்.
'நேற்று இவனால் தான் பிரச்சனை வந்தது. பாவம் இவனுக்கு கூட அது தெரியாது.' என்று உள்ளுக்குள் விரக்தியில் சிரித்துக் கொண்டவள் அவனிடம் எதையும் காட்டாது,
"சாரி சார் ஏதோ யோசனையில் வந்துட்டேன். நீங்க எப்போ ஏறுனீங்க?"
"ஃபர்ஸ்ட் ஸ்டாப் என்னுடையது." என்றான். இருவரும் பேசியபடி வர, தூரமாகக் கம்பியில் சாய்ந்த படி வயிற்றெரிச்சலோடு பார்த்திருந்தான் சேத்தன்.
நிறுத்ததில் நிற்காமல் கையைக் காட்டி வண்டியை நிறுத்த முயன்றார் ஒரு வயசானப் பாட்டி. அவரை கண்டதும் சட்டென வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்தினான் மாறன்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த நிகழ்வால் அனைவரும் ஒரு கணம் முன்னே சென்று பின்னே வந்தனர்.
முன்னே சென்றதில் கம்பியை பிடிக்காமல் நின்ற தென்றல் மொத்தமாக தனிஷ் மீது சாய்ந்து விட்டாள்.
தனிஷ்ஷோ அவளது புஜங்களைப் அணைவாகப் பிடித்துக் கொண்டான். அவனது நெஞ்சில் தலை சாய்த்திருந்தாள்.
மற்றவர்கள் அவர்களை கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் சேத்தன் அவர்களை கவனித்து விட்டான். அவனது இதயக் கூட்டில் அணுகுண்டு வைத்து மொத்தமாகத் தகர்த்தியது போல இருந்தது.
சட்டென அவளும் அவனிடம் விலகி நின்று கொண்டு, "சாரி" என்றாள்.
"இட்ஸ் ஓகே" என்றான் அவனும். இதை இருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தப் பாட்டி ஏறிக் கொண்டதும் வண்டியும் புறப்பட்டது.
தனிஷ்ஷூம் இவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. சேத்தனின் முழுப் பார்வை இவளை தான் கூறுப் போட்டது. அவனைத் திரும்பிப் பார்த்தாள் உள்ளுக்குள் இருக்கும் மொத்த தைரியத்தை வரவழைத்து கொண்டு.
ஒரு நிமிடத்திற்கு குறையாது தன் முழுப் பார்வையில் உள்ளே எழுந்த அனைத்து வலியையும் அவளிடம் கடத்தி விட்டுச் சட்டென திரும்பிக் கொண்டான்.
அவ்வலி இவளது இதயத்திலும் பாதிப்பை உண்டாக்கியது. நேற்று கையைப் பிடித்ததற்கே தீயாக கொதித்தவன், இன்று அதிலே ருத்ர தாண்டவம் ஆடினாலும் ஆச்சரியத்திற்கு இல்லை.
நேற்று, அவள் வெறும் வாய் வார்த்தையாக தான் அவனிடம் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னாளே தவிர, அவள் அந்த எண்ணத்தில் சொல்லவும் இல்லை அவள் அந்த எண்ணத்தில் இல்லவும் இல்லை. இந்த ஜென்மத்தில் புருஷனாக நினைப்பது சேத்தனை தான். அவர்களுக்குள் எவ்வளவு சண்டை வந்தாலும் அந்த எண்ணைத்திலிருந்து அவர்கள் இருவரும் மாறப் போறதில்லை.
அவர்களது நிறுத்தம் வர மூவரும் இறங்கிக் கொண்டனர். அவனைப் பாராது இருவரும் உள்ளே சென்று விட்டனர். பாவம் இருவர்களுக்கு பலியாடாகிப் போனது மாறன்.
பாட்டிக்கு உதவி செய்யப் போக, நண்பனின் கோபத்திற்கு பலியானவன், அவன் தந்த தண்டனைகளையும் பெற்றுக் கொண்டான்.
****
மாடியில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான் நல்லசிவம். அவனுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தாள் சந்திரா. அவளை கவனிக்காது கையில் வாங்கி கொண்டு தேநீரை பருகிய யோசனை ரேகைப் படற அங்கும் இங்குமாக வலம் வந்தான்.
சந்திரா தான் அவனை அப்படியே விட்டுச் சென்று விடாமல் என்னவென்று விசாரிக்க, அவன் அருகே சென்று,
"என்ன மாமா எதுவும் பிரச்சனையா? என்ன யோசனையில இருக்கீங்க?" எனக் கேட்டாள்.
