காதல் நாயகன் - 4

Jun 12, 2025 - 08:04
Jun 26, 2025 - 03:27
 0  71
காதல் நாயகன் - 4

நாயகன் - 4

இரண்டு மணி நேரமாக உறங்கியவள் சட்டென கண் விழித்து எழுந்தாள். சுவரில் பதிந்திருந்த கடிகாரத்தை பார்த்து உறங்கிய நேரத்தை கணித்த ஜனனி,

அலைபேசியை கையில் எடுத்து, தனக்காக காத்திருக்கும் ஜீவனை மேலும் அலக்கழிக்காமல்  அழைத்து பேசினாள்.

இளாவின் கோபத்தை பேசி தனித்து விட்டு வைத்தவளுக்கு அவனை நினைத்து கவலை.

என்ன தான் அவனிடம் தைரியமாக பேசினாலும் இளாவையும் அவ்வூரையும் நினைக்க ஜனனிக்கு உள்ளுக்குள் பயமாக தான் இருந்தது. 

எந்த எல்லைக்கும் செல்லும் பெண், அடுத்த என்ன விளைவுகளை ஏற்படுத்தவாளென்ற பயம் இவளுக்குள் எழாமல் இல்லை.

மூன்று மாதங்கள் எந்த பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ளாமல்  நல்லபடியாக இளா இந்தியாவிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே அவளது தற்போதைய வேண்டுதலாக இருந்தது.

தொலை தூரத்தில் முகம் தெரியாத ஆடவனுக்காக  வேண்டிக் கொள்ளும்  தன்னை நினைத்தே அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது...!

யாரென்று முழுதாக தெரியாத ஆணிடம் ஒன்றை வருடமாக கண்ணியமான நட்புறவில் இருக்கிறாள். முகப் புத்தகத்தில் சமையல் குரூப் ஒன்றில் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொண்டனர். 

இளா, முகப்புத்தகத்தில்  பொழுது போக்கிற்காக வித விதமாக உணவுகளை செய்து அதைப் புகைப்படமாக  பிடித்து முகப்புத்தகத்தில் செய்முறையோடு சேர்த்து பதிவு விடுவான். அதில் அவனுக்கு அலாதி இன்பம்.

அவன் பதிவு செய்யும் உணவுகளின் செய்முறைகளை படித்து விட்டு வீட்டில் செய்து அசத்தியிருந்தாள் ஜனனி.

அதற்காகவே இளாவை அவள் ஃபாலோ செய்திருந்தாள். ஆனால் அவனோ அவளது ரெக்வஸ்ட்டை உடனே ஏற்கவில்லை. 

ஜனனியும் எதுவும் நினைக்கவில்லை... ஆனால் தொடர்ந்து அவனது பதிவுகளை படித்து அதே போல் செய்தாள். ஒரு புது உணவை அவன் செய்முறையோடு பதிவு செய்திருந்தான். பார்த்ததுமே நாவில் எச்சி ஊறியது அவளுக்கு. அதை செய்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு வீட்டில் செய்து பார்த்தாள். அவன் செய்தது போல சரியாக வரவில்லை.

அந்தப் பதிவிலேயே  அவனிடம் தன் சந்தேகத்தை கேட்டாள். அவனும் அவளது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய பதிலும் அனுப்பியிருந்தான்.

ஆனாலும் அவளுக்கு விலங்க வில்லை. ' புரியவில்லை' என்ற பதிலை அவனுக்கு அனுப்பியிருந்தாள் . அவளது ப்ரோஃபைல் சென்று பார்த்தான். அவள் அவனுக்கு ரெக்வஸ்ட் கொடுத்திருப்பது தெரிய அதை ஏற்றவன், அவள் அனுமதியுடன் மெசஞ்சரில் தெளிவாகப் பேசி பதில் அனுப்பியிருந்தான். 

அவளும் அதை கேட்டு அப்படியே செய்தாள் நன்றாக வந்திருக்க, சுதாவும் விபு பாராட்டி தள்ளியிருந்தனர். அதை அவனிடம் பகிர்ந்தாள். அப்படியே அவர்களது அறிமுகப்படலத்துடன் ஆரம்பித்த பேச்சு, ஒன்றை வருடத்தை தாண்டியது. 

பெரும்பாலும் அவர்களது பேச்சு உணவுகளை சார்ந்தே இருந்தது. நாட்களாக செல்ல இளா தன்னைப் பற்றி பாதி மட்டுமே பகிர்ந்திருந்தான்.

