• வணக்கம் ! சித்ரா ஹரிதாஸ் நாவல்கள் உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... நம் மனதில் எழுத்தின் மணம் நறுமணமாகப் பரவட்டும்!
  • ⚠️ இந்தக் கதை மற்றும் இதன் கதைக்களம் எனது சொந்த உருவாக்கம். எனது அனுமதி இல்லாமல் இதை நகல் எடுக்கவும், மீண்டும் வெளியிடவும், PDF ஆகப் பதிவேற்றவும் கூடாது. இது பதிப்புரிமை சட்டத்துக்கு எதிரானது. தயவுசெய்து ஆசிரியரின் உழைப்பை மதிக்கவும்.

மாறா 4

அழகான ஒரு காலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் வைத்தியையும் மாறனையும் ஒருப்பார்வை பார்த்துவிட்டு கை வீசி நடக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் பேசி சிரித்தபடி கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அதில் வயதான ஒருவர் மட்டும் நின்று வைத்தியிடம், "என்ன வைத்தி புது தோஸ்தா? உனக்கு ஏத்தது போலவே பிடிச்சிருக்கப்பா நீ! புது பையனா இருக்கானே, உனக்கு தெரிஞ்ச பையனா?" என மூக்கு கண்ணாடியை கீழே இறக்கி மாறனை நோட்டம் விட்டபடி கேட்டார்.

அவனோ, அவரை பார்த்துவிட்டு வைத்தியை தான் பார்த்தான்.

வைத்தி சிரித்துக் கொண்டே, "நேத்து தான் இந்த வீட்டுக்கு குடி வந்திருக்காங்க கிருஷ்ணா! தம்பி பேரு வெற்றிமாறன். தம்பியும், என் இனம் தான். அதான் உடனே தோஸ்து ஆகிட்டோம்.."

"ஏற்கனவே உன்னால வீட்ல திட்டு வாங்குறது பத்தாதுன்னு உன் கூட்டணில ஆள் சேக்குறீயா வைத்தி? இளந்தாரியா வேற இருக்கான்! வீட்டு வேலையும் பார்ப்பான் போலையே? காலையில மட்டும் திட்டிட்டு இருக்கவ இனி நைட்டும் திட்டுவாளே! நீ நடத்து வைத்தி!" என்று அவர் ஆதங்கத்தை கொட்டிவிட்டு நடந்தார்.

"என்ன பாட்னர் இப்படி பேசிட்டு போறார்?"

"நான் தானே சொன்னேனே பா! நான் வீட்டு வேலை பார்க்கிறது பார்த்து அக்கம் பக்கத்துல இருக்க வீட்டம்மாங்க எல்லாரும் அவங்க
புருஷன்மார்களை இடிக்க, அவனுங்க என்னை வந்து கடிப்பானுங்க!

இப்ப நீ எனக்கு கூட்டா சேர்ந்திருக்கிறது பார்த்து டபுள் இடில கிடைக்கும். அதான் அந்த ஆதங்கத்தை மனுஷன் கொட்டிட்டு போறான்.

இவனுங்களும் பொண்டாட்டிக்கு உதவி செய்ய மாட்டானுங்க! பாக்குற நம்மளையும் செய்ய விட மாட்டானுங்க வன்மம் பிடிச்சவனுங்க.." என்று திட்டினார்.

"அதானே! சரியா சொன்னீங்க பாட்னர்.. வீட்டு வேலை செய்றதுல, வீட்ல இருக்கிறவங்களுக்கு உதவி செய்றதுல என்ன இருக்கு? சரியான ஈகோ பிடிச்சவனுங்களா இருப்பானுங்க போல பாட்னர்.

தானும் செய்றது இல்ல அடுத்தவனையும் பேசி செய்ய விடுறதும் இல்ல. இந்த பேச்சுக்கெல்லாம் அசரக்கூடாது பாட்னர்! நமக்கு நம்ம கொள்கை தான் முக்கியம்.. இவனுங்கல டீல்ல விடுங்க!" என்றவனை கண்டு புன்னகை செய்தார். இருவரும் நேரம் ஆவதை கண்டு அடுத்தடுத்து வேலையை பார்க்கச் சென்றனர்.

