காதல் நாயகனே - 8

நாயகன் - 8
' எடுத்ததும் ஆர்டர் இல்லை ' என்று சொல்லி இருந்தால் கூட பெரிதாக பாதிப்பு இருந்திருக்காது. ' கைக்கு கிடைக்க இருந்ததை தட்டி பறித்து விட்டானே 'என்ற ஆதங்கம் தான் அவளுக்கு .
வள்ளியும் நீலகண்டமும் அவளை தேற்ற முயன்றனர். அவர்களது தோய்ந்த முகத்தை கண்டவள் அவர்கள் முன் சரியானதை போல காட்டிக் கொண்டாள்.
ஆனாலும் குளியலறை சென்று கண்ணீரை கொட்டி விட்டு முகம் அலம்பிவிட்டு மெத்தையில் வந்து படுத்தாள். அவளது அலைபேசி சிணுங்க, எடுத்து திரையை பார்க்காமல் காதில் வைத்தாள்.
"ஹலோ "என்று சந்தோஷ துள்ளலில் விளிக்க, ஆண் குரலை கேட்டதும் விபு என்றெண்ணி "சொல்லு விபு"என சோர்வுடன் கேட்டவள் அவனது மகிழ்ச்சி சட்டென வடிக்கட்டி விட்டாள்.
*****
பல்லை கடித்த படி "அன்னம்மா"என அவனது உக்கிரமான அழைப்பில் சட்டென திரையை பார்த்து விட்டு மீண்டும் காதில் வைத்தாள்.
"இளா நீயா? சாரி சாரி டா நான் விபு நினைச்சிட்டேன்...என்ன விஷயம் டா சொல்லு?" என்று அவனது உற்சாக குரலை நினைவு படுத்திக் கேட்டாள்.
இவனுக்கோ எடுத்ததும் ' விபு ' என்றதும் கடுப்பில் முறுக்கிக் கொண்டு"இந்த நேரத்துல விபு எப்படி பேசுவான்? அவன் ஸ்கூல்ல இருப்பான்... என்ன யோசனையில நீ போனை எடுத்த?"என கோபம் குறையாமல் கேட்டான்.
"அதான் சாரினு சொல்லிட்டேனே டா ! அப்செட்ல இருந்தேன் டா ! யாருனு பார்க்காம போனை காதுல வச்சிட்டேன்.. விடேன் !சரி ரொம்ப ஹாப்பியா ஏதோ சொல்ல வந்தீயே என்ன அது?" என்றாள்
"அதான் அந்த ஹாப்பி பறிச்சிட்டீயே ! அவன் பெயரை சொல்லி"என அவளுக்கு கேட்காத படி முணுமுணுக்க, "என்ன டா வாய்க்குள்ளே முனங்கற? என்ன விஷயம் சொல்லேன் டா"என்றாள் சலிப்பாக,
"ம்... சொல்றேன். அதுக்கு முன்ன என்ன அப்செட்? போன காரியம் என்னாச்சி? ஆர்டர் கிடைச்சிடுச்சி தான? அதுக்கு தான் டென்ஷனா இருக்கீயா? அதெல்லாம் உன்னால பண்ண முடியும் அன்னம்மா ! அன்னம்மா கேன் டூ இட் !"என்று ஊக்கமாக பேச, காற்றில்லா சுருங்கிய போன பலூன் போல இருந்தவள், அவன் கொடுத்த ஊக்கத்தால் உப்பென்று ஊதி போயிருந்தாள் உற்சாகத்தால்.
புன்னகையுடன் "எனக்கு அந்த ஆர்டர் கிடைக்கல இளா ! கைக்கு கிடைக்க வேண்டியத ஒருத்தன் பறிச்சுட்டான். அந்த அப்செட்ல இருந்தேன் இளா ! ஆனா உன் வார்த்தைகள் கேட்கும் போது ஊக்க மருந்து சாப்பிட்டது போல இருக்கு. சேர்ந்து போன உடம்பும் மனமும் கொஞ்சம் புத்துணர்வா இருக்கு! தேங்க்ஸ் டா" என புன்னகையுடன் சொல்ல,
"மண்ணாங்கட்டி தேங்க்ஸ குப்பையில போடு ! நான் சொல்றத கேளு அன்னம்மா !.. எண்ணி ரெண்டே மாசம், அதுக்கு அப்புறம் பாரு ! அன்னம்மா ரொம்ப பிசி ஆயிடுவா ! இத்தனை ஆர்டரானு? வாய பிளந்து சலிச்சுப்பா !"என்று சத்தியமான உண்மையை போலவே இவன் கூற,
இவளுக்கு கேட்க நன்றாக தான் இருந்தது. சிரிப்புடன்"அதென்ன ரெண்டு மாசம்? என் ஜாதகத்துல சுக்கிரன் உச்சிக்கு வர போறாரா என்ன?"என நக்கலாக கேட்க,
இவனும் சிரித்து விட்டு" சுக்கரன் உச்சிக்கு வருவாரா? பிச்சிக்கு வருவாரா தெரியாது . ஆனா இந்த இளா இந்தியா வர போறாரு ! அப்புறம் பார் ஜனனி கேட்டரிங் சர்வீஸ் எந்த லெவலுக்கு போகுது !"என இவன் காலரை இழுத்து விட,
"மூணு மாசம் ஆகும் சொன்ன? ஒரு மாசம் கழிச்சி வருவேங்கற என்னாச்சி?" என அவளும் ஆர்வத்துடன் கேட்டாள்.