"என்னத்த சொல்ல, எல்லாம் கைய விட்டு போயிட்டு இருக்குடி சந்திரா. கண்டவன் பேச்சை கேட்டு, ஏமாந்து போய் கெடக்கேன்டி. நான் ஏமாத்திச் சொத்த சேர்த்தா, என்னை ஏமாத்திட்டு போயிட்டான் ஒருத்தன். சேர்த்த சொத்தெல்லாம் கரைஞ்ச் போச்சுடி. போக போக, ஆண்டியா போயிருவேன் போலடி." என புலம்ப ஆரம்பிக்க, இதை கேட்ட சந்திராவோ பதறிப் போய் என்ன என்று விசாரித்தார்.
"நிலம் வித்து கொடுக்க, வாங்கிக் கொடுக்கன்னு இருந்தது போதும் ஏக்கர் கணக்குல வாங்கிப் போட்டு பிளாட் போட்டு விக்கலாம் நினைச்சி, ஒருத்தன்கிட்ட சொன்னேன். அவன் அவனுக்கு தெரிஞ்சவன கூட்டிட்டு வந்து இடத்தையும் காட்டினான். நானும் ரெண்டு மூணு பேர்கிட்ட விசாரிச்சேன். நல்ல விதமாக சொன்னாய்ங்க, சரினுட்டு வாங்கிப் போட்டேன்.
நிலம் வாங்க ஒரு நல்ல பார்ட்டி வந்துச்சி, விக்கப் போகும் போது தான் தெரிஞ்சது, அது வேற ஒருத்தரோட நிலம். தாய் பத்திரத்துல இருந்து அத்தனையும் மோசடி. அந்தப் ஆபீசர் கூட இதுல கூட்டணி போல. பிளாக்ல நிறைய கொடுத்துட்டேன். சுதாரிக்காம விட்டுட்டேன். நிலமும் போச்சி பணமும் போச்சி. எல்லாரும் கூட்டாளிங்கடி." என வருத்தப்பட்டான்.
"என்ன மாமா இப்படி ஏமாந்துட்டு வந்திருக்கீங்க? காசை திருப்பிக் கேட்டீங்களா இல்லையா? போய் சட்டைய பிடிச்சி சண்ட கேட்டு வாங்க வேண்டியது தான. உங்களுக்கு தான் ஆள் பழக்கம் இருக்குல. அவன அடிச்சி கைகால் ஒடிச்சி பணத்தை திரும்ப வாங்க வேண்டியது தான மாமா ஒங்களுக்கு தெரியாதா?" என ஆத்திரத்தில் கத்தினாள்.
"கத்தாதடி வெளிய கேட்டுட போகுது. நானே வெளிய தெரியாம பார்த்திட்டு இருக்கேன். நீ வேற." என சலித்து கொண்டவன்
"ஊர விட்டு ஓடிப் போயிட்டான்டி. எங்க இருக்கான் கண்டே பிடிக்க முடியல. கம்பளன்ட்டும் கொடுக்க முடியாது, சில பல ஏமாத்து வேலை இருக்கறதால் போலீஸ் கிட்ட போக முடியாது. போனது போனது தான், அந்த நாய் திரும்ப கெடச்சாத்தான், இல்ல நடு ரோட்ல உட்கார வேண்டியது தான் இனி நம்ம கிட்ட சொத்துன்னு சொல்லிக்க எதுவும் இல்ல." என வலியுடன் சொன்னான்.
"என்ன சொல்றீங்க? சொத்துன்னு சொல்லிக்க எதுவும் இல்லையா?" என அதிர்ந்தவள்,
"நமக்கு தான் இந்த வீடு இருக்குல்லங்க. நாம ஏன் கவலைப் படனும்? வாடகை பணம் வருது பேசாம தின்னுட்டு கிடக்க வேண்டியது. பழைய படி வாங்கிக் கொடுக்க வித்து கொடுக்கனு கமிசன மட்டும் வாங்கிட்டு இருங்க. போதும் இனியும் ஏதாவது செய்றேன். இந்த வீட்டையும் வித்துப்புடாதீங்க."
"அடியே இந்த வீடு என் பேருல இருக்குன்னு நினைச்சிட்டு இருக்கியா? மூதேவி! இந்த வீடு, அந்த அனாதை கழுத தென்றல் பேருல இருக்கு." என்றதும் நெஞ்சை பிடித்துக் கொண்டாள் சந்திரா.
"என்னங்க சொன்னீங்க? இந்த வீடு அந்தக் கழுத பேர்ல இருக்கா?"
