காதல் நாயகனே - 6

நாயகன் - 6
கைகளை பிசைந்த படி நாற்காலியின் முனையில் அமர்ந்திருந்தாள் ஜனனி. ' இது பெரிய ஆர்டர். இவர் ஆர்டர் மட்டும் கிடைச்சிடுச்சி , இவர் மூலமா உனக்கு நிறைய ஆர்டர் கிடைக்க வாய்ப்பு இருக்கு ஜனனி மா. இவருக்கு நட்பு வட்டாரம் அதிகம், கல்யாணத்துல பெரிய பெரிய விஐபிங்கலாம் வருவாங்க... உன்னோட கேட்டரிங் சாப்பாடு மட்டும் நல்லா இருந்ததுனு வை ! நீயே போய் கேட்கணும் இல்லே ஆர்டரா வந்து குமியும் பாரு ! ' என சுப்ரமணி அன்று சொன்னது, மந்திரம் போல காதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. ஆர்டர் கிடைக்குமோ ? கிடைக்காதோ ? என்ற ஒரு விதப் பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள் ஜனனி.
மருமகளின் பதற்றத்தை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்ட நீலகண்டன் "ஜனனி மா "என்று அழைத்தார். அவரது அழைப்பிற்கு உடனே செவி சாய்த்த ஜனனி"என்ன மாமா?"என்றாள்.
"எதுக்குடா மா, உனக்கு இவ்வளவு பதட்டம்? பதட்டம் நம்ம நிதானத்தை இழக்க வைக்கும்! நீ என்ன பேசணும் நினைக்கிறீயோ, என்ன சொல்ல வந்தீயோ எல்லாம் மொத்தமா மறந்து போயிடும்... நிதானமா இருடா ! தண்ணீய குடி ! ஆர்டர் கிடைக்குதோ இல்லையோ நிதானமா பேசணும்மா "என்று சிரித்த படி தைரியம் கொடுத்தார்.
கண்களை மூடி திறந்து தன்னை நிதானித்து கொண்டவள், அருகில் இருந்தவரை புன்னகையுடன் பார்த்தாள்.
"குட் ! உனக்கு இந்த ஆர்டர் கண்டிப்பா கிடைக்கும்டா மா !"என்றார் நம்பிக்கையுடன்.
வரவேற்பறையில் இருவரையும் அமர வைத்து விட்டு உள்ளே தன் நண்பனை பார்க்கச் சென்ற சுப்ரமணி . அறைக் கதவை திறந்து "ஜனனி வா ! சார் நீங்களும் வாங்க "என விளித்து விட்டு உள்ளே செல்ல அவரை தொடர்ந்து இருவரும் நுழைந்தனர்.
அங்கே நாலைந்து நபர்களுடன் வரதராஜரும் அமர்ந்திருந்தார். அவரது மகள் வழிப் பேத்தியின் கல்யாணத்தை சிறப்பாக நடத்திட, மண்டபத்திலிருந்து வாசலில் பன்னீர் தெளிப்பது வரைக்கும் கோடிகளையும் லட்சங்களையும் இரைத்திருக்கார் வரதராஜர். அவரது நெருங்கிய நண்பர் தான் சுப்ரமணி.
திருமணத்திற்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவர், திருமண விருந்தை மட்டும் விட்டு வைப்பாரா ? பெரிய அளவில் ருசியுடன் உணவை தயாரிக்கும் கேட்டரிங் சர்வீஸை தான் அவரும் தேடிக் கொண்டிருக்கிறார்.
சமீப காலமாக அவர் சென்று வந்த கல்யாண விருந்துகளில் திருப்தி கரமான உணவுகளை அவர் ருசிக்கவில்லை என்றும் உணவு பட்டியலிலுள்ள உணவுகள் அவருக்கு பிடித்தமில்லை என்று சுப்பிரமணியிடம் புலம்பினார்.,
சுப்ரமணிக்கோ சட்டென மூளையில் ஜனனியும் அவள் புதிதாய் ஆரம்பித்த கேட்டரிங் சர்வீஸ்ம் தான் ஞாபகத்தில் வந்தது.
சுப்ரமணி வசிக்கும் அபார்ட்மெண்டில் நடந்த சிறு சிறு வீட்டு விசேஷங்களுக்கு ஜனனி கேட்டரிங் சர்வீஸை தான் அழைத்தனர்.