இவளும் ஒரு கட்டத்தில் அவனை நம்பி தன்னைப் பற்றியும் பகிர்ந்திருந்தாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகிப் போனார்கள்.

அவளிடம் புகைப்படத்தை அனுப்ப சொல்லியோ இல்லை தனது புகைப்படத்தை அனுப்பியோ அவன் பேசவில்லை... பெரும் பாலும் அவர்கள் பகிரப் பட்டது எல்லாமே உணவுகளின் புகைப்படமே ! அவனது கண்ணியமான பேச்சும் செயலும் தான் இன்று வரை அவன் அவளது நட்புறவில் இருக்கிறான்.

அவனும் எல்லை மீறி அவளிடம் பேசியது இல்லை. எல்லையோடு நிறுத்திக் கொண்டு பேசுவதே அவன் மீது நம்பிக்கை உண்டாகியிருந்தது. அவர்கள் நட்பு, எண்களை மாற்றி அழைத்து பேசிக் கொள்வது வரை முன்னேறியிருந்தது. 

ஜனனி, இளாவை இன்னொரு விபுவாகத் தான் பார்த்தாள். ஆனால் உறவேதும் இல்லாமல் தனிமையில் இருக்கும் இளாவிற்கு அவளது குரலும் குறுஞ்செய்தியுமே உலகமே என்றாகிப் போனது. 

அவள் மீது காதலும் வந்து விட்டது. ஆனால் அவளிடம் பகிர தான் முடியவில்லை.  தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் அவளிடம் காதலை பகிர்ந்து அந்த நம்பிக்கையை உடைக்க விரும்பவில்லை. எதுவரை நீள்கிறதோ அதுவரை நீளட்டும் இந்த உறவென தன் காதலை சொல்லாமல் மறைத்து தான் அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறான். 

நெருப்பை அணைக்கலாம் ஆனால் புகையை? ஒரு வருடம் என்றாலும் அவர்கள் நட்பு இன்னும் பலமாகிப் கொண்டே போகிறது.

ஆனாலும் ஜனனிக்கு உள்ளுக்குள் சிறு நெருடல் இருக்கிறது. முகம் தெரியாத ஆணுடன் நட்பாக பேசுவது வெளியே தெரிந்தால் தன்னை என்ன நினைப்பார்கள் என்ற நெருடல் தான்.

ஒரு வார்த்தை கூட எல்லை மீறி பேசாத நட்புடன் பேசுவது என்ன தவறென? ஒரு மனம் வியாக்கினாம் பேசினாலும் இன்னொரு மனம் கண்ணியமாக ஒரு ஆணிடம் நட்புடன்  பேசினாலும் வெளியே அதை தவறான உறவென்று தான் நினைப்பார்கள். உள்ளுக்குள் உரைத்தாலும் ஜனனிக்கு இளாவை தவிர்க்க முடியவில்லை. வருவதை பார்த்துக் கொள்ளாமல். தனக்கு மன நிம்மதியை முக்கியம் என்று விட்டு விட்டாள்.

கூந்தலை அள்ளி முடித்துவிட்டு கூடத்திற்கு வர, வள்ளி சமையலை முடித்து விட்டு பேரனுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

" சாரி அத்தை ! அடிச்சி போட்டது போல தூங்கிட்டேன். இருங்க வேகமாக சமைச்சிடுறேன்"என சமையலறைக்குள் நுழைய இருந்த ஜனனியை தடுத்தார்  வள்ளி.

"சமையல் வேலை முடிஞ்சது ஜானு!அவர் வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம். நீ இப்படி வந்து உட்காரு ! குடிக்க எதுவும் வேணுமா ?"என்று மிக சாதரணமாக கேட்டார்.

இவளுக்கு என்னவோ போலானது"ஏன் அத்தை என்னை எழுப்பல? நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க?"என்றவள் அவரை சமைக்க விட்டு தூங்கியதை நினைத்து வருந்தினாள்.