"என் அப்பன், சாகும் போது அவ பேருல எழுதி வச்சிட்டு போயிட்டான்டி. யாரும் இல்லாத கழுத தான, உருட்டி மிரட்டி வாங்கிடலாம் பார்த்தா, கிழவன் தெளிவா, அவளோட சேர்த்து அவ புருசனும் கையெழுத்து போட்டாத்தான் இந்த வீட்டை விக்கவோ, இன்னொருத்தர் பேருக்கு எழுதிக் கொடுக்க முடியும் எழுதி வச்சி போயிட்டான் சண்டாளப் பாவி. பெத்த புள்ள பேர்ல, பேரன் பேர்ல எழுதாம, அந்த அனாதை சிறுக்கி பேருல எழுதி வச்சிட்டு போயிட்டான்." எனும் போதே சந்திரா தலையில் மேலும் இடியை இறக்கியது போல இருந்தது.
"அப்போ நம்ம நடுத்தெருவில தான் நிக்க போறமா? இப்படி பண்ணிட்டியே பாவி. உன் ஆசைக்கு எல்லா சொத்தையும் வித்துட்டு வந்து நிக்கிறீயே. நாளைக்கு நம்ம பிள்ளைக்கு என்னையா கொடுப்ப? நானும் என் மகனும் கூலி வேலை பார்க்கணுமா? முடியாதுயா ஒழுங்கா அந்த நாய் கிட்ட இருந்து சொத்தை எழுதி வாங்கப் பாரு. இல்லைன்னு ஒனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல என் பிள்ளைய கூட்டிட்டு போயிட்டே இருப்பேன்." என ஆவேசத்தில் கத்த, அவனுக்கு கோபம் வந்ததும்
"என்னடி மு**** சொத்து வாங்க போதும் இளிச்சிட்டு நின்ன? இப்போ இல்லேனதும் வலிக்குதா? போறதுனா போடி, ஒன்ன வான்னு கூப்டு சோறு போட ஒனக்கு நாதி இல்ல. அண்ணன் வீடு இருக்குனு நினைக்காத, சொத்து இருந்ததுனால தங்கச்சி தங்கச்சி வந்து போயிட்டு இருக்கான். சொத்து இல்லன்ற விஷயம் மட்டும் அவ காதுக்கு போச்சி நீ யாருண்டு கேட்பான். அவன் வீட்டு வாசல்ல நின்னு பாரு அடிச்சி தொரத்துவான். ஒனக்கு என் கூட இருந்தா தான் மரியாதை! நியாபகத்துல வச்சிக்க." என்று மிரட்டினான்.
அவன் சொல்வது அத்தனையும் உண்மை என புரிய, புருசன் கூட இருந்தாக் கூட ஏதாவது செஞ்சு காப்பாத்துவான். கோச்சிட்டு போயி கண்டவன் கிட்டையும் ஏச்சு பேச்சு வாங்க முடியாது வேலை பார்த்து கஞ்சி குடிக்க தெம்பு இல்ல என்ன எண்ணியவள் அமைதியாக, "இப்போ என்ன தாங்க பண்றது? "
"அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சி சொத்தை எழுதி வாங்கணும். ஆனா அதுலயும் சிக்கல் இருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்க போறவன் தெளிவானவனா இருந்தா, நம்ம தலையில மொளகா அறைச்சிட்டு போயிட்டே இருப்பான். நம்ம கட்டுப் பாட்டுக்குள்ள இருக்கறவனா, குடிக்காரனா சொல்றதுக்கு எல்லாம் தலையாட்றவனா, வேலை வெட்டி இல்லாதவனா பார்த்து கட்டி வைக்கணும். ஒருத்தன பார்த்து பேசலாம் நினைச்சேன். ஆனா தெளிவா தான் இருக்கான். என் கிட்டே பேரம் பேசினான். அது தான் அவன் வேணானு விட்டுட்டேன். நாதி இல்லாதவன் ஊர் பேர் இல்லாதவனா தேடனும்!" என அவன் யோசிக்க,
"நல்லதா போச்சி. இந்த அனாதை கழுதய என் அக்கா பையன் ரவி, அதான் புத்தி சரியில்லாம இருக்கானே அவனுக்கு கட்டிக் கொடுத்திடலாம்ங்க. என் அக்காவும் தென்றல தான் கேட்டுட்டு இருக்கு. அவளுக்கு சொத்தெல்லாம் தேவை இல்ல. அவளே வசதியா தான் இருக்கா. அவ பையன பார்த்துக்க ஒரு ஆளு கிடைச்சா போதும்னு இருக்கா. அந்த லூசுக்கு இவள கட்டி வச்சிட வேண்டியது தான். என்ன சொல்றீங்க?"
