நெடுஞ்சாலை கானமே - 6

Jun 25, 2025 - 08:05
Jun 30, 2025 - 04:28
 0  29
நெடுஞ்சாலை கானமே - 6

கானம் - 6

முத்தம்மா உறங்கிக் கொண்டிருந்த நேரம், பின்பக்க வழியாக உள்ளே நுழைந்தான் நல்லசிவம்.

மூலையில் கிழிந்த பாயில் உறங்கிக் கொண்டிருந்தவரின் தூக்கத்தை கலைக்க, நாற்காலியைத் தரதரவென இழுத்து நடுக்கூடத்தில் இருத்தி அதில் அமர்ந்தான். அந்த அரவத்தில் பதறியடித்து எழுந்தார் முத்தம்மா.

தன் தாய், வயதானவர் என்றெல்லாம் அவன் பார்க்க மாட்டான். அவனுக்கு, வந்த வேலை ஆக வேண்டும் அதற்கு அவன் என்ன வேண்டுமென்றாலும் செய்வான். 

மற்றவர்களை எண்ணி எல்லாம் அவன் கவலை பட்டதில்லை. ஈவு, ஈரம், இறக்கம் எல்லாம் அவனிதயத்தில் இல்லை. மற்றவர்களை எதுவும் செய்யாது போனால் தான் ஆச்சர்யம்.

பயந்து எழுந்தவர் மகனைக் கண்டதும் திகைத்துப் போனார். வாசல் கதவைப் பூட்டி வைத்திருந்தவர், பின்பக்கக் கதவைச் சற்று சாத்தி விட்டுப் படுத்திருந்தார். 

நல்லசிவம் என்றுமே வீட்டின் முன்பக்க கதவு வழியாக வந்ததில்லை, வர மாட்டான். முன்பக்க வழியாக வருவது அவனுக்கு அவமானம், அசிங்கம் என நினைத்துக் கொண்டிருக்கிறான். அதனாலே அவன் பின் பக்க வழியாக  தான் வீட்டிற்குள் அதுவும் எதுவும் காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டுமே வருவான். இன்றும் கூட ஒரு காரியம்  ஆக வேண்டும் என்பதற்காகத் தான் வந்திருக்கிறான்.

கால்மேல் கால் போட்டுக் கொண்டு முத்தம்மா பயந்ததை எள்ளல் நகையுடன் அவரைப் பார்த்தார்.

"நீயா? நான் எதுவும் சாத்தியிருந்த வீட்ல நாய் எதுவும் வந்திருச்சோண்டு நெனைச்சுட்டேன்." என அவிழ்ந்த முடியை அள்ளி முடித்தபடி அவனைப் பதிலுக்குத் தாக்கினார். தன்னை நாய் என்றதும் சீற்றம் கொண்டவர், அதைத் தன் பேச்சின் மூலம் காட்டினார்.

"என்ன கிழவி ஒனக்கு நக்கலாம் பண்ண தெரியுது? இழுத்துட்டு கிடப்ப,  ஒனக்கு முத்தித் தரப் பாலு ஊத்தலாம்னு வந்தா, நீ என்ன உன் பேத்தி கையால சோறு தின்னு இன்னும் திடமா இருந்து என்னையே நக்கல் பண்ற? எப்பத்தான் சாவ?" என நக்கல் இழையோட கேட்டான்.

"பெத்த மகன் சோறு போட்டாக் கூட இந்நேரம் எனக்கு வாய்க்கரிசியா போயிருக்கும். என் மகப் பேத்தி போடற சோறு,  ஆயுள கூட்டி தொலைக்குதேப்பா! அதுக்கு ஒரு நல்ல இடமா பார்த்து முடிச்சி அனுப்பினாத்தான் என் உயிர் என்ன விட்டுப் போகும்." என்றார்.

"அப்ப நீ சீக்கிரமா சாக ஒனக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன் என் ஆத்தா." என்றவன் குரலையை செருமியவர்.

