• வணக்கம் ! சித்ரா ஹரிதாஸ் நாவல்கள் உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... நம் மனதில் எழுத்தின் மணம் நறுமணமாகப் பரவட்டும்!
  • ⚠️ இந்தக் கதை மற்றும் இதன் கதைக்களம் எனது சொந்த உருவாக்கம். எனது அனுமதி இல்லாமல் இதை நகல் எடுக்கவும், மீண்டும் வெளியிடவும், PDF ஆகப் பதிவேற்றவும் கூடாது. இது பதிப்புரிமை சட்டத்துக்கு எதிரானது. தயவுசெய்து ஆசிரியரின் உழைப்பை மதிக்கவும்.

மாறா 7

"இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே உன்னை அப்படி பாராட்டீனாங்க! ஆனா நீ ஸ்ட்ரீட் டாக்ஸ்க்கு பிஸ்கெட் போடுற, அப்படியே தெருவெல்லாம் வலம் வந்து எதையோ நோட் பண்ணுன, எல்லாத்தையும் பார்த்தேன் அப்பவே உன் மேலே எனக்கு ஒரு டவுட்! அது இப்போ கிளியர் ஆச்சி. நீ என்னென்ன வேலை பார்க்குறன்னு எல்லாருக்கும் காட்ட வேணாம்!"

"நீ பண்றது எப்படி இருக்குனு தெரியுமா? அடுத்தவங்க பெட்ரூம் எட்டிப்பார்த்து வீடியோ எடுத்து மிரட்டுவது போல இருக்கு! உனக்கு அசிங்கமா இல்லையா? நான் யாரையும் என்னை முன்னுதாரணமா காட்ட சொல்லல, அவங்க பண்ணா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

நான் என்னோட வாடிக்கையான விஷயங்களை தான் பண்றேன். அது உங்களுக்கு உறுத்துதுன்னா, தப்பு உங்க பக்கம் தான் இருக்கு! அதை திருத்திக்கிறது உங்க கையில தான் இருக்கு. அதை செய்யாம அடுத்தவன் லைஃப் என்ன பண்றான் அவன் பெர்சனல்ல எட்டிப் பார்க்கிறது அசிங்கமா இல்ல?"

"போதும் நிறுத்து! ரொம்ப நல்லவன் போல பேசாத.. உங்க அம்மாக்கு தெரியாம மறைச்சு பண்றதுலே தெரியல உன் யோக்கியம் என்னன்னு! நீ என்னை சொல்றியா? இங்க பாரு எனக்கும் உனக்கும் எந்த பகையும் வஞ்சகமும் கோபமும் இல்ல.

இதை வச்சி உன் கிட்ட பணம் கேட்டு மிரட்ட போறதும் இல்ல! ஆனா, இனி உன் அம்மா உன்னை எங்கேயும் புகழக்கூடாது! இன்னொன்னு உன்னை கம்பேர் பண்ணி என் பசங்களை திட்டக் கூடாது. மீறி நடந்ததுன்னா குறும்படமா உங்க அம்மா கிட்ட போட்டுக் காட்டுவேன்!"

"ஹேய் என்ன மெரட்டுறயா?"

"அப்படியும்.. வேணாம் வச்சுக்கலாம்?"

"உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் வேணும்ன்னா என் அம்மா கிட்ட போட்டுக்காட்டு. அவங்ககிட்ட நான் இல்லைன்னு அடிச்சி சொல்லி நம்ப வச்சிடுவேன். என்னை விட உன்னை நம்பிடுவாங்களா என்ன?" என இரண்டு புருவங்களை உயர்த்தி கேட்டான்.

"அரே நைட் ஹீரோ! சம்ருதி என்ன ஸ்கூல் பிள்ளைங்க போல அம்மா கிட்ட சொல்லிடுவேன் மிரட்டுற சின்ன பொண்ணு நினைச்சியா? வில்லி டா நானு! உன்னை டேக் பண்ணி இது தான் நீங்க பார்க்க துடிச்ச நைட் ஹீரோ இந்த வீடியோவ இன்ஸ்டலா அப்லோட் பண்ணிடுவேன்.