வேலையெல்லாம் முடித்து விட்டு தனது கடைக்கு செல்ல அவன் ஆயத்தமாக, சுடச்சுட அவனுக்கு தோசை வார்த்தார் கோமதி.

'அதையாவது நானே செய்கிறேன்' என்று கேட்டு வாங்கி செய்கிறார். மகன் சூடாக சாப்பிடட்டுமென்று.

கிளம்பி வந்தவன் தோசையை வேகமாக பிய்த்து நாலு வாயில் உள்ளே தள்ளி விட்டு, எழுந்தவன் பூஜை அறையில் நின்று ஒருநிமிடம் கடவுளை வணங்கி, சாவியை எடுத்துக்கொண்டு வாசலில் வந்து நின்றான்.

கோமதியும் அவனோடு வாசலில் வந்து வழக்கமான, 'பத்திரம்' பாட்டை அவனிடம் பாடினார். அவனும் சலிக்காமல் கேட்டுக் கொண்டான்.

தள்ளு வண்டியில் காய் விற்றுக் கொண்டிருந்தார் பெரியவர். அவர்களை சுற்றி பெண்கள் காய் வாங்கிக் கொண்டிருந்தனர். அதை கண்ட கோமதி இவனிடம், "என்ன காய் இல்லைனு சொல்லு வெற்றி! வாங்கி வைக்கிறேன்.." என்றார் சமையல் மகனின் பொறுப்பு என்பதால்.

அவனும் வண்டியை வெளியே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான காய்கறிகளின் பெயரை சொல்லி எப்படி பார்த்து வாங்க வேண்டுமென்று பாடம் எடுத்து விட்டுச் சென்றான். அதை கேட்ட அங்கிருந்த பெண்கள் வாய் பிளந்து கை வைத்தனர்.

கோமதியும் உள்ளே சென்று கூடையும், பணத்தையும் எடுத்து வந்து அவன் சொன்ன காய்களை எல்லாம் பார்த்து எடுத்தார்.

"வளரோட அக்கா தானே நீங்க?" என கைகள் வேலை செய்ய, வாய் அதன் பாட்டிற்கு பேச ஆரம்பித்தது.

"ஆமா மா.."

"வீட்ல எல்லா வேலையும் உங்க புள்ளை தான் பார்பாராமே!" எனக் கேட்டிட, "ஆமா மா! எனக்கு உடம்பு முடியாம போனதுல இருந்து, தம்பி தான் பார்க்கிறான்.." என்றார் தக்காளியை பார்த்தபடி.

"உங்க வீட்டுக்கு வர போற மருமக கொடுத்து வச்சவ?" என்றதும் அவர் சிரிக்க, "வரன் எதுவும் பார்க்கலியா?" என்றார் பதிலுக்கு.

"இனி தான் மா வரன் பார்க்க ஆரம்பிக்கணும். பொண்ணு இருந்தா சொல்லுங்க..."

"அதுக்கென்ன சொல்லிட்டா போச்சி! நான் பார்த்து கட்டி வச்சதெல்லாம் ரெண்டு, மூணு புள்ளை குட்டிய பெத்து சந்தோஷமா இருக்குதுங்க.." என தன் புகழ் பாடினார்.

கோமதியும் வியப்புடனே, "அப்போ என் பையனுக்கு ஒரு வரன பார்த்து சொல்லுங்க, என் பையன் ரொம்ப நல்லப்பையன் எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. வேலை முடிஞ்சா வீடுனு இருப்பான். மெக்கானிக் கடை வச்சிருக்கான், இது போக கார் வாங்கி, விற்கனு தொழிலும் பண்றான். கை நிறைய சம்பாதிக்கிறான்.." என்று மாறனின் புகழை பாடியவர், "நல்ல பொண்ணா வீட்டு வேலை பார்க்க தெரிஞ்ச பொண்ணா இருக்கணும்! பொறுப்பா இருக்கணும். ஒரு டிகிரி இருந்தா போதும்.. "என அவரது எதிர்பார்ப்புகளை அடுக்கி கொண்டே போனார் .