"இன்னைக்கி ஒரு நாள் சமைச்சது எனக்கு கஷ்டமா என்ன ? வீட்டு வேலை கேட்ரிங் வேலைன்னு நீ ஓடுற,  நான் வீட்ல சும்மா இருக்கேன் இன்னைக்கி ஒரு நாள் நான் சமைச்சேன் உடனே நான் கஷ்டப்படுறேனா? போதும்டி மா  ! ஒரு வேலை பார்க்க விடாம  நீயே எல்லாம் செஞ்சு எங்களை ரொம்ப சோம்பேறி ஆக்குற ? "என பொய்யாய் கோபம் கொள்ள, 

அதை கண்டு சிரித்தவள்" இப்போ நீங்க ரெஸ்ட் எடுக்க, ஊர் சுத்துர வயசுல இருக்கீங்க... நல்லா  ரெஸ்ட் எடுக்கணும். மாமா கூட சேர்ந்து வெளிய போய் என்ஜாய் பண்ணணும்... இந்த வயசுல இந்த வேலைகளை தான் நீங்க செய்யணும் அத்தை !" என அறிவுரை சொல்ல அவருக்கோ வெட்கம் வந்ததது. அவரது வெட்கத்தை கண்டு வாய் விட்டு சிரித்தாள்.

"அது இருக்கட்டும் ஜனனி ! ஏன் உன் அம்மா முகம் கொடுத்து கூட சரியா பேசல? என்னாச்சி?"என இவளிடம் கேட்க சிரித்துக் கொண்டிருந்த முகம் இறுகியது. பதில் சொல்லாது தன் மடியில் இருந்த விரல்களை பார்த்தபடி இருந்தாள்.

"என்ன ஜனனி ? உன் கிட்ட தான் கேக்குறேன் பதில் சொல்லு !"

"அது... அது ஏதாவது டென்ஷனல அப்படி இருந்திருப்பாங்க அத்தை ! நீங்க அதை பத்திலாம் கவலை படாதீங்க !" என சமாளிக்க முயன்றாள். ஆனால் அவரோ ஜனனியின் முகத்தை வைத்து பிரச்சனை என்று கணித்தார்.

"உன் அம்மாக்கு என்ன டென்ஷன்? தாய் மாமன் பொண்டாட்டினு டென்ஷனா ? அதுவும் கல்யாணத்து  அன்னிக்கி இருந்தா சரினு  சொல்லலாம்... ரிஷப்சன்லையும் முகம் கொடுத்து பேசலை ஏன்? நான் என்னமா பண்ணினேன்?!"என்று அவர் சரியாக கணித்து கேட்க, ஜனனியோ தயங்கி "அவங்களுக்கு என்  மேலே கோபம் அத்தை. அதை தான் என்னை சார்ந்த உங்க கிட்ட காட்டிட்டு இருக்காங்க "என்று உண்மையை சொன்னாள்.

"என்ன கோவமாம் உங்க அம்மாவுக்கு?"

"வேறென்ன அத்தை, விபு ! இன்னொரு கல்யாணம் பண்ணி நல்லா இருக்கான். ஆனா நான் மட்டும் தனியா குழந்தை, நீங்கன்னு இருக்கேன்ல அந்தக் கோபம் தான்... என் மேலே இல்லாம உங்க மேலயும் காட்டிட்டு இருக்காங்க" என்று விளக்கினாள்.

"அவங்க கோபத்துல எந்த தப்பும் இல்லம்மா" எனவும் அதிர்ந்த ஜனனி"என்ன அத்தை சொல்றீங்க?"என்றாள்

"கொஞ்சமும் உன் வாழ்க்கைய பார்க்காம உன்னை எங்க கூட வச்சிட்டு சுயநலமாக இருக்கோம் தோணுது. இதுவே உன் அம்மா வீட்ல இருந்திருந்தா நீ இன்னொரு கல்யாணம் பத்தி யோசித்து இருப்பேல !" என்றார் கலங்கி கண்களுடன்.

"அத்தை என்னை பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி பேசலாமா? இன்னொரு கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இருந்தால், அந்த முடிவை எல்லார் கிட்டயும் சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்க மாட்டேனா? என் அப்பா வீட்ல இருந்திட்டு பாருங்க சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? அங்க போன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க தான் இங்கே இருக்கேன் அத்தை. நீங்களாவது என் மனசை புரிஞ்சிக்கங்க. எனக்கு என் சச்சின் போதும் இன்னொரு கல்யாணம் வேணாம் எனக்கு !"என்றாள் தன் நிலமையை விவரிக்க முடியாமல்.

"சரி கல்யாணம் வேணாம்... நாங்க இருக்கோம், நீ எங்க கூட இருப்ப, எங்களுக்கு அப்புறம்?"