"அந்த லூசையா?" என அவன் யோசிக்க,
"ஏன் உன் அக்கா மகளுக்கு நல்ல வரனா பார்த்து கட்டி வைக்கணும்ண்டு நினைக்கிறீகளோ." என சலித்து கொண்டு கேட்க,
"ப்ச்! அந்த கழுத வாழ்க்கை எப்படி போனா எனக்கு என்ன? அந்த லூச கட்டி வைக்கிறதுனால, சொத்து எழுதி கொடுக்கிறதுல எதுவும் பிரச்சனை வருமான்னு யோசிக்கிறேன். அவன் கையெழுத்து செல்லாது சொல்லிட்டா என்னடி பண்றது?"
"என்னங்க இப்படி சொல்றீங்க?"
"இல்லடி! அந்த பைத்தியக்காரனுக்கு இவள கட்டிவச்சி ஊர் காரனுங்க கிட்ட ஏச்சு பேச்சு கேட்கணுமா? ஊர்க் காரனுங்க வாயடைக்கணும், அதே நேரம் வரப்போறவன் நம்ம சொல்ற பேச்சையும் கேட்கணும். எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். நான் சொன்னா எல்லாத்தையும் செய்வான். அவன் அப்பன் நான் சொல்லித்தான் அந்தச் சீனிவாசன கொன்னான். இன்ன வரைக்கும் அது கொலையினு யாருக்கும் தெரியாது. இப்போ அவன் பையன் நான் சொன்னா என்ன வேணாம் செய்வான். அவனுக்கு கட்டி வச்சி சொத்தை அவ கிட்ட எழுதி வாங்கி, இந்த ஊர விட்டு அவனோட அனுப்பி வச்சிட வேண்டியது தான்." என்று கொரூரமாகத் திட்டத்தை போட்டான்.
"அவன் எப்படி நல்லவனா?"
"கேடு கெட்ட பைய, இல்லாத ஒரு கெட்ட பழக்கம் இல்ல அவன் கிட்ட, கஞ்சால இருந்து பொண்ணுங்க வரைக்கும் எல்லா கெட்ட பழக்கமும் அவன் கிட்ட இருக்கு அடுக்கிட்டே போலாம். ஆனா அவன் நான் சொன்னா மறுப்பு இல்லாம செய்வான். அவன இந்த ஊர் மக்களுக்கு தெரியாது. அதுனால நம்ம மேலே எந்த சந்தேகமும் வராது. தங்கச்சி இல்லைனாலும் அவளுக்கு ஒரு நல்லது பண்ணிட்டான் ஊர் காரனுங்க பேசுவானுங்க. ஆனா உண்மை நமக்கு தான் தெரியும்." என்றான் வன்மத்துடன் சிரித்து கொண்டு.
"கல்யாணத்துக்கு இவளும் அந்த கிழவியும் ஒத்துக்குவாகளா?"
"பேசி பார்ப்போம். ஒத்துக்கல மிரட்டி பணிய வச்சி கல்யாணம் பண்ணி வைப்போம். எவன் கேட்க வருவான்? ஒரு நாதியும் இல்ல ரெண்டுத்துக்கும். சீக்கிரமா வேலய முடிக்கணும் சந்திரா. வீடு அவ பேருல இருக்கிறது தெரிஞ்சா உசாராகிடுவா. அதுக்குள்ள அவள அந்தப் நாய்க்கு கட்டி வச்சிடனும்." என்று தீவிரமாக பேசி விட்டு அவன் செல்ல,
சந்திராவின் மூளையோ வேக வேகமாக திட்டங்களை போட ஆரம்பித்தது, தென்றலின் வாழ்க்கையை
அடகு வைத்து வீட்டைப் பெற நினைக்கும் பேராசை கொண்டவர்களின் நரி திட்டத்திலிருந்து தென்றல் தப்பிப்பாளா? இல்ல சிக்கிக் கொள்வாளா?"
மக்களே
தென்றல் நல்ல சிவத்தோடா திட்டத்துல சிக்குவாளா? யாரு இவளை காப்பாத்துவா? சேத்தனா?தனிஷ்ஷா? கமெண்ட் பண்ண வேணாம், இமோஜி வேணாம்... படிச்சாலே போதும்...
அடுத்த பாகம்
கானம் 13
What's Your Reaction?