"ம்ம்... கண்டிப்பா சொல்றேன் மா.. நம்ம பக்கம் பொண்ணு இருக்கா பார்க்கிறேன்!" என இவரும் சொல்ல, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை கேட்டபடி நின்றிருந்த சம்ருதியும் வைத்தியும் பார்த்துக் கொண்டனர்.

"ஏ திமிங்கலம்.. அதெப்படி ஒரு கெட்டபழக்கமும் இல்லாத நல்லவனா இருப்பான்? அதுவும் இந்தக் காலத்துல? நம்ப முடியலயே!" என சந்தேகமாக கேட்டாள்.

"அந்தம்மா சொன்னது போல மாறன் தம்பி ரொம்ப நல்லா பையனா தான் தெரியுறான் பாப்பா!" என்றார் அவளது வண்டியை துடைத்தபடி.

"ஓஹோ!!" என்றவள் மேற்கொண்டு பேசவில்லை என்றாலும் உள்ளுக்குள், 'அதெப்படி ரொம்ப நல்லவனா இருக்க முடியும்? அதுவும் நேத்து அவனோட முழியும் பார்வையும் சரியில்லையே! கண்டு பிடிக்கிறேன்..' என்றாள் தனக்குள்.

"வண்டிய துடைச்சிட்டேன் பாப்பா" என்று எழுந்தார்.

"ஆங்.. நான் வர்றேன் வைத்தி! நேரத்துக்கு சாப்பிடு. பழைய பூத் கேங்..."என ஆரம்பித்தவள் அவரது முறைப்பில், "சரி! உன் பழைய யூத் கேங்கோட அரட்டை அடிச்சிட்டு லஞ்ச் ஸ்கிப் பண்ணிடாத. கவனமா இரு எதுனாலும் கால் பண்ணு!" என்று மிரட்டலும் எச்சரிக்கையுமாக செய்துவிட்டு புறப்பட்டாள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் செல்வதை பார்த்து நின்றவர் உள்ளே சென்றிட, அவர்கள் இருவரையும் நோட்டம் விட்ட கோமதி வண்டியை கூட துடைக்காது, பெரிய மனுஷனை வேலை பார்க்க சொல்வதை கண்டு மேலும் அவள் மீது அவருக்கு அதிருப்தி.

'இதெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ண போகுதோ?' என தலையில் அடிக்காத குறையாக புலம்பி, வீட்டிற்குள் சென்று விட்டார்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த மிகப்பெரிய மருத்துவமனைக்குள் நுழைந்தவள் தனது வருகையை பதிவு செய்து விட்டு தனது அறைக்கு சென்றாள் சம்ருதி.

பொதுநலம் மற்றும் இருதய மருத்துவர் என்பதால் அவளை பார்க்க நிறைய நபர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்திருக்க, பரிசோதனை செய்து தேவையான அறிவுரைகளும் மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்தபடி இருந்தாள்.

பின் இடைவெளியில் அவள் சிகிச்சை அளித்த உள் நோயாளிகளை பார்வையிட்டவள், செவிலியரிடம் அவர்களுக்கு தேவையான மாத்திரைகளையும் மருந்தையும் கொடுக்கும்படி பணித்து விட்டு வெளியே வந்தாள்.

விபத்தில் அடிப்பட்டு காலில் இரத்தம் வழிய தாயுடன் வந்தவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வந்திடாத பட்சத்தில் சம்ருதி தான் அவனுக்கு சிகிச்சை அளித்தாள்.

அவனுக்கு சிகிச்சை தர, பக்கத்தில் நின்றிருந்த அவனது தாய் அழுது கொண்டிருந்தார்.

"எப்படி ஆச்சி?"

"பைக்ல இருந்து கீழ விழுந்துட்டேன்."

"எப்படி விழுந்த?"