"சச்சின் இருப்பான் என் கூட"என்றாள்.

"அவனுக்கு அப்புறம்?"

அவள் தடுமாறினாலும்"தனியா இருப்பேன் அத்தை... எனக்கு யாரும் வேண்டாம்"என்றாள் உறுதியாக,

அவரும் சிரித்துக் கொண்டே "சரி டி மா ! பாக்கலாம்... இதே உறுதியோடு இருக்கியா? இல்ல உன் மனசு மாறுதானு பார்ப்போம்..."என்று சிரித்துக் கொண்டே எழுந்து சென்றார். 

அவளும் தன் முடிவில் மாற்றம் இல்லை என்ற உறுதியோடு  இருக்க, அந்த உறுதியை அசைத்து பார்க்கவே பிறந்த ஜீவன் அவளுடன் பேச வேண்டிய வேளையை ஆவலுடன் காத்திருந்தது.

அந்த ஜீவனையே சோதிக்க இன்னொருவள் தன் நண்பர்களிடம் திட்டம் போட்டு கொண்டிருந்தாள்.

***

இரவு நேரம் நெருங்க , கூடத்திற்கு வந்த இளா, வசந்தி அமர்ந்திருப்பதை கண்டு வேண்டா வெறுப்பாக அவர் அருகே சென்று" நைட் டின்னர் என்ன சமைக்கட்டும்?" என்று கேட்டான்.

அவரோ அவனை ஏறிட்டு பார்த்தவர், அலைபேசியை தூக்கிக் காட்டினார்.

"ஆங்... என்ன?" என்றான் புரியாமல் 

"உன் வாட்ஸ் ஆப்ல லிஸ்ட் அனுப்பியிருக்கேன் பாரு !"என்று சவுடாலாக சொல்ல, "லிஸ்ட் ஆ?"என அதிர்ந்து வேகமாக புலனத்தை திறந்து பார்த்தவனுக்கு நெஞ்சு வலி வராத குறை தான். 

அசைவ உணவுகள் அனைத்தையும் அதில் இருக்க, குறுகிய காலத்துக்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என்று மித்ரா கட்டளையிட்டிருந்தாள். தொலைபேசியில் வரும் ப்ரோகிராமில் கொடுக்கும் டாஸ்க்  போல இருந்தது அவனுக்கு.

"என்ன விளையாட்றீங்களா பாட்டியும் பேத்தியும்...? இப்ப இந்த லிஸ்ட் கொடுத்து செய்ங்கனா எப்படி செய்றது? காலையில சொல்லி இருக்கணும். அட்லீஸ்ட் மத்தியானத்துல கூட சொல்லி இருக்கலாமே ! ஏன் என்னைய படுத்திருங்க ரெண்டு பேரும்?" என ஆதங்கத்தில் கத்தியிருந்தான் இளா.

"இப்படி கேள்வி கேட்டு டைம் வேஸ்ட் பண்றதுக்கு வேகமாக போய் வேலைய செய் மேன்... என் பேத்தியும் அவ ஃப்ரெண்ட்ஸ்ம் வந்திடுவாங்க ! அப்புறம் எதுவும் செய்யலேனா கத்துவா ! போ " என்று அசால்ட்டாக சொன்னார்.

" என்னால எதுவும் செய்ய முடியாது ! உங்க பேத்திக் கிட்ட சொல்லிடுங்க...! "என்று வீராப்பாக உள்ளே செல்ல,

"அப்படியா ! உன் காண்ட்ராக்ட் முடிய மூணு மாசம் தான இருக்கு. அந்த மூணு மாச சம்பளத்தை கொடுத்திட்டு நீ வேலையை விட்டுப் போகலாம்" என்றார் கட்டளையாக, அவனது நடையோ நின்றது. திரும்பி அவரை தீயாக  முறைத்தான். 

"இந்த முறைக்கற வேலைய விட்டுட்டு போய் வேலைய பாரு"என்றார்.

கோபத்தில் முஷ்டியை இறுகிய படி இயலாமையுடன் சமையலறைக்குள் சென்றவனுக்கு கண்ணீர் நிக்காமல் வலிந்தது. ஆண் என்றால் அழக் கூடாதா என்ன? பெண்களுக்கு மட்டும் கண்ணீர் சொந்தமில்லையே !