சின்ன விசேஷம், பெரிய விசேஷம் என்று பார்க்காமல் அவர்கள் கொடுத்த பட்டியலிலுள்ள உணவு வகைகளை பார்த்து பார்த்து அமிர்தமாக செய்ததோடு, ஆட்களை வைத்து மிக நேர்த்தியாக பாறிமார , சுப்ரமணிக்கு பிடித்து போனதால் தான் ஜனனியின் பெயரை நண்பருக்கு பகிர்ந்தார்.வரதராஜரும் அவளை வரச் சொல்லி இருந்தார்.
"வரதா ! நான் சொன்னேனே நம்ம பொண்ணு ஜனனி ! இது அவர் மாமனார் நீலகண்டன்.."என்று அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர்"சின்ன பொண்ணா இருக்கீயே மா ! கல்யாணத்திற்கு ஆயிரத்துக்கு மேலே வருவாங்க உன்னால மேனேஜ் பண்ண முடியுமா மா? இப்போ தான் ஆரம்பிச்சதா சொன்னான் சுப்ரமணி ! எப்படி மா அத்தனை பேருக்கும் சமைக்க முடியும்? சாப்பிட வந்த ஒருத்தருக்கும் ஒன்னு கூட இல்லாம போகக் கூடாது ! அந்த அளவுக்கு நிறைய சமைக்கணும் முடியுமா உன்னால?"என சந்தேகமாக கேட்டிருந்தார். அவர் அருகே இன்னும் இரண்டு மூன்று பேர் அவளது பதிலுக்காக காத்திருந்தனர்.
"முடியும் சார் எங்களால! நான் மட்டும் சமைக்க போறது இல்ல , என்னோட ரொம்ப வருஷம் அனுபவமிக்க சமையக்காரங்க இருக்காங்க... அவங்க உதவியால நிச்சியம் என்னால முடியும்.
மண்டபத்துல சமைக்க போதிய வசதி இருந்தால், அங்கே சமைச்சு சுடச்சுட பரிமாற நாங்க தயார். நீங்க சொல்ற ஆயிரதுக்கும் மேலே ஆட்களுக்கு வந்தாலும் சமைச்சு போட நாங்க ரெடி சார். ஆட்கள் எண்ணிக்கை சரியாக நீங்க சொல்லணும். நீங்க சொன்னதுக்கு அதிகமா சமைக்க வேண்டி வந்தாலும் சமைச்சு தர நாங்க தயார். நீங்க அதிகம் கொடுக்கணும் இல்ல... எங்களுக்கு சில பேக்கேஜ்கள் இருக்கு, உங்களுக்கு எந்த பேக்கேஜ் வேணுமோ அதை சூஸ் பண்ணி சொல்லுங்க "என உணவு பட்டியல் மற்றும் விலை அடங்கிய கோப்பையை நீட்டினாள்.
மேலும் தனது பையிலிருந்தது இனிப்பு வகைகளை அடங்கிய பெட்டியை அவர்கள் நடுவே வைத்தவள்.
"இது எங்க கேட்டரிங்ல இருக்க பிரத்யேக இனிப்பு வகைகள் சாப்பிட்டு பாத்து சொல்லுங்க"என்றாள்.
"எங்க எல்லாருக்கும் சுகர் இருக்கே மா ! " என்றார் ஒருவர். " எல்லாரும் சாப்பிட கூடிய வகையில் தான் இந்த இனிப்பு இருக்கும் சார் சாப்பிட்டு பாருங்க " என்றாள்.
அவரும் கொஞ்சமாக பட்டும் படாமல் எடுத்து வாயில் போட்டவருக்கு பிடித்து போக மேற்கொண்டு கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு , "ம்ம் ரொம்ப நல்லா இருக்குமா !"என்றார்.
அவரை தொடர்ந்து அனைவரும் சாப்பிட்டு பார்க்க, ஓரளவுக்கு அனைவருக்கும் பிடித்து தான் இருந்தது.
வரதராஜருக்கும் பிடித்திருக்க, அவளது உணவு பட்டியலில் கூட பாரம்பரிய உணவுகளும் இருந்தது நவீன உணவுகளும் இருந்தன.. அவருக்கு அனைத்தும் பிடித்திருந்தது. அவரது முகத்தில் மலர்ந்த
புன்னகையே அவளுக்குள் பரவசமாக இருந்தது. எப்படியும் கிடைக்கும் நம்பிக்கையில் அவளும், கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரும் சுப்ரமணியை பார்த்து கண்களாலே கேட்க, அவரும் சம்மதமாய் தலையை அசைத்தார்.