"சட்டுனு ராங் வே'ல ஒரு மினி வேன் வந்துடுச்சி, மோதி கீழ விழுந்துட்டேன்.." என்றான் வலியோடு.

கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தாயோ "பொய் சொல்றான் மா! வண்டிய வேகமா ஓட்டிட்டு போய் எதிர்த்து வர்ற வண்டியில விட்டுருக்காம்மா.. எதிரே வந்த வண்டி சின்ன வண்டினால இதோட போச்சி பெரிய வண்டி எதுவும் வந்து ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சினா என்னம்மா பண்றது நானு? ஒத்தப்பிள்ளைய வச்சுட்டு என்னம்மா பண்ணுவேன்?" என்று கண்கள் கலங்கியபடி பேச, அவரது அழுகையும் தலை குனிந்து அமர்ந்திருக்கும் அவரது மகனையும் பார்த்தாள்.

அவளுக்கு விபத்தில் சிக்கிய அண்ணனின் நியாபகம் வந்தது. கண்களை மூடி திறந்து தன்னை சமன் செய்தவள்.

"என்ன வண்டி வச்சிருக்க?"

"கே.டி.எம்!"

"என்ன வயசு உனக்கு?"

"இருப்பத்தி ஒன்னு"

"ம்ம்.. படிச்சி முடிச்சிட்டீயா?"

"ம்ம்.. முடிச்சிட்டேன்.."

"இப்போ என்ன பண்ற?"

"சும்மா..." என இழுத்தவனால் அவளது அடுத்த பார்வையில் பேச்சு வரவில்லை.

"நீ யூஸ் பண்ற பைக் நம்மூருக்கு சுத்தமா செட் ஆகாத பைக். ஆனாலும், பைக் மோகத்துல உன்னை போல ஆட்களோட ஆசை தான் அந்த வண்டிய விக்கிரவனோட பேராசையா மாறுது!
அந்த வண்டி வச்சிருந்தா ஹீரோவா நீ? இப்ப வரைக்கும் நீ ஜீரோ ஸ்டேஜ்ல தான் இருக்க!" என்று விரலை வைத்து காற்றில் வட்டம் போட்டுக் காட்டினாள்.

"உன் அம்மாவ பாரு. உன்னோட போராடி உனக்காக வாங்கிக் கொடுத்துட்டு தினம் தினம் செத்து பொழச்சிட்டுக் இருக்காங்க. அந்த கவலை உனக்கு இல்லேல? உன் படிப்புக்கு உன் தேவைக்குனு பணத்தை கொட்டினதுக்கு அவங்க அவங்களை கவனிச்சிட்டு இருந்திருக்கலாம். பாரு அவங்களை.." என்று அவரை நோக்கி கை காட்ட, அவனும் தன் தாயை பார்த்தான்.

"நல்லா சொல்லுங்க டாக்டர். இவன் ஒவ்வொரு நாளும் பைக்ல போகும் போது திரும்பி பத்திரமா வரணும் வேண்டிக்காத கடவுளே இல்லை. இவன் வீட்டுக்கு வந்ததும் தான் மா எனக்கு உயிரே வரும். அடம் புடிச்சி பைக்க வாங்கிட்டான் மா. இப்போ அதுக்கும் சேர்த்து உழைக்கிறேன் நான்.." என்க அவனை துட்சமாக பார்த்து விட்டு கைகளுக்கு மருந்து போட்டு விட கைச்சட்டை உயர்த்தினாள்.

அதில் "night_hero" என்று தலைக்கவசம் போட்ட படி ஒருவனின் உருவத்தை பச்சை குத்தி இருந்தானவன்.

" இது யாரு?"

"இவர் தான் நைட் ஹீரோ இவரோட ஃபேன் நானு!" என்று ஆர்வமாக சொன்னவனின் பேச்சி அப்படியே இறங்கியது அவளது முறைப்பில்

"என்ன பண்ணான் இவன்?"

