நெடுஞ்சாலை கானமே - 7

Jun 26, 2025 - 08:01
Jun 30, 2025 - 04:27
 0  21
நெடுஞ்சாலை கானமே - 7

கானம் - 7

சுடச் சுடச் தோசைகள் அவனது தட்டில் வந்து விழுந்துக் கொண்டே இருக்க, சட்டினியும் சாம்பாருமாகக் குழைந்து உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான் இசைசேத்தன்.

"உன் சாம்பாருக்கு இந்தச் சேத்தனோட சேர்ந்து இந்தப் பாண்டிய நாடே அடிமை அத்த. உங்கைப் பக்குவத்துக்கு நீ இருக்க வேண்டிய எடம் இதே இல்ல. ஆனா பாரு, உம்புருசன் உம்புள்ள ஒன்ன இந்த நாலுச் சுவத்துக்குள்ள அடச்சிப் போட்டு உன் திறமைய கட்டிப் போட்டுட்டானுங்க. இல்லனா நீ செஃப் தாமுவ போல பெரிய செஃப்ப்பா வந்திருப்ப. வாக்கப்பட்டு வந்து இதுங்களுக்கு  வடிச்சுப்  போட்டே காலத்த தள்ளிட்டு இருக்கீயேத்த நீ." என நெடுமாறனின் அன்னை மாலதி வைத்த சாம்பாரை  ருசித்து சாப்பிட்டு அதற்குப் பாராட்டு பத்திரம் வாசித்ததோடு புலம்பலையும் வைத்தான்.

"என்ன மருமவனே பண்ண? ஒனக்கு தெரிஞ்ச விஷயம் கூட இங்க இருக்க மனுஷங்களுக்குத் தெரியலயே. சோறு ஆக்கி தட்டுல கொட்டுனா போதும், சாப்பிட்டு கிளம்பிடுவாய்ங்க. ஒரு வார்த்தை நல்லா இருக்கு, நல்லா இல்லனு கூடச் சொல்ல மாட்டாய்ங்க. சொன்னா வாயில இருக்க முத்து குறைஞ்சிடும்ல. நீ சொன்னது போல எனக்கு இந்த அடுப்படி தான் கதி மருமவனே." என தன் ஆதங்கத்தை சொல்லிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

"விடுத்த! இதுங்களுக்கு நீ இல்லன்னா வேற நாதி இல்ல. வெளிய தான் பந்தாவா இருப்பாய்ங்க. ஆனா ஒரு நாள், நீ இவுனுங்கள பட்னி போட்டு போயேன் வவுத்துல ஈர துணிய கட்டிட்டு கிடப்பாய்ங்க." என்று தன் நண்பனின் இல்லத்தில் வந்து நார்தர் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"வாய் தான் ஏற்கெனவே வேலையில இருக்கே ஏன் பேசி வேற அத டயர்டாகுற நீ?" என வந்தான் நெடுமாறன். 

"நீயும் மாமனும் வேணா என் அத்த சமையலை புகழாம இருப்பீங்க. நானும் அப்படி இருக்க முடியுமா? வாய்க்கு ருசியா சமைச்சு போட்டு வயித்த நிறைக்கற அத்தையோட மனச  நிறைக்க வேண்டியது நம்ம கடமை டா மாறா!" என்று இலவச அறிவுரை வழங்க,

"பேசற நீயி ருசியா சமைச்சு போடற கைக்கு தங்கத்துல வளையல் போடறது. வாயில வடை மட்டும் சுட்டு வயித்த நெப்பிட்டு போயிடறது."

"யோவ், நீயெல்லாம் தங்கத்திலே அத்தையே குளிப்பாட்டனும்யா அதையா உங்கிட்ட கேட்டோம்? நல்லாருக்குனு ஒரு வார்த்தை தானே கேட்கிறோம். சொல்ல என்ன வலிக்குதோ உங்களுக்கு?" என அவனும் பதிலுக்குப் பேச, சேத்தனுக்கு எதிராகப் பேச்சை வளர்த்துக் கொண்டிருக்கும் மாறனை திரும்பிப் பார்த்து தீயாக முறைத்தார் மாலதி. 