"ரொம்ப நாள் கழிச்சு உம்மகன் வந்திருக்கேன் அவனுக்கு என்ன வேணும் கேட்டுக் கொடுக்கணும் தோணலையா ஒனக்கு?" நாற்காலியின் மேல் ஒரு காலை வைத்துச் சவுடலாக அமர்ந்து கொண்டு கேட்டார்.

"நாள் கழிச்சி வந்தாலும் எம்மவன் நீ என்ன என் மவனாவா வந்திருப்ப? இந்தக் குடிசையையும் எப்படி இவளுக கிட்ட அபகரிக்கலாம் தான திட்டம் போட்டு வந்திருப்ப. வந்த விஷயத்தைக் கூறும்." எனச் சலித்து கொள்ள,

"வயசானா மூளை மலுங்கும்பாங்க, ஒனக்கு என்ன, தெளிவாகிட்டே போகுதே !" எனக் கிண்டல் செய்ய,

"பெத்த புள்ளையே இந்தக் காலத்துல சுயநல நாயா இருந்தா, வயசானாலும் சுதாரிச்சி வாழ வேண்டி இருக்கே!" என்றார் பதிலுக்கு.

"நல்லாவே பேசக் கத்துக்கிட்ட நீயி உம்பேத்திக்குக் கூடச் சேர்ந்து. சரி நான் விஷயத்துக்கு வர்றேன். உம் பேத்திக்கு ஒரு நல்ல வரனா பார்த்திருக்கேன், அவங்க கிட்ட பேசி முடிச்சி அதுக்கு ஒரு நல்லது பண்ணி விட்லாம்னு நெனைக்கிறேன் நீ என்ன சொல்ற?" என்று விட்டேறியாகக் கேட்டான். அவரோ சுருங்கிய கண்களை விரித்து அவரை உத்து பார்த்தார். அவனும் அவரது பார்வையை கண்டு, "என்ன?" என்று கேட்டான்.

"என்ன ராசா! உம்ம தங்கச்சி மக மேலே திடீர் பாசம்? அவளுக்கு நல்லது பண்ணனும் நெனைக்கிற?"

"பின்ன வயசு பொண்ண எத்தனை நாளைக்கு வீட்டிலே வச்சுக்க போற? போறவன் வர்றவனெல்லாம் உன் மருமவளுக்கு வரன் பாக்கலியானு என் கிட்ட தான வந்து கேக்குறானுங்க. கூடப் பொறந்த பொறப்புக்காகவும் ஒண்ணா பழகின நட்புக்காகவும் அவளுக்கு ஒரு நல்லது பண்ணலாம் நெனைக்கிறேன். அதான் நானே மாப்பிள்ளைய பார்த்து வச்சிருக்கேன் பேசி முடிச்சி வைக்கிருக்கேன். சீர் செய்ய, மாப்பிள்ளைக்கு நகை போட, உம் பேத்திக்கு நகை போடன்னு எத்தனை பவுன் சேர்த்து வச்சிருக்க நீயி?"

"எங்க கிட்ட ஏதுயா நகை, பணமெல்லாம்? எல்லாத்தையும் தான் புடுங்கிட்டீங்களே நீயும் உன் பொண்டாட்டியும். குண்டு மணி தங்கம் கூட என் கிட்ட இல்ல. அவளுக்கு வரன் பார்க்கற நீயே நகைய போட்டுக் கட்டிக்கொடு ராசா செஞ்ச பாவத்துக்குப் புண்ணியம் ஒனக்கு கிடைக்குதானு பார்ப்போம்." என்றார் முத்தம்மா.

அவர் சொன்னதும் அதிர்ந்த சிவமோ, "என்ன கிழவி நக்கல் பண்றீயா? வயசு பொண்ணுக்கு நகை கூடச் சேர்த்து வைக்காம என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?  உம்ம பேத்தி அவ சம்பளத்தை வச்சு என்ன பண்றா?"

"உன் பொண்டாட்டி உறிஞ்சிடுறா? பிறவு நாங்க எங்க நகை சேக்கறது?"