அவனும் நடந்ததை சொன்னான்."நான் தான் சொன்னேனே ! உன்னை நம்பி தான் அவர் பொண்ணை உன்கிட்ட ஒப்படைச்சிட்டு போயிருக்கார்னு ! நல்ல மனுஷனா இருக்கப் போய் உன்னை புரிஞ்சுக்கிட்டார். ஒரு மாசம் தான் மித்ரா கூட வம்பு தும்புக்கும் போகாம, பொறுமையா முப்பது நாளை ஓட்டிட்டு, ஓடி வந்துடு" என்றாள்.
"ம்... ஆனா?"என இவன் இழுக்க,
"என்ன ஆனா?"
" இந்தியாவுக்கு ஒரு ஆர்வத்துல வந்தாலும் அங்க எனக்குனு யார் இருக்கா அன்னம்மா? வெறுமை தானே என்னை வரவேற்கும். எனக்குனு உறவோ ! சொந்தமோ ! எதுவுமே அங்க இல்லையே ! யார் என்னை அங்க எதிர்பார்ப்பா? அங்க வந்து நான் என்ன பண்ண போறேன்னு பயமா இருக்கு அன்னம்மா ?!"என இவன் மனதினுள் மூண்ட கலக்கத்தைக் கேட்டு தனக்கு தானே ஆப்பும் வைத்துக் கொண்டான்.
"ஓ... அப்ப ஏன் சார் நீங்க இந்தியா வரணும்? அங்கே இருக்க வேண்டியது தானே ! உங்களுக்கு தான் இங்க எந்த உறவும் இல்லையே ! பின்னே எதுக்கு இந்தியா வந்துட்டு, எனக்கு யாருமே இல்லனும் பீல் பண்ணனும்?
அங்கே இருங்க ! உங்களுக்கு உறவுனு சொல்லிக்க துபாயில தான் கோடி சனம் இருக்குல ! இந்தியாக்கு எதுக்கு வந்துட்டு ? நீங்க அங்கே இருங்க என்ன?! இனிமே எனக்கு போன் பண்ணாதீங்க ! தெரியாதவங்கட்ட நான் போன் பேசறதா இல்ல வைங்க போன !" என அலைபேசியை அணைக்க போக,
அவனோ" ஹே அன்னம்மா எதுக்கு இப்போ கோவப்படுற ? நான் உண்மையை தானே சொன்னேன்"என மீண்டும் அதையே சொல்ல, இவள் கோபத்தில் காளியாக மாறினாள்.
"அப்போ என்ன மயித்துக்கு என் கிட்ட இப்போ பேசிட்டு இருக்க நீ? போன வை !" என படபடவென பேசியவள் "இவருக்கு இங்க யாருமில்லயாம்? பேசற நாங்க யாராம்? அன்னோன் பெர்சனா நாங்க?" என்று சத்தமாக முணுமுணுக்க, இவனுக்கு தெளிவாக கேட்டது.
உதட்டைக் கடித்து புன்னகையை அடக்கி கொண்டவன்" அப்போ நீ எனக்கு யாரு அன்னம்மா? என்ன உறவுடி நீ எனக்கு?" என அவன் அதிரடியாக கேட்க, ஒரு கணம் தடுமாறி பதில் சொல்லாமல் அமைதியாகிப் போனாள் ஜனனி.
மக்களே
இளா , ஜனனியா தன் காதலியா நினைக்கிறது ஜன்னிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்...?
உண்மை தெரிஞ்ச அவளும் அவனை ஏத்துப்பாளா?
உங்க எண்ணத்தை கருத்தா கமென்ட் ல பதிவு செய்ங்க ஒரு வார்த்தையாக இருந்தாலும் எனக்கு சந்தோஷமே !
அப்புறம் உங்களுக்கு பிடிச்ச இமோஜி தொட்டு போங்க
What's Your Reaction?