ஏற்கெனவே அனலிலிருக்கும் மாலதி செங்கணலைப் போல ஜொலிக்க, அவரது பார்வை தீயாக மாறுவதை கண்ட நெடுமாறனோ, 

'ஆத்தி! மாலதி(தீ)யா பார்க்குதே. இவன் வேற சாம்பிராணி போட்றான். ஒரு ஆட்டம் ஆடிடுமோ? எப்போவ் எங்கன இருக்க நீயி. உம் பொஞ்சாதி காளியா மாற போதுயா.' என தன் அன்னைக் காளி அவதாரம் எடுக்கும் போதெல்லாம் விபூதிப் போட்டு அடக்கி விடும் பூசாரியாக மாறிடும் அவரது கணவன் தன் தந்தை கனகவேலை நினைத்துக் கொண்டான் நெடுமாறன்.

"ஏன் மச்சி? இன்னைக்கும் அத்த கூட சண்டையா?" என பேச்சை மாற்றினான் மாறன்.

"ஏன் கேக்குற?" சாப்பிடுவதில்  கவனத்தை செலுத்தியபடி கேட்டான்.

"இல்ல இங்கன வந்து திங்கிறீயே நேத்து மாதிரி இன்னக்கும் சண்டை போட்டு வந்திருக்கீயோனு கேட்டேன்." அவன் புறம் வாகாய் சாய்ந்து கொண்டு கேட்டான்.

"ஆமா சண்ட தான். உன் அத்த கூட இன்னைக்கும் சண்ட தான். இப்போலாம் எதுக்கெடுத்தாலும் உன் அத்த சண்ட கோழியா சீறி கிட்டு வருது. எனக்கு இப்போ தான் புரியுது என் அப்பன் ஏன் சீக்கிரம் செத்தானுண்டு? சண்டப் போட்டே சாகடிச்சிருக்கும், இல்ல சண்டப் போட்டு சாப்பிட விடாம சாகடிச்சிருக்கும். மனுஷன் என்னை அதுகிட்ட தனியா விட்டுடு போயிட்டார். நான் அதோட கெடந்து அல்லாடுறேன்." என சலித்தப்படி பேசினான். 

"ஏய் சேத்தா! அத்தாச்சிய அப்படிலாம் சொல்லாதயா. என் அண்ணே மேலே உசுரா இருக்கும் அது. என் அண்ணே மட்டும் என்ன சும்மாவா, சாரதா சாரதா, மூச்சுக்கு முன்னூறு தடவையாவது அத்தாச்சி பேரச் சொல்லிடும். இவிக அன்னியோன்யத்தை பார்த்து ஊரே  மூக்கு மேலே விரல வச்சிட்டு போகும். யார் கண்ணு பட்டுச்சோ என் அண்ணே இம்முட்டு சீக்கிரமா போயிடுச்சி." என கண்களில் தேங்கிய நீரை முந்தானையில் துடைத்தவர், "உமக்கும் அத்தாச்சிக்கும் என்னயா பிரச்சனை?" என அக்கறையாக கேட்டார். அவனுக்கும் சாரதாவிற்கும் ஏற்பட்ட மோதலை விவரித்தான். 

கையிலிருந்த மூலிகை தைலத்தை பார்த்தபடி, "யாரு குடுத்தா சேத்தா?" என அவர் வினவ, 

"எல்லாம் உம்மருமவ தான் உன் மேல உள்ள அக்கறையில குற்றாலத்தில இருந்து ஒனக்கு வாங்கிட்டு வந்திருக்கு. வலிச்சா தேய்ச்சுக்க!" என்றவன் முடிக்கும் முன்னவே தையலக் குப்பியை தரையில்  போட்டு உடைத்திருந்தார். 

தரையில் சுக்கு நூறாக உடைந்து சிதறிக் கிடந்த  தைலத்தையும் கண்ணாடித் துண்டுகளைப் பார்த்து கோபம் கொண்ட சேத்தன் சாரதா அருகே வந்தான்.