"என் பொண்டாட்டி என்ன செஞ்சா? அவள ஏன் குத்தம் சொல்ற நீ? அவளா உம் பேத்தி கிட்ட வட்டி வாங்கிட்டு இருக்கா? சும்மா பேசணும்ண்டு என் பொண்டாட்டியா பேசாத."

"அதானே உன் பொண்டாட்டி உத்தமி! அவ மேலே சேர இழைக்கறோம் நாங்க. ஊருக்கே தெரியும் வனஜா மூலமா எம்பேத்திக்கிட்ட வட்டி வாங்கறது உன் பொண்டாட்டி தான். ரெண்டு நாள் கழிச்சு கொடுக்க நெனைச்சா கூட ஊருக்குக் கேட்கக் கத்தி வாய் நாறப் பேசறது உனக்குக் கேக்கலியாக்கும்." என்று  முகம் இறுக கேட்டார்.

"பின்ன உமக்குக் காசைக் கொடுத்துட்டு உன்னையும் பேத்தியையும் தாங்கிட்டு கிடக்கணுமா? ரோசம் பார்த்து உம் பேத்தி எங்க கிட்ட பணம் கேட்காம வெளிய கேட்டு திரிஞ்சா இல்ல, பாவம் பார்த்து எம்பொண்டாட்டி இருக்க காச கொடுத்த ஒதவுனா, ரெண்டு பொம்பளைங்களுக்கும் வட்டிக் கட்ட கசக்கும்... பணத்த வாங்க தெரிஞ்சவங்களுக்கு வட்டி கட்டவும் தெரியனும்ல. அந்த வட்டிய கேட்டா சோத்துக்கு வழியில்லாத எச்சைங்களுக்கு கோபம் வருதோ."

"ச்சீ வாய மூட்றா! நாங்க ஒன்னும் எச்சைகங்க இல்ல, சோறாக்கலைனாலும் பரவாயில்ல பசியில் கிடந்தாலும் பரவாயில்ல ஆனா பணம் விஷயத்துல மட்டும் சரியா இருப்பா எம்பேத்தி. மத்தவங்களை கொன்னு அவங்க சொத்த அனுப்பவிக்கற ஈனப் பிறவி இல்ல." என்றவர் ஹாசியம் பேசியது போல நல்லசிவம் சிரித்து விட,  முத்தம்மாவோ அவரை வெறித்தார்.

"காசு இல்லைனாலும் பேச்சில ஒன்னும் குறைச்சல் இல்ல. குண்டு மணி போடக் கூட நகை இல்ல. சீர் வரிசை செய்யப் பணமில்ல, இந்த லட்சணத்தில உம் பேத்திய  எவன் கட்டிக்க வருவான்? இருந்தாலும் உம் பேத்திக்கு கல்யாணம் பண்ணனும்ல. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான் பணம், நகை எல்லாம் எதிர்பார்க்க மாட்டான், அவன் குடும்பமும் அப்படி தான். அவன்கிட்ட பேசறேன். நீயும் உம் பேத்திக்கிட்ட சொல்லிக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வை! உங்க தகுதிக்கு அவங்களே அதிகம் தான் இருந்தாலும் பேசி முடிக்கிறேன்." என்று வந்த வழியாக சென்று விட, முத்தம்மாவிற்கு ஈரக் குலையே நடுங்கியது. 

நல்லசிவத்தின் மேல் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. அதுவும் இவன் பார்த்த மாப்பிள்ளை என்றாலும் நிச்சயம் குடிகாரனாகவோ, இல்ல பொம்பள பொறுக்கியாவோ, இல்ல ஒன்னுத்துக்கும் ஒதவாத லாய்க்கி இல்லாதவனாகத் தான் இருப்பான். பேத்தி வாழ்க்கை கெடுக்க மகனும் மருமகளும் திட்டப் போட்டு விட்டது போல எண்ணம் தோன்றியது. மனசு பதறியது.