"இவர் பைக் வச்சி போடுவார் பாருங்க ஸ்கிட் சான்சே இல்ல! இவர் போடுற வீடியோ செமையா இருக்கு. ஒருபக்கம் பைக் வச்சுட்டே சுத்துவார். எப்படி தான் இவரால முடியுமோ!" என அவனை பற்றி பேசியதும் குதூகலமாக சொன்னான்.

அவளும் "ஓ... சர்க்கஸ் காரனா?" என்றாள். அவன் அப்படியே நிமிர்ந்து பார்த்தான்.

பல்லைக் கடித்தபடி, "இந்த நாயை செருப்பால அடிச்சா தான் அவனை ஃபாலோ பண்ற நீங்க திருந்துவீங்க. கொஞ்ச நேரம் கழிச்சி வீட்டுக்கு கூட்டிட்டு போங்க மா.." என்று கோபத்தோடு அங்கிருந்து சென்று விட்டாள்.

*****

தன் முன்னே வண்டியை தடவிக்கொண்டே அழுபவனை கண்டு மாறனுக்கு சிரிப்பு தான் வந்தது.

"அண்ணே!! பைக் சரியாக ஒருவாரம் ஆகுமா?" என பத்தாவது முறையாக கேட்டு விட்டான்.

அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் வண்டிகள் வேலை பழுது அதிகம் இருந்த போதிலும், தன் முன்னே அழுது பேசுபவனிடம் தன்மையாக பேசிக் கொண்டிருந்தான் மாறன்.

"டேய் தம்பி! அழுதா மட்டும் பைக் தானா சரியாகிடுமா? நான் தான் சொல்றேனே! உன் பைக் பார்ட் லோக்கல் இல்ல. ஆர்டர் போட்டு வாங்கி, பிறகு தான் உன் பைக் சரி பண்ணா முடியும். ஓன் வீக் ஆகும் தம்பி.."

"சரிண்ணே! முடிஞ்சா சீக்கிரமா கொடுத்துடுங்கண்ணே! என்னால பைக் இல்லாம முடியல. பைத்தியம் பிடிக்குதுண்ணே. சீக்கிரமா சரி பண்ணி தாங்க அண்ணே.." என்றவன் வண்டியை மீண்டும் ஒரு முறை தடவிக்கொடுத்து விட்டுச் சென்றான்.

இவனும் சிரித்துக் கொண்டேன் தனது வேலையை பார்க்க, "ம்ம்... என்ன சொல்லு பசங்களுக்கு பைக்னாலே தனி ஸ்பெஷல் தான்ல! காதலிக்கு இணைய பீல் பண்றான் பார்றேன்.." என விஷால் கூறினான்.

"பசங்களுக்கும் பைக்குக்கும் இருக்க அட்டாச்மெண்ட் வேற டா! உயிரினத்துல சேர்க்கலனாலும் உறவுகளை விட காயப்படுத்தாத ஆறுதல் பைக் கொடுக்கும் டா. ஒரு ரவுண்ட் போனாலே போதும் மனசுல என்ன துக்கம் இருந்தாலும் பஞ்சா பறந்திடும். மனசு லேசாகிடும். புத்துணர்ச்சி கொடுக்கும்.."

விஷாலோ, "ஒரு சாயா போல" என்று அவன் கையில் டீயை கொடுக்க, வாங்கிக் கொண்டான்.

"உனக்கு பைக்! எனக்கு டீ! "என்று ருசிக்க ஆரம்பித்தான்.

வேலை பழுவிலிருந்து இடைவேளை எடுத்துக் கொண்டு தனியாக அமர்ந்து இருவரும் பேசியபடி தேநீர் பருகினார்கள்.

"அப்புறம் மச்சி! எப்போ பைக் ரேஸ் தேதி அன்னௌன்ஸ் பண்ண போறாங்க?"

"சீக்கிரமே சொல்லப் போறாங்க. ஒரே எக்ஸைடட்டா இருக்கு டா. நான் கலந்துக்க போற முதல் நேஷனல் லெவல் கம்பெடிஷன்.. ட்ரைனிங் அகாடெமில நிறைய சப்போர்ட் இருக்கு கண்டிப்பா நீ ஜெயிப்ப சொல்லிட்டு இருக்காங்க.. ஜெயிக்கனும் டா!" என்று குதூகலமாக சொல்லிக் கொண்டிருந்தான் மாறன்.