"என்ன பிரச்சன தான் ஒனக்கு? ஒனக்காக தான வாங்கிட்டு வந்திருக்கா, அத போட்டு ஒடச்சிருக்க? அவ மேலே ஒனக்கு ஏன் இம்முட்டு கோபம்? அவ ஒனக்கு என்ன பண்ணா? உன் மேலே உள்ள அக்கறையில தான வாங்கிட்டு  வந்திருக்கா, அத ஒடச்சி வச்சிருக்க, அவ மேல ஒனக்கு ஏன் இம்முட்டு வெறுப்பு?" எனக் கத்தி விட்டான்.

"ஆமா டா வெறுப்பு தான். அவ மேலே மட்டுமில்ல அவ குடும்பத்துல இருக்க எல்லார் மேலையும் தான் வெறுப்பு. அவளே வேண்டாம்ண்டு சொல்றேன், இதுல அவ வாங்கிட்டு வந்தத மட்டும் நான் வச்சிக்கணுமா? எனக்கு எதுவும் வேண்டாம்." என்று அவனுக்கு இணையாகக் கத்தினார். 

"அவ வேண்டாம் அவ குடுக்குறது வேண்டாம்னா நாளைக்கு நம்ம வீட்டுக்கு மருமவளா வந்து சமைச்சு போடுவாளே அத சாப்பிடாம செத்து போவீயா?" 

"ஆமா டா செத்து போவேன். அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நான் செத்து போவேன். அவ இந்த வீட்டுக்கு மருமகளாகறது என் சாவுக்கு அப்புறம் தான் நடக்கும். நான் இருக்கற வரைக்கும் அது நடக்காது. ஒனக்கு கல்யாணம்னா நான் பார்க்கற பொண்ணு கூட தான். இல்ல, என் சாவு தான். ஒனக்கு எது வேண்டுமுண்டு முடிவு பண்ணிக்க." என்றார். 

"ஓடனே நீ தான் வேணும் நீ பார்க்கற பொண்ண கட்டிப்பேன் நெனைக்காத. நீ சாவுற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு அவ தான் வேணும். ஒத்த பிள்ளைய பெத்து அது ஆசைய கேட்டு செஞ்சு வைக்காம, அப்படி என்ன ஒனக்கு வீம்பு?"

"வீம்பு தான்டா, எனக்கு இருக்க ஒத்தப் புள்ளையையும் தூக்கி கொடுத்துட்டு நான் எதுக்கு ஆத்தான்னு ஒனக்கு இருக்கணும்? என் முடிவு இது தான் மாறாது. ஒனக்கு அந்தப் புள்ளைய எப்பவும் கட்டிக் கொடுக்க மாட்டேன்." என்று அதே பிடியில் இருந்தார்.

அவனோ, "அப்ப வெளியில இருந்து வர ஒருத்தி ஒனக்கு சோறு போடாம அடிச்சி வீட்டை விட்டு தொரத்துவா. அப்ப இந்த ஒத்தப் பிள்ளை வாய் திறக்கும் நினைக்காத, உன் ஒத்தப் புள்ளைய அவளுக்கு தூக்கிக் கொடுத்துதேன் ஆகனும், இல்ல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம நீயே வச்சிக்க என்ன? உன்னை அனுசரிச்சி ஒன் மேல பாசம் காட்டிப் பார்த்துக்கப் போறது அவ மட்டுந்தேன். வீம்பு பண்ணிட்டு வேற எவளையாச்சும் கொண்டு வந்து, அதுக்கு அப்புறம் அவ அது பண்ணா, இவ இது பண்ணா மாமியார் கிழவியா மாறி வீடு வீடாகப் போய் பொலம்ப போறீயா!"

"என் புருசன தான் காப்பாத்த முடியல. ஒன்னையாவது காப்பாத்தி வச்சிக்கனும் நெனைக்கிறேன். அவ புருஷனா தான் சாவேன் நிக்கற நீயி! நான் இருக்கற வரைக்கும் அது நடக்காது. என் கடைசி நாள் வரைக்கும் நீ என் புள்ளையாவே இருந்திடு. அவளை மட்டும் ஒனக்கு கட்டி வைக்க மாட்டேன்." என்று உறுதியாகச் சொல்லி விட்டுச் சென்றவரை புரியாமல் பார்த்து நின்றான்.