நல்ல சிவம் வந்து பேசியதைப் பேத்தியிடம் சொல்ல, அவளோ உண்டு முடித்துத் தட்டிலே கையைக் கழுவியவள்,

"காசு இல்ல பணம் இல்லைன்னு உம் மகன் காட்ற கண்டவனையும் கட்டிக்க மாட்டேன். நீ கவலைப்படாத, என் கல்யாணம் நான் முடிவெடுக்க வேண்டிய விஷயம். நானே எனக்கு மனசுக்கு புடிச்சவனா பார்த்துக் கல்யாணம் பண்ணிப்பேன். இதுல எவனும் தலையிடனும் அவசியம் இல்ல. அவர் சொன்னதும் கழுத்த நீட்டிருவேண்டு எல்லாம் நெனைக்காத அவர நான் பார்த்துக்கிறேன்." என்று எழுந்தவள்.

"வீட்டு சாமான் வாங்கற பணத்த தான் வட்டிக்குக் கொடுக்கப் போறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க, செல்விக்கா கொடுத்ததும் வாங்கிடலாம்." என்றாள். அவரும் தலையை ஆட்டிவிட்டு தட்டை எடுத்துக் கொண்டு போனார்.

மாமனின் திடீர் செயல் அவளை உள்ளுக்குள் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி எச்சரிக்க, அவரது திடீர் அக்கறையில் ஏதோ ஒளிந்து இருப்பதாக உள் மனது சொன்னது. அவளும் அது 'என்னவென்று தான் பார்ப்போம்' என்று எதற்கும் துணிந்து விட்டவள், முத்தம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே சென்றாள்.

யோசனையுடனே வனஜா வீட்டிற்குள் நுழைந்தாள். உள்ளே வேலை செய்து கொண்டிருந்த வனஜா இவளது அரவத்தை கேட்டுக் கூடத்திற்கு வந்தார்.

"வாடி டூர் எல்லாம் எப்படி இருந்தது? அங்க இருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்த?" எனக் கேட்டார்.

"அல்வா தான். வட்டிக்கு பதில அல்வா வச்சிக்க சித்தி." என்று அல்வா பொட்டனத்தையும் கூடவே மூலிகை வேரு நிரம்பிய தையலத்தையும்  நீட்ட, அதை வாங்கி வைத்தவர்.

"நீ எனக்கு வட்டிக்கு பதில அல்வா தான் கொடுத்தன்னு அவகிட்ட நான் சொன்னா, உன் அத்தைக்காரி எனக்கு அரளி விதைய அரைச்சி கொடுத்துடுவா. வட்டி மட்டும் ஒழுங்கா கொடுக்கலே ஊர் முன்னால சந்தி சிரிக்க வச்சிடுவா."

"அது செய்றது இருக்கட்டும், நீ என்ன? வட்டிக் கொடுக்க, ரெண்டு நாள் தான லேட்டாச்சி. அதுக்கு ஏன் ரோட்ல போற அதுகிட்ட எங்க வட்டி உன் மருமவ இன்னும் கொடுக்கலேனு கேட்டியாமே? காலையில இன்னைக்கி ஓரே கத்து." என நடந்ததை சொல்ல,

பெருமூச்சு விட்டவர், "நான் அப்படி செய்றவளாடி அந்த நாற வாயில நானா போய் விழுவேனா? எல்லாம் பொய்,  நடிப்பு, வட்டிய கேட்டு வாங்கணும்ல இங்கேயும் வந்தா, ஒனக்கு ஒரு வட்டிய கூட ஒழுங்கா வாங்க தெரியாதாண்டு ஆச்சா பூச்சானு கத்தினா. நான் தான், எனக்கு அப்படியெல்லாம் வாங்க தெரியாதுடிமா, வட்டி கொடுக்கற உம் மருமவளும் ஏமாத்தறவ கெடையாது. இத்தனை வருஷமா வட்டி கட்டிருக்கா, இந்த மாசத்துல ரெண்டு நாள் தாமதமாகிடுச்சி, உடனே வீட்டுக்கு முன்ன போய் நின்னு கத்தி வசூலிக்கற வேலை எல்லாம் நான் செய்ய மாட்டேன்.