குளியலறை சென்று தண்ணீரை முகத்தில் அடித்து விட்டு கண்ணீரை மறைத்தவன் வேகமாக சமையலறைக்கு வந்து வேலையை தொடங்கினான். பஞ்சுவிடம்  அவரால் இயன்ற வேலையை கொடுத்து செய்ய சொல்லி இருந்தான்.

மித்ரா , கொடுத்த உணவு பட்டியலில் இருந்த அனைத்து உணவுகளை நேரமாக செய்து முடித்திருந்தான். அதே நேரம் தனது நண்பர்களுடன் வந்து சேர்ந்தாள் மித்ரா. 

நேரத்துக்கு வீட்டுக்கு வருவதே இல்லை... அதை வசந்தி கண்டிப்பதும் இல்லை. அவரது தந்தை வெங்கட்ராமனும் கேட்டால் எதையாவது சொல்லி சமாளித்து பேச்சை மாற்றி விடுவாள். இவனும் அவளிடம் பேசி பார்த்தான் அவளோ கேட்கவில்லை மாறாக காதலை ஏற்க சொல்லி பேரம் பேசினாள். இளாவோ அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.

சமையல் வேலை  முடிந்து உணவுகளை மேசையில் அடிக்கி வைத்து விட்டான்... எல்லாம் நேர்த்தியாகச் செய்திருந்தான். 

உடல் வலி வேறு தூங்கும் நேரம் தாண்டிச் சென்று விட்டது. இந்தியாவின் நேரம் நடு இரவாக இருக்கும். ஜனனி உறங்கியே போயிருப்பாள். பேச முடியாமல் போனது. உள்ளுக்குள் ஆதங்கம், இயலாமை கோபம், வருத்தம் என கலவையாக கனன்று கொண்டிருந்தது.

மித்ரா , உணவு மேசையை பார்த்து பிரமித்து தான் போனாள். செய்ய மாட்டான் என்று எண்ணி இருந்தாள், அதை வைத்து அவனை திட்டி , கன்னத்தில் அவன் கொடுத்த அடியை திருப்பி கொடுக்க வேண்டும் தன் காலை பிடித்து கதற வைக்க வேண்டும் " என்று பல திட்டத்துடன் வந்தவளுக்கு அந்தத் திட்டத்தை செயல் படுத்த வாய்ப்பை அவன் தரவே இல்லை... சொன்னதை செய்து விட்டான் நேரம் காலம் பார்க்காமல்.

"நீங்க சொன்னதெல்லாம் செஞ்சிட்டேன். நான் தூங்க போறேன்" என்று நகர்ந்தவனை போக விடாமல் " யார் சர்வ் பண்ணுவா? எங்க பாட்டியா? வந்து சர்வ் பண்ணும்" என்றாள் புருவங்களை உயர்த்தி திமிராக, வேறு வழியில்லாமல் அவனும் பரிமாறினான்.

அவன் பரிமாறிய உணவுகள் அத்தனையும்  ருசியாகத் தான் இருந்தன. ' எதற்கு வந்தோம்?' என்பதை மறந்து, உண்பதிலே அவர்களது கவனம் செல்ல, மித்ரா தான் கடுப்பாகிப் போனாள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த தோழியை இடித்து"எதுக்கு வர சொன்னா என்னடி பண்ணிட்டு இருக்கீங்க?" என்று பல்லை கடித்தாள்.

"ஓ... சாரி சாப்பாடு நல்லா இருந்தது அதான்..."என்று கையை நக்கிய படியே சொல்ல அவளை தீயாக முறைத்தாள் மித்ரா.

"கோவபடாத மித் இரு எப்படி ஆரம்பிக்கிறேன் பார்!"என்றவள் தட்டை மேசையில் வீசி,

"என்ன டிஷ் இது? வாயில வைக்கவே முடியல ?"என்று ஆரம்பித்தாள். அவனோ புருவத்தை சுருக்கி அவளை பார்த்தான்.

"ஆமா ! இது நல்லாவே இல்ல மண்ணு மாதிரி இருக்கு மித்து !"என்று இன்னொருவன் சொல்ல,

"இதுல உப்பு சாஸ்தி ! வாயில வைக்க முடியல உவ்வே!" என இன்னொருவன் வாந்தியெடுப்பது நடித்தான். மித்ராவின் நண்பர்கள் ஒவ்வொருத்தராக இளாவின் சமையலை குறைச் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொன்றாக குறை சொல்லும் போது பதறியவன், மித்ராவை பார்த்தான்.  அவளது உதட்டில் தவழ்ந்த நக்கல் சிரிப்பிலே இதெல்லாம் அவளது திட்டம் என்று  புரிந்தது. முஷ்டியை இறுகி தன் கோபத்தை கட்டுப் படுத்தி அமைதியாக இருந்தான்.