***

சேத்தன் அவர்களிடம்  ஏக்கப் பெருமூச்சுடன் சொல்லி முடித்தவன், "ஒனக்காவது தெரியுமா அத்த? அந்தக் குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன பிரச்சனண்டு?"

"உன் அப்பா, தென்றல் அப்பா, அவ மாமா மூணு பெரும் மொதல்ல சேக்காலியா இருந்து தொழில் செஞ்சவக தான். அவகளுக்குள்ள சண்டை வந்து உங்க அப்பா  வெலகி வந்துட்டாரு. அந்தப் பகைய நினைச்சிட்டு தான் பேசிருக்கும் அத்தாச்சி."

"அவய்ங்க போட்டச் சண்டைக்கு அவய்ங்க பெத்த மக்க நாங்க என்ன பண்ணோம்? அவய்ங்க பிரிஞ்சு போக நாங்களா காரணம் இல்ல அவள பெத்தவரு என்னைப் பெத்தவரு போட்ட சண்டைக்காக நான் அவள கட்டிக்கக் கூடாதா? நான் அவள விரும்புறேன் அத்த, அவள கட்டிக்க ஆசைபட்றேன். என் அம்மா என் உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டிகுது அத்த!" என புலம்ப, 

"அத்தாச்சி எதையோ மனுசுல வச்சிட்டு தான் இப்படி பேசுது. அது என்ன கண்டுபிடிச்சி பேசித் தீர்த்துவை சேத்தா அது மனசு மாறிடும்." என்றார் ஆறுதலாக.

"அவ மனசு மாறாது. அவள நிச்சியம் மருமவளா ஏத்துக்கவும் செய்யாது." என வீரவேல் அங்கு வந்தார்.

"ஏன்யா அப்படி சொல்ற?" மாறன் தாத்தனிடம் விசாரிக்க, "தென்றலோட அப்பனும் மாமனும் உன் அப்பனுக்கு கொஞ்சம் நஞ்சம் பாவம் பண்ணிடல அதான் உன் அம்மா இம்முட்டு பிடிவாதமா இருக்கா. இனியும் இருப்பா. அவ மனச மாத்தறது கஷ்டம்." என சொல்லி விட்டுப் போக, தாத்தனின் வார்த்தைகள் சேத்தனையும் அவனது நம்பிக்கையையும் பாதித்தது.

எதுவும் பேசாமல் கையைக் கழுவிட்டு வேகமாக வெளியேறினான். அவன் பின்னாலே சென்ற நெடுமாறனும்  கத்தி அழைக்க, காதில் வாங்காது சென்று விட்டான். உள்ளே வந்த நெடுமாறன், தாத்தனிடம் மூவருக்குள்ளும் நடந்த பிரச்சனையைக் கேட்க, அவரோ எதுவும் சொல்லாது உள்ளே சென்று விட்டார்.

****

விடிந்தாலும் விரோசனன் சோம்பல் கொண்டு இருளை விரட்டாது தூங்கிக் கொண்டிருக்க, மக்களோ இருளைப் பொருட்படுத்தாது தங்களது பணியைச் செய்ய வெளியே வந்தனர்.

அதிகாலை வேளையிலே எழுந்து முதல் வேலையாக  இரு வீட்டிற்கும் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் இளந்தென்றல்.

அதே நேரம் வேகமாக வெளியே வந்தான் இசைசேத்தன். இது வழக்கமாக நடக்கும் கூத்து தான். 

தினமும் அவள் வந்த கணத்திலோ இல்லை அடுத்த நொடியிலோ, இல்லை முன்னதாகவோ, அதிகாலை வேளையில் அவளை ரசிக்க வந்து விடுவான். 

தன்னைக் கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டு அமர்ந்திருப்பவனை  முறைத்து தள்ளுவாள் இவள். சில நேரம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்.

இருந்தாலும் அதிகாலையில் வெள்ளைச் செவ்வந்தியைப் போல் கும்மென்று பூத்திருக்கும் அவள் முகத்தையும் பூவிதழ்கள் மேல் படிந்திருக்கும் பனித்துளியைப் போல், அவள் குளித்து விட்டு துடைக்க மறந்து மோட்சம் கொண்ட நீர்துளிகளைப் பார்த்துப் ரசித்து விட்டு, அவளை வம்பிழுத்து அவளிடம் முறைப்பைப் பெற்றால் தான் அந்த நாளின் நல்லத் தொடக்கம் என்பான்.