ஊருக்குப் போயிட்டு வந்ததும் வட்டிய வந்து கொடுப்பா ஒங்கிட்ட வந்து குடுக்குறேன். சும்மா இங்க வந்து கத்திட்டு கெடக்காத மீறி வந்து கத்துன, நீ எனக்குப் பணம் கொடுத்தது யாருக்கும் தெரியாது. அதுக்கு அத்தாட்சி எதுவும் கெடையாது. அதனால் நீ எதுவும் எனக்குக் கொடுக்கல, எம்மவ கிட்ட நீ கொடுத்த வட்டி போதும் சரியாகிடுச்சி இனி காசு தர வேணாம் சொல்லிடுவேன் பார்த்துக்கனு சொன்னதும் அவ முழியையும் வாயையும் பார்க்கணுமே." என அவர் செய்து காட்டிச் சிரிக்க இவளும் சிரித்தாள். 

"வாய மூடிட்டு போய்ட்டா." என்று மீண்டும் சத்தமாகச் சிரித்தார். அவளும் அவரது சிரிப்பில் கலந்து கொண்டாள்.

அவளிடம் வட்டியை கொடுத்து விட்டுச் சிறிது நேரம் பேசி விட்டு எழ, அப்போது தான் நியாபகம் வந்தவராக, "உன் கல்யாணத்தை பத்தி உன் அத்தைகாரி கிட்ட எதுதாப்புல இருக்க அந்தக் கிழவி விசாரிச்சு, என் அக்கா பையன் இருக்கான் அவனுக்குத் தான் பேசப் போறோம் சொன்னா. எனக்குத் தூக்கி வாரிப் போட்டிருச்சு, நீ கொஞ்சம் ஜாக்கிறதையா இரு. அந்தப் பைத்தியத்தை உன் தலையில் கட்டி அவ அக்காக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரியா உன்னை ஆக்கிடுவா பார்த்துக்க." என்று கையை அழுத்தி எச்சரிக்கைச் செய்தார்.

நல்லசிவம் வந்து கல்யாண விஷயம் பேசிச் சென்றதையும் அத்தை சொன்னதையும் முடிச்சி போட்டுக் குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தாள். அன்று முழுவதுமே அதே யோசனையில் தான் கடந்தாள்.

இரவு வழக்கமாகப் பணத்தை நல்லக்கண்ணு பேருந்து உரிமையாளரிடம் பணத்தை ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சேத்தன்.

மகன் இன்னைக்காவது வீட்டில் சாப்பிட வேண்டும் பசியுடன் வரும் மகனுக்கு வயிறு நிறைவதோடு மனசும் நிறைய வேண்டும் என்று பிடித்ததை செய்து வைத்து அவனுக்காகக் காத்திருந்தார் சாரதா.

வீட்டுக்குள் நுழைந்ததும் அவனுக்காகக் காத்திருக்கும் தன் அன்னையை பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்தவன் தன்னை சுத்தம் செய்து விட்டு லுங்கி, பணியன் சகிதம் அணிந்து வெளியே வந்தவன் அவனது தாயிடம் மூலிகை அடங்கிய  தையலத்தை நீட்ட என்னென்று புரியாமல் பார்த்துக் கொண்டே கையில் வாங்கினார்.

"இது மூலிகை தைலம். கால் வலிக்குத் தலை வலிக்குக் கை வலிக்கு எல்லாம் நல்லதாம். குற்றாலத்திலிருந்து உம் மருமவ வாங்கிட்டு வந்தா." என்றதும் தான் தாமதம், அவர் கையில் இருந்த இரண்டு பாட்டிலும்  சுக்கு நூறாக உடைந்திருந்தது. அதிர்ச்சியுடன தனத்து பெரிய கண்களை விரித்து அவரை அதிர்ச்சியாகப் பார்த்தான் சேத்தன். சாரதா அவனைத் தீயாகப் பார்த்த படி நின்றார்.

அடுத்த பாகம்

கானம் - 7

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0