பழம் நழுவி பாலில் விழ வேண்டிய நேரத்தில் சடாரென வந்த குரங்கு பறித்துச் சென்றது போல புயல் போல வேகமாக நுழைந்தான் அவன்.
கதவை தட்டி உள்ளே வரும் பழக்கம் இல்லை அவனுக்கு போலும் வேகமாக திறந்து கொண்டு உள்ளே வர, அமர்ந்திருந்த அனைவரும் பதறி போனார்கள். நீலகண்டனும் ஜனனியும் கூட பயந்து போனார்கள்.
"வணக்கம் மாமா ! எப்படி இருக்கீங்க?" என்று கை கூப்பி கேட்டவனின் விரல்கள் மொத்தத்திலிலும் தங்க மோதிரம். கழுத்தில் இரண்டு மூன்று தடிமனான சங்கிலி. சங்கிலி தெரிய இரண்டு மூன்று பொத்தான்களை கழட்டி விட்டிருக்க, அவன் நெஞ்சு முடி அப்பட்டமாகத் தெரிந்தது.
' ஆர்டர் கிடைக்கற நேரத்துல யார்ரா இவன் கரடி மாதிரி?' என உள்ளுக்குள் புலம்பினாள்.
அனைவருக்கும் வணக்கம் வைத்தவன் பக்கத்தில் நின்ற ஜனனியை கண்டதும் கண்களில் இருந்த கூலர்ஸ் கீழே இறக்கி அவளை கீழிருந்து மேலாக பார்க்க, அவனது பார்வையில் முகத்தை சுளித்து திருப்பிக் கொண்டாள். அவர்களுக்கு இடையில் வந்து முறைத்த படி வந்து நின்றார் நீலகண்டன்.
"ஒ" என உதடு குவித்தவன் பார்வை வரதராஜர் பக்கம் திருப்பி" என்ன மாமா? என்னை விட்டுட்டு கல்யாண விருந்து பத்தி பேசிட்டு இருக்கீங்க போல ! சரியில்ல மாமா இது ! பாப்பா கல்யாணத்துக்கு எங்க கேட்டரிங் சர்வீஸ கேட்காம யார் யாரையோ கூப்பிட்டு பேசிட்டு இருக்கீங்க ! எங்க சர்வீஸ் எத்தனை வருஷம் தெரியும்ல நேத்து மொலச்ச காளானுக்கு என்ன தெரியும் நீங்க ஆர்டர் கொடுக்கிறீங்க?"எனக் கேட்டு ஜனனியின் தீப்பார்வைக்கு ஆளானான்.
' அப்ப்பா ! என்னா பார்வை ! பத்திக்கும் போலையே ' என எண்ணிக் கொண்டு மீண்டும் வரதராஜரிடம் பார்வையை பதிக்க,
"இல்ல கந்தா ! சமீப காலமா எந்த கேட்டரிங் சர்வீஸ்லையும் எனக்கு பெருசா திருப்தி இல்ல, சுப்ரமணி சொல்ல போய் இவங்களை வர சொல்லி இருக்கேன் டா !"
"பேசிட்டீங்களா? கொடுக்கணும் முடிவு பண்ணிட்டீங்களா? கொடுங்க ! கொடுத்துட்டு ஏன்டா கொடுத்தோம் தலையில அடிச்சிக்கங்க ! சொந்தக்காரங்க நாங்க எதுக்கு இருக்கோம்...?! எங்க கிட்ட கலந்து பேசிக்காம , நீங்களா முடிவு பண்ணா எப்படி? "என தெனாவெட்டாக பேச, இவளுக்கு தான் ஆயாசமாக இருந்தது.
"இல்ல கந்தா ! ஒரு முறை குடுத்து பார்க்கலாம் இருக்கேன் !"என மீண்டும் பேச, " கல்யாணமும் ஒரு முறை தான் பண்றீங்க ! சாப்பாட்டு நல்லா இல்லைனா என்ன பண்ணுவீங்க? மனுஷங்க அவ்வளவு சீக்கிரம் மறக்கறவங்க கிடையாது, நியாபகத்துல வச்சு கேட்டுட்டே இருப்பாங்க, உங்களுக்கு சங்கட்டமா இருக்காது...? "என கேட்க, அவரோ தன் முடிவிலிருந்து அசராமல் அப்படியே இருந்தார்.
" இது வேலைக்கு ஆகாது"என்று அலைபேசியில் வேகமாக தட்டி யாருகோ அழைத்தான்.