இன்று கூடச் சற்றுத் தாமதமாக வந்தவன் கண்ணைக் கசக்கிக் கொண்டு வாசலில் அமர்ந்தான்.

அவனைக் கடைக்கண்ணால் பார்த்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள். அவனும் அவளது கடைக்கண் பார்வையைப் பார்த்து  முறுவலுடன் அமர்ந்திருந்தான்.

இரண்டு வாசலிலும் கோலத்தைப் போட்டு விட்டு எழுந்து நின்று அதனைப் பார்த்தாள். அவள் நின்ற கோலமும் அதிகாலைக் குளிரிலும் அவனைச் சூடேற்றியது.

கெண்டைக்காலைச் சுற்றி  மெல்லிய கொலுசை அணிந்து அதன் அழகைப் பளிச்சிட்டுக் காட்ட, வெண்ணெய்யும்  கண்டால் உருகிடும் மென்மைக் கொண்ட இடையைப் பார்த்ததும் அதனுடன் உறவாட கைகள் பரபரத்தாலும் அதெல்லாம் உடையவனானப் பின்னே என்று உறுதி மொழி எடுத்தாலும் அடுத்த நொடி அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதை நினைத்து துப்பிக் கொண்டான்.

முன்னே விழுந்த சிறு முடிக்கீற்றை ஒதுக்கிக் கொண்டு அவள் வரைந்த கோலத்தைப் பார்க்க, அவளது கோலத்தை ரசித்தவன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

"மக்கும்... அடியே வெண்ணக்கட்டி! அப்படியே காய்ஞ்சு கிடைக்கற நம்ம வீட்டு வாசலையும் தண்ணீ தெளிச்சி கோலம் போட்டு விடுடி." என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும் திரும்பியவள், "நம்ம வீடா? எது நம்ம வீடு?" என அமர்த்தலாகக் கேட்டாள். 

"வேற எது இது தான்." என முறுவலை மறைத்தப்படிச் சொன்னான். 

"அஹான் அது சரி. நான் ஏன்  உன் வீட்டுக்கு வந்து கோலம் போடணும்? நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா?"

"வேலைக்காரி இல்லடி, என் வீட்டுக்காரி. வீட்டையும் என்னையும் சேர்த்து ஆளப் போற என் சொந்தக்காரி. எப்படியும் இங்கன வந்து இந்த வேலையையும் என்னையும் பார்த்துக்கத் தான போற, வந்து ஒரு ஒத்திகையப் பார்த்திட்டு தான் போயேன்." என்றதும்,

"என்னது?" என இடையில் கை வைத்து அவனை முறைக்க,

"ஏ! இல்லடி நான் கோலம் போடறததேன் ஒத்திகைப் பார்க்க வரச் சொன்னேன். வேற எதுக்கும் இல்லடி என்னை நம்பு." எனப் பதறி கொண்டு பதிலளிக்க, அவளோ உள்ளுக்குள் சிரித்து கொண்டு வெளியே வி(மு)றைப்பாக நின்றாள்.

"என்னடி என்னைய முறைக்கற? நான் கோலம் போடறதுக்கு மட்டுந்தேன் ஒத்திகைக்குக் கூப்டேன். ஆனா நீதேன் தப்புத்தப்பா கற்பனை பண்ணிட்டு என்னை முறைக்கற." எனக் குரலைத் தாழ்த்த, 

அவளோ கீழே கிடந்த விளக்கமாரை கையிலெடுத்து உள்ளங்கையில் தட்ட, அவனோ பாய்ந்து வாரிச் சுருட்டி எழுந்து இரண்டு படிகள் மேலேறி நின்றான்.