உன்னோட சேர்த்து டி.என் போலீஸ்க்கு ஒரு டேக் போட்டு நைட் இப்படி ஒரு விஷயம் நடக்குது உங்க கண்ணுக்கு தெரியலையா? கேப்ஷன் போட்டு போஸ்ட் போட்டா மவனே நீ காலி டா! பார்க்கிறீயா?" என தெனாவெட்டாக பேசினாள்.

அதை அவளிடம் எதிர்பாராதவன்,

"ஓகே ஓகே! நமக்குள்ள பேசிக்கலாம். இப்போ நான் என்ன பண்ணணும்?" என இறங்கி வந்தான்.

"நான் முன்னமே சொன்னது தான். உன்னைப்பத்தி உங்க அம்மா புகழக்கூடாது. அப்புறம் உன்னை கம்பேர் பண்ணி பசங்களை திட்டக்கூடாது. இப்போதைக்கு இது தான் வேற எதுவும் இல்லை.."

"ஒகே இனி இந்த ரெண்டுமே நடக்காது அதுக்கு நான் கியாரண்டி. தயவு செய்து வீடியோவ லீக் பண்ணாத ப்ளீஸ்.."

"அரே! சம்ருதி சொன்னதே செய்தா போதும் அவளும் கொடுத்த வாக்க காப்பத்துவா?" என வாயில் பீடாவை குதப்பி துப்பி தமிழை கொல்லும் வடக்கர்களை போல பேச, இவனோ "ரொம்ப தான்.." என சலித்துக்கொண்டான்.

"வர்றேன் சாரே!" என சலியூட் அடித்து விட்டு உள்ளே சென்றவளின் பின்னே அவள் கழுத்தை நெரிப்பது போல கைகளை கொண்டு சென்று பின் ஒன்னும் செய்ய முடியாமல் கீழே போட்டான்.

தன் குடும்பி அவள் கையில் மாட்டிக் கொண்ட கோபத்தில் தரையில் உதைத்தான். அதே கோபத்தோடு அங்கிருந்து விடைபெற்று கடைக்குச் சென்றான்.

"கோமதி!" என தன் கடைக்கு தாயின் பெயரை வைத்து அன்னையின் மனதை நெகிழ வைத்திருந்தான் வெற்றிமாறன்.

டிப்ளமோ மெக்கானிக் முடித்து விட்டு மேற்கொண்டு பொறியியல் படிக்க வசதியில்லாமல் மெக்கானிக் கடையில் ஐந்து வருடங்களாக வேலை பார்த்து வேலைகளையும் கற்றுக்கொண்டான்.

ஆள் பழக்கங்களை உருவாக்கிக்கொண்டவன், இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கும் கடையாக தொடங்கியவன், அடுத்த ஐந்து ஆண்டில் அதே இடத்தில் தன் கடையை விரிவாக்கினான்.

மகிழுந்துகளை பழுது பார்ப்பதோடு அதை வாங்கி விற்கும் தொழிலையும் சேர்த்து பார்த்தவன் லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அவர்களுக்கென்று இருந்த ஒரே பிடிப்பு அவர்களது சொந்த வீடு தான்.

மாறனின் தந்தை இறந்த பின் அவரது நினைவால் கோமதி உடலும் மனமும் உருக்குலைந்து வேதனையில் வாட சொந்த வீட்டில் இருக்காமல், வீட்டை வாடகைக்கு விட்டு இவர்கள் ஒத்திக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கி தான் கடையை ஆரம்பித்தான்.

அதன் பின் அவன் ஈட்டிய லாபத்தை வைத்து, வீட்டு பாத்திரத்தையும் திருப்பியதோடு கடை வைத்திருந்த இடத்தையும் சொந்தமாக வாங்கி விட்டான்.

போட்டி, பொறாமை, வஞ்சகம், வீழ்ச்சி என இறக்கங்கள் பல கண்டாலும் அவன் வாழ்வில் ஏற்றங்களும் உண்டு.