"நீ தான்டா ஜெயிப்ப! எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு. இதுக்காக நீ எடுத்துக்கிட்ட ட்ரைனிங் கொஞ்ச நஞ்சமா! கண்டிப்பா நீ கப் அடிக்கிறத நாங்க பார்க்கணும் மச்சி. என் நண்பன் கப் ஜெயிச்சா எனக்கு பெருமை மச்சி.." என சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாறனின் முகம் வாடி விட்டது.

" என்ன மச்சி என்னாச்சி?"

"இல்ல மச்சி அம்மாக்கு தெரியாம மறைச்சு பண்றத நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. எனக்கு இதுல அம்மா சப்போர்ட் கிடைச்சா? டபுல் எனர்ஜியோட போட்டியில கலந்துட்டு இருந்துப்பேன்.
ஆனா, அவங்க நான் சாதாரணமா பைக்கில் போனலே பயந்து போறாங்க.

கொஞ்சம் ஸ்பீட் ஏத்தினாலே தம்பிங்கறாங்க. இதுல நான் மோட்டார் ரேசில் கலந்துக்க போறேன் சொன்னா மயக்கம் போட்டே விழுந்திடுவாங்க. அவங்களுக்கு ஹார்ட் சர்ஜரி வேற பண்ணி இருக்கோம் அதிர்ச்சியான எதையும் சொல்லக்கூடாது.

அதனாலே இப்படி மறைச்சி கலந்துக்க போறத நினைச்சா தான் குற்றவுணர்வா, பாரமா இருக்கு மச்சி!" என நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியுடன் கூறினான்.

"மச்சி கவலை படாத! நீ மட்டும் ஜெயிச்சிட்டா, அதை வச்சே மெல்ல மெல்ல அம்மா கிட்ட சொல்லி கன்வின்ஸ் பண்ணிடலாம் டா. அதுவரைக்கும் பீல் பண்ணாத, மனசை தெளிவா வச்சிரு. எல்லாம் நன்மையில் முடியும் நினை.." என ஆறுதல் சொல்லித் தேற்ற சரியென தலையசைத்தான்.

சென்னையில புகழ்பெற்ற மோட்டார் ரேஸ் அகாதமியில் சேர்ந்து பயிற்சி எடுத்து, தகுதி ஒன்று இரண்டை வெற்றிகரமாக முடித்து fmsci உரிமம் பெற்று இந்திய அளவில் வைக்க போகும் போட்டியில் கலந்து கொள்ள போகிறான். ஆனால் இதெல்லாம் மதிக்கு தெரியாது. அவரிடம் சொல்லாமல் தான் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான்.

மகன் வண்டியில் சற்று வேகத்தை கூட்டினாலே பயம் கொள்பவர். மகன், பைக் ரேசில் கலந்து கொள்ளப்போகிறான் என்று தெரிந்தால் அவ்வளவு தான் அந்த நிமிடம் இதயத்தில் பெரும்வலி உண்டாகி சரிந்து விடுவார். அதற்கு பயந்து தான் அவனும் அவரிடம் விஷயத்தை சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறான்.

ஆனால் எவ்வளவு காலம் மறைத்து வைத்திருப்பது. ஒரு நாள் தெரிய வர தான் போகிறது. அதற்கு முன்னே போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துவிட்டு மெல்லமாக சொல்லி அவரை மாற்ற வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறான் விதி அவன் முடிவுக்கு இசைந்து கொடுக்குமா? இல்லை எதிர்த்து நிற்குமா? படைத்தவனுக்கே வெளிச்சம்!
 
ஆபத்து நிறைந்த
ஆத்ம விளையாட்டு
அன்னைக்கு அறியாது
அவனின் நிலை
அந்தோ பரீதாபம் மாறா.....
 

Forum statistics

Threads
86
Messages
149
Members
49
Latest member
Deebika
Back
Top