"யாரு தப்பத்தப்பா கற்பனை பண்றது நானா?" எனக் குரலை உயர்த்த,

"ஐயோ! நீ இல்லடி நான் நீ தாண்டு எப்படி சொன்னேன்? நான் உன்னை எதுவும் சொல்லலியே. நான் சும்மா வேடிக்கையில பார்க்க வந்தேன்." என சிரித்து மழுப்பிப் பின்வாங்கினான். பொங்கி வந்தச் சிரிப்பை உள்ளுக்குள் அதக்கி விட்டு உள்ளே செல்ல இருந்தவளை ஏக்கத்துடன் பார்த்தான்.

மனம் அவளை நகர விடாமல் செய்ய, ஏதோ ஊந்துதலில் அவன் வீட்டு வாசலிலும் கோலம் போட வந்தாள். அவள் வருவதைக் கண்டதும், இவனுக்கு பறக்காதக் குறை தான். 

அதிகாலை இரைத் தேடிக்கூட்டம் கூட்டமாகப் பறக்கும் பறவைகளுடன் தன் மனதையும் பறக்க விட்டான்.

"தென்னு இது கனவு இல்லேலடி! இது கனவு இல்ல தான். ஆனா இது நிஜமாகுமா டி? தினமும் நம்ம வீட்டு வாசல்ல நீ கோலம் போடணும், நான் இப்படி உட்காந்து ஒன்னை ரசிக்கணும், கிண்டல் பண்ணணும், கொஞ்சமா சீண்டி விளையாடணும். நீ என்னை முறைக்கணும், என்னை நீ காதலா பார்க்கணும், உன் கிட்ட போராடி ஒரு முத்தம் வாங்கணும், எப்ப டி இதெல்லாம் நடக்கும்? எப்ப என் வீட்டுக்கு மருமகளா, இந்த வீட்டு மகாலட்சுமியா வாழ வரப் போற?" எனக் காதலில் கனிந்து சொட்ட சொட்ட வழியும் தேனைப் போல தித்திப்பாக அவன் பேச, அவளோ கற்பனையில் அவனோடு அவன் வசமிருந்தாள். அதிகாலைச் செவ்வந்தியும் சிவந்து போனது.  

அதை மறைக்கும் வண்ணம் விறுவிறுவென எழுந்து நடக்க, "சொல்லிட்டுப் போடி எப்போ இதெல்லாம் நடக்கும்? நீ எப்ப என் வீட்டு மகாலட்சுமியா வருவ?" என அவன் கேட்க, நமட்டுச் சிரிப்புடன் திரும்பியவள், 

"உன் வீட்டுக்கு மகாலட்சுமி தான வரணும். தோ முக்குல இருக்கற மகாலட்சுமி கூப்பிடு மகாலட்சுமி உன் வீட்டுக்கே வரும்." என்று நக்கலாகச் சொல்ல, 

"அடிங்க, அந்த மகாலட்சுமியவா கேட்டேன். உன்னை என் வீட்டு மகாலட்சுமியா வாடின்னு கேக்குறேன்டி என் மரமண்ட டீச்சரு!" என அவன் எழ,

"வாவ்வவா! ஆசை தான் போடா." என அவனுக்கு அழகுக் காட்டி உள்ளே ஓடி விட்டாள். 

தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்தவன், அவள் போட்ட கோலத்தை ரசித்து விட்டு வேலைக்குச் செல்ல வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்து மீண்டும் கோலத்தை ரசித்து விட்டு கிளம்பினான்.

அந்த அழகான கோலத்துக்கும் அவர்களது சிரிப்பிற்கும் ஆயுள் குறைவு என்று விதி சிரித்தது அவர்களுக்கு மத்தியில் நின்றுக் கொண்டு.

மக்களே

சாரதா அம்மா ! ஏன் தென்றலையும் அவ குடும்பத்தையும் வெறுக்குக்றாங்க ?  கெஸ் பண்ணுங்க உங்க கற்பனை வளத்தை கமெண்ட் ல சொல்லிட்டு போங்க... இல்லைன்னா ஒரு வார்த்தையாவது பதிவு செய்து விட்டு போங்க..

மனசுக்கு குளிர்ச்சியா இருக்கும் தெம்பவும் இருக்கும் கொஞ்சம் உங்க பதிலையும் emoji கிளிக் பண்ணிட்டு போங்க

அடுத்த பாகம் 

கானம் - 8

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1