அதோடு அவனுக்கே அவனுக்கு உண்டான தனிப்பட்ட ஆசையான பைக் ரேசில் கலந்து சிறந்த பைக் வீரராக வேண்டும் சின்னவயசில் உண்டான
அவனது தனிப்பட்ட ஆசையை தாயிடம் மறைத்து வைத்து நிறைவேற்ற துடிக்கிறான்.

இதுவரை அவனுக்கு எந்த பிரச்சனையும் வந்தது இல்லை!

ஆனால், சம்ருதியால் அவனது தனிப்பட்ட ஆசைக்கு இடையூறு வரும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை.

அவளிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசனையிலும் இப்படி மாட்டிக்கொண்டதை எண்ணி தன் மீதுள்ள கோபத்தோடும் கடைக்கு வந்தான்.

பெரிய காருக்கு அடியில் படுத்துக் கொண்டு பழுது பார்த்து கொண்டிருந்த விஷால் இவன் வந்ததை கவனித்து விட்டு மீண்டும் வேலையை தொடர, கோபமாக உள்ளே வந்த மாறன், கை முஷ்டியை இறுக்கி சுவரில் குத்தினான்.

கடையில் வேலை செய்பவர்கள் வைத்த காலை வணக்கத்திற்கு கூட பதில் கூறாது கோபமாக உள்ளே சென்றவனை, விஷாலிடம் சென்று வேலை செய்யும் ஒருவன் முறையிட,
அவனும் வேலையை முடித்து விட்டு மாறன் அருகே அவனை நோட்டம் விட்டபடி வந்தான்.

"என்ன டா ஆச்சி உனக்கு பசங்க கிட்ட கூட நீ சரியா பேசலனு சொன்னாங்க. ஏன்டா கோபமா இருக்க?" என்றவன் அவனருகே அமர்ந்து கேட்டான் விஷால்.

மாறானோ அவனிடம், "உன்கிட்ட தனியா பேசணும் வா.." என அவர்கள் இருவர் மட்டுமே உபயோகிக்கும் பிரத்தியேக அறைக்கு அவனை அழைத்துச்சென்றான்.

"என்ன டா ஆச்சி?"

"நான் தான் நைட் ஹீரோன்னு எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுப்பொண்ணுக்கு தெரிஞ்சு போச்சுடா!"

"எப்படி டா?"

அவனும் நடந்ததை சொன்னான்.

"வீடியோவை உங்க அம்மாகிட்ட போட்டு காட்டுவேன் சொல்லி மிரட்டுறாளா?"

"ஆமா மச்சி!"

"என்ன டா பணம் எதுவும் கேட்டா கொடுத்து வீடியோ வாங்கிடு டா"

"பணம் கேட்டா கூட கொடுத்திடலாம் டா! அவ என்ன சொல்லி மிரட்டுறா தெரியுமா?" என அதையும் சொல்ல, விஷாலுக்கு சிரிப்பு வந்தது. மாறனின் முறைப்பில் அடக்கினான்.

"நான் கூட பணம் தான் கேட்பானு பார்த்தா, இவ என்னடா சின்ன விஷயத்துக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்னை மெரட்டுறா? இன்ட்ரெஸ்டிங்கான கேரக்டரா இருப்பா போலயே.." என்று அவளை புகழ்ந்தவனின் வாய் மாறனின் முறைப்பால் கப்சிப்பென மூடியது.

"சரி! இப்போ என்ன பண்ணலாம்ன்னு இருக்க?"

"காம்பெடிஷன்ல கலந்துக்கிட்டு கப் ஜெயிக்கிற வரைக்கும் இந்த நைட் மீட்டிங் கொஞ்ச நாளைக்கு வேணாம்னு நினைக்கிறேன். கப்ப ஜெயிச்சிட்டா போதும் அதுக்கு அப்புறம் அந்த பல்லிக்கு இருக்கு.." என பல்லைக் கடித்தான். விஷாலும் அதை ஆமோதித்தான்.