அவன் அருகே வந்து நின்ற மித்ரா "டேஸ்ட் ஆ சமைக்க முடியல ! ஆனா வீரப்பா பேச மட்டும் செய்வ ! என்ன சமைச்சிருக்க நீ? ஆங்... என் ஃப்ரெண்ட்ஸ உன்னை நம்பி டின்னருக்கு இன்வைட் பண்ணிருந்தேன். என்னோட சேர்த்து அவங்களை டிசப்பாயின்டட் பண்ணிட்ட, ச்ச... உன்னை நம்பினேன் பாரு ! இதெல்லாம் ஒரு சாப்பாடா? " எனக் கேட்டு அவன் முகத்தில் தூக்கி அடித்தாள் எச்சில் உணவை.. "நீயே இதெல்லாம் கொட்டிக்க... வாங்க காய்ஸ் !  " என்று முன்னே சென்றவள் மீண்டும் அவனிடம் வந்து நின்றாள்.

தலைகுனிந்து நின்றவன் மீண்டும் தன் முன் வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்தான். அவளோ பளாரென கன்னத்தில் அறைந்தவள்" என் டாடிக் கூட  என்னை அடிச்சது இல்ல... ஆனா நீ அடிச்சிருக்க ! அதுக்கு பழி வாங்க வேணாம் ! எனிவே சாப்பாட்டு எப்பவும் போல அருமையா இருந்தது ! பை "என்று திமிராக பேசி, அடியை திருப்பிக் கொடுத்த சந்தோஷத்தில் அங்கிருந்து சென்றாள்.

அவனது ஆடையிலும் முகத்திலும் உணவாக இருக்க அவள் அடித்த தடம் வேறு கன்னத்தில் இருந்தது. அவள் நண்பர்கள்  முன் வேறு  அவமானப் படுத்தப்பட்டான். இவை எல்லாம் நினைக்கும் போது  அவனால் தாங்க முடியவில்லை. நெஞ்சை பிடித்துக்  கொண்டு கதறினான்.

வலி நெஞ்சை அடைத்தது. தாங்க முடியாத வலி, வேகமாக அறைக்குள் சென்று அலைப்பேசியை எடுத்து நேரம் காலம் பார்க்காமல் ஜனனிக்கு அழைத்திருந்தான்.

மகனை அணைத்து உறங்கிக் கொண்டிருந்தவள், அலைபேசி அலறவும் பதறி எழுந்தாள்.

சச்சின் சிணுங்க, அவன் நெஞ்சில் தட்டி அமைதி படுத்திய படி அலைபேசியின் சத்தத்தை குறைத்தவள், எடுக்க யோசித்தாள்.

மீண்டும் அழைத்தான், எடுத்து காதில் வைத்து" ஹலோ இளா? என்ன இந்த நேரத்துல " என பதற்றத்துடன் கேட்டாள். 

இளாவும்  அவள் குரலை கேட்டதும் கண்ணீர் வழிய "அன்னம்மா " என்றான். அவன் குரல் உடைந்து போயிருக்க, அதை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ போல் இருந்தது. "என்ன டா?" என்றாள் படபடவென அடித்துக் கொண்டே மனதுடன். 

சட்டென சுதாரித்தவன், அழைப்பை துண்டித்து விட்டு அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டான். 

பாவம் இவள் தான் என்ன ஏதென்று தெரியாமல் பயத்தில் மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைத்தாள். இளா எடுக்காமல் போக, நொந்து போனாள்.

அவன் பேசாமல் அலைபேசியை வைத்ததும் மீண்டும் மீண்டும் அழைத்து அவன் எடுக்காது போனதையும் எண்ணி அவள் தூக்கத்தை தொலைந்திருக்க, 

நடந்ததை எண்ணி அசைப்போட்டுக் கொண்டிருந்தவனும் உறங்கவில்லை இருவரும் ஒருவரை ஒருவர் எண்ணிக் கொண்டு இரவை உறங்காமல் கழித்தனர்

What's Your Reaction?

Like Like 5
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 1