"பெரியப்பா ! உங்க சம்மந்தக்காரருக்கு எங்க சர்வீஸ்ல திருப்தியா இல்லியாம். யாருக்கோ ஆர்டர் தூக்கி கொடுக்கிறார், என்னனு கேளுங்க? "என படப்படவென பேசி விட்டு அவரிடம் கொடுத்தான்.
வரதராஜரும் வாங்கி பேசினார். அங்கே என்ன சொல்ல பட்டதோ !"சரி சம்மந்தி"என முடித்துக் கொண்டு அழைப்பை துண்டித்தவர், ஜனனியை சங்கடமாகப் பார்த்தார்.
அவளோ வலுக்கட்டாயமாக சிரித்த படி, "இட்ஸ் ஓகே சார் நாங்க கிளம்புறோம்" என்று தனது கோப்பையை எடுத்துக் கொண்டு "வாங்க மாமா போலாம்"என்று அங்கிருந்த அவனை அழுத்தமாக பார்த்து விட்டுச் செல்ல. இவன் உதடுகளோ வளைந்து மீண்டன.
நீலகண்டனும் ஜனனியும் அமைதியாக வெளியே வந்தனர். ஜனனியின் கண்கள் கலங்கி விட்டன.. முதல் முறையாக வந்த நிராகரிப்பு. அதுவும் கைக்கு கிடைக்கும் வேலையில் தட்டிப் பறித்து சென்று விட்டான் அவன்.
தன்னை திடப் படித்துக் கொள்ள தனக்குள்ளே முயற்சி எடுத்துக் கொண்டே அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள் ஜனனி.
இருவரும் அமைதியா நடக்க, "ஹோய் கண்ணகி !"என அழைக்க, அவள் திரும்ப வில்லை.
அவனும் விடாமல் " ஏய் கோமதி , மாதவி, பத்மினி "என பல பெயர்கள் அழைத்த படி பின்னே வர, பொறுமையிழந்த ஜனனி நின்று திரும்பி பார்த்தாள்.
"கூப்பிட்றேன்ல காதுல விழுகல !"என சட்டமாக பேச, அமைதியாக கைகட்டிக் கொண்டு நின்றாள்.
"உன் பேரென்னா? " காலரை இழுத்து விட்ட படி கேட்டான்.
"உனக்கு ஏன் நான் சொல்லணும்? "
"எதுக்கா? அப்புறம் எப்படி உன்னை கூப்பிட்றது?"என்றதும் விழிகளால் அவனை பஸ்பமாக்கிட,
"ஆத்தி ! கண்ணுலே ஃபயர் இருக்கே பொசுக்கிடாதம்மா ! பாவம் நானு !" என்று வழவழத்தவனை முறைத்து விட்டு திரும்பிய வேளையில் " உன் கேட்டரிங் சர்வீஸ் பேரென்ன? உன் போன் நம்பர கொடுத்துட்டு போ !" என்றான் நிதானமாக,
"எதுக்கு கொடுக்கணும்?"
"இல்ல... சின்ன சின்ன ஆர்டர் எதுவும் வந்தா உனக்கு சொல்லலாம் தான்"என்றான். அவன் முன் பெரிதாய் கையெடுத்து கும்பிட்டவள்
"என்ன பிராய்ச்சித்தமா? கைக்கு கிடைக்க வேண்டியத பறிச்சிட்டு, அந்த பாவத்தை புண்ணியமாக்குறீயோ ! எனக்கு உன் உதவி தேவை இல்ல... எல்லாரும் உன் கிட்ட வந்து குமிய போறதில்ல எனக்கு ஆர்டர் வரும் ! நானும் என் திறமைய காட்டுவேன்... உன்னை போல அடுத்தவங்க வாய்ப்பை தட்டி பறிக்க மாட்டேன்" என்று சன்னமாக பேசி விட்டு விறுவிறுவென செல்பவளை பார்த்த படி
' ஆத்தா இந்த வருஷம் கல்யாண யோகம் கூடி வருதுன்னு சொல்லுச்சு நிசமாகிடுமோ ' என்று அவள் சென்ற திசையை பார்த்து முனங்கி விட்டு சென்றான் கந்தரூபன்
மக்கள் !காலை வணக்கம் இந்தக் கந்தரூபன் ஜனனி குக்கு வில்லனா? ஹீரோ வா?? யாரா இருக்கும் கமென்ட் பண்ணுங்க.. ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க பிடித்திருந்தால் இமோஜி தட்டி விட்டு போங்க ... ஆனா கமென்ட் முக்கியம் பிகிலு
What's Your Reaction?