***

மாறன் சொன்னபடியே இரவில் கூடி தனது சாகசத்தை ரசிகர்களிடம் வெளிப்படுத்துவதை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைத்து விட்டான். ரசிகர்களிடம் ஏதோ சொல்லி சமாளித்திருந்தார்கள்.

கோமதியுடன் யார் பேச வந்தாலும் மகனைப்பற்றி புகழ்ந்து பக்கம் பக்கமாக பேச, இவனுக்கே சலிப்பாகி விட்டது.

கோமதி அருகே அமர்ந்தவன், "மதி! இது மாதிரி வரவங்க போறவங்க கிட்ட என்னை புகழ்ந்து பேசிட்டே இருந்தா, என்னை கண்ணு வச்சிட மாட்டாங்களா? அப்புறம் எனக்கு ஏதாவது ஆயிடுச்சினா என்ன பண்ணுவ நீ? உனக்கு நான் மட்டும் தானே இருக்கேன்.

ஊர்ல இருக்க கண்ணெல்லாம் நல்ல கண்ணு நினைச்சிட்டு இருக்காத! நீ என்னை புகழ்ந்து, அவங்க கொள்ளிக்கண்ண என் மேலே வச்சி நல்லா இருக்க எனக்கு ஏதாவது ஆகிட போகுது!" என்றதுமே பதறிப் போனார்.

"ஐயோ! வேணாம் தம்பி! எனக்கு நீ தான் முக்கியம். இனி உன்னை பத்தி யார் கிட்டயும் பேசவே மாட்டேன்!" என்றவர் அன்றிரவே மகனுக்கு சுத்திப்போட்டார்.

அன்றிலிருந்து அவர் மாறனின் புகழை எங்கும் பாடவில்லை. சம்ருதிக்கே அது ஆச்சர்யமாக இருந்தது.

அது மட்டுமில்லாமல் அவனை வைத்து ஒப்பிட்டு குழந்தைகளை திட்டும் தாய்மார்களை கூட மாற்றி விட்டான்.

விடுமுறை நாளில் கடைத்தெருவில் மாறனை வைத்து குட்டி சதீஷை அவரது அன்னை திட்டவும் மாறனோ அவரிடம், "என்னை போய் குழந்தைகளோட கம்பேர் பண்றீங்களா கா? எனக்கு முப்பது வயசு. அவனுக்கு ஆறு கூட ஆகல! இவனும் நானும் ஒண்ணா? நான் பார்க்கிற வேலைய இவன் பார்க்க முடியுமா?

கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாமா? இப்படி குழந்தைகளை இன்னொருத்தரை வச்சி கம்பேர் பண்ணா, பாதிப்பு உங்க குழந்தைக்கு தான். அவன் கிட்ட நீங்க உன்னை போல யாரும் இல்லைன்னு மோட்டிவேட் பண்ணனும் அவனை போல நீ இல்லைனு டிமோட்டிவேட் பண்ணாதீங்க!

அப்புறம் உங்க புள்ளை அவனாகவும் இருக்க முடியாம இன்னொருத்தனை போல இருக்க முடியாம எப்படி இருக்கணும்னு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டு பைத்தியமாவே ஆகிடுவான். உங்க குழந்தைக்கு அது தேவையா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!" என்று அறிவுரை சொல்லிவிட்டு கடந்து விட, அதுவே பரவலாக எல்லா அம்மாக்களுக்கும் சென்று விட, மாறானோடு ஒப்பிடுவதை குறைத்து விட்டனர்.

குழந்தைகள் சம்ருதியிடம் பகிர்ந்து மகிழ்ந்தார்கள்.

"பரவாயில்ல பையன் நம்ம மிரட்டலுக்கு பயந்து வேலை பார்த்திருக்கான். இப்போதைக்கு இது போதும்!" என்
று உள்ளுக்குள் நினைத்துககொண்டாள்.

மாறனோ மூச்சு விட்டு அமரும் முன் அடுத்த பிரச்சனை உண்டானது அவனது அன்னையால்.
 

Forum statistics

Threads
86
Messages
149
Members
49
Latest member
Deebika
Back
Top